
ஜி.டி.கோபால்
10.06.1989
கோபால் பாக்,
அவினாசி ரோடு, கோவை.
இன்றைய இளைய தலைமுறையினரில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், ஆக்க பூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும்.
முறையான கல்வியோ, பிறரின் உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பலர் முன்பு இருந்திருக்கிறார்கள். இச்சாதனைகளைச் செய்வது அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் இன்றைய இளைய தலை முறையினருக்கு ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக்கூடாது?
இக்கருத்துக்களை மனதில் கொண்டே திரு. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி நாவலாசிரியை திருமதி சிவசங்கரியைக் கேட்டுக்கொண்டேன். சிறந்த கற்பனைக்கும் சீரிய நடைக்கும் பெயர் பெற்ற திருமதி சிவசங்கரியைத் தவிர இப்பணியைச் செய்யப் பொருத்தமானவர் வேறு யார்? இவர், தனது எளிமையான எழுத்தாற்றலால், திரு. நாயுடுவின் வாழ்வில் நடந்த பல அனுபவங்களையும் அருமையாக, அதே சமயம் படிப்பவர்கட்கு சுவையாகவும் தூண்டுதலாகவும் அமையக்கூடிய விதத்தில் தொகுத்தளித்திருக்கிறார். திருமதி சிவசங்கரி, மீண்டும் ஓர் அற்புதமான படைப்பை அளித்திருக்கிறார் என்பதையே இப்புத்தகம் தெளிவாக்குகிறது!
சிற்சில இடங்களில் இப்புத்தகம் தற்பெருமையை லேசாக வெளிப்படுத்துகிறதோ என்ற என் சந்தேகத்தை சிவசங்கரியிடம் வெளியிட்டேன். அதை மறுத்த அவர், மாறாக இப்புத்தகத்தின் குறிக்கோளின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இவ்விடங்களில் திருத்தங்கள் செய்யப் பட்டால், அது புத்தகத்தின் அருமையையும் படிப்பவர் மனதில் உண்டாக்கக்கூடிய பாதிப்பையும் சிதைத்துவிடும் என்று அபிப்பிராயப்பட்டார். எனவே, என் சங்கடத்தை ஒதுக்கிவிட்டு அவருடைய கருத்தை நான் ஏற்றேன். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி ஒருசில பெற்றோருமாவது இப்புத்தகத்தால் பயனுறுவார்கள் என்ற நம்பிக்கையே என் உடன்பாட்டுக்குக் காரணம்!
இப்புத்தகத்தின் கருத்துக்கள் நான் சொல்வதைப் போலவே அமைந்திருந்தாலும், பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் சந்தித்து அவர்களது
எண்ணங்களைக் கேட்டறிந்து, என்னுடனும் எனது குடும்பத்தாருடனும் நாட்கணக்கில் அமர்ந்து பேசி விஷயங்களைச் சேகரித்து, திரு. நாயுடு சம்பந்தப்பட்ட ஏராளமான கோப்புகளையும் ஆராய்ந்து குறிப்புகள் எடுத்து, அனைத்தையும் அழகுற பெருமை திருமதி தொகுத்துள்ள புத்தகமாகத் சிவசங்கரிக்கே! அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றி.
தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இப்புத்தகம் நல்ல முறையில் வெளிவர உதவிய திரு. நாயுடுவின் அனைத்து நண்பர்களுக்கும் கோப்புகளை ஆராய்ந்து குறிப்புகள் எடுக்க உதவிய திரு. குன்றக்குடி பெரிய பெருமாளுக்கும், வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும், ஓவியர் திரு. மணியம் செல்வனுக்கும் எனது நன்றி.
அப்பா
1
அப்போதெல்லாம் கோபால் பாக் ரொம்ப வித்தியாச மாக இருந்தது. வீட்டைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் இல்லை என்றே நினைக்கிறேன். உயரஉயரமாய் மரங்கள்….அடர்த்தியாய்… காடு மாதிரி… கொய்யா, மா, ஆரஞ்சு, பிளம்ஸ், பீச் என்று வகைவகையாய் மரங்கள்… கண்ணுக்கெட்டிய வரையிலும் வேறு எந்தக் கட்டடமும் தெரியாமல் மறைத்த மரங்கள்… வனம் மாதிரி இருந்த இடத்தில் பல துஷ்ட மிருகங்களும் வாழ்ந்துவந்ததால் வீட்டை விட்டு வெளியே தனியே போக என்னை அனுமதிக்க மாட்டார்கள். இரண்டு மூன்று ஆட்கள் துணைக்கு வர தோட்டத்துக்குப் போகும் சமயங்களில் பாம்பு, குள்ளநரி, காட்டுப் பன்றி, மயில்கள் என்று பல ஜீவராசிகளைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
வீட்டில் எப்போதும் ஜேஜேவென்று மனிதர்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள். கிராமத்து ஜனங்கள் ஆகட்டும், வெளியூர் நண்பர்கள் உறவினர்கள் ஆகட்டும், யார் கோயம்புத்தூர் வந்தாலும் தங்குவது கோபால் பாகில்தான். பின்கட்டு பூராவும் கிராமத்துக்காரர்கள் புழங்குவார்கள்; முன்பக்கத்தில் அப்பாவைப் பார்க்க வந்திருக்கும் பெரிய மனிதர்கள், நண்பர்கள்.
அனேகமாய் அப்பா மாலை, இரவு நேரங்களில்தான் வீட்டில் இருப்பார். அவர் ஊரில் இருந்தால் வீடே சுறுசுறுப்பாய்க் காணப்படும். கவர்னரிலிருந்து குடியானவன் வரை அப்பாவை பார்க்க வந்துகொண்டேயிருப்பார்கள் என்பதால், அங்கு போய் தொந்தரவு செய்துவிடுவேன் என்கிற பயத்தில், அம்மாவும் ஆட்களும் என்னை லேசில் வாசல் பக்கத்துக்கு விடவே மாட்டார்கள்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நீலகண்ட நாயர்தான் எங்கள் வீட்டுத் தலைமை சமையற்காரர். அவருக்கு நான்கு உதவியாளர்கள். அப்பாவுக்கு வேண்டியதைக் கவனிக்கும் பர்ஸனல் அஸிஸ்டெண்ட் கண்ணன், நடேசன் பிள்ளை, அப்பாவுக்குப் பிரத்யேகமாய் வண்டி ஓட்டும் டிரைவர், இவர்களைத் தவிர இன்னும் பல வேலையாட்கள் வீட்டில் உண்டு; ஆனால் இந்த மூவர்தாம் ரொம்பரொம்ப வருடங்களுக்கு அப்பாவின் நிழலாக இருந்தவர்கள்.
பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதில் யு.எம். எஸ். மெயின் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தினது போக, பாக்கி எழுபது எண்பது பஸ்களை அந்த நாட்களில் கோபால் பாக் தோட்டத்தில்தான் இரவில் நிறுத்துவார்கள். மாலை ஏழரை மணி ஆகிவிட்டால் ஒவ்வொரு பஸ்ஸாக பயணத்தை முடித்துக்கொண்டு வந்து சமர்த்தாய் அதனதன் இடத்தில் நிற்பது பார்க்க ஜோராக இருக்கும் என்பதால், பெரியவர்களுக்கும் ஆட்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டுத் தோட்டத்துக்கு ஓடிவிடுவேன். பஸ் டிரைவர்களில் பலர் எனக்காக நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு போன்ற பதார்த்தங்களை அன்போடு வாங்கி வந்து தருவார்கள். ஒவ்வொரு பஸ்ஸிலும் ஏறி இறங்கி டிரைவர்களிடம் ‘இது என்ன, அது என்ன?’ என்று துருவித்துருவிக் கேட்டு அவர்களின் நடவடிக்கைகளை
உன்னிப்பாய் கவனிப்பேன். அப்படி எதையோ தெரிந்து கொண்டுவிட்ட உற்சாகத்தில் சீட்டில் உட்காரக்கூட உயரமில்லாத அந்த நான்கு வயதில் நின்றபடி ஒருநாள் ஒரு பஸ்ஸை ஸ்டார்ட் செய்து, அதுவும் ஒருசில அடிகள் நகர்ந்துவிட… விஷயம் நொடியில் அப்பா வரையில் சென்று விட்டது. அப்பா பதைத்துக்கொண்டு வந்தவர், என்னை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டார். அத்தனை பேர்கள் எதிரில் என்னைக் கோபித்துக்கொண்டார்.
அப்பா என்னைத் திட்டியது என் புத்தியில் தங்கியிருப்பது அதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். அதோடு, சுற்றி நிறையப் பேர் நின்றதும் எப்படியோ இருக்க, நான் அவமானம் தாளாமல் அழுதேன். எனக்கு நினைவு தெரிந்து, ஞாபகத்தில் இருக்கும் முதல் திட்டு, முதல் அழுகை.
அதிசயமாய் வீட்டில் அதிகக் கூட்டம் இல்லாத நாட்களில் மாலை ஏழரை மணி எப்போது வரும் என்று நான் காத்திருப்பேன். “அப்பா இருக்கிறார் சத்தம் போடாதே; ஓடாதே” என்று நொடிக்கொரு தடவை கண்ணனும் மற்றவர்களும் என்னை எச்சரித்தாலும், “மணி என்ன? ஏழரை ஆகிவிட்டதா?” என்று நான் விடாமல் நச்சரித்தது இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. ஏழரை மணிக்கெல்லாம் வாசல் போர்டிகோவில் வேலையாள் நாற்காலி ஒன்றைக் கொணர்ந்து போட, அப்பா அதில் அமர்ந்துகொள்வார், நான் அருகில் சென்று நின்றுகொள்வேன். ஸிக்னல் கொடுத்து அழைத்த தினுசில் மயில்களும், பூனைகளும், நாய்களும் எங்கிருந்தோ வேகமாய் பறந்து, ஓடிவந்து, அவற்றுக்காக அப்பா தயாராக வைத்திருக்கும் உணவுப் பொருட்களை ஆர்வத்துடன் உண்ணும். தனியாக அப்பாவும் நானும் இருந்த அந்த மாலைப்பொழுதுகளில் அப்பா சின்னக் குரலில், ஆண் மயிலுக்கு மட்டும் தோகை ஏன் இருக்கிறது, நாய் பூனைகளின் கண்கள் ஏன் இரவில் பளபளக்கின்றன என்று பல விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார்.
இதேபோலக் காலை ஐந்திலிருந்து ஆறுவரை அப்பா சாதாரணமாக தனியாகத் தன் அறையில் அமர்ந்து பேப்பர்களைப் படிப்பார் என்பதை நான் எப்போது, எப்படி அறிந்துகொண்டேன் என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால், அப்பாவுடன் இருக்க வேண்டும்
என்கிற துடிப்பில் யாரும் எழுப்பாமல் கண் விழித்து, அந்த விடிகாலை நேரத்தில், அவரது அறைக்குச் சென்று, கதவைத் திறந்து, விளக்கு வெளிச்சத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அவர் பேப்பர் படித்த நாழிகையில், உறக்கம் முற்றிலும் கலையாத நிலையில் பக்கத்து நாற்காலியில் ஏறி அமர்ந்து ரொம்ப சந்தோஷத்தோடு அவர் கூட இருந்தது நினைவில் தப்பாமல் எட்டிப்பார்க்கிறது.
அந்தச் சின்ன வயதில், அப்படி அவரோடு உட்கார்ந்த நாட்களில்தான், சின்ன குழந்தைதானே என்று அலட்சியம் செய்யாமல் எனக்கு கார் பற்றின ஆர்வம் உண்டு என்பது புரிந்து, அது சம்பந்தமான நுணுக்கங்கனை அப்பா நான் புரிந்துகொள்ளுகிற மாதிரி விளக்குவார்.
வண்டியிலிருந்து கார் எப்படி ஓடுகிறது, ஒரு இன்னொன்று எப்படி மாறுபடுகிறது என்று சுவாரஸ்யம் குறையாமல் அப்பா சொல்லிக்கொடுப்பார்.
“கார் என்பது ‘கோச்’ வண்டி மாதிரி; அதில் காணப் படும் சிலிண்டர்கள், கோச்சில் பூட்டப்படும் குதிரைகளுக் குச் சமம். ஒரு குதிரை பூட்டியுள்ள வண்டி, கனம் அதிகம் கொஞ்ச தூரத்துக்கு இல்லாவிட்டால் அதிவேகமாக ஓடிவிட்டு சுருக்க களைத்து நின்றுவிடும். ஆனால், நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி, பாரம் காரணமாகவும், ஒன்றோடு ஒன்று அனுசரித்துப்போகவேண்டியதாலும் சுமார் வேகத்தில் சென்றாலும் அதனால் நீண்ட தூரம் களைப்பின்றிப் போக முடியும். இது மாதிரிதான் வண்படிகளும், பாக்கார்ட் கார் மிக உயர்ந்தது. ஏனென்றால் அதில் எட்டு ஸிலிண்டர்கள் உண்டு. திடகாத்திரமான உடல் அமைப்பு, நல்ல என்ஜின் இருப்பதால் அடிக்கடி கோளாறு வராது; நம்பி தொலைவில் இருக்கும் வெளியூர்களுக்கு வேகமாகப் போகலாம்; ஆனால் விலை அதிகம் புரிகிறதா?”
(இன்னும் வரும்)

One Comment on “சிவசங்கரி /அப்பா”
Comments are closed.