
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
ஒரு பொறியாய் மின்னல் கீற்றாய்
ஊற்றுநீராய் மனதில் கவிதை
பிறக்கவேண்டும்.
அப்படி எதுவும் தோன்றாதபோது.
மருத்துவ மனையில்லாத கிராமத்தில்
அனைத்து ஜாதிப் பெண்களுக்கும்
அக்கிரகாரத்து அச்சுகுட்டிப் பாட்டி
பிரசவம் பார்த்ததை எழுதி
ஆவணப்படுத்தலாம்.
போதாது போன
பிள்ளைகளின் உடைகளை
அனாதை இல்லங்களுக்குத்
தந்து வரலாம்.
குடியிருப்புச் சிறுவர்களுடன்
ப்ளாஸ்டிக் பந்து
கிரிக்கெட் விளையாடி மகிழலாம்.
இருபதில் இழைந்த
சினேகிதிகள் நாற்பதில்
எப்படியிருப்பார்களென்று
கற்பனை செய்யலாம்.
நட்ட கல்லும் பேசும்.
நெல்லையப்பர் சாட்சியென்று
ஒரு சர்ச்சையைத் துவங்கி வைக்கலாம்..
தங்க பிஸ்கட்டுகள் அன்பளிப்பில்
தொண்டன் மனைவி தலைவனின்
துணைவியானதை
நிருபரிடம் பற்றவைத்து நாறடிக்கலாம்
கவிதை கிடக்கிறது கழுதை!
