‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் ‘புண்ணிமட்டி’ என்பது புண்ணியமான மண் (மிருத்திகா மட்டி + மண்) என்றறியப்படுகிறது. வேஷ்யத் வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின்போது செய்ய முற்படுகையில். முதல் முதலாக ஒரு வேசியின் வீட்டு வாசல் மண் சிறிதளவாவது எடுத்துக் கொள்ளப் படும். ஏனெனில் துர்கா பூஜை ஒரு சமூகத்தால் நடத்தப்படும் பூஜை. இதற்குச் செய்யப்படும் சிலைக்கு வேண்டிய மண்ணில் ஒரு பங்கில் எல்லோர் காலும் பட்டிருக்க வேண்டும். என்பது ஒர் ஐதீகம்! ஆகையால் இந்த மண் தேவை என எண்ணப்படுகிறது. ஜாதி மத வேறுபாடின்றி எல்லோராலும் மிதிக்கப்படும் வாசல் ஒரு பாலியல் வேலையாளரின் வீட்டு வாசல்தான் என்பதும் ஒரு நம்பிக்கை! வடகொல்கத்தா பகுதியில் இருக்கும் குமார்த்துலி என்னும் இடத்தில்தான் இப்பொம்மைகளைச் செய்யும் இனத்தவரான குயவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள்தான் இம்மண்ணை எடுத்துவந்து ஏப்ரல் மாதத்திலேயே விநாயக பூஜையுடன் தமது வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதில் அவர்கள் தமது முழுக் கவனத்தையும் செலுத்திச் செய்கிறார்கள். பால் என்ற கடைசிப் பெயர் கொண்ட இவர்கள் வேலை செய்வதைக் காண்பதே ஒரு பெரிய மகிழ்வு தரும் விஷயம். குமார்த்துலியின் குறுகிய சந்துகளில் சென்று புகைப்படங்கள் எடுத்து இவ்விடத்துக்கு அமரத்துவம் அளித்தவர்களின் உலகின் சிறந்த புகைப்பட மேதைகளான ரகுராயும் ஹென்றி கார்ட்டியர் பிரசென்னும் அடங்குவர் (Raghu Rai and Henri Cartier Bresson).
கல்கத்தா நகரத்தைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து
திபின்பால் வைக்கோலையும் மூங்கில்குச்சிகளையும் வைத்து மற்றொரு முறை என்ன செய்வதென அறியாமல் துர்காமாதாவின் உருவத்தைச் சீர்செய்ய ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு நேற்றைய சண்டைதான் நினைவுக்கு வந்தது. அவன் மனைவி சுருதி அவனை வறுத்து எடுத்துவிட்டாள். “வேலையும் கிடையாது. ஒரு எடத்துக்குப் போய் சம்பாதிக்கவும் வக்கு இல்லே. குடிக்கறதுக்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? வெக்கமா இல்லையா?”
அவளுக்குத் தெரியாது அவன் அங்கு பட்ட அவஸ்தை! இந்த பொம்மையைச் செய்ய வேண்டிய முதற்பொருளை அவன் கொண்டுவர முடியாதது அவனுக்கு அச்சத்தை அளித்தது.
அவன் வேலை செய்ய வேண்டுமென்றுதான் நினைக்கிறான். எவ்வளவோ நம்பிக்கையுடன்தான் அவன் குழுவின் தலைவன் சொன்னபடி ஒருபிடி மண் எடுத்துவர வேண்டி கொல்கத்தாவின் சிவப்புவிளக்குப் பகுதியான சோனாகச்சி சென்றிருந்தான். அவனுக்கு என்ன தெரியும் இப்படி விரட்டி அடிக்கப்படுவானென்று? ஏதோ ஒரு புதிய இயக்கமாம்! தர்பார் மகிள சமானாய் சமிதி என்று பெயராம். அந்த இயக்கத்
தொண்டர்கள் சொல்லியிருக்கிறார்களாம். “ஒங்களெ ஏமாத்தி வர்ற இந்தக் கேடுகெட்ட சமுதாயத்துக்கு ஒரு அடி கொடுக்கணும். அவர்கள் பூஜைக்குப் பொம்மை செய்ய ஒங்களைத் தேடித்தான் வருவார்கள். ஒரு சின்ன பிடிகூடக் கொடுக்க வேண்டாம்…”
அதிகமாகத் திட்டியவள் சம்பா! அவள் அழகுக்காக அறியப்பட்டவள்.
திபின்பாலுக்குப் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?மா(துர்காதேவி அப்படித்தான் அறியப்படுகிறாள்) பொம்மை செய்வதில் யாருக்கு எவ்வாறு அபிப்பிராய பேதம் வரலாம்? இந்த மண் கொண்டுவரவில்லை என்றால் பொம்மை வேலை ஆரம்பிக்காது அந்தப் பெரியவனோ கறார் பேர்வழி! மண் கொண்டுவர வில்லையென்றால் பணம் கிடையாது. யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்குச் சக தொழிலாளிதான் சொன்னான்: “மோஷாய், வா… ஒரு பாட்டில் அடிச்சிட்டுப் போகலாம். அப்பறம் ஐடியா ஏதாவது வரும்.”
அப்படிக் குடித்துவிட்டு வந்தவனைத்தான் மனைவி ‘வறுத்து’ எடுத்தாள்! இந்த உலகத்தின் போக்கே அவனுக்குப் புரியவில்லை. எப்போதாவது ஓரிரு தடவை அவன் நாடிய சம்பாவின் நினைவு திரும்பியும் அவனுக்கு வந்தது.
சோனாகச்சியின் இருண்ட சந்துக்களில் வசிக்கும் ‘அவர்கள்’ இன்று நேற்றல்ல, நாகரிகம் தோன்றிய நாளினின்று தமது தொழிலை நடத்திவருகிறார்கள். வாழ்வின் விளிம்பில் வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஒருவிதமான பாதுகாப்பும் கிடையாது. வறுமையால் விரட்டப்பட்டு, நோயும் புறக் கணிப்பும் உடன்வர, இரவின் போர்வையில், (போர்வை தமக்கு மட்டும் அல்ல, தம்மைத்தேடி வரும் வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கும்தான்) ஒதுக்கப்பட்ட இடமான கொல்கத்தாவின் சோனாகச்சியில் சொந்தபந்தங்களுக்கு அப்பாற்பட்டு தாயின் அரவணைப்பும் தந்தையின் பாசமும் எப்போதோ மறுக்கப்பட்டுவிட்ட அவர்களும் இந்த மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம் என்பதையே சமூகம் மறந்துவிட்ட நிலையில் உயிருடன் நடமாடுகிறார்கள்… வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது பொய்யெனவே தோன்றுகிறது.
இந்தச் சமூகமோ அவர்கள் தேவையை, தமது கோரமான வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு துர்கா பூஜையின்போது வேண்டுகிறது. இதை என்னவென்று சொல்ல? சமூகத்தின் வஞ்சப்புகழ்ச்சியா அல்லது தனது தவறுகளைத் துடைத்தெறிய முற்படும் பிராயச்சித்த ஏற்பாடா? ஒதுக்கப்பட்டு, தாழ்வாகப் பேசப்பட்டு, ஓரத்துக்குத் தள்ளப்பட்டவர்களின் வீட்டுவாசல் மண் பூஜையின்போது வேண்டப்படுவது எதனால்? ஆண்டவன் சமூகத்துக்கு இட்ட ஒரு வகையான தண்டனையா?
வடமேற்கு நிலத்திலிருந்து சொந்தக்காரர்கள் சதியுடன் கல்கத்தாவின் இருண்ட பகுதியான சோனாகச்சிக்குத் தள்ளப் பட்டவள் சம்பா.
சம்பா தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். “இந்தத் தடவை வரட்டும் பார்க்கிறேன்… ஒரு சிறு சிட்டிகை கூடத் தரமாட்டேன்.” அப்படிச் சொன்னவள் முன்னால் வந்து நின்ற முதல் துரதிர்ஷ்டசாலியான திபின்பாலுக்குக் கிடைத்த திட்டுகளில் பெரும்பகுதி இவளிடமிருந்துதான் வந்தது!
“அப்படியானால் பூஜை நடக்கக் கூடாது என்கிறாயா?” அவன் விரட்டப்பட்டவுடன் மாசி கேட்டாள். மாசி என்றறியப் பட்ட அவள் இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. “அது அம்மாவைக் கோபமடையச் செய்யாதா?”
“கோபம் வரட்டுமே. மா என்ன செய்வாள்? இதுவரை எனக்கு என்ன செய்திருக்கிறாள்?” மாசி பயந்துவிட்டாள். ”மாவைப் பற்றி அப்படியெல்லாம் பேசாதே.” ‘இவளுக்கு நல்ல புத்திதா தாயே’ என்று மாசி வேண்டிக்கொள்வதைப் பார்த்த சம்பாவுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. இந்த மாசியும் ஒரு காலத்தில் என்னைக் கொடுமைப் படுத்தினவள்தானே? ஆனால், இன்றோ எனக்கு ஆறுதலாகவும் துணையாகவும் உள்ளாள்!’ மனதில் நினைத்துக் கொண்டாள்.
மாசி தொடர்ந்தாள்: ‘ஒனக்குத் தெரியுமா இந்த மண் இல்லாமே குமார்த்துலிக்காரர்களால் ஒண்ணும் செய்யவே முடியாதுன்னு? மா பொம்மை செஞ்சாதான் அவங்களுக்குச் சோறு கெடைக்கும்! நாம் நல்லவங்களோ, கெட்டவங் களோன்னு எனக்குத் தெரியாது! ஒங்களெயெல்லாம் கூட நான்தான் இந்தத் தொழில்லே சேத்தேன். அப்பவே எத்தனையோ பாவம் செஞ்சுட்டேன். ஆனா நான் என்ன செய்வேன்? எனக்குத் தெரிஞ்ச தொழில் இது ஒண்ணுதான். ஒன்னோடெ நெலமையும் அதுதான். ஏதோ எந்த ஜன்மத்திலேயோ செஞ்ச பாவத்துக்கு இப்ப அனுபவிச் சிட்டிருக்கோம்.”
மூச்சுவிடாது பேசி முடித்த மாசியைப் பார்த்தாள் சம்பா. “நான் என்ன பாவம் செஞ்சேன்? பத்து வயசிலேயே கொண்டுவந்தாங்க. அதுக்கப்புறம் ஒங்கிட்டே பட்டது போதாதா? இப்ப ஒன்னை விட்டா எனக்கு யாரும் இல் அதே மாதிரிதான் எங்களெ விட்டா ஒனக்கும் யாரும் இல்லே. இதிலே பாவமும் புண்ணியமும் எங்கேருந்து வந்தது? எம் வயசு பொண்கள் போல இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா
என்ன?”
ஆசை எனக்கும்தான் சம்பா இருக்கு. குழந்தைகளைக் கொஞ்சணும். ஒரு மனிதனோட வாழணும்கற ஆசை எனக்கு இல்லேங்கறயா? ஆனா, முடியுமான்னு நெனைச்சுப் பாரு..
‘அது நீயா தானே செஞ்சுக்கிட்டது? ஒன்னையும் கெடுத்துக்கிட்டு எங்களையும் இந்தப் பாழும் குழியிலே தள்ளினது நீதானே?” கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள் சம்பா. பல வருடங்களுக்குப் பிறகு அவள் அழுகிறாள். சிலை போல அமர்ந்திருந்த மாசி பேசவே இல்லை. சின்னவளாக பேரே தெரியாத இவள் இங்கு தள்ளப்பட்டபோது கொள்ளை போகிற அழகு! இவளை வைத்து எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற ஒரே எண்ணம்தான் மாசிக்கு இருந்தது. இணங்காத இவளை எவ்வளவோ கொடுமைப்படுத்தியதும் இவளேதானே. சம்பா என்ற பெயரும் இவள் வைத்ததுதான். மாசிக்கும் கண்கள் குளமாயின.
“சம்பா, நீ சொல்றதெல்லாம் சரிதாம்மா, ஆனா, இப்போ நீ என்ன செய்ய முடியும்? ஒன்னாலே போய் அந்த ஜன சமுத்திரத்துலே சேர்ந்து வாழ முடியுமா? அந்தக் கும்பல் ஒன்னை ஏத்துக்குமா? நான் ஒரு தடவை காளிகட் (கல்கத்தாவின் காளிகோயில்) போயிருந்தப்போ அங்கே பூஜை செய்யற பட்டாச்சார்யாவைக் கேட்டேன்… ‘எங்களுக்கு விமோசனமே கிடையாதா?’னு. ‘ஒங்க மேலே பழிபோடற சமூகத்துக்குத் தெரியணுங்கறதுக்காகத்தான் ஒங்க வீட்டுவாசல் மண்ணைக் கொண்டுதான் மா பொம்மையையே செய்யணும்னு மா ஒரு கண்டிஷன் போட்டிருக்கா! அப்படிக் கொடுக்கற மண்ணுலே ஆரம்பிச்சு செய்யற மா பொம்மையைத்தான் எல்லோரும் பூஜை பண்றோம். அந்த மண்ணிலே ஆரம்பிக்கப்பட்ட பொம்மையைப் பாத்து நமஸ்காரம் பண்றாங்க. கன்னத்துலே போட்டுக்கறாங்க. இல்லையா? இந்த மாதிரி செய்யறப்போ ஒங்க பாவம் கொறயத்தான் செய்யும்’ என்று அவர் சொன்னார். அதெ நான் நம்பறேன்…’
கோபத்துடன் திரும்பினாள் சம்பா. “எல்லாம் கட்டுக் கதை! யாருக்கு வேணும் பாவம் கொறயற சமாசாரம்? நானா பாவம் செஞ்சேன்? என்னைக் கொண்டுவந்து இங்கே தள்ளிட்டு இப்போ நான் பாவம் செஞ்சதாச் சொல்றது மகா மடத்தனம்” ஆவேசத்துடன் பேசிய அவளைக் கண்டு பயந்துவிட்டாள் மாசி. சுற்றி நின்ற பெண்களுக்கும் மாசிக்கும் அவளே ஒரு மாதாவாகக் காணப்பட்டாள். “நம்பமாட்டேன்! இந்த மண்ணைக் கொண்டு போக விடவும் மாட்டேன். பூஜையே இல்லாமல் போனாலும் பரவாயில்லை.”
மாசியின் பயம் உச்சகட்டத்தை அடைந்தது. “அப்படிச் சொல்லாதே அம்மா… பூஜை நடக்கல்லேன்னா ஒலகமே அழிஞ்சிடும்!'”
“அழியட்டுமே!” முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள் சம்பா.
ஒடிப்போன மாசி திரும்பவும் பட்டாச்சார்யரைச் சந்தித்தாள். நடந்ததைச் சொன்னாள். எண்பது வயதைத் தாண்டிய அவர் நிதானமாகப் பேசினார்: ”அவள் சொல்றதுலே தப்பு இல்லையே! பாவம், எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். மா ஏதாவது வழி வைத்திருப்பாள்… பயப்படாதே.”
கோபத்துடன் நடந்தாள் சம்பா. சோனாகச்சியினின்றும் வந்து நகரத்துக்குள் போகும் சாலைக்கு அவள் வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. எவ்வளவோ திட்டியிருந்தும் தன்னை நோக்கி வருவது திபின்பால் என்பதைத் தெரிந்து
ஆச்சரியத்துடன் அவனை நோக்கினாள் சம்பா. திடீரெனத் தன் காலில் விழ வந்த அவனைத் தடுத்தாள் சம்பா. “நான் யார்னு தெரிஞ்சுகூட என் கால்லே விழ வர்றயே… ஒனக்குப் புத்தி இருக்கா?'”
“சம்பா, நீதான் ஏதாவது செய்யணும். எனக்கு மூணு பொண் கொழந்தைங்க… வீட்லே ஒரு மீன் கொழம்பாவது எம் பொண்சாதி ஆக்கணும்னா, இவங்கல்லாரும் பட்டினியாலே சாகக்கூடாதுன்னா இங்கேயிருந்து நான் மண் கொண்டு போனால்தான் உண்டு. தயவுசெஞ்சு பாரும்மா!”
பெண் குழந்தைகள். தான் உதவி செய்யாவிடில் அவர்களுக்கு என்னாகும்? பணம் இல்லையென்றதால் தன்னையே விற்ற தனது மாமாவின் நினைவு வந்தது அவளுக்கு. முடியாது. இது நடக்க விடக்கூடாது. “நீ வீட்டுக்குப் போ… நான் பாத்துக்கறேன். காலையிலே பாத்துக்கலாம்” என்று சொன்னவளின் உறுதியான பேச்சைக் கேட்டு ஏதோ ஒரு வகையில திருப்தி அடைந்த திபின், தாயை வேண்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
அதிகாலையில் வீட்டுவாசலில் சம்பா நிற்பதைக் கண்ட சுருசிக்குக் கோபம் எல்லை தாண்டியது. “கேடு கெட்டவளே…. இங்கேயே வர்ற தைரியம் ஒனக்கு வந்துடுச்சா? மண்ணு கொடுக்க மாட்டேன்னியாமே? என்ன கொழுப்பு? விளக்கு மாறாலேதான் அடிக்கணும்!” அவள் சொல்லி முடிக்கு முன்பு அவளையும் தள்ளிக்கெண்டு வந்து நின்றான் திபின்பால். “மன்னிச்சிடு தாயே” என்றவன் கையில் ஒரு பெரிய பொட்டலத்தைத் திணித்துவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றுவிட்டாள் சம்பா.
அந்தப் பொட்டலம் அவள் வீட்டு வாசல் மண் எனத் தெரிந்து அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டவனின் காலில் விழுந்தாள் சுருசி!
20.10.2002,
ஆனந்த விகடன்

One Comment on “நரசய்யா/அவள் வீட்டு வாசல் மண்”
Comments are closed.