சிவசங்கரி/அப்பா

ஐந்து வயதுப் பையனுக்கு இதெல்லாம் புரியுமா என்கிற தயக்கம் இல்லாமல் சொல்லிக்கொடுப்பதோடு இத்காமல், கார் சம்பந்தமாய் வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகைகளை என்னிடம் தந்து ‘படித்துப் பார்’ என்பார். எனக்குப் படிக்கத் தெரியாது என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் அவர் விளக்கிய பிறகு படங்களைப் பார்த்தால் இன்னமும் தெளிவாக நான் புரிந்துகொள்வேன் என்கிற நம்பிக்கையில் அப்படிச் செய்தார் என்றே நான் நினைக்கிறேன்.
அப்பா ஊரில் இருந்தால் தப்பாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரோடு என்னையும் தன் பஸ் நிறுவனத்தின் ஆபீஸுக்கு அழைத்துப் போவார். படுத்தாமல் சமர்த்தாய் மிளகு ரசம், துவட்டல் போன்றவற்றைச் சாப்பிட்டால், ஞாயிறு அன்று அப்பாவோடு ஷவரின் கீழ் நின்று ஒன்றாகக் குளிக்கும் இன்பமும் கிட்டும். என்னுடைய மூன்றாவது வயதில் துவங்கிய இந்த இரு பழக்கங்களும் கிட்டத்தட்ட எனது எட்டு வயது வரை நீடித்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்பாவோடு, அவர் துவங்கியிருந்த ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக், கல்லூரிகளுக்குச் செல்வது வித்தியாசமான அனுபவம்,


முதலில் போனதும்போகாததுமாய் பிரின்ஸிபாலின் அறைக்குள் சென்று உட்கார்ந்து, அவரோடு மணிக் கணக்கில் ஒவ்வொரு மாணவனின் படிப்பு, நடத்தை குறித்தும் அப்பா தெரிந்துகொள்வார். இது எனக்கு மிகுந்த சலிப்பைத் தரும். ஆனால் தொடர்ந்து ஹாஸ்டலுக்கு மாணவர்களைச் சந்திக்கச் சென்றுவிட்டால் குஷிதான். மாணவர்களும் அப்பாவைக் கண்டதும் அத்தனை இண்டு இடுக்கு விடாமல் சூழ்ந்துகொள்வதும், நூறு கேள்விகளைக் கேட்பதும், அப்பாவும் சிரித்துக்கொண்டு பதில் சொல்வதும் பார்க்க ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே பிரின்ஸ்பால் மூலம் யார்யாரிடம் என்ன குறை, தவறு இருக்கிறது என்பதை அறிந்துவைத்திருப்பதால், தனித்தனியாக ஒவ்வொரு மாணவனையும் அக்கறையுடன் அப்பா விசாரிப்பார். கண்டிக்கவேண்டிய விதத்தில் கண்டித்து, தட்டிக்கொடுத்துச் சரிபண்ணிவிடுவார். இதெல்லாம் எனக்கு அந்த வயதில் புரியவில்லை, பிற்பாடு உணர முடிந்தது.
ஒரு சமயம் ஹாஸ்டல் தினத்தின்போது ஒரு மாணவன் அப்பா மாதிரியே உடை அணிந்து, நடந்து, பேச, அப்பா முதற்கொண்டு அத்தனை பேரும் சிரித்துப் பாராட்டியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அப்போதெல்லாம் வீட்டில் அடிக்கடி விருந்துகள் தடபுடலாய் நடக்கும். கவர்னர் வருகிறார், அந்தப் பெரிய மனிதர் வருகிறார் என்று ஆட்களெல்லாம் பேசிக்கொள்வார்கள். யார் வந்ததும் எனக்குப் பெரிசாகத் தோன்றியதில்லை… அப்பா இருந்தால் போதும்.
தினமும் அப்பாவோடு இருக்க முடியாமல் அவர் அடிக்கடி வெளியூர் போய்விடுகிறாரே என்ற கோபம் நிறைய வரும். அதனால்தானோ என்னமோ, ஒருதரம் அப்பா அல்சர் உபாதையால் வேலையை எல்லாம் ரத்து
செய்துவிட்டு வீட்டில் படுத்திருந்தபோது, சுற்றி அம்மா, டாக்டர், இதர பெரியவர்கள் இருக்கையில் தைரியமாய் அப்பாவை நெருங்கி, “உங்களுக்கு உடம்புக்கு வந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று கூற, அம்மா, மற்றவர்களுக்குக் கோபமான கோபம்; அப்பா மட்டும் என்னை இன்னும் கிட்டத்தில் அழைத்தார். “ஏன் அப்படிக் கூறினாய்?” என்றார். நான் தயங்காமல், “என்னை விட்டு வீட்டு வெளியூர் போக மாட்டீர்கள்; உங்களை தினம் தினம் பார்க்கலாம். உங்களோடு இருக்கலாம். அதான் அப்படிச் சொன்னேன்” என்றேன்.
நிஜம்தான். அப்பா ஒரு பெரிய மனிதர், தொழிலதிபர் என்று வீட்டில் உள்ளவர்களும், வந்துசென்ற நண்பர்களும் என்னுள் ஒரு பிரமிப்பை, ஒரு இமேஜை அந்தச் சின்ன வயதில் உண்டாக்கியிருந்ததையும் மீறிக்கொண்டு அப்பாவைப் பார்ப்பதும், அவரோடு பேசுவதும், அவருடன் இருப்பதும் எனக்கு அலாதி நிறைவைத் தந்தது உண்மைதான்.
அப்பாவின் சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டு தான் நான் எப்போதும் உடன் நடப்பேன். அவரின் முழங்கால் அளவு இருந்த நான் அவரோடு பேச வேண்டுமென்றால் கழுத்தைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்த்தால்தான் இயலும். அப்பா அத்தனை உயரம். கதைகளில் படித்த ராஜா மாதிரி கம்பீரமாய் அப்பா இருந்தார் என்பது என்னுள் சின்ன வயதிலேயே பதிந்து போன அபிப்பிராயம்.
அதுவும் அப்பாவின் கண்கள் மகா தீட்சண்யமானவை. நேருக்கு நேர் நின்று அந்தக் கண்களை ஏறிட்டுப் பேசும்போது யாருக்கும் பொய் சொல்வது கஷ்டம் என்றே நினைக்கிறேன்.
“உன் அப்பாவை நீ ஹீரோ வொர்ஷிப் செய்தாயா?” என்றால், பெருமிதத்தோடு நான் ஒப்புக்கொண்டேதீர வேண்டும்.
என்றாலும் நான் வளரவளர, என் கண்ணோட்டத்திலிருந்தும், இதர கோணங்களிலிருந்தும் அவரைக் காண, உணர, நேர்ந்த பிறகு, அவரும் குறை நிறைகள் உள்ள ஒரு மனிதர்; ஆனால் சாதாரண மனிதர்களிலிருந்து மாறுபட்டவர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவிடம் நிறைகள் அதிகம்; குறைகள் கொஞ்சம்… இதுதான் முக்கியமாய் அவரை மற்றவரிடமிருந்து தனித்து நிற்க வைத்தது. இதை அவர் என் அப்பா என்பதற்காக ஓரவஞ்சனையுடன் நான் கண்டிப்பாகக் கூறவில்லை என்பதை, அவரோடு பழகிய ஒவ்வொருவரும் ஆமோதிப்பார்கள்.
அப்பாவை என் கண்ணோட்டத்திலிருந்தும் மற்றவர் கோணங்களிலிருந்தும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், அவருடைய வாழ்க்கைக் குறிப்பைப் பொதுவாக அறிந்துகொள்வது அவசியம் என்று நினைப்பதால், முதலில் அவடைய பிறப்பு, வளர்ப்புபற்றி ஒரு சுருக்கம்.

2
அப்பா பிறந்த தேதி 23.03.1893. கோயம்புத்தூரி லிருந்து சுமார் பதினாறு மைல்கள் தள்ளி உள்ள கலங்கல் என்கிற சின்ன கிராமத்தில் கோபால்சாமி என்கிற விவசாயிக்குப் பிள்ளையாகப் பிறந்தார். தாத்தா அப்பாவுக்கு வைத்த பெயர் துரைசாமி. அப்பாவுக்கு ஒரு வயதாகும் முன்னரே பாட்டி இறந்துவிட, தாயின் அரவணைப்பு இல்லாமல் வளருவது நல்லதல்ல என்கிற நோக்கத்தில் பாட்டியின் சகோதரர் ராமசாமி என்பவர் அப்பாவை லட்சுமி நாயக்கன்பாளையத்தில் தன்னோடு வைத்துக் காப்பாற்ற எடுத்துச்சென்றார்.
அப்பா சின்ன வயதில் மகா குறும்புக்காரராக இருந்திருக்கிறார். அவருடைய விஷமங்களைத் தாள முடியாமல், பள்ளிக்குப் போனால் கட்டுப்படுவார் என்று ஊரில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கேயும் சதா ரகளை தான், ஒருநாள் வாத்தியாரின் கண்களில் கைநிறைய மணலை அள்ளி வீசிவிட்டு ஓடிவிட, “நீ படித்துக் கிழித்தது போதும்,” என்கிற கோபத்துடன் மீண்டும் கலங்கலுக்கே அவரை ராமசாமி அனுப்பிவிட்டார்!
அப்பாவின் சேஷ்டைகள் அளவுக்கு மீறி இருக்க, வீட்டில் அவரை வைத்துச் சமாளிப்பது கஷ்டம் என்று நினைத்த தாத்தா, ஊருக்கு வெளியில் இருந்த தோட்டத்து வீட்டில் அவரைத் தங்க வைத்தார். பகலெல்லாம் விவசாய வேலை பார்ப்பதும், ஒழிந்த நேரங்களில் தானாகத் தமிழ் நூல்களைப் படிப்பது என்றும் வாழ்ந்துவந்த அப்பாவை அந்தச் சில வருஷங்கள் ஒரு பண்டிதராகவே மாற்றியது என்று சொல்லலாம். ‘போகர் ஏழாயிரம்’, அரசன் ஷண்முக னார் எழுதிய, ‘தொல்காப்பியவிருத்தி’ போன்ற நூல் சுளைப் படித்ததோடு, ஜோஸ்யம், சமயம், சித்த வைத்தி யம் போன்ற சுவடிகளைத் தானாகப் படித்துப் புரிந்து கொள்ளவும் செய்ததில், ஊர் ஜனங்கள் அவருக்கு ‘இலக்கணம் துரைசாமி’, ‘வைத்தியதுரை’ என்கிற பட்டங் களை அன்போடு தந்தனர். ஆக, அப்பா ஒரு சரியான ஸ்வயம்புதான்!

குறிப்பு :

இன்று ஜி.டி.நாயுடுவின் பிறந்த தினம். வானதி பதிப்பகம் கொண்டு வந்த சிவசங்கரியின் அப்பா என்ற புத்தகத்திலிருந்து daily.navinavirutcham.in பதிவாகிறது. தினமும் 5 பக்கங்களுக்குக் குறையாமல் பதிவு செய்வதென்று முடிவு செய்துள்ளோம்.

சிவசங்கரி /அப்பா – விருட்சம் நாளிதழ்

One Comment on “சிவசங்கரி/அப்பா”

Comments are closed.