
ரமேஷ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் தன் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த ஜன்னல் ஓர நாற்காலியில் சென்று வழக்கம் போல் உட்கார்ந்தான் ,வீட்டில் எவ்வளவு இடம் இருந்தும் அங்கு சென்று உட்காரும் விஷயத்தை ரமேஷின் அம்மா சாவித்ரி சந்தேகத்துடன் அவன் அப்பாவிடம் தெரிவித்தாள் .அவள் அடுத்த வீட்டு பிரியா மீது தனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும் , ஒரு வேளை இருவரும் காதலிக்கிறார்களோ ?என்றெல்லாம் கற்பனை செய்து , அன்று அந்த குழப்பத்திற்கு முடிவு தேட தன் கணவரை அழைத்தாள் . அதற்கு அவன் அப்பா உடனே “சாவித்ரி , விஷயம் தெரியாமல் நம் பையனை பழித்து பேசுவதே தவறு , அதிலும் நீ அந்த பெண்ணை வேறு தவறாக பேசுகிறாய் ,பொறுத்திரு ,அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம் “ என்றார்.
சிறிது நேரத்தில் அவன் பையிலிருந்து பிரியா தன் பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்த ப்ளூடூத் ஸ்பீக்கரை எடுத்து ஆன் செய்துவிட்டு பிரியா ஜன்னலை திறப்பதற்காக காத்திருந்தான் ,அவளும் அவள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்துவிட்டு ஜன்னலை திறந்து , TNPSC தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஆரம்பித்தாள் ,இங்கு இவன் மறுபுறம் படிக்க ஆரம்பித்தான்.
இதை பார்த்த சாவித்ரிக்கு வெக்கத்தில் முகம் செத்து போயிற்று , சிறு வயது முதல் தன்னுடன் படித்த ப்ரியாவின் உதவியால் தன் பெற்றோருக்கு செலவு வைக்க கூடாது என்பதற்காக நம் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியும் , ஆண்ட்ராய்டு போணும் இல்லாத காரணத்தினால் தோழியின் உதவியோடு மேற்படிப்புக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கும் மகனை பார்த்து வியந்தாள் ,இந்த சிறு வயதில் நண்பனின் முன்னேற்றத்திற்கு உதவி புரியும் அந்த பெண்ணை நினைத்து பெருமை கொண்டாள் , அவனிடம் சென்று “தம்பி, இவ்வளவு கஷ்டப்பட்டு படிப்பதற்கு அங்கு சென்றே படிக்கலாமே , என்றதும் ,”அம்மா ,நீங்கள் என்னை பெற்றவர்கள் , நீங்களே ,ஒரு நிமிடம் எங்களை நம்பவில்லை, இதில் இந்த சமூகம் எங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று எப்படி நினைப்பது ? எங்களுக்கு எல்லோருக்கும் புரிய வைக்கும் நேரமில்லை ,அந்த நேரத்தை படிப்பில் செலவிட எண்ணுகிறோம் “என்றான் . …..
அவன் அப்பா “என்ன சாவித்ரி நம் மகனின் ஜன்னல் ஓர காதலியை இன்று பார்த்தாயா ? இனியாவது நம் பிள்ளைகளை நம்ப கற்றுக்கொள் “ என்றார் …
