ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

9. மனித சுபாவம்

கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை – சந்தேகத்தை – பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை ‘மனிதன், அல்ப சந்தோஷி’ என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனைவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித்திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவிலிருந்து அத்தானுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான் எடுத்துக் கொத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக்குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டுகள் வாங்கினான்.
தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டாள். என்ன தான் தகப்பனார் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பினாலும், பணத்தில் ’என்னுடையது உன்னுடையது’ என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் தூங்கிவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தானுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். ”அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னொருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக்கிறது? ‘எனக்குச் சாதம் போட வா’ என்று கணவன் வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணாவிடில், ’ஸரஸு” என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள்.
குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதாவது ஊடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?’ என்று அவள் என்றும் போல் பழகி வந்தாள்.
நீல வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினாள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணீரும், சண்டையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் ‘ஸஹானா’ ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்: சங்கீதத்துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் ‘மயக்கும் சக்தி’ உண்டு. சாவித்திரி வீணாகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளை அன்புடன் பார்த்து, “சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!” என்று கொஞ்சினான்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை.” – முகம் சிவக்கக் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
கீழே ‘ஸஹானா’ ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ’தூண்டிற் புழுவினைப்போல்’ வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, “இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளை மீட்டும்போது எழும் ஓசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸுவிடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, ‘உங்களுக்கு என்ன பிடிக்கும்!’ என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரியாமல் நான் அதை அனுபவிக்க வேண்டும்.”-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசினான்.
மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சீறும் சர்ப்பம் போல் சாவித்திரி ‘விசுக்’கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின் போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தீர்களே! மறந்து போய்விட்டேன் என்றா பார்த்தீர்கள்? மறக்க வில்லை!” என்று கோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்:
ரகுபதி பொறுமையை இழக்காமல் சாவித்திரியைப் பார்த்து. “என்னவோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுஷிதானே?” என்று கேட்டான்.
“உங்கள் – ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கும் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம்..” என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது ‘பொத்’தென்று: உட்கார்ந்து கொண்டாள்.
வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டானா என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகுபதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி கீழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும் “அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! தூ . ” என்று கூறிக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும். வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும், நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்-கெல்லாம் அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ரகுபதி மகத்தான தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கனிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திரி. ‘புஸ்’ ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவளைக் கவனியாதவன் போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான். கணவன், மனைவிக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும், அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள்.
‘நாம் சொல்வதைத்தான் இவள் கேட்டால் என்ன?’ என்று அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்தான்.
‘போயும், போயும், அவளிடந்தான் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஓடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அளவில்லையா என்ன? ஸ்திரீகளைச் சமமாகப் பாவிக்கிறார்களாம்! பேச்சிலே தான் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான் வைத்திருக்கிறான்.’– சாவித்திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள்.
‘ நான் சொல்லுவதை இவள் ‘ உத்தரவாக’ ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்றோர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். வந்த இடத்திலும் பணியும் சுபாவம் ஏற்படவில்லை. ஆகட்டும்…. பார்க்கலாம்’ என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி தூங்க ஆரம்பித்தான்.
நிம்மதியாகத் தூங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர் மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து ஸரஸ்வதி சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிறாள்.
“ஸரஸ்வதி! உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸரஸ்வதி” என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிறான்:
ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்த போது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொடாமல் உறுதியுடன் இருந்தாள்.
“சீதா உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னாள்” என்று மங்களம் கூப்பிட்டபோது, “ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான் இங்கே அனுப்பி வையுங்களேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸரஸ்வதி.
இது என்ன கனவு? கனவில் காண்பதெல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வ’த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலையைத் தனக்கு அருளி இருக்கும் ’அவன்’ தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் என்று புரிந்து கொள்ளவில்லை ஸரஸ்வதி.

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்