சாவி /வேத வித்து

6.

அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், பாகீரதி கண் திறந்து பார்த்தாள்.
“காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலையோன்னோ அதான்! மணி பத்தாகப் போறதே! கழுத்துப்படி விட்டுப் போக அவரைக்காய் பறிச்சிண்டு நின்னா, காலை வெய்யில் பித்தம் தலைக்கேறாம என்ன பண்ணும்? இந்தா, இந்த மோரைக்குடி, முதல்ல” என்று தம்ளரை நீட்டினாள் கமலா.
அது வெய்யில் தலைசுத்தலா, அல்லது அப்பா வந்து விட்டாரே, அந்த ரகசியம் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தின் விளைவா என்பது பாகீரதி மட்டுமே அறிந்த ரகசியம்.
வாசலில் உட்கார்ந்திருந்த கனபாடிகளுக்கு இந்தச் செய்தி எட்டி, அவர் உள்ளே வருவதற்குள் பாகீரதியே எழுந்து போய் “அப்பா, வாங்க!” என்று கனிவோடு வரவேற்றாள்.
“என்னம்மா, உனக்கு?”
“ஒண்ணுமில்லப்பா, பசி மயக்கம்” என்றாள்.
போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையை கனபாடிகள் தம் உடம்பிலிருந்து அகற்றும்போதே கிட்டா ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான்,
“அவன் எங்கடா, மூர்த்தி?” என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் கனபாடிகள்.
“ஸ்நானத்துக்குப் போறதாச் சொல்லிட்டுப் போனான்.”
“அடடே வாசல்ல பையை வச்சுட்டு வந்துட்டேன். போ, போ! எடுத்துண்டு வா, ஒடு” என்றார். அதில் மூர்த்திக்காக நாலு முழம் பட்டுவேட்டி ஒன்று வாங்கி வைத்திருந்தார்.
பாடசாலைப் பையன்கள் ஒவ்வொருவராக வந்து கனபாடிகளுக்கு பக்தியோடு நமஸ்காரம் செய்தனர்.
நாலைந்து பையன்கள் மட்டும் ஒரு முலையில் உட்கார்ந்து ஸுஸ்வரமாக சாமவேதம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். கனபாடிகளுக்கு நமஸ்காரம் செய்ய, அவர்கள் எழுந்து வர முயன்றபோது,
“வேணாம்; பாதி ஆவிருத்தியில் விட்டுட்டு நமஸ்காரம் பண்ண வர வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே தோட்டப் பக்கம் போனார் கனபாடிகள்.
“மூர்த்தி ஸ்நானத்துக்குப் போயிருக்கான்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டயே உண்மை தெரிஞ்சா.” என்று கேட்டாள் கமலா.
“நான் பொய் சொல்லலையே! அவன் ஆத்துக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போனான். அது உண்மை தானே..?”
“அப்பாவுக்குத் தெரிஞ்சதுன்னா என்ன ஆகுமோ!” என்றாள் பாகீரதி.
“நீ எதுக்கு அனாவசியமா பயப்படறே? நீயா அவனைப் போகச் சொன்னே?”
”உண்மையை மறைச்சுப் பேசறதுகூடப் பொய்தானேடா!”
“ஆபத்துக்குப் பொய் சொல்லலாம்னு சாஸ்திரமே சொல்றது. பசுமாட்டுக்குக் கொஞ்சம் புல் கொடுத்துட்டா பொய் சொன்ன பாவம் தீர்ந்துடுமாம். நம்மாத்துல பசுமாடும் இருக்கு. நிறையப் புல்லும் இருக்கு” என்றான் கிட்டா.
“பொய் சொல்ல நீயும் இருக்கே!” என்றாள் கமலா,
இதற்குள் கனபாடிகள் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு மடியாகப் பூஜை மணையில் வந்து அமர்ந்தார்.

குத்து விளக்கும், வெண்கல மணியும் பஞ்சபாத்திரங்களும் தீக்கொழுந்துபோல் பளபளக்க, அர்ச்சனைக்குரிய புஷ்பங்கள் மூங்கில் தட்டில் குவிந்திருக்க, அந்த இடத்தில் ஒரு தெய்வீக மணம் சூழ்ந்திருந்தது.
திராட்சைப் பழங்களை நைவேத்தியமாகக் கொண்டு வைத்தாள் கமலா.
*ஏது திராட்சை!” என்று கனபாடிகள் கேட்க ’ஊர்லேர்ந்து கிட்டா கொண்டு வந்தான்’.
பூஜை முடித்து, ’ஆயதனவான்பவதி’ சொல்லி, தோட்டத்தில் காக்கைகளுக்கு அன்னமிட்டபின் சாவகாசமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் கனபாடிகள்.
“மூர்த்தி எங்கடா போனான்? ஸ்நானத்துக்குப் போனவனா இன்னும் வரலை?”
“அவன் வரமாட்டான்” என்றாள் கமலா.
“ஏன்?”
“இனிமே வேதம் படிக்கப் போறதில்லையாம். திரும்பி வரப் போறதும் இல்லையாம்! யாரிட்டயும் சொல்லிக்காமலே போயிருக்கான்.”
“திடீர்னு வேதத்தின் பேர்ல அப்படி என்ன கோபம்? இதெல்லாம் யாரிடம் சொன்னான்?”
“கிட்டா, மூர்த்தியை தஞ்சாவூர்ல பார்த்தானாம்.”
“கிட்டாவை இங்க கூப்பிடு.”
“அப்பா, கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வரேளா? உங்ககிட்ட தனியாப் பேசணும்” என்று கனபாடிகளை ரகசியக் குரலில் அழைத்தாள் கமலா.
“ஏதோ விபரீதமான செய்தியைச் சொல்லப் போகிறாள்” என்பதை ஊகித்துவிட்ட கனபாடிகள் தளர்ந்து, தள்ளாடியபடி கமலாவைப் பின் தொடர்ந்தார்.
பாகீரதிக்கு வயிற்றைக் கலக்கியது.
இரண்டு நாட்களாகவே கமலாவின் பார்வையிலும் பேச்சிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.
’அப்பாவிடம் எதையாவது கண்டதையும் காணாததையும் சொல்லி அவர் மனசில் விஷ விதையைத் தூவி விடுவாளோ?’ என்று அஞ்சினாள்.
அப்பாவைத் தனியாக அழைத்துப் போய் கமலா என்னதான் சொன்னாளோ தெரியவில்லை. கனபாடிகள் அத்துடன் ’கப்சிப்’ பென்று அடங்கிப் பேசா மடந்தையாகி விட்டார்.
அன்று பகல் முழுதும் பாடசாலை உற்சாகமின்றி, உயிரோட்டமின்றி கலகலப்பு இன்றி ஒரு மெளனமான சோகத்தில் ஆழ்ந்திருந்தது.

பகல் போஜனத்துக்குப் பிறகு கனபாடிகள் தினமும் சாதாரணமாகச் சற்று நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். இன்று தூக்கம் வராததால் இப்படியும் அப்படியும் கூண்டுப் புலிபோல் நடந்து கொண்டிருந்தார். அகத்தின் சஞ்சலம் முகத்தில் தெரிந்தது. சற்றுநேரம் அப்படி நடந்துவிட்டு வால்மீகி ராமாயண புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். ராமனைப் பிரிந்த தசரதர் புத்திர சோகத்தில் மூர்ச்சையாகிவிட்டார் எள்ற வரிகளைப் படித்தபோது அவர் கண்களில் நீர் ததும்பி நின்றது.
“மூர்த்தியின் அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ’அவனுக்கு தாய் தந்தை குரு தெய்வம் எல்லாம் இனி நீங்கள்தான்’ என்று என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறாரே, அவர் திரும்பி வந்து ’என் மூர்த்தி எங்கே?’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்வேன்?” என்று தவித்தார்.

ராத்திரி, கூடத்து கடிகாரம் ஒன்பது அடித்து, ராப்பிச்சைக்காரர்கள் வந்துவிட்டுப் போன பிறகும்கூட கனபாடிகள் சாப்பிடாமல் மூர்த்தியை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கமலா மெதுவாக அவர் அருகில் போய் நின்று “மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க, சாப்பிட வாங்கப்பா!” என்று அழைத்தாள்.
“வேண்டாம்மா; எனக்குப் பசியே இல்லை!”
“வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது. மூர்த்தி உங்களுக்குப் பிடிக்கும்னு திராட்சைப் பழம் வாங்கி அனுப்பியிருக்கான், இந்தாங்க, இதையாவது சாப்பிடுங்க” என்றாள் பாகீரதி.
“மூர்த்தியா எனக்கா? அனுப்பியிருக்கானா!” கனபாடிகள் ஆவலோடு அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். திராட்சை தேனாக இனித்தது. (அடாடா, இந்த மூர்த்திக்கு என் மீது எத்தனை அன்பு !)
“கமலா! நான் படுக்கப் போறேன், காலெல்லாம் வலிக்கிறது. இன்றைக்கு ரொம்ப தூரம் நடந்தே வந்தேன். கிட்டாவைக் கூப்பிட்டு என் காலைக் கொஞ்சம் மிதிக்கச் சொல்லு. நான் இப்படியே இந்த மான்தோல் மீது படுத்துக் கொள்கிறேன்” என்றார்.

கிட்டா வந்து அவர் கால்களை மிதிக்காமல் கைகளால் பிடித்துவிட்டான்.
“காலால் மிதிடா, அப்பத்தான் வலி போகும். இல்லைன்னா என் கால் வலியெல்லாம் உன் கைக்கு ஏறிடும்!” என்றார்.
“பரவாயில்லே; நான் பிடிச்சே விடறேன்” என்றான் கிட்டா.
“ஒகோ, உனக்கு ஒரு கால் ஊனமோ?…”
“அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!””
“குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவாயில்லை; மிதி” என்றார்.
அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணீர் பெருக்கின.
“ஏன் இப்படி அழறீங்க? மூர்த்தியை நினைச்சுண்டா?”
“ஆமாம்; அவனை ஒரு நாள் ராத்திரி இப்படித்தான் காலை அமுக்கச் சொல்லிட்டுத் தூங்கிப் போயிட்டேன். விடியற்காலம் கண் விழித்துப் பார்க்கிறேன். அப்பவும் காலை அமுக்கிண்டே உட்கார்ந்திருந்தான். அப்படி ஒரு பக்தி அவனுக்கு. அவன் பிரிவை என்னால தாங்கிக்க முடியலை கிட்டா! எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆனாலும் புத்திர சோகம் என்பது எவ்வளவு கொடுமைன்னு புரியறது” என்றார்.
“மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. தன்னால வந்துடுவான், பாருங்க” என்றான் கிட்டா.
“ஊஹூம்; எனக்குத் தோணல்லே! கார்த்தாலே முதல் வேலையா நாம ரெண்டு பேரும் தஞ்சாவூர் புறப்பட்டுப் போகலாம். அங்கே போய் அவனைத் தேடிப் பிடிச்சு அழைச்சுண்டு வந்துடலாம். கிடைச்சுடுவானா?” என்று சின்னக் குழந்தை போலக் கண்ணீர் சிந்தியபடியே கேட்டார் கனபாடிகள்.

மறுநாள் காலை.

தபால்காரர் கொண்டு வந்து கொடுத்த கடிதத்தை ஆவலோடு பிரித்துப் பார்த்தார் கனபாடிகள். மூர்த்தி எழுதி யிருந்தான்.

சாவி /”வேத வித்து” – விருட்சம் நாளிதழ்

One Comment on “சாவி /வேத வித்து”

Comments are closed.