இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..

நாறும்பூநாதன் என்கிற வாசனை கமழும் பூ என்பதான இந்தப் பெயர்தான் முதலில் என்னை ஈர்த்தது. நாறும்பூவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ வெளியான நேரம் எனக்கொரு நூலை வாசிக்கக் கொடுத்தார்.
பின் இந்தத் தொகுப்பை விற்றுத் தருவதாகச் சொல்லி, ஒரு பத்து பிரதிகள் வாங்கி விற்று அதற்கானப் பணத்தையும் கொடுத்து விட்டேன். இவ்வாறாக எங்களின் தோழமை தொடங்கியது.
அன்றிலிருந்து ஒரு முப்பத்திரண்டு ஆண்டு காலம் எங்கள் தோழமை தொடர்ந்தது.
தமுஎகச அமைப்பினுள் பிறர் மனம் நோகாதபடி தன் கருத்தை சொல்லி விடும் பண்பை அறிந்திருந்தார்.அவர் இருக்கும் இடத்தை தனது புன்னகையால் கலகலப்பாக வைத்திருப்பார். இந்தக் கலை நமக்கு வராதா என நான் யோசிப்பது உண்டு.. இதெல்லாம் நாறும்பூக்களுக்கே கை வரும் கலை என நான் அமைதியாகி விடுவதுண்டு.
ஓர் ஆண்டிற்கு இரண்டு முறையாவது அவரிடம் பேசி விடுவதுண்டு. இலக்கியம் பற்றி அவரின் கதை சொல்லும் முயற்சி பற்றி திகசி பற்றி, வண்ணதாசன் 75 பற்றி நெல்லை கண்ணன் பற்றி வண்ணாரப்பேட்டை பாலத்தின் கதை பற்றி என பேசியது உண்டு.
சமீபத்தில் நாறும்பூ உடன் டிசம்பர் இறுதியில் பேசினேன்.பிறகு சனவரி தொடக்கத்தில் பேசினேன்.அப்பொழுதெல்லாம் பொருநை இலக்கியத் திருவிழா மூன்றாம் பதிப்பில் நெல்லை மண்ணின் படைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டது பற்றி கவலைப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சி,தமுஎகச, வங்கி ஊழியர் சங்கத்தின் வழி வளர்ந்த படைப்பாளர் என்பதால் நாறும்பூ கற்றுக் கொண்ட சனநாயகப்பண்பு சமத்துவநீதி பார்வை கைக்கொண்டு பொருநை இலக்கியத் திருவிழா, பொருநை புத்தகத் திருவிழா போன்ற போன்ற அரசு சார்பிலான இலக்கிய விழாக்களை தன் உழைப்பால் மிளிரச் செய்தார்.
ஆனாலும் பொருநை இலக்கியத் திருவிழாவின் மூன்றாம் பதிப்பில் உள்ளூர் மாவட்ட நிர்வாகத் தரப்பில் நிகழ்ந்த குளறுபடிகளால் மிகவும் மனம் நொம்பலப்பட்டார்.
இவர் கம்யூனிஸ்ட்; இவர் போக்கில் இலக்கியத் திருவிழாக்களை இழுத்துப் போகிறாரென இவர் மீது யாரோ அல்ல, மாவட்ட நிர்வாகம், பொதுநூலகத்துறை அதிகாரிகள் நாறும்பூவின் சமத்துவநீதியை குறை கூறியதையும் அறிந்தேன்.
இவ்வாறான அவமதிப்புகளால் நாறும்பூ சஞ்சலப்பட்டார்.
திருநெல்வேலியை இதன் பண்பாட்டு வேர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்த வேண்டுமென்ற ஆவலால் தனது இருதய நோய்க்கான ஓய்வு எடுத்தல் போன்றவற்றில் கூட பெரிதும் கவனங் கொள்ளாது இயங்கிக் கொண்டே இருந்தார்.
ஓய்வின்மையும் கடும் உழைப்பும் மனச்சோர்வும் 64 வயது நாறும்பூவை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது காலம்.
இனியாவது ஒய்வு கொள்க நாறும்பூ.உங்களால் அடையாளம் காணப்பட்ட மாணவர்களும் இளம் படைப்பாளிகளும் உங்கள் கண்ணைனக் கருதிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் உங்களை என்றும் நினைவில் கொள்வர்.
R Narumpu Nathan

One Comment on “ இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..”

  1. நன்றி விருட்சம்.என் பெயரை இரா.தெ.முத்து என சரியாக்கிப் பதிவிடுக. விருட்சத்தின் பரந்த கவனத்திற்கு நன்றி.

Comments are closed.