‘தந்தையைக் குழந்தை இழக்கக்கூடிய இரண்டு வழிகளில் சாவே சிறந்தது! சாவினால் தந்தையை இழந்த குழந்தையையும் மற்ற வகையில் தந்தையை இழந்துவிட்ட குழந்தையையும் ஒப்பிடுகையில், மன நோய்களாலும் மற்ற அல்லல்களாலும் வருந்துவது இரண்டாவதாகக் கூறப் பட்ட வகையைச் சேர்ந்தவரேயாகும்.
- டாக்டர் ராபர்ட் எமெரி என்ற வர்ஜீனியா பல்கலைக்கழகப் பேரா சிரியர்.
‘எல்லாவற்றையும் கடந்த ஆத்மாவுக்குத் தந்தை, தந்தையாக இருப்பதில்லை; தாய் தாயாக இருப்பதில்லை; அது எல்லாமே கடந்த நிலையாகி விடுகிறது.’ - பிரஹதாரண்ய உபநிஷத்து.
‘தெரியாது, தெரியாது… தெரியாது… ‘ எத்தனைதடவை இதையே திருப்பித் திருப்பிச் சொல்வது? அவனுக்குத் தெரியாது என்ற விவரமும் இந்தக் கொடிய சமூகத்துக்குத் தெரியும். ஆனாலும் விடாது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்! அதுதான் இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தின் உரிமை! தனியாளாக ஒரு தாய் எவ்வாறு பெற்றெடுத்தாள்? தாய்க்குத் தெரியும் தந்தை யாரென! ஆனால், அவள் இவனுக்குச் சொல்லவில்லையே! வேதங்களே கூறுகின்றனவே, ‘உனக்குத் தந்தை யாரென்பதைச் சுட்டிக் காட்டிய தாய்…!’ என்று. தாய் ஒருத்தியால்தான் தந்தை யாரென்பதைக் கூற முடியும் என்று சமூகத்துக்குத் தெரிந்திருந்தும், தந்தைக்குக் கொடுக்கும் ஸ்தானத்தை ஏன் இவர்களால் தாய்க்குக் கொடுக்க யலவில்லை? தந்தை யார் எனத்தானே கேட்கிறார்கள்?
தந்தை யாரெனக் காட்டுவதிலுள்ள பிரச்னையை உத்தேசித்துதான் கர்ணனை ஆற்றில் விட்டாளா குந்தி? நல்லவேளையாக அவனுக்குத் தாயும் யாரெனத் தெரியாது!
இவனது தாய் சமூகத்தை எதிர்த்து நின்றாள். போராடினாள். தனது உரிமையை நிலைநாட்ட முயன்றாள். இவனைப் பொறுத்தவரையில் தாய் ஒரு தெய்வம்தான். எந்தத் தாயும் தெய்வம்தான். வேதனையை உணர்ந்தும் யார் மேலும் பழி சுமத்தாது காலம் சென்றுவிட்ட இவன் தாய் ஒரு தனிப்பட்ட தெய்வம்.
ஒருத்தி மகனாகத்தான் இவனை வளர்த்தாள். ஒரு ஜோடியின் மகனான அல்ல; கைவிடப்பட்ட கர்ணன்கூட ஒரு ஜோடியின் மகனாகவே வளர்ந்தான்; ஏன் தெய்வப் பிறவியான கண்ணன்கூட பெற்றவர்கள் அல்லாத ஒரு பெற்றோரிடம்தான் இருந்தான்.
ஆனால், இவன் கதி அப்படிப்பட்டதல்ல. ஒருத்தி மகனாகவேதான் இருந்தான். அந்தத் தாய் இறந்த பின்பும் அப்படித்தான் அறியப்படுகிறான்! தன்னுடைய சிரமங்களைக் குறித்து நினைக்கையில் அவனுக்குத் தாயாரின் மேல் கோபம்கூட வருகிறது. ஆனாலும், அதை மறக்கத்தான் முயல்கிறான். தானே இவ்வளவு பிரச்னைகளைக் காணும்போது, தனது தாய் எவ்வகையிலெல்லாம் ன்னல்களை எதிர் கொண்டிருந்திருப்பாள் என்று
நினைக்கையில் இவனது துக்கங்களெல்லாம் பறந்தோடி விடுகின்றன! ஆனாலும் தனது நண்பன் ஒருவன் மூலம்தான் எல்லா ஆறுதல்களையும் பெறுகிறான்.
நண்பனின் தந்தை ஒரு குடியடிமை. தனது மனைவியைக் கொடுமைப் படுத்தியவன். நண்பன் சொன்னது எப்போதும் மறக்க இயலாதது. ”நீ வருந்துவது உனக்குத் தந்தை யாரெனத் தெரியவில்லை என்று! நான் வருந்துவதோ, தந்தை இன்னாரெனத் தெரிந்ததால் மட்டுமல்ல; எல்லோராலும் ‘அவர் பையன்’ என்று கூறப்படும்போது.”
நண்பன் மறக்கவும் மறைக்கவும் முயலும் தந்தையைக் கொண்டவன். ஆனால், தந்தையென்று ஒரு மனிதன் இருப்பதால் சமூகத்தால் ஒதுக்கப்படவில்லை.
தந்தையின் குணாதிசயங்கள் எப்போதும் மகனுக்கு வந்து விடுவதில்லை. அப்படி ஆகிவிடுமோ என்று பயந்திருந்த நண்பனை ஒரு தடவை தேற்றியதை நினைத்து இப்போது சிரித்துக் கொள்கிறான்!
அஷ்டாவக்கிரன் கதையை அவனுக்குக் கூறியது நினைவுக்கு வருகிறது. உத்தாலகர் என்ற சிறந்த ஞானிக்கு ஒரு சீடர் ககோலா என்பவர். குருவோ பெரிய முனிவர். எல்லாவற்றையும் கற்றவர். சீடர் நல்லவர். ஆனால், ஞானம் மிகுந்தவரல்ல. இருப்பினும் சீடரின் ஒழுக்கசீலத்தைக் கருதி முனிவர் தனது மகளான சுஜாதாவை சீடருக்கே மணமுடித்தார்! சுஜாதா கருவுற்றபோது வயிற்றில் இருந்த குழந்தை தனது தந்தையின் குணாதிசயங்களைப் பெறவில்லை! மாறாக, தாய்வழித் தாத்தாவின் ஞானத்தைப் பெற்றிருந்தது! அச்சமயத் திலேயே ககோலா சொல்லும் மந்திரங்களின் தவறான உச்சரிப்புகளை அறிந்து மனம் நொந்து வயிற்றுக்குள்ளேயே அக்குழந்தை நெளியுமாம். அதனால் அக்குழந்தை பிறக்கையில் உடலில் எட்டுக் கோணல்களுடன் பிறந்தது. அவன்தான் அஷ்டாவக்கிரன் என்றறியப்பட்டுத் தனது பன்னிரண்டாவது வயதிலேயே ஞானபண்டிதன் ஆனானாம்! அஷ்டாவக்கிரன் எல்லா பண்டிதர்களையும் வென்று தனது தர்க்கத் திறமையை உலகுக்குக் காட்டினான். அஷ்டாவக்கிரக் கீதையை உலகுக்கு அளித்தான்.
“அம்மாதிரி உன்னை நீயே ஆக்கிக் கொள்ளலாம்…” என்று நண்பனுக்குச் சொல்லி முடித்தவுடன் தனக்குத்தானே நினைத்துக் கொண்டான்: ‘நான் யாராக என்னை ஆக்கிக் கொள்ளலாம்?’
ஒரு சிறந்த மனிதனாக ஒருவன் தன்னையே ஆக்கிக் கொள்ளலாம் எனத் தெரிந்தது, தனது நண்பனுடன் ஒரு முதியோர் இல்லத்துக்கு (ஒரு அநாதை இல்லத்துடன் சேர்ந்தது) சென்றிருந்த போதுதான்! அந்த நிகழ்ச்சி மறக்க முடியாத தொன்று; சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்த அந்த ஆசிரமக் காப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார்:
“நேற்றிரவு ஒரு கிழவனார் இறந்து போனார். அவர் இங்கு சென்ற இரண்டு வருடங்களாக இருந்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள். எல்லோரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவரும் கவர்ன்மெண்ட் பென்ஷனர். பணத்துக்குக் குறைவே இல்லை. ஆனால், இரண்டு பையன்களும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். ஒரு பெண் ஆஸ்திரேலியாவில், இன்னொருத்தி பெங்களூரில், பெண்களுக்கு அப்பா மீது எதனாலோ கோபம்! வந்து பார்த்ததே இல்லை. மனைவி போனபிறகு அவர் இங்கேயே வந்துவிட்டார். சென்ற வருடம் பெரிய பையன் தனது குடும்பத்துடன் வந்து பார்த்துவிட்டுப் போனான். அப்படியே குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவன் எப்போதும் மறக்காத மியூஸியத்துக்கும் சென்று காட்டி வந்தான். அக்குழந்தை களுக்கு மியூஸியத்தைப் பார்த்ததிலும் இங்கே முதியவரைப் பார்த்ததற்கும் மனதில் அதிக வித்தியாசம் இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்….
ஆசிரமக் காப்பாளர் சற்றே நிறுத்தி, தனது கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலினின்று தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்தார். “நாங்கள் இவர் இறந்துபோன உடனேயே அவன் கொடுத்துச் சென்றிருந்த இ-மெயில் விலாசத்துக்குத் தெரியப்படுத்தினோம். இன்று காலை அவன் அம்மெயிலுக்கே பதில் எழுதிவிட்டான். ‘என்னால் இப்போது வர இயலாது. வந்து செல்வதற்குச் செலவும் அதிகமாகும். அந்தப் பணம் உங்கள் ஆசிரமத்துக்கு உதவலாம். சில நாட்களுக்குள் ஒரு
பிளாங்க் செக் அனுப்பி வைக்கிறேன். அங்கேயே யாரையாவது வைத்து கர்மானுஷ்டானங்களை முடித்துவிடவும். எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு தொகையை நீங்கள் அச்செக்கில் எழுதிக் கொள்ளுங்கள்…”
நண்பன் இவனிடம் சொன்னான்: “நீ தந்தையைத் தெரியாது வருந்துகிறாய். நான் தெரிந்ததால் வருந்துகிறேன். இந்தப் பெரியவர் இருந்தபோது குழந்தைகள் கவலைப் படவில்லை. இறந்துவிட்டதால் வருத்தம் அடைந்துவிட வில்லை. இதைக் குறித்து என்ன சொல்லலாம்?”
அக்காப்பாளர் குறுக்கிட்டார். “வேண்டாம். இதைக் குறித்து விவாதிப்பதால் ஒரு பயனும் கிட்டாது. இப்போது நாங்கள் இந்த கர்மானுஷ்டானங்களைச் செய்து வைக்க ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்…”
மிகவும் உன்னிப்பாக விவரங்களை ஜீரணித்துக் கொண்டிருந்த அவன் தனது நண்பனைப் பார்த்த பார்வையில் அடுத்து கேட்கப்படப் போகும் கேள்வி என்னவாக இருக்கும் எனத் தெரிந்தது.
எவரை வேண்டுமானாலும் தாயாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அப்படி யாரையோ தந்தையாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்?
தனது தோள்களைத் தொட்ட கையின் மிருதுவான ஆனால், மன உறுதியைக் காட்டும் ஸ்பரிசம் அவனைத் திரும்பச் செய்தது. திரும்புகையில் இதே ஆசிரமத்தில் வாழும் மற்றொரு முதியவர் நின்று கொண்டிருந்தார்.
“உங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிறேன். நானும் ஒரு தனியன். சுற்றங்கள் யாரும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே நாமாகவே கற்பித்துக் கொண்டவைதாம்! இங்கு வந்து இருந்த பிறகுதான் மனிதனின் தன்மை நன்றாக எனக்குப் புரிந்தது. இங்கே இரண்டு எல்லைகள் இருக்கின்றன. ஒரு விளிம்பில் பெற்றோரால் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிடப்பட்ட குழந்தைகள். நாம் செய்யாத தவறுக்காகத் தண்டனை பெற்றவை! மற்றொரு விளிம்பில் எங்களைப் போன்றோர். எல்லாமே இருந்தும் எந்தக்
காரணத்துக்காகவோ தொடர்ந்து வாழும் தண்டனையைப் பெற்றவர்கள். எதையுமே அவலநிலையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆண்டவன் ஒரு காரணத்துக்காக இந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறான். ஒப்புக் கொண்டு அந்த வரையறைக்குள் நம்மால் முடிந்தவரையில் சந்தோஷமாக வாழ முயல்வதுதான் உத்தமம்!
இங்கு சண்டோக்ய உபநிஷத்தில் வரும் கதையொன்றைக் கூறுகிறேன். ஒரு பையன் தனது தாயிடம் வேதங்கள் படிக்கவிருக்கும் விருப்பத்தைத் தெரிவித்தான். தாயார் சொன்னார்: ‘மகனே, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் ஒதுக்கப்பட்டவளாகவே இருந்துள்ளேன். நான் பல இல்லங்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தேன். உன் தந்தை யாரென நான் அறியேன். என் பெயர் ஜபலா. உனக்கு சத்யகாமா என்று பெயர்’ என்றாளாம்! ஒரு முனிவரிடம் சென்று வேதம் கற்றுக்கொள்ள தனக்குள்ள ஆசையை சத்யகாமா தெரிவித்த போது முனிவர் அவனது பெற்றோரைப் பற்றிக் கேட்டார். அவனோ சிறிதும் சங்கோஜமின்றி தாயார் சொன்னதைச் சொன்னான். கேட்ட முனிவர், ‘இவ்வளவு தைரியமாக உண்மையைச் சொன்ன நீதான் உண்மையில் உத்தமன்! உயர்குலத்தோன்’ என்று கூறி வேதங்கள் கற்றுத் தந்தார்!’
அம்முதியவர் கூறி முடித்தவுடன் இவன் தொடர்ந்தான்: “எனக்கு ஒரு தண்டனை! என் தாயார் தவறு செய்திருக்கலாம். அதற்குப் பிராயச்சித்தமாக எனது நிலையை ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். அதைக் குறித்து நான் வருந்தவில்லை. ஆனால், இன்றைய சமூகம் ஏன் பழிவாங்கவே நினைக்கிறது?”
“பழி என்று நீ நினைக்கலாம். அது சமூகத்தின் பொழுதுபோக்கு! அது வாயை அசைபோட வைக்கும் அவல் போன்றது. இதோ இந்தக் கிழவர் இறந்து விட்டார். அவர் கர்மானுஷ்டானங்களைச் செய்யக்கூட நீ தயாராக இருப்பது உன் முகத்திலிருந்தே தெரிகிறது. அதைத் தவறாக இருக்குமோ என நினைத்துப் பயப்படும் உன் நண்பனின் நிலையும் எனக்குப் புரிகிறது! உன்னைச் சமூகம் ஒதுக்கியிருப்பதாக நீ நினைப்பதால் இனி என்ன செய்தாலென்ன என்ற விரக்தியால்
கூட நீ பயப்படாமல் இருக்கலாம். அந்த விரக்தி உன் நண்பனுக்கு இல்லையல்லவா?”
நண்பன் குறுக்கிட்டான்: “நான் யோசித்தது வேறு காரணத்துக்காக. இதே ஒரு பெண்மணியாக இருந்திருந் தால்…
“புரிகிறது… அதற்கும் ஒரு விவரமான பதில் இருக்கிறது. ஞாக்யவல்கியர் என்ற ஒரு மகா முனிவர். அவர் பிரஹதாரண்ய உபநிஷத்தில் கூறுகிறார்:
‘ஆத்மா… பசி, தாகம், துக்கம், அதிருப்தி எல்லா வற்றையும் கடந்தது. அது முதுமை, சாவு இவற்றையும் கடந்தது. அந்த நிலையில் ஒரு தந்தை தாய் பெற்றோராக இருப்பதில்லை. வேதங்கள்கூட வேதங்களாக அந்நிலையில் இருக்காது!
எல்லாவற்றையும் கடந்து நிற்கும் நிலை அது !
அந்நிலையை அடைந்த ஒருவனுக்கு துக்கமும் ஆனந்தமும் ஒன்றுதான்! சொன்ன பிறகு அவர் அங்கு நிற்கவில்லை. சென்றுவிட்டார்.
நண்பன் சொன்னான். “உன் முகத்தில் உறுதி தெரிகிறது. இனி சமூகம் என்ன நினைத்தால் என்ன என்பதால் நீ இதைச் செய்வதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், நீ உனது மன ஆறுதலுக்காகவே இதைச் செய்கிறாய் என்பதும் இதைச் செய்வதால் ஒரு இறந்தவரின் உடலை மிகவும் மரியாதையுடன் அனுப்பிவிட்டதால் நீ அடையும் சந்தோஷமும் அவர்களுக்குப் புரியாது!’
“புரிய வேண்டாம். அச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இனி எனக்கில்லை!” என்று கூறிவிட்டுக் கர்மானுஷ்டானங்களை இவன் முடித்துவிட்டுத் திரும்புகையில் அந்த ஆசிரமக் காப்பாளர் தனது கண்களைத் துடைத்துக்
கொண்டார்!
16.03.2003,
ஆனந்த விகடன்
