சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

  1. பூம்புகார் போற்றுதும்

பல்லவனீச்சரமும் சாய்க்காடும் பக்கத்துப் பக்கத்தில் தானிருக்கின்றன. முதலில், சாயாவனம் என்று சிலப்பதிகாரம் மணிமேகலையில் சொல்லப்பட்ட திருச்சாய்க்காட்டு சாயாவனேசுரரைத் தரிசித்துச் செல்லலாமென்று உள்ளே சென்றோம். அங்கிருந்த அர்ச்சகர் எங்கள் புகைப்படக் கருவிகளைக் கண்டவுடன் சந்தேகத்தோடு, “நிர்வாக அதிகாரியைக் கண்டு உத்தரவு வாங்கி வாருங்கள்” என்று சொல்லித் திருப்பிவிட்டார். நிர்வாக அதிகாரி பல்லவனீச்சரத்துக்கு எதிரிலுள்ள வீடொன்றில் வசிக்கிறார் என்று விசாரித்தறிந்து அங்கே சென்றோம். தனிமையில் குடியிருக்கும் அவர் உள்ளே சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு பையன் சொன்னான். இருந்தும் எங்கள் குரலைக் கேட்டவுடன் அவரே வாசலில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்ற வழியை ஆராய்ந்து தகவல் சேகரிப்பதற்காகவும் புகைப்படங்கள் பிடிப்பதற்காகவும் நான் காவிரிப்பூம்பட்டினம் போயிருந்தபோது சந்தித்த அதே நண்பர் கஸ்தூரிரங்கன்தான் அவர்! முன்பு நாங்கள் சந்தித்த சந்தர்ப்பத்தையும் என் பெயரையும் மறக்காத அவர் பிரமாதமாக உபசரித்தார். அவர் துணையோடு எங்கள் நோக்கம் நிறைவேறியது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் பழைய காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிப் பிரமாத வருணனைகளைக் காணலாம். அங்கே நுதல்விழிநாட்டத்திறையோன் என்ற சிவன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் என்ற முருகன் கோயிலும், நீலமேனி நெடியோனாகிய திருமால் கோயிலும், பலராமன் கோயிலும் என்று இவ்வகையான கோயில்களும், பௌத்த விகாரங்களும், சமணப் பள்ளிகளும் ஏராளமாயிருந்தனவென்று தெரிவிக்கின்றன. இப்போது பல்லவனீச்சரத்தில் காணப்படும் சிவன்
கோயில்தான் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “பிறவா யாக்கைப் பெரியோன்” கோயிலாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பல்லவனீச்சரத்துக்கும் சாய்க்காட்டுக்குமிடையில் இப்போது ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது. இதுவே சிலப்பதிகாரத்து மணிவண்ணன் கோட்டமாயிருக்கலாம். பல்லவனீச்சரம் கோயில் ராஜகோபுரத்தையும் திருக்குளத்தையும் கொண்டிருக்கிறது. இங்குள்ள ரிஷபாரூடர் விக்கிரகம் மிக்க அழகுடையது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்ற சமயத்தில் அங்கிருந்த சில முக்கியமான சிலைகளை இப்போது காண முடியவில்லை. அவையெல்லாம் வேறிடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன என்று சொல்லக்கேட்டோம்.
காவிரிப்பூம்பட்டினம் ஒரு காலத்தில் பௌத்த மதத்தின் செல்வாக்கு நிறைந்திருந்தது. சமீபத்திலே அரசாங்கத் தொல்பொருள் துறையினர் இங்கு அகழ்வாராய்ச்சி செய்ததில் பௌத்த விகார மிருந்த கட்டடச் சின்னங்களும், புத்த விக்கிரகங்களும் கண்டெடுக்கப் பட்டன. மேலும் ஆராய்ச்சி செய்தால் பழைய கிரேக்க உரோமத் தொடர்புகளுக்கான தடயங்களைக் காணலாம் என்று நம்பப் படுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில்தான் பட்டினத்தார் என்ற திருவெண்காட்டடிகள் பிறந்தார். அறுபத்து மூவரில் இந்த அடியார் சேராவிட்டாலும், பன்னிருதிருமுறை என்ற சைவத் திருமுறைப் பாடல்களில் இவரது தோத்திரப் பாக்கள் பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டிருப்பதால் பட்டினத்துப் பிள்ளையைப் பற்றியும் இங்கே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
காவிரிப்பூம்பட்டினத்திலே வணிகர் குலத்திற் பிறந்தார் பட்டினத்தார். திருவெண்காட்டு சுவாமியின் கருணையாற் பிறந்தார் என்று சொல்லிப் பெற்றார் இவருக்கு இட்ட பெயர் திருவெண்காடர். பின்னர் இவர் துறவு பூண்டு சென்றபோது இவரைப் பட்டினத்தார் என்றும் திருவெண்காட்டடிகள் என்றும் மக்கள் அழைத்தனர். மிகுந்த செல்வச்செழிப்புடன் வாழ்ந்த இவருக்கு மக்கட்பேறு கிடைக்கவில்லை. திருவிடைமருதூரில் வாழ்ந்த பிராமணர் ஒருவருக்கு மருதவாணர் என்ற பெயரில் ஒரு குழந்தையிருந்தது. இந்தக் குழந்தை ஒரு தெய்வீகக் குழந்தை. பிராமணர் மிக வறுமையால் வாடிய போது திருவெண்காடர் அந்தக் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்துவந்தார். மருதவாணர் வளர்ந்தபின் ஒரு நாள் தந்தை திருவெண்காடர் தமது புத்திரனைத் திரவியம் தேடும்
பொருட்டு வெளிநாட்டுக்கு அனுப்பினார். திரும்பி வரும் போது மருதவாணர் தமது பொருள்களையெல்லாம் கோயிற் பணிகளில் செலவிட்டுவிட்டு, பதிலாக வறட்டிகளைக் கொண்டுவந்து சேர்த்தார்! அதில் ஒரு வரட்டியைத் திருவெண்காடர் கையில் கொடுத்து உடைத்துப் பார்த்தபோது அதனுள் மாணிக்க மணியிருப்பதைக் கண்டார் திருவெண்காடர். ஆனால் மருதவாணர் மேலும் அங்கு நிற்காமல் போய்விட்டார். போகும்போது தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து அதைத் தந்தையிடம் ஒப்படைக்குமாறு சொல்லிச் சென்றார். திருவெண்காடர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் ஓர் ஓலைச்சுருளில் “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்ற வாசகமும், ஒரு காதில்லாத, உபயோகமற்ற ஊசியும் இருக்கக்கண்டார். உடனே திருவெண் காடருக்கு ஞானோதயம் பிறந்து, அவர் அன்றிலிருந்து தமது பெரும் பொருளையெல்லாம் தருமம் செய்துவிட்டுத் துறவு பூண்டார். பத்திரகிரி என்ற ஓர் அரசனும் துறவு பூண்டு இவருடைய சீடரானான். இவர்களுடைய பாடல்கள் பலவகைப்பட்டன. சித்தர்கள் என்ற வகையில் இவர்களைப்பற்றிய கதைகளும் பல. பட்டினத்தார் பல தலங்களைத் தரிசித்து இறுதியில் சென்னைக்குப் பக்கத்திலுள்ள திருவொற்றியூரில் சமாதியடைந்தார்.
பட்டினத்தார் என்ற திருவெண்காட்டடிகள் பாடியதாகப் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருப்பவை: கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என ஐந்து பிரபந்தங்கள். ஆனால் பொதுமக்கள் பலர் வாயில் நடமாடும் “பட்டினத்தார் பாடல்கள்” என்பவற்றைப் பாடியவர் பிற்காலத்தில் வாழ்ந்த வேறொருவர். பல்லவனீச்சரம் என்ற காவிரிப்பூம்பட்டினத்துக் கோயில் பட்டினத்தார், அவர் மனைவியார், பத்திரகிரியார், அவர் மனைவி, மருதவாணர் ஆகியவர்களுடைய சிலைகள் இருக்கின்றன.
பல்லவனீச்சரத்திலிருந்து பக்கத்திலுள்ள திருச்சாய்க்காட்டுக்குப் போனோம். மாடக்கோயில். சுவாமியின் பெயர் சாயாவனேசுவரர். அம்பாள் குயிலுநன்மொழியம்மை. கோஷாம்பாள் என்றும் சொல்வர். இந்தச் சாயாவனத்தில் வைத்துத்தான் இயற்பகைநாயனார் தமது மனைவியை அடியார் ஒருவருக்குக் கொடுத்துத் திரும்பியதாக ஐதிகம். இதற்கு வடக்கே மேலூர் என்ற மேலப்பெரும் பள்ளத்திலுள்ள சுவாமியின் பெயர் பிரியா வணங்கீசுவரர்.
இங்கேதான் இயற்பகையின் மனைவியைத் தனியே விட்டு அடியாராக வந்த இறைவன் பிரிந்தார்.
திருச்சாய்க்காட்டில் மார்கழி மாதம் ஐந்து நாட்கள் விழா நடக்கிறது. இதில் இயற்பகை நாயனார் சரித்திரம் சம்பந்தமான காட்சிகள் காண்பிக்கப்படும்.
காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு காலத்தில் இந்திர விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதை சிலப்பதிகாரத்தில் நாம் காண்கிறோம். சித்திரை மாதம் பூரணை நாளில் கொண்டாடப்படும் இந்த விழா இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது. இப்போது கோயிலில் விசேஷ விழா நடத்தப்படுவதுடன், அரசினரும் ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சாய்க்காட்டுக் கோயில் மாடக்கோயில் என்று சொன்னோம். கோச்செங்கணான் என்ற அரசன் தமிழ்நாட்டில் எழுபது மாடக் கோயில்களைக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. யானை ஏறிக் கோயிலைச் சிதைக்காமலிருக்கக் கட்டப்பட்ட பெரிய மேடையுள்ள கோயில் மாடக்கோயில். இதைப் பற்றிய ருசிகரமான கதையைக் கோச்செங்கட் சோழன் என்ற நாயனாரைத் திருவானைக்காவில் நாம் சந்திக்கும் போது தெரிந்துகொள்வோம். நாம் செல்லும் யாத்திரையில் சில கோயில்கள் மாடக்கோயில்களாக இருப்பதையும் பார்க்கப் போகிறோம்.
மணிமேகலையைப் படிக்கும்போது காவிரிப்பூம்பட்டினத்துக்கு சம்பாபதி என்ற பெயர் இருந்ததாக நாம் அறிகிறோம். பரத கண்டத்துக்கு சம்புத் தீவு என்ற பெயருண்டு. அந்தச் சம்புத்தீவின் முக்கிய நகரம் சம்பாபதி. இப்பகுதிக்கு முக்கிய தெய்வம் சம்பாபதி தேவி. காவிரிப்பூம்பட்டினத்தில் சம்பாபதி தேவிக்கு ஒரு தனிக் கோயில் இருந்தது. சாயாவனேசுவரர் கோயிலுக்குச் சிறிது தெற்கே சிதைந்து போன ஒரு பழைய கோயில் காணப்படுகிறது. செங்கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோயிலைப் பழைய சம்பாபதிதேவி கோயில் என்று சொல்வார்கள். இது, கற்கோயில் கட்டப்படுவதற்கு முன்னுள்ள செங்கற்கோயில் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்தச் சம்பாபதிதேவிதான் ஊரைக் காக்கும் தெய்வம். சாயாவனேசு வரர் கோயில் மண்டபத்தில் இப்போது பஞ்சலோகத்திலமைந்த சம்பாபதி விக்கிரகம் ஒன்று காணப்படுகிறது. மிகத்திறமையான ஸ்தபதி ஒருவருடைய கைவண்ணம் என்பதை அந்த விக்கிரகத்தின் அமைப்பிலும் அழகிலும் காணலாம். (ஜம்புத் த்வீபே)
காவிரிப்பூம்பட்டினத்தில் அந்தக் காலத்தில் ஐந்து மன்றங்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். அதில் ஒன்று பூதச் சதுக்கம். இந்தச் சதுக்கத்திலுள்ள பூதம் மகா பயங்கரமானது. அதன் கையில் ஒரு பாசக் கயிறு வைத்துக் கொண்டு நகரத்தின் நாலு காத எல்லைக்குள் எவராவது குற்றம் செய்தால் அவர்களை இழுத்துப் புடைத்து உண்ணும் அந்தப் பூதம். “தவ வேடம் பூண்டு அதற்குரிய தன்மையில்லாது பிறரை ஏமாற்றும் போலித் துறவிகள், போலி மினுக்குகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவஞ் செய்யும் விபசாரிகள், செங்கோன் மன்னனுக்கு எதிராகச் சதி செய்யும் அமைச்சர்கள், பிறர் மனை நயப்போர், பொய்ச்சாட்சி சொல்வோர், புறங்கூறுவோர், இவர்கள் எல்லோரும் இதோ என் கையிலுள்ள பாசத்திற் படுவர்” என்று அந்தப் பூதம் அவ்வூர் எல்லையில் நின்று நாலு காதம் கேட்கும்படி கடுங்குரலெடுத்துக் கூவும். இந்தச் சதுக்கப் பூதத்தின் ஒரு பழைய உருவத்தையும் நாங்கள் சம்பாபதிதேவி கோயிலுக்குப் பக்கத்தில் உருவழிந்து போய்க் கிடக்கக் கண்டோம்.
காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் பிரியும்போது ஒரு கற்பனை யுலகைவிட்டுப் பிரியும் எண்ணந்தான் தோன்றியது. பழைய புகார் எங்கே, பட்டினப்பாக்க மெங்கே, மருவூர்ப்பாக்க மெங்கே, துறைமுக மெங்கே, இந்திர விழாவெங்கே? இந்தக் கற்பனைத் திரையைக் கிழித்து, பழைய புகாரையும் அதன் பெருமையையும் ஊனக்கண்முன் எடுத்து வைக்கவேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன் மேலப் பெரும்பள்ளத்தில் ஓர் இளைஞர் தோன்றினார், தியாகராஜன் என்ற பெயரில். மாதவி மன்றம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை விடாது தூண்டினார். “நிலத்தை அகழ்ந்து பாருங்கள், கண்டெடுக்கப்படும் பொருள்களை ஆராய்ந்து பாருங்கள். பல்லவனீச்சரத்திலும் சாய்க்காட்டிலுமுள்ள சிலைகளையும் ஆராய்ந்து பாருங்கள். புகாரின் பழம்பெருமையைக் காண்பீர்கள்” என்று சலியாது கதறினார் அவர். ஆரம்பத்தில் அதிகார வர்க்கம் அவர் விண்ணப்பத்தை சட்டை செய்யவில்லை. யாவும் இலக்கியக் கற்பனை என்று வாளா இருந்தனர். பின்னர் யாரோ ஒரு புதிய தொல்பொருளாராய்ச்சியாளர் வந்தார். தியாகராஜன் சொல்வதிலும் ஏதாவது உண்மையிருக்காதா என்று யோசித்தார். காவிரிப்பூம் பட்டினத்துக்குப் போய் இரண்டொரு இடங்களில் தோண்டிப் பார்த்தார். அப்போது அகப்பட்டவைதான் புத்த விகாரமும் புத்தர் சிலைகளும். பழைய காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகம் கீழையூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை காரணமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் உற்சாகம் பிறந்தது. பழைய பூம்புகாரை அங்கு தோற்றுவிக்க எண்ணங்கொண்டனர். இப்போது நவீன பூம்புகார் ஒன்று தோன்றியுள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் பிரியும்போது எனக்கு என்னவோ மாதிரியிருந்தது. அன்றொருநாள் வைகறை யாமத்தில் எவரும் காணாதவாறு கோவலனும் கண்ணகியும் புகாரைவிட்டுப் புறப்பட்டு, காவிரியின் வடகரை வழியாக நடந்து, கவுந்தி என்ற சமணத் துறவியுடன் உறையூர் வந்து, பின்னர் மதுரையைச் சேர்ந்த வழியைத் தேடிச் சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் மற்றொரு நண்பரும் சென்ற அனுபவத்தை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பழைய நினைவுகள் மீண்டும் வந்து உறுத்தின. பக்கத்திலிருந்த நண்பர் சிட்டி, “கண்ணகி அடிச்சுவட்டில் என்று அதையும் எழுதுவது தானே?” என்றார். அடிமனத்திலுள்ள அந்த ஆசை வெளிப்பட்டால் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே நடந்துபோய், ஹோட்டல் என்ற பெயரோடுள்ள ஒரு சிறு குடிசையில், பெரிய மனத்துடன் ஒருவர் பரிமாறிய உணவை ரசித்து உண்டு, சிறிது இளைப்பாறியபின் அங்கிருந்து புறப்பட்டோம்.
மாயவரத்தில் நாங்கள் பிடித்த வாடகைக் காரின் சாரதி, ஊருக்குத் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியில், வேகத்தைக் கொஞ்சம் அதிகமாகவே அழுத்தினார்! “இந்தாப்பா, நாங்களும் உருப்படியாக ஊர் போய்ச் சேரவேண்டும். அதற்கிடையில் திருக்கடவூரையும் ஆக்கூரையும் தரிசிக்க வேண்டுமென்று திட்டமிருக்கிறது. கொஞ்சம் நிதானமாகப் போகலாமா?” என்றோம். சாரதி ஒத்துழைத்தது எங்களுக்குத் திருப்தியைக் கொடுத்தது. நேரே திருக்கடவூர் கோயில் வாயிலில் கொண்டுபோய்ப் பக்குவமாக நிறுத்தினார் அவர்.

One Comment on “சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்”

Comments are closed.