சோ. சிவபாத சுந்தரம்/܀சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. குங்கிலியச் சேவை

வறுமைப் பிணியினாலே வருந்தும் ஒரு குடும்பத்தின் தாய் தன் கழுத்திலிருந்த ஒரேயொரு சொத்தாகிய தாலியை விற்று அரிசி வாங்கும்படி தன் கணவனிடம் கொடுக்கிறாள். ஆனால் அந்தக் கணவர், சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிடுகிற விரதத்தைக் கொண்டவர், தாலியை விற்றுக் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பசி தீர்ப்பதை மறந்து, குங்கிலியம் வாங்கிப் புகைபோடுகிறார். இதுதான் திருக்கடவூரில் வாழ்ந்த குங்கிலியக்கலய நாயனாரின் கதை அறுபத்து மூன்று சிவனடியார்களின் போக்கில் இவர் போக்கு ஒரு
தனி.
இறைவனுக்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்யவேண்டுமென்பது பக்தர்களின் விரதம். சிலர் மாலை தொடுத்து வணங்கு கிறார்கள், வேறு சிலர் விளக்கேற்றி வைக்கிறார்கள். கலயனார் என்பவர் தினந்தோறும் குங்கிலியத் தூபமிடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர். குங்கிலியத் திருப்பணிக்கே தமது செல்வங்களை யெல்லாம் செலவிட்டார். வறுமை வந்தது. அப்பொழுதும் திருப்பணி தடைபடாதிருக்க, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் விற்று அதைக்கொண்டு குங்கிலியம் வாங்கித் தூபமிட்டார். ஒரு நாள் வீட்டில் ஒரு பொருளும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாகக் குழந்தைகள் பட்டினியால் வாடினர். இதைக் கண்ட கலயனார் மனைவி, தன் கழுத்தில் கிடந்த மாங்கலியத்தைக் கழற்றிக் கொடுத்து, “குழந்தைகள் பசி தீர்க்க இதை விற்று அரிசி வாங்கி வாருங்கள்” என்று சொன்னார். மிகுந்த வருத்தத்தோடு, இப்படியும் பகவான் நம்மைச் சோதிக்கின்றாரே என்று சொல்லிக் கொண்டு கலயனார் வெளியே புறப்பட்டுப் போகும்போது, கடைத் தெருவில் ஒருவன் ஒரு மூட்டையில் குங்கிலியம் கொண்டுவரக் கண்டதும், அவர் உள்ளம் மகிழ்ந்தது. மனைவியை மறந்தார். குழந்தைகள் பசியை மறந்தார். இறைவனுக்குத் தூபம் போடும் ஒன்றையே நினைந்தவராய், கையிலிருந்த பொற்றாலியைக் கொடுத்து அந்தக் குங்கிலியம் அத்தனையையும் வாங்கிச் சுமந்து கொண்டு நேரே திருக்கடவூர்த் தெய்வத்தின் சந்நிதியையடைந்து திருப்பணி செய்து அங்கேயே தங்கிவிட்டார்.
அரிசி வாங்கச் சென்றவரைக் காணாது வீட்டிலே மனைவியும் மக்களும் காத்திருந்து அன்றிரவு பட்டினித் துன்பத்தில் அயர்ந்து தூங்கிவிட்டனர். மனைவியின் தாலியையே குங்கிலியப் பணிக்காக அர்ப்பணித்த அடியாரின் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு இறைவன் சும்மா இருப்பானா? அன்றிரவே கலயனார் வீட்டில் அரிசி மூட்டைகளும் மற்றும் செல்வங்களும் மாயமாக வந்து குவிந்தன. இதனைக் கலயனார் மனைவி கனவிலும், இறைவன் தெரிவித்தான். அதே சமயம் கோயிலில் அயர்ந்து தூங்கிய கலயனார் கனவிலும் தோன்றி, “உன் திருப்பணியை மெச்சினேன். பசியால் வாடும் நீ போய் உன் வீட்டில் பாலும் சோறும் உண்டு பசியை நீக்கக் கடவாய்” என்று அருளினார். தாலியையே விற்கும் நிலைக்கு வந்த வீட்டில் பாலும் சோறுமா இருக்கும்? கலயனார் நடக்க முடியாமல் நடந்து வீடு திரும்பினார். என்ன ஆச்சரியம்! பாலும் சோறும் சமைத்து வைத்து அருமை மனைவி காத்திருக்கிறார். கலயனார் தமது கண்களையே நம்ப முடியவில்லை. வீடு நிரம்ப வேண்டிய பொருள்களெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் குதூகலத்தோடு துள்ளி விளையாடுகின்றன. எல்லாம் இறைவன் அருள் என்று கலயனார் திருக்கடவூர் ஈசனைத் துதித்து வணங்கினார். குங்கிலியம் இட்டுச் சேவை செய்த கலயனார் குங்கிலியக்கலய நாயனார் என்ற பெயரைப் பெற்று, சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் “கடவூரிற் கலயன் தன் அடியார்க்கு மடியேன்” என்று பாடப்பெற்றார். இறைவன் அருள் பெற்ற இந்த அடியாரின் மற்றொரு திருப்பணி திருப்பனந்தாள் என்ற தலத்தில் நடந்தது. நாம் பின்னால் அங்கு போகும்போது
அதைப்பற்றி அறிந்துகொள்வோம்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள பல நூற்றுக்கணக்கான கோயில்களில் திருக்கடவூர் வீரட்டானம் அதிக செல்வாக்கான கோயில்களிலொன்று. அட்ட வீரட்டம் என்ற இறைவனின் எட்டு வீரச் செயல்களில் யமனைக் காலால் உதைத்துக் கொன்ற காலசம்ஹார
மூர்த்தி எழுந்தருளியிருக்கும் தலம் இது. மார்க்கண்டேயர் சரித்திரத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பதினாறு வயதில் மரணம் என்று விதிக்கப்பட்ட மார்க்கண்டன், யமதர்ம ராஜன் பிடிக்க
வந்தபோது சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். ஆத்திரங்கொண்ட காலன் நீயாச்சு உன் சிவனாச்சு, அந்தச் சிவனையுமே கட்டியிழுக்கிறேன் பார் என்று சொல்லிப் பாசக் கயிற்றை வீச, இறைவன் தன் காலால் உதைத்து, இயமனைக் கொன்றுவிட்டார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம்தான் திருக்கடவூர் என்பது ஐதிகம். இங்கு சித்திரை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாள் இந்தக் காலசம்ஹாரக் காட்சியைக் காணலாம். யமன் இறந்துபட்டதால் உலகத்தில் மக்கட் பெருக்கம் அதிகரித்து, பூமிதேவி பாரம் பொறுக்க முடியாமல் இறைவனிடம் முறையிட்டாள். இறைவன் அதைத் கேட்டு, பழையபடி யமனுக்கு உயிர் தந்து அதிகாரம் கொடுத்ததாகப் புராணக் கதை. நாம் திருப்பைஞ்ஞீலிக்குப் போகும்போது இதைப்பற்றி விரிவாகக் கேட்கலாம். அழிக்கும் தொழிலையுடைய காலனை இங்கு உதைத்த சிவன் படைக்கும் தொழிலையுடைய பிரம்மாவையும் சும்மா விட்டு வைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக நெற்றிக்கண் கொண்டு எரித்துவிட்டார். திருக்கடவூருக்குக் கிழக்குத் திசையில் ஒரு மைல் தூரத்திலிருக்கும் திருக்கடவூர் மயானம் என்ற தலத்தில் இது நடந்ததால், மயானம் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பொது மக்கள் திருமெய்ஞ்ஞானம் என்று சொல்வார்கள். இங்குள்ள ஒரு கிணற்றிலிருந்து திருக்கடவூர் சுவாமிக்குத் தினந்தோறும் திருமஞ்சனத்துக்குத் தீர்த்தம் கொண்டுவரப்படுவதாகச் சொல்வார்கள். இதனைப் பொதுமக்கள் உபயோகிப்பதில்லை. பங்குனியில் சுக்கில பட்சமும் அசுவினி நட்சத்திரமும் கூடும் நாளில் மாத்திரம் இது விசேஷ தீர்த்தமாக உபயோகப்படுமாம்.
திருக்கடவூர் சுவாமியின் பெயர் அமுதகடேஸ்வரர். திருப்பாற் கடலில் கடைந்த அமுதத்தை ஒரு கடத்தில் (குடத்தில்) சேமித்து வைத்த தேவர்கள் இந்த ஊரிலே கொண்டு வைத்தார்களாம். அதுவே உறைந்து அமிர்தலிங்கமாக மாறியது. அமிர்த கட ஈஸ்வரர் என்ற பெயர் அதன் காரணமாக ஏற்பட்டதென்பது புராணம்.
இங்குள்ள காலசம்ஹார மூர்த்தியென்ற பஞ்சலோக விக்கிரகத்துக்கிணையான ஒரு படிவத்தை வேறெங்கும் காண முடியாது. நடராஜர் வடிவத்தில் இது ஒரு வகை. தூக்கிய திருவடியும், ஊன்றிய சூலப்படையும், நின்ற திருப்பாதத்தின் கீழ்க் காலனும், அவனைக் கட்டியிழுக்கும் குண்டோதரனும், பக்கத்தில் வணங்கி நிற்கும் மார்க்கண்டனும், வாம பாகத்தில் அருள் பொழிய நின்று உவக்கும் பாலாம்பிகையும்- இந்தக் காட்சியைக் காண்பவர்
மெய்ம்மறந்து போவர் என்று சொல்லவேண்டும். இதன் காரணமாகவே, மரண பயமுள்ள பலர் திருக்கடவூருக்குச் சென்று மிருத்யுஞ்சய ஹோமம் என்ற சாந்தி செய்வது வழக்கத்திலிருக்கிறது. காலசம்ஹார மூர்த்தி தெற்கு நோக்கி- நடராஜர் சந்நிதியாக– உள்ளார். எதிரே அறுபத்துமூவர் மண்டபத்தில் உயிர்பெற்றெழுந்த யமதர்மராஜன் சிலையிருக்கிறது.
குங்கிலியக் கலய நாயனார் போலவே திருக்கடவூரில் பிறந்த மற்றொருவர் அறுபத்துமூவரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் பெயர் காரி நாயனார். இந்த நாயனாரின் தொண்டு இலக்கியத் தொண்டு. “பொய்யடிமையில்லாத புலவர்க்கு மடியேன்” என்று சுந்தரர் பாடியது நக்கீரர், பரணர், கபிலர் முதலிய புலவர்களையென்று சிலர் சொல்வார்கள். ஆனால் சேக்கிழார், “செய்யுள் நிகழ் சொற்றெளிவும் செவ்விய நூல் பலநோக்கும், மெய்யுணர்வின் பயனிதுவே” என்று துணிந்து “மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார் பொய்யடிமை யில்லாத புலவர்” என்று பொது நோக்காகவே குறிப்பிடுகிறார். இறைவனை வழுத்தும் புலவர்களை, வெறும் பாராட்டு மொழியல்லாது, பொய்யடிமையில்லாத, மெய்யான அடிமை பூண்ட புலமை மிக்க அடியார்களைத்தான் இங்கு பொதுப்படக் கூறப்பட்டது. ஆனால், சிறப்பாக இலக்கியப் பணியொன்றையே செய்து முத்தியடைந்து நாயனார் பதவியைப் பெற்றவர் காரி நாயனார் என்பவர். இவரும் திருக்கடவூர்வாசி. இவர் செய்த நூல் ‘காரிக்கோவை’ என்று சொல்வார்கள். உண்மையில் அது ஒரு கோவை என்ற பிரபந்தமா அல்லது பல பாடல்களால் கோக்கப்பட்ட தொகுப்பா என்று தெரியவில்லை. புராணத்தில் சொல்லப்பட்டதைத் தவிர இலக்கியத்தில் நாம் காணவில்லை. ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் முதலியோர் செய்த நூல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதுபோல் காரிக்கோவை கிடைக்கவில்லை. “சொல் விளங்கிப் பொருள் மறையக், குறையாத தமிழ்க் கோவை தம் பெயராற் குலவும் வகை, முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பால் பயில்வார்” என்பது பெரியபுராணப் பாடல். தமிழிலே தம் பெயரால் செய்த ஒரு கோவை என்றும், அதன் பெயர் காரிக்கோவை என்றும் சிலர் பொருள் கொள்வர். வேறு சிலர், பொருள் விளங்காமலிருந்த பழைய தமிழ்ப் பாடல்களைக் கோத்து, அவற்றின் பொருளை மூவேந்தர்களுக்கும் போய் விளக்கிச் சொன்னார் என்று சொல்வார்கள். எப்படியிருந்தாலும் காரிநாயனாரின் சேவை இலக்கியச் சேவை.
அவர் மூவேந்தர்களிடமும் சென்று இலக்கியம் விளக்கியதால் கிடைத்த பொருளைக் கொண்டு திருப்பணி செய்த காரணத்தால் உயர்ந்து நாயனார் பதவி பெற்றார்.
குங்கிலியக் கலய நாயனார் குடியிருந்ததாகத் திருக்கடவூர் கோயில் வடக்கு வீதியில் ஒரு வீட்டைக் காண்பிக்கிறார்கள். ஆனால் மேற்கு வீதியில் பிச்சுப்பிள்ளை மடம் என்று ஒரு மடம் இருக்கிறது. இங்கேதான் குங்கிலியக் கலயர், காரிநாயனார் உய்யவந்த தேவனார், அபிராமி பட்டர் ஆகியோர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
திருக்களிற்றுப்படியார் என்ற சைவசித்தாந்த நூலைப் பாடிய உய்யவந்த தேவர் திருக்கடவூரைச் சேர்ந்தவர். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து அபிராமியந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இதே ஊரைச் சேர்ந்தவர். அபிராமி பட்டரின் வரலாறு ஒரு சுவாரஸ்யமான கதை.
அபிராமி பட்டர் ஒரு சித்தர். தஞ்சையிலிருந்த சரபோஜி மன்னன் ஒருநாள் திருக்கடவூருக்கு வந்தபோது அன்றைய திதியைத் தெரிந்து கொள்ள அபிராமிபட்டரிடம், “இன்று என்ன திதி?” என்று கேட்டார். அன்று நிறை அமாவாசை. ஆனால், பட்டர் தம் வாயில் அந்தச் சமயத்தில் தோன்றியதை- “இன்று பூரணைநாள்” என்று சொல்லிவிட்டார். அரசனோடு வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “நல்ல அமாவாசையாயிருக்கப் பூரணை நாளென்கிறாரே பட்டர்” என்று அவர்கள் அரசனிடம் சொன்னார்கள். அரசன் உடனே, “என்ன பட்டரே, இன்று அமாவாசை நாள் என்கிறார்கள். நீர் அதற்கு எதிரான பௌர்ணமி என்கிறீரே?” என்று கேலி செய்தான். பட்டர் சிறிது சிந்தித்துவிட்டு, “இன்று பொழுது அஸ்தமிக்கும் சமயத்தில் இங்கு வாருங்கள், பூரணசந்திரனைக் காண்பிக்கிறேன்” என்று சொல்லியனுப்பினார். இது ஏதோ பைத்தியம் என்று சிலர் சொன்னார்கள். வேறு சிலர் இவர் மகா சக்திவாய்ந்த சித்தர் என்றார்கள்.
பட்டர் தாம் சொல்லியதை நிரூபிக்கத் திட்டமிட்டார். ஓரிடத்தில் மூன்று கால் நட்டு, அதன் முகட்டில் ஓர் உறி கட்டி, அதன் கீழ் அக்கினியை வளர்க்கச்செய்து, அக்கினிக்கு மேல் தொங்கிய உறியில் உட்கார்ந்து, “உதிக்கின்ற செங்கதிர்” என்று தொடங்கும் அபிராமி அந்தாதி நூறு பாடல்களைப் பாடி முடிக்கவும், கீழ்வானத்தில் செஞ்சுடர்க் கோளமாய்ப் பூரண நிலவு உதிக்கவும் சரியாயிருந்தது!
சரபோஜி மன்னன் இதைக் கண்டு திகைப்புற்றான். ஆனால் மறுகணம் யாவும் மறைந்து விட்டது. பட்டரின் சித்து விளையாட்டு இது என்று கர்ணபரம்பரையாக இக்கதை வழங்கி வருகிறது. பட்டர் திருக்கடவூர் நாயகி அபிராமியம்மையிடம் நிறைந்த பக்தி . கொண்டவர். அவருடைய சந்ததியார் பாரதி என்ற குடும்பப் பெயருடன் இன்றும் வாழ்கின்றனர். அபிராமியம்மைக்குத் திருக்கடவூர் பிராகாரத்தில் ஓர் அழகிய தனிக்கோயிலுண்டு.
கோவலன் சரித்திரம் என்று வழங்கும் பழைய நாடகத்தைப் பாட்டு ஞாபகத்திலிருக்குமென்று பார்த்தவர்களுக்கு நினைக்கிறேன். மாதவியிடம் மயங்கிய கோவலன் அவள் வசித்த திருக்கடையூர் வீட்டைத் தேடிப் போனபோது பாடியது: “திருக்கடையூர் தனிலே, சித்ரத் தேரோடும் வீதியிலே, இருக்கிறேன் என்று இயம்பி வந்தாளென்னை, உருக்கிய மாதவி உற்றவிடம் தன்னை, எங்கு கண்டு தேடுவேன், எவ்விடமென் றோடுவேன்.” இந்தவிதமாக அந்தக் காலத்தில் கேட்ட பாட்டு நான் திருக்கடவூரில் நின்றபோது ஞாபகத்துக்கு வந்தது. இதை வைத்துக்கொண்டு, ஒருவேளை அந்த மாதவியின் வீடு இன்னும் திருக்கடவூரிலே இருக்கலாமோ என்று ஒரு கிழவனாரிடம் கேட்டுப் பார்த்தேன்; அந்தக் கிழவர் சிறிதும் தயங்காமல் “மேற்கு வீதியிலே ஒரு பழைய வீடு இருக்கிறது. அங்கேதான் மாதவி குடியிருந்தாள் என்று பலரும் சொல்வார்கள். காண்பிக்கிறேன்,” என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு போய் ஒரு பாழடைந்த வீட்டைச் சுட்டிக் காண்பித்தார். மாதவி திருக்கடவூரில் வாழ்ந்த தாசி என்பதுதான் பலருடைய நம்பிக்கை.

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில் – விருட்சம் நாளிதழ்