சாவி/”வேத வித்து”

7.

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து “ஹா. ஹா, ஹா” என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.
அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி அடித்து ஓடியது.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து சூழ்ந்த பெரும் கூட்டம் வட்டமடித்து நிற்க, ரயிலடி அழுக்குப் பையன்கள் மரத்தின்மீது அவசரமாக ஏறி ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டனர்.
சுற்றி நின்ற கூட்டத்தில் மூர்த்தியும் ஒருவன்.
கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்ததுபோல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருந்தாமல் நின்றான்.
கழுத்துச் சங்கிலியை அப்பா வாங்கிக் கொடுத்த நீலச் சட்டை போட்டு மறைத்திருந்தான். கையில் மான் தோல் பை. இப்படியும் அப்படியும் ஒதுங்கிக் கூட்டத்தின் இடுக்கு வழியாகப் பார்த்தபோது அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.
அவன் யாரைத் தேடி ஊரை விட்டு, பாடசாலையைவிட்டு வந்தானோ, யாருடைய அழகில் மயங்கினானோ, யாருடன் நிறையப் பேசி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அந்த மஞ்சுவை அங்கே கண்டபோது உள்ளத்தில் ஒரு பரவசமான உணர்ச்சி பொங்கியது!
மஞ்சு, மூங்கில் கழிகளை எடுத்து அவற்றின் நுனிப் பகுதியைப் பெருக்கல் குறிபோல் இறுகக்கட்டி தரையில் குத்திட்டுப் புதைத்தாள். பிறகு ஒரு நீளமான கம்பியால் அந்தப் பெருக்கல் குறிகளை இணைத்து அந்தக் கம்பிமீது ஏறி டமார லயத்துக்கு ஏற்ப ‘பாலன்ஸ்’ செய்தபடி நடந்தாள்.
உயரத்திலிருந்து பார்த்த மஞ்சுவின் கண்களில் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்த மூர்த்தி ‘பளிச்’சென்று தென்பட அடடே, இவன் எப்படி இங்கே வந்தான்!” என்று தனக்குள் வியந்தாள்.
அதேசமயம், மூர்த்தியின் சட்டைப் பையிலிருந்த மணிபர்ஸை யாரோ ஒருவன் ஜேப்படி செய்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட மஞ்சு சட்டென்று கீழே குதித்து, கூட்டத்துக்குள் பாய்ந்து அந்த ‘ஜேப்படி’யின் தலைமயிரைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வந்து ஓங்கி ஒர் அறை கொடுத்தாள்.
“திருட்டுப் பயலே ! எடுடா அந்த மணிபர்ஸை !” என்றாள். அவன் திமிறிக்கொண்டு ஒடப் பார்த்தான்.
“தப்பி ஓடப் பாக்கறயா? இது உடும்புப் பிடி. இதிலிருந்து நீ அவ்வளவு லேசாத் தப்பிட முடியாது” என்று அவனை ஓர் உலுக்கு உலுக்கினாள்.
அருகில் நின்ற போலீஸ்காரரை விறைப்பாகப் பார்த்து, “என்னய்யா தாணாக்காரரே! திருடனைக்கூடப் பிடிக்காம அங்கே யாரைப் பார்த்து இளிச்சிட்டு நிக்கறிங்க? இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் நாலு போடு போடுங்க. அப்பத்தான் புத்தி வரும் இவனுக்கு” என்றாள்.
இதற்குள் “ஐயோ, அது என் மணிபர்ஸ் !” என்று அலறிக்கொண்டு ஓடிவந்தான் மூர்த்தி.
மஞ்சு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “வெள்ளத்தில் முழுகின ஆளில்ல நீ! இங்க எங்க வந்தே?” என்று கேட்டாள்.
“உன்னைப் பார்க்கத்தான்.”
“முதல்ல இந்த பர்ஸை வாங்கிக்க; வித்தை முடிஞ்சதும் பேசலாம்! ”

திடீரென்று வானம் இருண்டு எந்த நிமிடத்திலும் மழை வரும்போல் ஒரு சூழ்நிலை உருவாகி, புழுதிக்காற்று வீசவும் கூட்டம் மளமளவென்று கலையத் தொடங்கிற்று. ‘வசூல் போச்சே!’ என்ற ஏமாற்றத்தில் கிழவன் முகம் கறுக்க அவசரமாக “தருமவான்களே, தாய்மார்களே!” என்று டால்டா டப்பாவைக் குலுக்கிக்கொண்டு ஓடினான்.
இதற்குள் இடியும் மின்னலுமாய்ப் பேய் மழை கொட்டத் தொடங்கவே அத்தனை கூட்டமும் ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. மழையில் தெப்பலாய் நனைந்து நின்ற மஞ்சுவைத் தொடர்ந்து முர்த்தியும் போய் நின்றான்.
“வேற சட்டை வச்சிருக்கியா?” என்று கேட்டாள் மஞ்சு,
“இல்ல.”
“ராத்திரி எங்க தங்கப்போறே?”
“உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன். ‘தேடப் போன மருந்து காலிலே சிக்கின மாதிரி’ நீ இங்கயே கிடைச்சுட்டே !”
“முதல்ல தலையைத் துவட்டிக்கோ, இந்தா டவல் ! மழை நின்னதும் ராஜா சத்திரம் போலாம். அங்கதான் நானும், அப்பாவும் தங்கியிருக்கோம்.”
இது யார்? உங்கப்பாவா?”
“ஆமாம்; வயசாயிட்டுது. வரவர கண்ணும் தெரியலே; காதும் கேட்கலே. நய்னா நான் சொன்னனே… ஆத்துல ஒருத்தர் முழுகிட்டார்னு இவர்தான் அது !”
“பிராமணப் பிள்ளையா?”
“ஆமாம்; வேதம் படிக்கிறார்.”
“உங்க மகதான் என்னைக் காப்பாத்தினார். அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினா. இன்னைக்கு என் மணிபர்ஸைக் காப்பாத்தினா!” என்றான் மூர்த்தி.
“மழை நின்னுட்டுது. வாங்க சத்திரத்துக்குப் போவோம்” என்றான் கிழவன்.
“இடியும் மின்னலும் நின்னபாடில்லை. மறுபடியும் மழை வரும் போலிருக்கு” என்றான் மூர்த்தி.
சத்திரத்துத் தாழ்வாரத்தின் ஒரு மூலையில் ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தாள் மஞ்சு. அங்கேதான் சமையல் சாப்பாடு படுக்கை எல்லாம்.
மஞ்சு அடுப்பு பற்ற வைத்து சப்பாத்தி தயாரித்தாள்.
”சப்பாத்தி பிடிக்குமா உனக்கு?” மூர்த்தியைக் கேட்டாள்.
“இல்லே, நான் ஆனந்தா லாட்ஜுக்குப் போறேன்.”
“ஏன் நான் செய்யற சப்பாத்தி பிடிக்காதா?”
“உன்னைப் பிடிச்சிருக்கு!”
சிரித்தாள். அவள் அவனிடம் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை.
“போயிட்டு சீக்கிரம் வந்துடுவே இல்ல?”
“உடனே… இனிமே உன்கூடத்தான்.”
“ஏன் ! வேதம் படிக்கப் போறதில்லையா?”
“நீ என்னைத் தொட்டு காப்பாத்தினதிலேர்ந்து என் மனசே சரியில்லே. பாடசாலையிலும் அமைதி இல்லாமப் போயிடுத்து. புத்தி வேதத்தில் லயிக்கலே. சரியோ தப்போ, துணிஞ்சு வந்துட்டேன்.”
“உனக்கும் உன் அப்பாவுக்கும் ஆட்சேபணை இல்லேன்னா நானும்
உங்களோடு சேர்ந்து கழைக்கூத்து ஆடத் தயார். எனக்கு வித்தையெல்லாம் கத்துக் கொடுப்பியா?”
“நிசமாத்தான் சொல்றயா?”
”நிஜம்மா!”
மின்னல் ஒன்று வெள்ளிக் கொடியாய்ப் பளிச்சிட்டது.
மஞ்சு யோசித்தாள். அப்பாவுக்குப் பிறகு தனக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண் துணை தேவை என்பதையும் தனக்கு ஏற்றவனாக யார் கிடைக்கப் போகிறான் என்பது பற்றியும் அவள் கொஞ்ச நாட்களாகவே யோசித்துக் கொண்டுதானிருந்தாள். மூர்த்தி அதற்குப் பொருத்தமானவனாயிருப்பான் என்று ஒரு எண்ணம் மின்னலிட்டது அவளுக்கு.
“வேதத்தைப் பாதியில விட்டு வந்த மாதிரி இங்கிருந்தும் போயிடமாட்டயே!”
வானத்தில் ஒரு பலத்த இடி முழங்கியது.
“ஊஹூம், மாட்டேன்.”
“உன்னை யாரும் தேடி வரமாட்டாங்களா?”
“வந்தாலும் போகமாட்டேன். எனக்கு அம்மா இல்லை. அப்பா ரிஷிகேசம் போயிட்டார். வேதம் சொல்லித் தரும் சங்கர கனபாடிகள்தான் என் தாய் தந்தை குரு, தெய்வம் எல்லாம்…. என்னை மறந்துடுங்க; தேட வேண்டாம்னு அவருக்கு நான் கடிதம் எழுதிப் போட்டுட்டேன். அவர் என்னைத் தேட மாட்டார்.” இதைச் சொல்லும்போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
கூடல்வாயில் மழைத் தண்ணீர் அருவியாய் கொட்டியது.
“அப்ப… அவரிடம் சொல்லிக்காம வந்துட்டியா?”
“ஆமாம்.”
”ஏன்?”
“அதை மட்டும் கேட்காதே! என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி அது. சொல்லவே கூடாத பரம ரகசியம் அது” என்றான்.
“கழைக் கூத்தெல்லாம் கத்துக்கணும்னா, முதல்ல உடம்பை வில்லா வளைக்கத் தெரியணும். அதுக்கு தினம் தினம் ‘கவாத்து‘ செய்யணும். நாளைக்கே நீ இந்தக் குடுமியை எடுத்துட்டு தியாகராஜபாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமி வச்சக்கணும். அப்புறம் உன் கழுத்துல கறுப்புக் கயிறு முடிஞ்சு கையிலே தாயத்து கட்டி விட்டுருவேன். அதுதான் உனக்கு ரட்சை சம்மதமா?” என்று கேட்டாள்.
மூர்த்தி சற்று யோசித்தான். ஒரு கணம் தன்னைக் கழைக்கூத்தாடி கோலத்தில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். கண்களில் கனபாடிகள் தெரிந்தார். ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
சம்மதம் என்ற பாவனையில் தலையசைத்தான்.
அப்புறம் அவன் ஆனந்தா லாட்ஜ் போய் சாப்பிட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு புதிய தாழம்பாய் வாங்கி வைத்திருந்தாள் மஞ்சு.
அவன் திரும்பி வந்ததும் “இந்தா, இந்தப் பாயில படுத்துத் தூங்கு. அந்த மான் தோல் பையைத் தலைக்கு வச்சுக்க . மணிபர்ஸ் ஜாக்கிரதை !” என்றாள்.
தூரத்து டீக்கடையில் கிட்டப்பா ‘கோடையிலே’ பாடிக் கொண்டிருந்தார்.

பழக்கமில்லாத சூழ்நிலையில் தூக்கம் வரவில்லை அவனுக்கு. அடங்கியிருந்த மழை நடுநிசிக்கு மேல் மீண்டும் கொட்டத் தொடங்கியது. மழைச்சாரல் தாழ்வாரத்தை நனைத்ததுடன் மூர்த்தி கால்களையும் ஈரமாக்கியது. அவன் நகர்ந்து போய்ச் சுவரோரம் முடங்கிக் கொண்டான்.
மஞ்சு சப்தப்படுத்தாமல் எழுந்து நின்று ‘மூர்த்தி எப்படி இருக்கிறான்?’ என்று பார்த்தாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். ‘பாவம், குளிருதா மூர்த்தி?’ என்று கேட்டுக் கொண்டே கனமான போர்வை ஒன்றை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டாள்.

இங்கே பாடசாலையில், அதே நேரம் கனபாடிகள் மூர்த்தியைப் பற்றிய விசாரத்தில் மூழ்கியவராய் தூக்கம் வராமல், “மூர்த்தி ! முர்த்தி!” என்று பித்துப் பிடித்தவர் போல் முனகிக் கொண்டிருந்தார்.
தூங்கிக் கொண்டிருந்த கொண்டி கிட்டாவை எழுப்பி, “ஏண்டா கிட்டா ! இந்த மழை தஞ்சாவூர் பக்கமெல்லாம்கூடப் பெய்யுமோ?” என்று கேட்டார்.
தூக்கக் கலக்கத்தில் அவனுக்கு ஒன்றும் புரியாமல், “இப்ப இங்கே மழை பெய்யறதா?” என்று கேட்டான்.
“மூர்த்தி இந்த மழையில எங்கே கிடந்து கஷ்டப் படுகிறானோ? போர்வைகூட இல்லாமப் போயிருக்கானே! அவனுக்கு யார் போர்த்திவிடப் போறா?” என்று கனபாடிகள் தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார்.
கூடத்தில் அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.
பாகீரதிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த ‘முதல் இரவு’ நினைவுகள் அவளை வாட்டி எடுக்க, பொங்கி வந்த கண்ணீரால் நினைவுகளைக் கழுவிக்கொண்டு, முன்கட்டுப் பக்கம் போனாள். கனபாடிகள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
“என்னப்பா, தூங்கலையா நீங்க?”

”நீ ஏன் தூங்கலை? உனக்கு ஏன் தூக்கம் வரலை?” என்று பதிலுக்குக் கேட்டார் கனபாடிகள்.

சாவி /வேத வித்து – விருட்சம் நாளிதழ்