சிவசங்கரி/அப்பா

முன்னுரை

1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி.டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.
“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக்கொள்வீர்களா?”
எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றிவளைக்காமல் நேரடியாக திரு. கோபால் விஷயத்துக்கு வந்துவிட, புருவங்கள் முடிச்சுப்போட முடிச்சுப்போட சில நிமிடங்களுக்கு
யோசித்தேன், பிறகு கேட்டேன்.
“நாயுடுபற்றி எக்கச்சக்க புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. அவற்றில் வராத புது விஷயங்களை அவரை ஒருதரம்கூடச் சந்தித்திராத என்னால் கூறுவது சாத்தியம் என்று நம்புகிறீர்களா? தவிர, என்னைத் தேர்ந்தெடுத்து இப்படி ஒரு புத்தகம் எழுதக் கேட்டதற்கு ஏதேனும் விசேஷ காரணங்களும் உண்டா?”
துளி தயக்கமின்றி திரு. கோபாலிடமிருந்து பதில் வெளிப்பட்டது.
“என் தந்தைக்கு ‘அதிசய மனிதர்’, ‘படிக்காத விஞ்ஞானி’, ‘விவசாய விஞ்ஞானி’, ‘தொழில் விஞ்ஞானி’, ‘படிக்காத மேதை’ என்று எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பல பிளஸ் பாயிண்ட், சில மைனஸ் பாயிண்ட்களைக் கொண்ட ஒரு அற்புத மனிதராகத்தான் என்றைக்குமே அவரை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவும் அவர் மறைவுக்குப் பின்னர், தனியே அமர்ந்து, நடந்து முடிந்த பல சம்பவங்களை மீண்டும் அசைபோட்டபோது, புதுப்புது கோணங்களிலிருந்து அவற்றை, ஏன், அப்பா வையேகூட என்னால் பார்க்க முடிந்தது. அப்பாவைப் பற்றி நான் அறியாத விவரங்கள், கோணங்கள் இன்னும் பலவும் இருக்கலாம் என்பதையும் புரிந்துகொண்ட போது, இது குறித்து ஓர் ஆராய்ச்சி செய்தால் என்ன என்றும் தோன்றியது. அப்பா சம்பந்தப்பட்ட கோப்பு கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவரை நன்கு அறிந்தவர்கள் இன்னமும் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் கோப்புகளைப் படித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து விவரங்களைச் சேர்க்க முடிந்தால், அப்பாவை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; அவருடைய நடவடிக்கை, சிந்தனைகளை இன்னும் பூர்ணமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றியது. இதை யார்மூலம் நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தபோது, மனதில் வந்து நின்றவர்களில் முக்கியமானவர் நீங்கள். எளிமையாக, அதே சமயத்தில் மனசில் பதியும்படியாக எழுதுவது உங்களுக்குக் கை வந்த வித்தை. அப்பாவை வைத்து இதுநாள்வரை – மற்றவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கட்டாயம் மாறுபட்டு உங்களால் எழுத முடியும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை… தவிர அப்பாவைப் புரிந்துகொள்வதும் அவருடைய கருத்துக்களை ஏற்று நடக்க முயற்சிப்பதும், சரியான வழிகாட்டி இன்றித் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் எழுதப்போகும் இந்தப் புத்தகம், உற்சாகத்தையும், வாழ்க்கையில் தெம்பையும் உண்டு பண்ணக்கூடிய விதத்தில் அமைந்தால், என்னைவிட சந்தோஷிப்பவர் வேறு யாரும் இருக்க முடியாது…”
திரு. கோபால் கூறிய கடைசிக் காரணம் என் மனதில் சின்னதாக ஒரு நீரூற்றைக் கிளப்ப, அடுத்து வந்த நாட்களில் இது சம்பந்தமாய் யோசனை செய்து விட்டு கோயம்புத்தூருக்குச் சென்றேன்.
திரு. கோபாலின் மனைவி சந்திரா, பெண் சாந்தினி, மருமகன் வெங்கட், பிள்ளை ராஜ்குமாரைச் சந்தித்தேன், புகழ்மிக்க கோபால் பாகை, சிந்தனை மாறாமல் சுற்றி வந்தேன். எதிரே இருந்த பிரெஸிடெண்ட் ஹாலில் உள்ள பிரம்மாண்டமான கூடத்தில் திரு. நாயுடுவைப்பற்றி குறிப்புகள் கொண்ட, அம்பாரமாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஃபைல்களை மேலோட்டமாகப் பார்வையிட் டேன். அவர் கையாண்ட, கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான சாதனங்களை, மியூஸியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்தேன். பார்க்கப்பார்க்க, திரு. நாயுடு அவர்கள் தனக்குள் பல முகங்களை அடக்கிக்கொண்ட வெகு சுவாரஸ்யமான
மனிதர் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிய, அவரைச் சந்தித்துப் பழகியிராதது உண்டாக்கிய தயக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, புத்தகம் எழுதச் சம்மதித்தேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் புத்தகம் சம்பந்த மாய், மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களிலிருந்து, மூப்பு காரணமாய் வேலையிலிருந்து நின்றுவிட்ட சாதாரண சமையற்காரர் வரை பலரைப் பேட்டிகண்டு, இந்தியாவைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் தினுசில் பல ஊர்களுக்குச் சென்று, திரு. பெரியபெருமாள் உதவியுடன் ஆயிரக் கணக்கில் இருந்த கோப்புகளைப் படித்து வெவ்வேறு தலைப்புகளில் விவரங்களை அறிந்து, திரு -நாயுடு
லைப்ரரியில் இருந்த அவர் மேற்பார்வையில் பைண்ட் செய்யப்பட்ட அவரைப் பற்றின புத்தகங்களைப் படித்து, தேவையான விஷயங்களைச் சேகரித்துக்கொண்டபின், அவற்றைத் தொகுத்து எழுத உட்கார்ந்த பிறகே, முதல் முறையாய் எனக்குள் பயம் முளைவிட்டது.
பாடுபட்டு விவரங்களைச் சேகரித்துவிட்டோம், சரி… ஆனால் இவற்றை வித்தியாசமாக எப்படித் தொகுப்பது? திரு. கோபால், ‘உங்கள் புத்தகம் மற்றவற்றிலிருந்து கட்டாயம் மாறுபட்டு இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்குள்ளது’ என்றாரே, அதை நிரூபிப்பது எங்ஙனம்?
நின்று, நிதானமாய் யோசிக்கையில் ஒரே ஒரு வழி மூலம்தான் இந்தப் புத்தகத்தை வித்தியாசமாக எழுதமுடியும் என்பது விளங்க, என் கருத்தை அடுத்தமுறை திரு. கோபாலைச் சந்தித்தபோது வெளிப்படுத்த, அவர் தீவிரமாய் ஆட்சேபித்தார்.
‘என்ன? ‘அப்பா’ என்கிற தலைப்பில் நான் கூறுவதுபோலப் புத்தகத்தை எழுதப்போகிறீர்களா? முழுக்கமுழுக்க அப்பாவைப் பற்றின புத்தகமாக இது இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை; நடுவில் எனக்கு எதற்கு முக்கியத்துவம்? தயவு செய்து இந்த யோசனையைக் கைவிட்டுவிடுங்கள்.’
அவர் விரும்பிய ரீதியில் ‘அப்பா’ வரிக்கு வரி, வார்த் தைக்கு வார்த்தை திரு. ஜி. டி. நாயுடு பற்றினதாகவே இருக்கும். அவரை நான் சந்தித்திராத நிலையில் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே (Authenticity) திரு. கோபால் மூலம் கூற வைக்கும் முயற்சி-என்பதை விடாப் பிடியாகச் சொல்லி எப்படியோ திரு. கோபாலைச் சம்மதிக்க வைத்தேன்.
திரு.நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்கி வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பவழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வகையில் ஓர் அழகான, அதே சமயம் வெகுவாக உபயோகிக்கக் கூடிய மாலையாக நான் தொகுக்க முயற்சித்ததின் விளைவுதான் இந்தப் புத்தகம்.
திரு. கோபால் ஆசைப்பட்ட விதத்தில், இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகு, ‘அடடா… நமக்கு இப்படி ஒரு தந்தை அமையவில்லையே! என்றாலும் என் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தந்தையாக இருக்க நான் முயலுவேன்’ என்றோ; ‘என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என்று சோர்ந்திருந்தேன்; ‘அப்பா’ புத்தகம் அந்தச் சலிப்பை அகற்றி புது உற்சாகத்தை எனக்கு அளித்துவிட்டது’ என்றோ; ‘எவருமே குறை, நிறை உ உள்ளவர்தாம் என்பதையும் குறைகளைக் குறைத்து நிறைகளை வளர்த்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியம் என்பதையும், இந்தப் புத்தகம் உணர்த்தியது’ என்றோ, மனப்பூர்வமாக ஒருசிலரே னும் நினைத்தால், அதுவே இந்தப் புத்தகம் எழுத நான் எடுத்துக்கொண்ட சிரமங்களை நிச்சயம் அர்த்த முள்ளதாக்கும்.
‘அப்பா’ உருவாக பேட்டி கொடுத்த, உதவிய ஒவ்வொருவருக்கும் என் விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(இன்னும் வரும்)

One Comment on “சிவசங்கரி/அப்பா”

Comments are closed.