சிவசங்கரி/அப்பா

அப்பாவுக்குப் பதினெட்டு வயதிருக்கும்போது வயக்காட்டில் நடந்து சென்ற ஒருநாளில், காலி புட்டி ஒன்று தட்டுப்பட, எடுத்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத்துக்கள்… ஒன்றும் புரியவில்லை. ஆனால், பார்க்டேவிஸ் என்கிற அமெரிக்க மருந்துக் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணி, பெயின் கில்லர் புட்டி அது என்கிற விவரத்தை மறுநாள் அந்த ஊருக்கு வந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடமிருந்து தெரிந்து கொண்டவருக்கு, தம் ஊரில் நிறைய பேர்கள் ‘மூட்டுவலி, தலைவலி’ என்று அவஸ்தைப்படுகிறார்களே, இந்த மருந்தை வரவழைத்து அவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது. அப்புறம் அப்பா சும்மா இருப்பாரா? அதே ரெவின்யூ இன்ஸ்பெக்டர் உதவியுடன் அமெரிக்காவுக்கு எழுதி மருந்து புட்டிகளை வரவழைத்து, ஊர் மக்களுக்கு குறைந்த லாபத்தில் விநியோகிக்க ஆரம்பித்தார். வியாபாரத்தில் தீவிரமாய் முனைந்து விற்பனை செய்ய முற்பட்டதில், அந்த வருடம் அப்பாவுக்குக் கிடைத்த நிகர லாபம் ரூபாய் எண்ணூறு! அப்பா செய்த முதல் வேலையே அவர் பிற்காலத்தில் பெரிய ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு விதையாக அமைந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது!
அதே வருடம் அப்பா செய்த இன்னொரு குறிப்பிடத் தகுந்த காரியம், குடியானவர்களின் கூலி உயர்வுக்காகப் பாடுபட்டதுதான். நாள் பூராவும் நிலத்துச் சகதியில் இறங்கி மன்றாடும் ஆண்களுக்கு மூன்றரை அணாவும், பெண்களுக்கு இரண்டரை அணாவும் கொடுப்பது குறைந்த ஊதியமாகப்பட, தைரியமாய் நிலச் சொந்தக்காரர்களிடம் சென்று பேசி, அவர்களின் கோபதாபங்களைக் கண்டு பயப்படாமல் வாதாடி, வெற்றியும் பெற்றார். போராட்ட சமயத்தில் கூலி கிடைக்காமல் ஏழைக் குடியானவர்கள் கஷ்டப்பட்டபோது கொஞ்சம்கூடத் தயங்காமல் வியாபாரம் மூலம் தான் சேமித்திருந்த எண்ணூறு ரூபாயை அவர்களுக்காக அப்பா செலவழித்தது, அப்பாவுக்கு ஊர் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றுத்தந்தது என்று கூறுவார்கள்.
இருபதாவது வயதில் அப்பா செல்லம்மா பெரியம்மாவை மணந்தார். அப்பாவுக்கு இரண்டு மனைவி கன், பெரியம்மா முதல்.. இவர் மூலம் கிருஷ்ணம்மாள், சரோஜினி என்கிற இரண்டு பெண்கள் உண்டு. என் தாயார் ரங்கநாயகி இரண்டாவது மனைவி.. இவருக்குப் பிறந்து இருப்பது நான் ஒருவன் மட்டுமே!
ஒருநாள் லங்காஷர் என்கிற ஆங்கில அதிகாரி மோட்டார் சைக்கிள் ஒன்றில் கலங்கலுக்கு ஏதோ வேலையாய் வர, அந்தக் குறிப்பிட்ட தினம் அப்பாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இயற்கையிலேயே இயந்திர சாதனங்களில் லயிக்கும் தன்மை கொண்ட அப்பா மோட்டார் சைக்கிளைப் பார்த்ததும், அதில் மனசைப் பறிகொடுத்து ‘இது எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுள் அடங்கியிருக்கும் உபகரணங்கள் யாவை? இதை இன்னும் வேறு வகையாக மாற்றியமைப்பது சாத்தியமா? என்கிற கற்பனையில் மூழ்கிப்போனதில் வியப்பு ஒன்றும் இல்லைதான்! கற்பனையோடு நிற்க விரும்பாமல் நினைப்பதை நனவில் செய்து பார்க்க விரும்பிய அப்பா, சீக்கிரமே தான் இருக்கவேண்டிய கலங்கல் அல்ல; வளர வேண்டுமானால் அதற்கு உடனடியாய் கோயம்புத்தூர் செல்வதுதான் உகந்தது என்று தீர்மானித்து, நடந்தே சென்று கோவையை அடைந்தார். வழியில் தென்பட்ட இயந்திரச் சாலைகள், புகைவண்டி எல்லாம் அப்பாவின் பரவசத்தை அதிகமாக்க, கோவையில் அலைந்து திரிந்து இதுநாள்வரை தான் காணாத சமாச்சாரங்களையெல்லாம் கண்டு மலைத்துப் போனார், கையில் பணம் எதுவும் இல்லாத காரணத்தால்
ஹோட்டல் ஒன்றில் மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து சர்வர் வேலையைப் பார்த்தது அப்போதுதான்.
சுமார் மூன்று வருடங்களில் நானூறு ரூபாய் போல சேர்க்க முடிய, அந்தப் பணத்துடன் தன் லட்சியத்தை நிறைவேற்ற லங்காஷயர் அதிகாரியை நாடிச் சென்றார். லங்காஷயரும் இவருக்கு மோட்டார் சைக்கிள்பால் இருந்த ஈடுபாட்டைப் புரிந்துகொண்டு, கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, மோட்டார் சைக்கிளைத் தந்தார்.
அதை வாங்கினபின் எல்லோரையும் போல அப்பா கோவைத் தெருக்களில் உல்லாசமாய் வலம் வரவில்லை. மாறாக, உடனடியாய் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, மோட்டார் சைக்கிள் இயங்கும் விதத்தைத் தானாக அறிந்துகொண்டபின், மீண்டும் கச்சிதமாய் பூட்டினார். பக்கவாட்டில் பெட்டி ஒன்று பொருத்தினால் மேலும் இருவர் பயணிப்பது சாத்தியமாகுமே என்று தோன்ற, தானே வரைபடம் வரைந்து ‘ஸைட் பாக்ஸ்’ தயாரித்து, மோட்டார் சைக்கிளில் பொருத்தினார். நண்பர்களை அதில் அமரச் செய்து கோவை, கலங்கல் வீதிகளில் அவர் வலம் வந்தபோது, அப்பாவின் தனித்தன்மை புரிந்து பெரியவர்கள் பாராட்டியது உண்டாம்.
அடுத்து வந்த வருடங்களில் ஒண்டிப்புதூர் ஜின்னிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து, பின்னர் சுயமாக சிங்காநல்லூரில் தானே ஒரு தொழிற்சாலையைத் துவங்கி, முதல் உலக யுத்தம் துவங்கிவிட்ட நேரத்தில் கண்டோர் அதிசயக்கும் வகையில் புத்திசாலித்தனமாய் யுக்திகளைக் கையாண்டதில், ஒரே வருடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் அப்பா சம்பாதித்தார். இங்கே நாம் கொஞ்சம் ம் நிதானித்தால், வசதிகளற்ற 1919-ம் ஆண்டில் ஒன்றரை லட்சம் சம்பாதிப்பது, அதுவும் எந்தவித முதலீடும் இல்லாமல் என்பது யாரையும் பிரமிக்க வைக்கும் காரியம்தான் என்பது புரியும். எங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவர் பிற்பாடு, ‘துரைசாமி செய்தது அசுர சாதனை அல்லவா?’ என்று கூறியதைக் கேட்டு எனக்கு உண்டான பெருமிதத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.
ஆனால் அத்தனை பணத்தையும் அதே வருடம் பம்பாய்க்கு ‘காட்டன் வியாபாரம்’ செய்யப்போவதாகச் சென்று, சூதாட்டத்துக்கு ஒப்பான அந்தத் தொழிலில் தம்பிடி விடாமல் தொலைத்துவிட்டு அப்பா வெறுங்கை யுடன் கோவைக்கு வந்தது இன்னொரு தனிக்கதை!
முன்பு அப்பாவின் சாதனையை நினைத்துப் பெருமிதம் கொண்ட நீ, இப்போது இந்தத் தோல்வி குறித்து வேதனைப்பட்டாயா?’ என்று யாராவது கேட்டால், இல்லை என்பதுதான் என் உண்மையான பதிலாக இருக்கும்!
Failure is a stepping stone to Success என்கிற பழமொழிக் கேற்ப பம்பாயில் பெற்ற தோல்வியே அப்பாவை இன்னும் துடிப்போடு வாழ்க்கையை எதிர்கொள்ள வைத்தது என்பதுதான் நிஜம். தோல்வியினால் மனம் ஒடிந்துபோக மாட்டேன்; மனம் தளராமல் மேலும்மேலும் உழைத்துப் பெரும் வெற்றி அடைந்தே தீருவேன் என்கிற வைராக்கி யத்துடன் அப்பா கடைசிவரை செயல்பட்டு, தன்னைச் சிறந்த தொழிலதிபராக நிலைநிறுத்திக்கொள்ள பம்பாய் அனுபவம் நல்லதொரு உறுதியான அஸ்திவாரமாக அமைந்தது என்றே நான் நம்புகிறேன்.
அப்பா என்றைக்குமே பணத்துக்கு தேவைக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. நான் அறிந்தவரையில் லட்சக்கணக்கில் ரூபாய் வந்தபோதும் அவர் பூரித்தது கிடையாது; போனபோதும் கூம்பியது இல்லை. கீதை கூறும் ‘ஸ்திதப்ரக்ஞன்’ – சலனமில்லாத புத்தி உடையவன் என்கிற அடைமொழிக்கு அவர் ஓர் உதாரணமாகப் பலவிதங்களில் அந்தச் சின்ன வயதிலிருந்தே திகழ்ந்தார் என்றே கூறலாம்.

சிவசங்கரி/அப்பா – விருட்சம் நாளிதழ்

One Comment on “சிவசங்கரி/அப்பா”

Comments are closed.