ஜெ.பாஸ்கரன்/பொம்மைக் காதல்!

அவன் கையில் இருந்த அந்த பொம்மை பேசுகிறது!
“யெஸ் பாஸ்! காலை டிபன் சுமார்தான், கல் தோசை மாதிரி ‘கல்’ இட்லி. அரசியல் கூட்டங்களில் எறியலாம்!”
“நோ பாஸ்! எதிரில் இருக்கும் பெண் அழகுதான். காஷ்மீர் ஆப்பிள் மாதிரி….”
“ஏய்..”
“நோ..நோ.. பாஸ் தப்பா நினைக்காதீங்க. காஷ்மீர் ஆப்பிள் மாதிரி சிகப்பா, குளிர்ச்சியா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்!”
பொம்மைப் பேச்சு எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் சூரியக் கண்கள் மூடித் திறக்கும் போதும், லிப்ஸ்டிக் உதடுகள் அசையும் போதும், தோடுடைய செவிகள் தன்னிச்சையாக ஆடும்போதும், கழுத்து அசைவதும், திரும்புவதும் இந்தப் பொம்மைக்கு உயிருள்ளதோ என நினைக்க வைத்தது!
“ஐ லவ் யூ, மீனா” என்றது பொம்மை.
தூக்கிவாரிப் போட்டது எனக்கு – என் பெயர் எப்படித் தெரியும் இதுக்கு? பொதுவெளியாகையால் சிரித்து வைத்தேன்.
“உனக்கு என்னைப் பிடிக்காதா?” விடாமல் கேட்டது பொம்மை.
“ம்ம்..ம். ரொம்பப் பிடிக்கும்” என்றேன்!
“மிக்க நன்றி. எனக்கும்தான்” என்று சொல்லிச் சிரித்தான் பொம்மையைக் கையில் வைத்திருந்த சுரேஷ்,
வென்ட்ரிலோக்விஸ்ட் !
கண் மூடித் தலையைத் தொங்கப் போட்டது பொம்மை!