
“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் பொழுது ஒரு மனிதனுடைய குணங்கள் மாறுவதில் என்ன வியப்பு?
பாரதியார் எழுதிய பாடல்களில் சிலவற்றை அவரே கிழித்தெறிந்து விட்டதுண்டு, ஜனங்களுக்குப் பயன்படாது என்றோ அல்லது அழகாய் அமையவில்லையென்றோ எண்ணி, சில நல்ல பாட்டுக்களையும் கிழித்து விடுவார். இது நமக்குப் பெரிய நஷ்டம். இப்போது அதைப் பற்றி வருந்திப் பயனில்லை. போனது போனதுதான்.
ஒரு சமயம் “கண்ணன் ஒரு திருடன்” என்று ஓர் அழகான பாட்டுப் பாடினார். பக்கத்து வீட்டுச் சாமிநாத பிள்ளையின் மகன் சுந்தரம் என்கிற குழந்தையைப் பற்றி, பாரதியாரின் மனைவியார் அடிக்கடி வருத்தப் பட்டுப் பேசுவதுண்டு.
அந்தப் பையன் தவமிருந்து பெற்ற குழந்தை, நல்ல புத்திசாலி. ஆனால் பையனுக்குக் கொஞ்சம் திருட்டுப் புத்தி. இதைப்பற்றித் தகப்பனாரிடம் சொல்லித் திருத்தப் பார்க்கலாமா என்று பாரதியாரும் மனைவியும் யோசிப்பார்கள். சாமிநாத பிள்ளை கொஞ்சம் கடுமையாகப் பேசுவார். ஆனால் மிக நல்லவர். மகன் விஷயம் அவருக்குச் சொன்னால் மனம் புண்பட்டு மிகவும் கஷ்டப்படுவார். ‘சொல்லாமலிருப்பதே நலம். ஆண்டவன் விளையாட்டு என்று பாரதியாரும் அவர் மனைவியாரும் முடிவு
செய்து விடுவார்கள். இதைப்பற்றிப் பேசும்போது ஒருநாள் பாரதியாரின் ஆவேசம் ஏறித்துள்ளி, “கண்ணன் ஒரு திருடன்” என்னும் பாட்டைப் பாடினார். குழந்தையாக வெண்ணெயைத் திருடியதும், குள்ளனாய் மண்ணைத் திருடியதும், கம்பத்துள் புகுந்திருந்து இரணியனைக் கிழித்ததும்,மரத்தின் பின் ஒளிந்து நின்று வாலியைக் கொன்றதும், இப்படி எல்லா பகவத் கிரீடைகளும் அதில் அமைந்திருந்தன. மனைவி கேட்டதன் பேரில் பாட்டை எழுதியும் தந்தார். பிறகு ஏனோ ஒரு நாள் பாட்டைக் கிழித்துப் போட்டார்.
[இது கதை: உண்மையான பாரதியார் சரித்திரமல்ல.) சிறு குழந்தைகளுக்குள்ள ஆசைகளைச் சரியான முறையில் திருத்திப் பூரணமடையச் செய்வது பெற்றோர்களின் வேலை. ஆனால் இந்தக் கடமையைச் செய்யும் திறமை சரியான படி அடைவதற்கு முன்னமேயே குழந்தைகளை அவசரம் அவசரமாக பெற்று விடுகிறோம். குழந்தைகளோ தங்களைப் பெற்றவர்கள் அனுபவமும் அறிவும் அடைவதற்காக வளராமல் காத்திருப்பதில்லை. அவசரமாக வளர்ந்து கொண்டே போகிறார்கள்.
இயற்கை ஆசைகளே உயிர் அமைப்பின் வேகமூலம்.தேகமும் உள்ளமும் வளர்ந்து முதிர்வதெல்லாம் ஆசை வேகங்களின் வேலைதான், பிரகிருதி அமைப்பு இது. ஆசை இல்லாமற் வளர்ச்சியில்லை. வளர்ச்சி இல்லாமற் போனால் உயிர் நோய்வாய்ப்படும். ஆனபடியால் ஆசை வேகங்களுக்குச் செல்ல வழிகள் சரியாக வகுத்துக்கொடுக்கவேண்டும்.
அப்படிச் செய்யாமல் போனால் பத்தில் மூன்று வீதம் வேகங்கள் கோணல் மார்க்கங்களில் சென்று விடும். அதுதான் குடும்பங்களின்
துக்கங்களுக்குக் காரணம். இந்த அபாயத்தைக் கவனிப்பது பெற்றோர்களின் கடமை.
இதைவிடச் சிறந்த தேசத் தொண்டோ சமூக சேவையோ வேறு இல்லை. குடும்பங்களின் தொகுதியே தேசம் சமூகம் எல்லாம்.
வக்கீல் வசந்தய்யர் மகன் ரகு மிகவும் சுறுசுறுப்பான பையன். புத்தி சாமர்த்தியம், நல்ல அழகு எல்லாம் படைத்தவன். இந்த பையனுக்கு ஒன்பதாவது வயதிலிருந்து ஒரு கெட்ட வழக்கம். எங்கேயாவது நல்ல பேனா கத்தி பார்த்தால் அதை யாருக்கும் தெரியாமல் மெள்ள மடியில் எடுத்துச் செருகிக்கொண்டு, பிறகு மறைத்து வைத்து விடுவான். யாராவது அவர்கள் வீட்டுக்கு விருந்தாளி வந்தால் பணப்பை காணாமற் போகும். வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகப்படுவார்கள். “இவன் தான் எடுத்திருக்க வேண்டும்; ஆனால் ருசு இல்லை” என்று ஓர் அப்பாவி வேலைக்காரன் மேல் பழி சுமத்தப்படும். ரகு, பரீட்சையில் தன் பள்ளிக்கூடத்தில் முதலாகத் தேறி வந்தான். உபாத்தியாயர்களுக்கு இவன்மேல் மிகப் பிரியம். வகுப்புக்கு மேல் வகுப்பாக ஏறிச் சென்று சென்னைப்பட்டினமும் போய்ப் படித்து முடிவில் பி.எல். பரீட்சை தேறிவிட்டு இருபத்தோரு வயதில் வக்கீல் தொழிலில் அமர்ந்து விட்டான். ஆரம்பத்தில், “நார்ட்டன்” சங்கரய்யருக்கு ஜூனியராக ரகுராம அய்யர் வக்கீல் தொழில் செய்து வந்தார்.
ஒரு நாள் மதுரையிலிருந்து திருச்சி ரயிலில் போய்க்கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பு வண்டியில் இவர்கூடப் பிரயாணம் செய்த திருநெல்வேலி ஜில்லா முன்சீப் கிருஷ்ணய்யர் எதிர் பெஞ்சில் சொக்காயை எடுத்து விட்டுப் படுத்து அரைத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தார். பகல் பிரயாணம்தான். ஆனாலும் ரயில்வண்டி ஆட்டத்தில், முக்கிய மாக வயதானவர்களுக்கு, தூக்கம் வரும். கிருஷ்ணய்யருடைய ஜிப்பா, மெல்லிய மில்துணி, கொக்கியில் மாட்டியிருந்தது. காற்றில் கொஞ்சம் ஆடிக்கொண்டிருந்தது. ஜோபியில் கறுப்புத் தோல்பணப்பை வைத் திருந்தது நன்றாகத் தெரிந்தது. அதைப் பார்க்காதவர் போல் ரகுராம் அய்யர் அதே கவனமாக இருந்தார். ஜன்மாந்தர கர்ம பலன் என்பார்கள். பழவினை என்று மாணிக்கவாசகர் அடிக்கடி பாடியிருப்பதும் இதுவே. கிருஷ்ணய்யர் தண்ணீர் அறைக்குள் போனார். கதவு மூடினதும் சட்டென்று வக்கீல் ரகுராம் எழுந்து கிருஷ்ணய்யரின்
ஜிப்பாவை எடுத்து ஜோபியிலிருந்த பையைத் திறந்து அதிலிருந்த நூறு ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்கொண்டு சொக்காயையும் காலிப்பணப் பையையும் ஜன்னல் வழியாக எறிந்து விட்டுத் தம் இடத்தில் உட்கார்ந்தார். பிறகு படுக்கையை விரித்து அதன் மேல் படுத்தவராகத் தம் பணப் பையைத் திறந்து அதற்குள் நோட்டை மடித்து வைத்துத் தலையணைக்குக் கீழ் பத்திரமாகச் செருகிவிட்டுத் தூங்குவதுபோல் கண் மூடிக்கொண்டார். எல்லாம் அரை நிமிஷ வேலை. கொஞ்ச நேரம் கழித்துக் கிருஷ்ணய்யர் தண்ணீர் அறை யிலிருந்து திரும்பி வந்தார். தம் ஜிப்பாவை இங்கும் அங்கும் தேடினார்.
“என்ன இது, ஆச்சரியம்!” என்று ரகுராம அய்யரை எழுப்பினார்.
“கீழே விழுந்து போயிருக்கும்; நன்றாகப் பாருங்கள்” என்றார் ரகுராம அய்யர். கண்களைத் துடைத்துக் கொண்டு கொட்டாவியும் விட்டார்.
“எல்லாம் பார்த்தேன்; எங்கும் இல்லை யாரோ எடுத்துவிட்டார்கள். நான் உள்ளே இருந்தபோது வண்டி எந்த ஸ்டேஷனிலாவது நின்று, நீர் வெளியே போனீரோ?” என்று அலறினார், முன்சீபு கிருஷ்ணய்யர்.
“வண்டியை விட்டு நான் இறங்கவுமில்லை. வண்டி நிற்கவும் இல்லை. இன்னும் ஒரு ஸ்டேஷனும் வரவில்லை. ஒரு வேளை காற்றில் ஜன்னல் வழியாக விழுந்து போயிருக்கலாம். கோட்டா? ஜிப்பாவா?” என்று நிதானமாகக் கேட்டார் ரகுராமய்யர்.
“ஜிப்பாதான். வெள்ளை ஜிப்பா. ஜோபியில் பணப்பை இருந்தது” என்றார் கிருஷ்ணய்யர்.
அவருக்கு ரகுராம அய்யர் மேல் சந்தேகம். ஆனால் அவருடன் வண்டி ஏறும்போது பேசினதில் அவர் திருச்சி வசந்த அய்யர் குமாரர், பிரபல வக்கீல், நார்ட்டன் சங்கர அய்யரிடம் ஜூனியர் என்றெல்லாம் தெரிந்து கொண்டிருந்தார். எப்படி அவர் பணத்தை எடுத்திருக்கக்கூடும் என்று, உதித்த சந்தேகத்தை நீக்கிக் கொண்டார்.
“எவ்வளவு வைத்திருந்தீர் பணப்பையில்?” பேச்சைத் தொடர்ந்தார்
ரகுராம் அய்யர்.
“நூறு ரூபாய் நோட்டு வை-ை என்றார் கிருஷ்ணய்யர்.
“அடாடா! நம்பர் எழுதி வைத்திருக் கிறீரா?” என்று கேட்டார் ரகுராமய்யர்.
“எப்போதும் எழுதி வைப்பது வழக்கம். இந்தத் தடவைதான் எழுதவில்லை.”
ரகுராமய்யரின் உள்ளத்தில் அப்பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“எப்போதும் நம்பர் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லித் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் படிக்க
ஆரம்பித்தார்.
கொஞ்சநேரத்திற்குப் பிறகு, “ஜன்னல் வழியாக விழுந்திருந்தாலும், விழுந்திருக்கலாம். அடுத்த ஸ்டேஷனில் சொன்னால் ஒரு வேளை கிடைக்கலாம்” என்று யோசனை சொன்னார்.
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரகுராமய்யரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எல்லா விஷயங்களையும் சொல்லி, ரயில் பாதையில் தேடுவதற்கு ஏற்பாடு செய்தார். போகும்போது மெதுவாகத் தாம் எடுத்த நோட்டின் நம்பரைப்
பார்த்துத் தம்முடைய டைரியில் குறித்து வைத்துக்கொண்டார்.
இரண்டு நாள் கழித்த ஜிப்பாவும் பணப்பையும் இருப்புப் பாதையில் கிடந்து எடுக்கப்பட்டதாகக் கிருஷ்ணய்யருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோட்டுச் சமாசாரம் மட்டும் இல்லை.
“ரயில் காங்கிக் கூலிகள் எமகாதகர்கள். நோட்டை மட்டும் எடுத்துக்கொண்டு, துணியும், பையும் மட்டும் அகப்பட்டதாகக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.
“பையில் நோட்டு இருந்தது என்பது என்ன நிச்சயம்? வண்டியில் ஏறும்போதே இழந்து விட்டிருக்கலாம்” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் சவுரிராஜன்.
இவ்வாறெல்லாம் பேசினார்களேயொழிய வக்கீல் ரகுராமய்யர் பேரில் சந்தேகம் கிளம்ப வில்லை. கிருஷ்ணய்யர் மனைவிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகம் உண்டு.
‘கூட யாரோ வக்கீல், சிறு பையன் இருந்தான் என்கிறீர்களே; அவன்தான் நோட்டை எடுத்துக்கொண்டு சொக்காயை வெளியே
போட்டிருக்க வேண்டும். சிலர் பிறப்பிலேயே திருட்டு” என்றாள்.
ஆறு வருஷங்களுக்குப்பின் ஒருநாள். ரகுராம அய்யர் இப்போது பிரபல கவர்ன் மெண்டு வக்கீல்.
“சாமி, நீங்கள் வெளுக்கப் போட்ட ஷர்ட் டிலே பணம் வைத்திருந்தீர்களே, இந்தாங்கோ, பார்க்காமல் போட்டுவிட்டிங்களே” என்றான் வண்ணான் சின்னசாமி. கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தான்.
“அடே ஆமாண்டா, நேற்றுக் குளிக்கப் போகச்சே, குப்பாண்டி செட்டியார் படிச் செலவுக்கென்று கொடுத்தார். அவசரமாக ஷர்ட் ஜோபியில் வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யப்போனேன். வெந்நீர் அறையில் அழுக்கை அவிழ்த்து வைத்து விட்டு வந்தேன். கோர்ட்டுக்குப் போகும் அவசரம். மறந்தே போனேன். நீ யோக்கியமான பையன் சின்ன சாமி! வேறே யாராயிருந்தாலும் ரூபாயைக் கொடுத்திருக்கமாட்டார்கள்” என்றார் ரகுராம அய்யர்.
“பாடுபட்டுச் சம்பாதிக்கலாம். இன்னொருவர் சொத்து நமக்கு என்னத்துக்குங்க, சாமி! திருட்டுச் சொத்து நிக்குமா?” என்றான் சின்னசாமி.
அன்றிரவு பார்த்தசாரதி கோயிலுக்கு வழக்கம்போல் தம் தாயாரைச் சுவாமி தரிசனத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அன்று,விசேஷ நாள். கோயிலில் பெருங்கூட்டம். ரகுராமய்யரும் மற்றவர்களுடன் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார். கும்பிட்ட
மற்றவர்கள் எழுந்து நின்றபோது, ரகுராம அய்யர் மட்டும் நீட்டிக் கிடந்தவர் அப்படியே பகவானைத் தியானம் செய்து கொண்டு ஒரு நிமிஷம் கிடந்தார். இதைக் கண்டு அவர் தாயார் கிழவிக்கு வெகு திருப்தியாயிற்று. தன் தாடையைப் பல தடவை தட்டிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தாள். தான் பெற்ற மகனைக் குருவாகவே எண்ணிச் சந்தோஷப்பட்டாள்.
கவர்ன்மெண்டு வக்கீல் ரகுராம அய்யர் ஒவ்வொரு மார்கழியும் திருவெம்பாவை விழா பிரமாதமாக நடத்தி வைக்கிறார். பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு, மிட்டாய் வாங்கி விநியோகம் செய்கிறார். ஸ்ரீராம நவமியும் வெகு விமரிசையாக நடத்துகிறார். பாசாங்கு அல்ல. உண்மையில் பக்தி நிறைந்தவராக மாறிவிட்டார். மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம். அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக் கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஒரே பொருள் அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் பொழுது ஒரு மனிதனுடைய குணங்கள் மாறுவதில் என்ன வியப்பு? அத்தனின் அருள் இருப்பின் ஏதும் முடியும்.
“செம்மை நலமறியாத
சிடரொடுந் திரிவேனை!
மும்மைமல மறுவித்து
முதலாய முதல்வன்தான்,
நம்மையுமோர் பொருளாக்கி
நாய்ச்சிவிகை ஏற்றுவித்தான்.
அம்ம! எனக்கருளியவாறு
யார்பெறுவா ரச்சோவே!”
என்று ரகுராம அய்யர் காலையில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பாடுவது வழக்கம்.
பாடும்பொழுது கண்களிலிருந்து வடியும் நீரைத் துடைத்துக்கொண்டு கட்டிலிலிருந்து
இறங்குவார்.
