பிரமிள்/ஆலா

உள்வாங்கிச் சிந்திக்கத் தெரியாத கண்கள் அவை. போதாததுக்கு இப்போது அவை வெளியேறிவிடப்போகிற விபரீதநிலையில் முழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த முழிதான் விசுவலிங்கத்தின் ‘டிரேட் மார்க்’. தமிழில் சொன்னால் ‘வர்த்கதக்குறி’.

‘தமிழில் எதைத்தான் சொல்லமுடியாது? எல்லாமே தமிழில், கன்னித்தமிழில், கடல் கடந்து கொடிபறக்கும் வீரத்தமிழில். அதுவும் தமிழுக்கும் தாய்த் தமிழான இலங்கைத்தமிழில் இருந்துதானே பிறந்திருக்கின்றன? பாராளுமன்றத்திலிருந்து ‘பார்லிமெண்ட்’, இந்தியன் ‘பிரெட்’ என்பான், நாங்கள் பண்பட்ட தமிழில் ‘பாண்+ என்போம். உங்களுக்கு இரவல் ‘பெஞ்ச்’ எங்களுக்குச் சொந்தமான ‘வாங்கு’. இந்நிலையில் இலங்கைத் தமிழ் எழுத்தில் இலக்கியமா இல்லை? சி.வை.தாமோதரம் பிள்ளையிலிருந்து ஆறுமுக நாவலரி லிருந்து நான் வரை, அதாவது விபரீதக்கவிஞனான…’

அடிச்சாண்டா மச்சான் பிளாஷ் சாமராவால ஒரு போட்டோ உன்னை இந்த இடத்தில்தான்…! பாரன்…’

பார்வைக்கு விபரீதக்கவிஞர் விசுவலிங்கத்தின் போட்டோவைக் கொடுத்த ‘மச்சான்’, கண்ணுக்கு எட்டியும் தோளில் கைபோட முடியாதபடி தூரத்தில் ஒரு நீண்ட மேஜையின் முன்னால், மேஜையைச் சுற்றி வரிசையாக உட்கார்ந்திருக்கும் உருவங்களுக்கு நடுநாயகமாக வீற்றிருக்கிறான். கருப்பு, சிவப்பு, வெள்ளைகளாகக் கலந்திருந்த மற்றைய உருவங்கள் எல்லாமே அவனிடமிருந்து வந்த போட்டோவைப் பார்க்கும்படி தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவராக, அதாவது முதலில் இப்புறத்து உருவம், அடுத்து அதற்கு எதிர்புறத்து உருவம் எனக் கைமாறி, கடைசியாய் அது வந்துசேர்ந்த கை விசுவலிங்கத்துடையது.

‘விபரீதக் கவிஞனான…..’ எனும்போது விசுவலிங்கத்தின் புதர் மீசை, மேலுதட்டைக் கோணலாக்கி இழுத்து இடப்புறமாக வாய்க்குள் நுழைய முயற்சித்திருக்கிறது. தமிழ் தாண்டவமாடும் நாக்கும் நாக்கைக் காக்கும் நானாவிதமான பற்களும்கூட தெரியாமலில்லை. தலைக்குச்  சற்றே உயர எழுப்பிய அவரது முஷ்டியிலிருந்து தனித்து நிற்கிறது சேர சோழ பாண்டியர்களின் கொடிகம்பம் போன்ற ஒரு ஆள்காட்டி விரல். ஆனால் விசுவலிங்கத்தின் நாளாந்த கிச்சன் அனுபவமான அண்டாவிலிருந்து வட்டமாக எழும் நுரைக்கொதிப்பு அல்லவா நிற்கிறது அவரது வட்டமான வெள்ளை மாலுமித் தொப்பியாக. போதாததுக்கு அதில் Royal (Ceylon) Navy என்ற ஆங்கில எழுத்துக்கள் நெற்றிப் பட்டயமாய் தொப்பியின் வளைவோடு ஓடுகின்றன. வெள்ளை மாலுமிச் சட்டையின் தோற்றம் வேறு.

தலையில்

தம்முடைய கையின் விரல்கள் பிடித்திருந்த போட்டோவின் பளபளப்பில் பிரதிபலித்த வெளிச்சம் லேசாக நடுங்குவதைக் கவனித்தார் விபரீதக்கவிஞர். கண்கள் உடனே போட்டோவின் உள்  விளிம்பில் பதிந்திருந்த கட்டைவிரலின் நகத்துக்கு வந்தன. நகத்தில் அது என்ன புதிதாய் ஒரு சிறு வெள்ளைப் புள்ளி? பூவா? ஆலா போட்ட பூ.

‘ஆலா ஆலா, பூப்போடு!’

‘ஆலா ஆலா, பூப்போடு!’

காளி கோவில் சுற்று வீதி. வானில் வட்டமிடும் பருந்துக்கு இணையாகக் கைகளை விரித்து, விரல்நகங்களை மேல் நோக்கிப் பிடித்தபடி குழந்தைகள் வட்டம் போடுகின்றன. அவ்வப்போது குழந்தைகள் ஆலா பூப்போட்டிருக்கிறதா. என்று பார்ப்பதற்காக நிற்கின்றன.

‘எனக்குப் போட்டிருக்கு!’ ஏற்கனவே உடலின் ஆரோக்யக் கெடுதி எதற்கோ சமிக்ஞையாக நகத்தில் விழுந்திருக்கும் புள்ளி ஒன்றை இப்போதுதான் பார்க்கிறாள் ஒரு சிறுமி. இதன் ஆரோக்யத் தகவலை விபரீதக்கவிஞராக அவதரித்த பிறகுகூட கிரகித்திராத சிறுவன் விசுவன், ‘எனக்கும் பூப்போட்டிருக்கு ஆலா. அஞ்சு பூ. இல்லை ஆறு, ஏழு…’என்கிறான்.

‘எங்கே காட்டடா’

‘நான் காட்டமாட்டேன்.’

‘இல்லை ஒரு பூவும் போடவில்லை. விசுவனுக்கு ஒரு நாளும் ஆலா பூப்போட்டாது.’

‘போடி… பு…!’

‘அம்மா! விசுவன் தூசணம் பேசறான். கப்பல்காரனிடம் புடிச்சக் குடுங்கம்மா.”

கப்பலின் எஞ்சின் இரும்புத்திணறலாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியே கடலில் ஓய்வற்ற இரைச்சல், ‘மாலுமி!’ ஆங்கிலத்தில் ஒரு இரும்புக்குரல். ‘இந்தப் புகைப்படத்தில் இருப்பது நீர்தானே? கப்பலின் எஞ்சின் திடீரெனக் கேள்விபோடுகிறது.

போட்டோவில், கட்டைவிரல் நகத்தில் பதிந்திருந்த கண்களைத் தூக்க முயற்சிக்கிறார் விசுவலிங்கம். முடியவில்லை. நகத்தில் இருந்த  பூவைக் காணோம். போட்ட பூவை ஆலா திரும்பப் பறித்தெடுத்து விட்டது. அதுவுமில்லை. கப்பலேறிய பிறகு இதுவரை கவிஞர் ஒரு

ஆலாவையும் காணவில்லையே, பூ எங்கிருந்து வரும்?

அடேயப்பா, இந்த கண்கள் எவ்வளவு பாரம்! ஒருவிதமாக அவை தலையுடன் மேலேறுகின்றன.

கண்ணுக்கு எட்டியும் கைக்கெட்டாத தூரத்தில் கருநீலத் தோள் பட்டிகளும் இடதுநெஞ்சில் வானவில் கட்டங்களும் ஒரே ஒரு தங்கநிற மெடலும் அணிந்த வெள்ளை மாலுமிச்சட்டை. அதை அணிந்திருந்த உருவத்தின் முகத்தில் திரைத்த வெள்ளைத் தோல். நீலக்கண்கள், வெண்ணிறத் தலைமயிர். நரைத்த மயிரா, இல்லை இந்தக் கப்பல் கேப்டனுக்குப் பிறப்பிலேயே வெள்ளை மயிரா?

‘ஆனா ஆலா பூப்போடு. போட்ட பூவைப் பறிக்காதை. அதுவும் இண்டைக்கு.’

‘வாய்க்குள் முணுமுணுக்காமல் உரக்கப் பதில் சொல்,’ என்கிறது எஞ்சின்.

காப்டனின் ஆங்கில உச்சரிப்பு தமிழில் ஊறிய விசுவலிங்கதின் காதுக்குள் இருக்கும் ஜவ்விற்குப் புரியாது. எனவே கப்பலின் எஞ்சினே காப்டனுக்கு பதிலாகப் பேசுகிறது.

போது தமிழ். ஆனால் இதனை விசுவலிங்கம் ஆங்கிலத்தில் ‘நான்தான்.’ ‘நான்’ அழுத்தம் பெற்று ‘தான்’ என்று எதிரொலிக்கும் சொன்னதனால் இந்த எதிரொலி இல்லை. அவர் அன்று இருந்த ஆங்கிலப் பயிற்சியின் ஆளுமையினால் கொஞ்சம் இங்கிலிஷ் பேசுவார். இல்லாவிட்டால் இன்னும் பிரித்தானிய ஒப்பந்தத்துடன்  செயல்பட்ட ராயல் சிலோன் நேவியில் அஸிஸ்டென்ட் குக் வேலை

என்ற அற்புதம் நிகழ்ந்திராது.

இவ்வளவுக்கும் அவருக்குச் சமைக்கத் தெரியாது.  வேலை தெரிந்த ஒரு பழைய கப்பல் குக் செய்து கொடுத்த சூப் அண்டாவைத்  தன்னுடையது என்று தள்ளிச் சம்பாதித்த வேலை இது. கிச்சனிலேயே இன்னொரு அஸிஸ்டென்டும் இவரைப் போலவே சமைக்கத் தெரியாதவனுமான சிங்களக் குக்குடன் எடுத்ததுக்கெல்லாம் கைகலப்பு. திருக்கோணமலைத் துறைமுகத்தை விட்டு கப்பல் கிளம்பும் வரை.   இருவருக்கும் வேலை தெரிந்த அடக்கமான சுய கௌரவம் கொண்ட  சிநேகபூர்வமான ஆஹா ஓஹோக்கள்.    இலங்கைக் கடற்பகுதியைத் தாண்டி மாகடல் பகுதிக்குள் கப்பல் நுழைந்ததும், ‘கப்பல் எஞ்சின்’ என்று மாலுமிகளினால் நாமம் சூட்டப்பட்டிருந்த சீஃப் குக்கிற்குக் கிடைத்தது முதல் அதிர்ச்சி. ஆஹாவும் ஓஹோவும் சேர்ந்து சூப் தயாரிக்க உத்தரவிட்டிருந்தான் அவன்   சூப் தயாரிக்கும் போதே சிங்களவன் தமிழனைச் சீண்ட தமிழன் பாய்ந்தடிக்க, முகங்களில் முஷ்டிக் குத்தல் துவங்கிவிட்டது. . , குப்பை டேஸ்ட் பண்ணிய ஆங்கிலேய சீஃப் குக்கின் நாக்கில் சமுத்திர ருசி ஒரே வெட்டில் பாய்ந்தது. வாய்க்குள் விட்டதைப் ‘புளிச்’ என்று சூப் அண்டாவுக்குள்ளேயே  துப்பிய அவன் இலங்கைக் காதுக்குப் புரியக்கூடிய நறுக்கான உச்சரிப்பில் ஆஹாவும் ஒஹோவும் அந்த முழு அண்டாச் சூப்பையும் குடித்தாக வேண்டும் என்று அடுத்த உத்தரவு போட்டான்.  அண்டாவின் உள்ளடக்கம் சிங்களவன் தமிழன் இருவருடைய உள்ளடக்கமாகவும் மாறுவதற்குத் தகுதியான  காவல் வேறு.  பிறகு என்ன? ,   இரண்டு நாட்களாக இருவருக்கும் கலப்பட மில்லாத வாந்தி பேதி. இந்துமாக்கடலில் எஸ்.எஸ். மிரியம் என்ற அந்தக் கப்பலில் ஏற்பட்ட வாந்தி பேதியே விபரீதக்கவிஞர் விசுவலிங்கத்தின் அரசியல் பிரக்ஞையாகவும் பெருகிற்று என்றால் அது மிகையாகாது. சிங்கள அஸிஸ்டெண்ட் குக்கின் வாந்தி பேதி எவ்விதப் பிரக்ஞையாகப் பெருகியது என்ற தகவல் கிடைக்கவில்லை. ஏனென்றால் சிங்கப்பூரில் கப்பலுக்குத் துறைமுக அனுமதி கிடைத்த உடனேயே ஊருக்குள் போனவன், கூடச் சென்ற மற்றைய மாலுமிகளை ஏய்த்துவிட்டு ஒரு மாலுமியின் பிளாஷ் காமரா அடங்கிய பையுடன் மறைந்துவிட்டான். பையையும் அவனையும் அல்லோலகல்லோலமாகத் தேடிய மாலுமி, ஆபீஸர் லெவலில் இருந்த ஒரு வெல்ஷ் மேன். ஏற்கனவே எடுத்த ஷாட்டுகளுடன் பிலிம் ரோலுடன் காமரா போய்விட்டதில்தான் அவனுடைய வருத்தம்.

அடுத்ததாக, ஒரு சிமித்தி வளைவுகொண்ட மின்சார வித்தைகள் நிறைந்த திடல். அங்கே கேட்கிறது ஒரு இனிய தமிழ்ப் பெண்குரல். ‘தமிழிலக்கியத்துக்கு நாங்கள் இன்றும் தாயக தமிழான இந்தியத் தமிழைத்தான் எதிர்நோக்குகிறோம். மலேசியா, இலங்கை போன்ற இடங்களில் தமிழ் இலக்கிய மேதைகள் என்று குறிப்பிடும்படியாக எவரும் பிறக்கவில்லை.’

எப்போது மற்றைய மாலுமிகளைப் பிரிந்தோம் என்பது பிசகி விட்ட விசுவலிங்கத்துக்குத் திடீர் ரத்தக்கொதிப்பு. இலங்கைத் தமிழில்

இலக்கியம் இல்லையா? அதாரது? டேய், விடுங்கடா என்னை, அவளிண்டதைக் கிழிச்சுப்போட்டுத்தான் மற்ற வேலை…. கூட்டத்துக்குள் குபுகுபுவென்று புகுந்து மேடையில் பாய்ந்தார். ‘யார்? யார்? கப்பல்காரன், குடிச்சிருக்கான் ஜாக்கிரதை!’ இனிய தமிழ்ப்பெண்ணின் வாயில் முன்பற்கள் திடீரெனப் பெரிதாகின. ‘அய்யய்யோ!’ என்ற அவளது தமிழ்ப்பண்பாடு நிறைந்த அவலக்குரலில் ‘அய்’ என்பது மட்டும் சினிமாப் பாட்டுக் குரலாக ஒலிபெருக்கி நிபுணரினால் மாற்றப்பட்டு, ‘அய், அய், அய்’ என்ற ஆபாஸத் தமிழ்ப் பெண்குலத்துக் கோரஸ் ஆக ஓடத் துவங்கியது. ‘எத்தனை பேருக்கு பதில் சொல்லுவாரு.’ என்று அந்த ‘அய்’ கோரஸ் ஒரு கேள்வியையும்

‘மன்னிக்கவும், தயவுசெய்து…’

‘ஒரு சில திருத்தச்சொற்கள் சொல்லிட அனுமதி கோருகிறேன்…’

‘அரிய செயல்… செய்யுங்கோள்… செய்யுங்கோள்!’ தலைவரின் தமிழில் ஏதோ தூஷணம் கேட்டாலும், அது பிராந்திய வழக்காக இருக்கலாம்.

‘நீங்கள் தமிழ்நாடா?’ என்று தலைவரைக் கேட்கிறார்.

‘நாகர்கோவில், தென்னிந்தியா.’

உடனே வேறொருவர், கூட்டத்தை ஏற்பாடு செய்தவராகத் தம்மை நிலைநாட்டி, கப்பல்காரருக்குத் தலைவரை அறிமுகப்படுத்துகிறார், ‘தமிழ்நாட்டிலிருந்து சுழட்டி அடிக்கும் தமிழ்த்தென்றல் அய்யா அவர்கள்!’ என்று. ‘ஐயரா?’ என விசுவலிங்கம் பவ்யப்பட்டுப் போய் விசாரிக்க, மற்றவர், ‘நோ, நோ,’ என்று நோப்பட்டு நோபோட்டு ‘அய்யா’ என்றார். எம்.ஏ., பிஎச்.டி.” என்று சில மினுக் மினுக் பூச்சிகளையும் பறக்கவிட்டார். மைக்கில் நின்ற மங்கையைக் காணோம். பெண்கள் கூட்டம் அவளுக்கு ஒரு புடவைப்பட்டாளப் பாதுகாப்பைக் கொடுத்து மேடை ஓரத்தில் எழுந்தநிலையில் குவிந்து நிற்கிறது.

மைக்கை இடதுகையால் பிடித்தார் விபரீதக்கவிஞர் விசுவலிங்கம். ஒலிபெருக்கி நிபுணருக்கு ரைட் கிடைக்க, ‘அய், அய், அய்’ கோரஸ்

தமிழ்த்தென்றல் ‘அய்யா’வாக விசுவலிங்கத்தின அவையடக்கத்தில் பண்பட்டது. தமது புண்பட்ட நெஞ்சைத் தொட்டு இலங்கைத்தமிழ்ப்  பண்பாட்டைப் பற்றிப் பேசி தம்பாட்டுக்கு ஒரு மூச்சு அறுவை செய்தார் விபரீதக்கவிஞர் விசுவலிங்கம். ‘ஆறுமுக நாவலர் இன்றேல் கூறு தமிழ் உண்டோ?’ என்றார். தொடர்ந்தார். தமது இலக்கியப் பிரவேசம் எவ்வாறு நடந்தது என்று கூறவேண்டுமென்றோ?

முதன் முதலாக, தமிழகத்திலிருந்து இலங்கையரின் கழிவுகளை அகற்றவந்த கீழ்க்குலத்துப் பெண்கள் கள்ளுக் குடிப்பதை எதிர்த்துக் கிளர்ச்சிக் கவிதை எழுதினார். விசுவலிங்கம். ‘உங்கவூட்டு கக்கூஸ் நாத்தத்தை மறக்கத்தாண்டா நாங்க கள்ளுக்குடிக்கிறோம்,’ என்றனர் அந்த ஏந்திழையர். கள்ளுக்கடை வாசலில் விசுவலிங்கத்துக்கும் அந்தக் காரிகைகளுக்குமிடையே கைகலக்காத குறை. தூஷணமாய் தூள் பறத்தினாளுகள் அவளுகள். ‘உங்க வூட்டுப் பொச்சிலே போயி செண்ட் பூசி கக்கூசுக்கு இருடா!’ என்றாளுகள். இந்த உள்விபரம் எதுவும் அவரது பேச்சில் வராவிட்டாலும் பொத்தாம் பொதுவாகத் தமது போராட்டத்தை எரியும் நெருப்பென எழுப்பிக்காட்டினர். இதற்கெல்லாம் ஏமாந்துவிடாமல் மேடையருகே குவிந்திருந்த புடவைப் பட்டாளம் உள்ளுணர்வு நாறியதினாலோ ஏதோ மூக்குகளைப் பொத்திக்கொண்டது. அதுகள் மூக்குகளைப் பொத்தவும் கவிஞர் தமது விபரீத இலக்கியச்சிறப்பினைப் பற்றி பேசத்துவங்கவும் காமரா பிளாஷ் அடிக்கவும் சரியாக இருந்தது. அதற்குமேல் அதிகம் வேண்டாம், போதும் – போட்டோ எடுத்தவனைப் பிடிப்போம், ஒரு 4 காப்பி எடுத்து வீட்டிலும் இலங்கை தமிழ்நாட்டிலும் காட்டுவோம் என்று கூட்டத்துக்குள் பாய்ந்தார். அஸிஸ்டென்ட் குக் சிங்களவன் காமிராவைத் தூக்கிக் காட்டிவிட்டு கூட்டத்துக்குள் மறைந்தது போன்ற தோற்றம். அவனைத் தேடி கூட்டத்துக்குள் அலைந்து கொண்டிருந்த அவரது காதில், மைக்கைத் திரும்பப்பெற்ற மங்கையின் பேச்சு விழவில்லை. ‘பார்லே’ என்ற பிரெஞ்சு வார்த்தை பேசுதலைக் குறிக்கும் என்றும் அதிலிருந்தே   பார்லிமெண்ட் என்ற பதம் பிறந்தது  என்றும் ஆரம்பித்த அவள், இலங்கைத் தமிழில் பெஞ்சிற்குப் பதிலாக உள்ள ‘வாங்கு’ கூட பிரெஞ்ச்சின் ‘பாங்க்’கில் இருந்து இரவல் ‘வாங்கப்பட்டது’தான் என்று ஒரு அழுத்து அழுத்தினாள். கப்பல்காரத்  தொப்பியும் இதற்குள் கூட்டத்துக்குள் கரைந்துவிட, இவ்விடத்தில்  தமிழ்த் தென்றல் அய்யா தலைமைப்பீடத்திலிருந்து எகிறி எகிறி எழுப்புவதும் உட்காருவதுமாக அவஸ்தைப்பட்டார் ‘இலங்கைத் தமிழில் பிரெட்டுக்குப் பதிலாக உள்ள ‘பாண்’ பிரெஞ்சிலுள்ள ‘பாண் என்று காரிகையாள் தொடர்ந்தபோது தென்றல் திடீரெனக் கைகளைச்

சுழட்டியடித்தபடி எழுந்து, ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண்!’ என்று கத்தினார். மைக்கில் நின்ற தமிழணங்கிடமிருந்து மீண்டும் ‘அய்யய்யோ!’ வெறொன்றுமில்லை. சுழட்டியடித்த தென்றலின் கையில் சுந்தரியின் தாவணி எப்படியோ அகப்பட்டு, ஒரு கணம் அந்தரத்தே தாவி அன்னவளின் பந்தரங்களைக் காட்டிவிட்டது. நல்லவேளை முகலாயர்கள் கொண்டுவந்த டெய்லரிங்கின் விளைவான ரவிக்கை மட்டும் இருந்திராவிட்டால் துகிலுரி படலமாய்ப் போயிருக்கும். குறுக்கே விழுந்த இயக்குநர், ‘உணர்ச்சிவசப்படாதீர்கள் அய்யா, பிராமணரன்றோ நீவிர்!’ என்றார். இவ்வயமயத்திற்றான் தமிழ்தென்றல் அய்யா உண்மையிலேயே ஒரு அய்யர் என்ற நுண்மான் நுழைபுலம் சிங்கப்பூரரான தமிழனத்திற்கே தெரிந்தது. அதில் கிளு கிளுப்படைந்து, தாவணியை டபுள் சுத்துச் சுத்தினாலும் ஒரு ‘களுக்’ ஒலியைச் சிந்தினாள் மைக்கில் நின்ற சுந்தரியாள். சம்பந்தாசம்பந்தம் இல்லாமல், ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்,’ என்று இயக்குநரைப் பார்த்துப் பகர்ந்தார் தமிழ்த் தென்றல் அய்யா. பாண், காண் – பந்தரம், அதைக் கண்டவர், விண்டவர் எல்லாமாகச் சேர்ந்து அல்லோலகல்லோலப்படவே கரகோஷம் வானைப் பிளந்தது.

ஆனால் அஸிஸ்டெண்ட் குக் சிங்களவனையும் காணோம். காமிராவையும் காணோம், தொலைந்தது போட்டோ!

இப்போது, கப்பல் புறப்பட்ட பிறகு சிங்கப்பூரிலிருந்து வட கிழக்காகத் தென்சீனக் கடலுக்குத் திருப்பி மணிலாவை நோக்கி ஓடும்போது. இறைச்சித் துண்டம் போடும் வேலையில் இருந்து காப்டனின் கான்பரன்ஸ் ரூமிற்கு அழைக்கப்பட்டார் விசுவலிங்கம், அங்கே இந்த போட்டோ! முதலில், ‘ஆஹா. என்னை வெளிநாட்டார் வணங்கக் கூப்பிட்டிருக்கிறார்கள். வாழ்க தமிழ்!’ என்றுதான் நினைத்தார் விசுவலிங்கத்தார். ஆனால் அந்தக் காப்டனின் கான்பரன்ஸ் ரூமில். அதிகாரத்தின் பொறுப்பிலிருந்து பிறந்து மௌனமாகவே அவரை அச்சுறுத்தியது ஒரு கடுமை.

‘நான்தான்.’

‘போட்டோவில் நீர் அணிந்திருப்பது ஒரு நேவியின் யூனிபாரம். சரிதானே?”

‘சரி,’

“இந்த யூனிபாரத்தை அணிந்திருக்கும்போது உமது கடமை என்ன?’ சற்றே தயங்கினார் விபரீதக்கவிஞர். வேலைப்பொறுப்பை ஏற்கும் போது கொடுத்த கட்டுப்பாட்டு வாக்குறுதி நினைவுக்கு வந்தது, ‘ராயல்

 சிலோன் நேவியின் விதிகளுக்கு கட்டுப்பட்டு…’ என நிறுத்தினார்.

“போதும். நீர் கரையேறும்படி அனுமதிக்கப்பட்டது உமது பொழுது போக்கிற்காக மட்டும்தான்.ஒரு கூட்டத்தில் உம்பாட்டுக்குக்  கலந்துகொண்டு பேசுவது கோர்ட் மார்ஷலுக்குரிய குற்றம். அதுவும்

யூனிபாரத்துடன். “

“அது பொழுதுபோக்குத்தான்!’ வாயுளறியது.

‘கூட்டம் போட்டு பேசுவது.’

‘நான்சென்ஸ்!’ நேரடியாக உறுமினான் காப்டன். ‘ஒரு கூட்டம் என்பது மிகமிகத் தீவிரமான விஷயம். மனித மனத்தின் போக்குகளை நிர்ணயிக்கும் விஷயம். அதுவா பொழுதுபோக்கு?’

‘தமிழனுக்கு அதுகூட பொழுதுபோக்குத்தான்.’ இதை விடக் கூடாது. தெரியாமல் செய்த குற்றம் என்று உயிரோடு விட்டுவிடுவான். காளியாச்சி, காப்பாத்தம்மா!

கான்பரன்ஸில் உட்கார்ந்திருந்த ஆபீஸர்களிடையே லேசான சலசலப்பு. காப்டனுக்கு அருகே இருந்த ஒரு உருவம் அவனிடம் ஏதோ சொல்கிறது.

காப்டன், ‘இந்த மூடன் என் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ளவன். கூட்டத்தில் பேசுவதானால் என் கப்பலின் யூனிபாரம் இவனுக்கு ஏன்? இவனுடைய சொற்பொழிவுக்கும் என் கப்பலுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கத்தாத குறையாக உறுமினான்.

‘ஆலா, ஆலா, பூப்போடு!

ஆலா, ஆலா, பூப்போடு!’

விபரீதக்கவிஞர் விசுவலிங்கம் வாய்க்குள் அரற்ற ஆரம்பித்தார்.

 ‘உரத்துப் பேசு, ஆனால் சொல்வதை நிதானமாக யோசித்துச் சொல். அந்தக் கூட்டம் எப்படிப்பட்டது? அங்கே நீ பேசிய விஷயம் என்ன?’ ‘அது ஒரு இலக்கியக் கூட்டம். இலங்கைத்தமிழில் இலக்கியமே இல்லை என்றார்கள். எனக்கு ரத்தம் கொதித்தது. அனுமதி பெற்று பதில் சொன்னேன். என்னை… என்னைச் சுட்டுப்போடாதீர்கள். எனக்கு ரத்தம் கொதித்தால் கண்மண் தெரியாது. ஆலா, ஆலா… வருந்துகிறேன். மன்னிப்பு… மன்னிப்பு! கிறிஸ்துவர்களான நீங்கள் மன்னிப்பு அறிந்தவர்கள். உங்கள் பண்பாடு மன்னிப்பு, எங்கள் பண்பாடு… எங்கள் பண்பாடு… பொழுதுபோக்கு.’

எங்கோ யாரோ ‘களுக்’ என்று சிரித்தார்கள். மைக்கில் நின்ற மங்கையின் ‘களுக்’ ஒலி இதில் பிரதிபலித்தது. காப்டன் வந்த

புன்னகையை, ‘டிஸ்மிஸ்!’ என்ற வார்த்தையால் மழுப்பியபடி எழுந்து திரும்பினான்.

விபரீதக்கவிஞர் விசுவலிங்கத்தின் பதில் மடல்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாய் இருக்கலாம். கொஞ்சம் முன்பின்னாய் இருக்கலாம். திரைகடலோடியும் திரவியம் தேட கப்பலில் ‘குக்’ ஆனேன். பெருவிரல் நகத்தில் ஆலா பூப்போட்டது. அது அன்று மறைந்தாலும் மறையாமல் இன்றும் எங்கள் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் தொங்குகிறது. சிங்களக் காடையன் ரணதுங்கே டி தலைவனாய் தலையாய தலையாய் தமிழ்வீர விரல்காட்டி, வெண் தொப்பியைத் தோலுரித்து செந்தொப்பியாக்கி, விறைத்து.

சில்வா எடுத்து ரகசியமாய் கப்பலுக்கு அனுப்பிவைத்த புகைப்படம்.

இந்த மடலினை நாகர்கோவில் தமிழ்த் தென்றல் அய்யா அவர்களுக்கே அனுப்புகிறேன். அவர் இருந்தவிடத்தில் இருந்தபடியே எங்களுக்காய் கையொப்பங்களை வேட்டையாடியது என் புரட்சி பிரவேசப் புகழ்ச் சூடு தாங்கா முடியாமல். எங்கள் கட்சிக்கணக்கில் புரளும் கோடிக்கணக்கின் பளபளப்பு ரகசியம் கூட ஒரு இது அவருக்கு. அவர் கணக்கு வழக்கே கருத்தான இலைமறைகாய்ச் சிந்தனைச் செல்வர். உய்த்துணர்க. இன்று அவர், பிறந்த புதுயுகத்தின் ரத்தக்களரியில் கால்தோய்த்துச் சுவடுபதித்து தமிழ் தமிழென அரற்றும் அறிவுசீவியாகிவிட்டார். அன்று தமிழ்த்தென்றல் இன்று தமிழ்ப்புயல். பள்ளி நண்பர் தம்பி பிரமிள், தலைமகனுக்கு வீர காவியம் படைத்திருக்கிறார். அடுக்கடுக்காய் தமிழ்க்கண்டேன். கொண்டேன். எனினும், ‘ஆலா’ என்பதனை விடுத்து ‘அடேய் சிங்களா, என் காலருகே வாடா, சற்றே உன்னைச் சுடுகிறேன்,’ என்ற என் கவிதை வரியே தலைப்பாக்கப்படுவது நலமென நலம்கருதி ஆணையிடுகிறேன். செந்தமிழ்ச் சிவப்பு வணக்கம்.

விபரீதக்கவிஞர் விசுவலிங்கம்.

‘ஆலா’வின் ஆசிரியர் எழுதும் பதில்

உயர்திரு வி.வி. அவர்களைப் பள்ளிக்காலத்தில் நான் அறிவேன். ஆசிரியர்களே அஞ்சும் உயர்தரு தோற்றம். பள்ளி நாடகம் ஒன்றில் அவரும் நானும் இப்போது இலங்கைச் கலவர நிலையில் சுடுபட்டு இறந்துவிட்ட கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து நடித்திருக்கிறோம்.

கோபாலும் நானும் காட்டுவழியில் போகும்போது எதிரே வருகிறார் போல் கீழே விழுந்து விடுகிறான். கரடி அவன் முகத்தில் மோந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை. வி.வி. கரடியாக நான் மரத்தில் ஏறிவிடுகிறேன். கோபால் மயக்கம் கரடி, வி.வி.யாக இருந்ததுதான் காரணம். நான் ஒரு வீரத்தமிழ்க்கரடி என்று கூச்சலிட்டபடி கோபாலைப் பிடித்து மொத்து மொத்து என மொத்தத் துவங்கிவிட்டார். கரடியைக் கட்டுப்படுத்த நான்கு ஆசிரியர்கள் வேண்டியதாய்ப் போயிற்று.

பள்ளிக்காலத்துக்குப் பிறகு தமிழப் பகுதியில் அட்டகாசக் கூட்டங்கள் போடுவார். துறைமுகத்தில் ஒரு நாள் வி.வி.யின் இன்னொரு வீரத்தமிழ்ச் செயலையும் கண்டிருக்கிறேன். ஒரு சிறிய மெலிந்த சிங்களவன் இழுத்த சிறிய வலையைச் சுற்றிச் சிறிய வட்டம். வலையில் சுமார் பத்து சிறுமீன்கள். அவற்றுள் ஒன்று மட்டும் பெரியது. விரல் நுனியிலிருந்து தோள் வரை நீளம். உண்மையில் அந்த மீன்தான் வலையைப் பிரித்து அந்த வலைகாரனுக்கு அன்று காட்ச். உள்ளிருந்தவற்றை வெளியே சரித்தான் சிங்கள வலைகாரன். அப்போது எங்கோ இருந்து மோப்பம் பிடித்துவந்த தோரணையில் தெருவைத் தாண்டிக் கூட் டத்தை விலத்தி ஒரே வீச்சில் பெரிய மீனை எடுத்துக் கொண்டு, திரும்பி அனாயாசமாக நடந்துசென்றது ஒரு பெரிய உருவம். ‘மாத்தயா!’ என்று அந்த உருவத்தை நோக்கி கைகளை நீட்டிய வலைகாரனின் முகம் கலவரத்திலிருந்து சொடுங்கி ஆற்றாமைக்கு மாறித் தலைகுனிந்தது. ‘கரடி!’ என்றபடி தென்னைமரங்கள் அடர்ந்த தோட்டம் ஒன்றனுள் மறைந்த உருவத்தைப் பார்த்தேன்.

வி.வி.க்கு தமிழ் என்றால் அட்டகாசம். அட்டகாசம் என்றால் தமிழ். இடையில், இவ்விடத்தில் தமிழ் என்றதும், நாகர்கோவிலின் தென்றல் அடிக்கிறது புயலாய். கம்யூனிஸ ஆரம்பங்கள், கூடவே பிராமணீயத் தமிழ்க் கிண்டல்கள், பின்பு தமிழ்த்தென்றல். இன்று புயல். இவரது இலைமறை காய்த்தனங்களை உய்த்துணர்ந்து உவகையுறுகிறார் வி.வி. இவரைப் போலவே தமிழ்மொழியின் பேராழங்களைக் காட்டும் ஆன்மீகச்செல்வங்களை வி.வி. அறியார். ஆனால் தமிழை எடுத்துக் கழட்டி அடிப்பார். இருந்தும் விஷயம் இப்படி எகிறும் என்பதை நான் எதிர்பார்த்ததே இல்லை சத்தியமாய். சுப்ரமணிய பாரதியின் காலனுக்கு உரைத்தல் கவிதையை வி.வி. தமது Magnam, Exploser, A.K.47 போன்ற துப்பாக்கிகளுக்கு ரவையாக்குவார் என்பது என் பயங்கரக் கனவில்கூட எட்டியிராத விஷயம். அவர் குறிப்பிடும் கவிதை வரிக்கு, பாரதியின் கவிதை வரி இது. ‘அட காலா, என் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்.’ இது ஆன்மார்த்தத்தின் குரல். ‘வேலாயுத

 விருதினை மனதிற் பதிக்கிறேன்,’ என்றும் ‘ஆதிமூலா,’ என்றும் தொடர்கிற பாரதியின் வரிகளைக் கவனிக்க. இந்தத் தமிழ் எந்த

வெளிநாட்டு வெள்ளையும் இல்லை சிவப்பும் இல்லை. அது சரி வி.வி.யின் தலைமையில் எது காப்பாற்றப்படுகிறது? நான் மேலே அல்லது சரீரநியதிகளை மட்டுமே காரண காரியங்களாகக் கொள்கிற குறிப்பிடும் பேராழங்களை அநுசரிக்கும் தமிழ் மனோபாவங்களை

வெளித்தோல் வெள்ளை சிவப்புகளா?

பிரமிள்

வி.வி. அனுப்பிய பதில் தந்தி

ஈழத்தமிழர் அடிபட உதைபட, வெட்டுண்டு எரிபட, எரிபடினும் அரிமாவென அரிவாள் கத்தி எடுத்தோம். கடத்தலுக்குக் கடத்தலாய் கடல் வழியா கிடைக்கிறது புதுரகத் துவக்கு. மேலும் தமிழர் செத்தொழியப் புத்துயிர் பெற்றுப் பெருகிடுவோம். ஆயுதமேந்தி எங்கள் அணிதனில் சேர்ந்திடில் மட்டுமே சாவினில் இருந்ததொரு சன்மானம் கிடைக்குமென்பேன். அது வாழ்வா சாவா என்றால் எங்கிருந்து வந்து எங்கே பாயுது துப்பாக்கிச்சூடு என்பதைப் பார்த்துப் பதில் காண வேண்டும். செந்தமிழ்ச் சிவப்பு வணக்கம்.

– விபரீதக்கவிஞர் விசுவலிங்கம்

பிரமிளுக்கு அவரது நண்பர் டாக்டர் அப்துஸ் சலாம் எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து…

இலங்கை அரசின் தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிவந்த செய்திகள் முரண்பாடானவை. பத்திரிகையில் ஒன்று டி.வி. ரேடியோவில் வேறொன்று. டி.வி.யிலும் ரேடியோவிலும் : ‘துப்பறிவுத் துறை தந்த தகவல் மூலம் இலங்கை ராணுவத்தின் சிங்ஹௗ ரெஜிமென்ட், கேப்டன் ஹரீஸ்சந்ர பஞ்சசீஹாவின் தலைமையில் துறைமுகத்தருகே நிலவறையில் ஒளிந்திருந்த தமிழ்ப்போராளிகளின் குழு ஒன்றைத் தாக்கிக் கடுமையான துப்பாக்கிச் சண்டையின் பின் எல்லாப் போராளிகளையும் கொன்றிருக்கிறது.’ சரியான அரிச்சந்திர புராணம். இந்தப் புராணத்தைவிட பத்திரிகைச் செய்தி உண்மைக்குச் சமீபமாக வந்திருக்கிறது : ‘துறைமுகத்தருகே எவரும் அறியாதபடி ஒரு தென்னந் தோட்டத்துக்குள் இருந்த நிலவறையினுள் ஏற்பட்ட வெடி விபத்தில்

ஒரு தமிழ்ப்போராளிக் குழு கொல்லப்பட்டிருக்கிறது. இது விபரீதக் கவிஞர் விகவளிங்கத்தின் குழு என்று சந்தேகிக்கப்படுகிறது.’ நிலவரை வெடிவிபரங்கள் உள்ளூர்வாசிகளுக்குத் தெரியும். ஏறத்த்தாழ உண்மை நிலை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னிடம் விபரீதக்கவிஞர் பற்றிச் சொன்ன ஒரு விபரத்தை முன் வைத்து நான் எனது சில சிங்களர் நோயாளிகளைத் தந்திரமாக  விசாரித்து, ‘ஏறத்தாழ’வுக்கும் அப்பால் அடி ஆழத்துக்குப் போய் னிட்டேன். இந்த விஷயத் தின் முழு உண்மையும் இப்போது எனக்குத் தெரிந்துள்ளது. இதற்கு நீங்கள் தந்த விபரம் உதவியிருப்பதால் உங்களுடன் நான் அறிந்ததைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வெடி ஒரு திட்டமிட்ட ‘விபத்து’. இது நடந்த பிறகு தான் ராணுவத்தினருக்கு நிலவறை இருப்பதே தெரிய வந்திருக்கிறது. பிணங்களை ஸ்தலத்திலேயே பரிசோதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவக் குழுவில் நான் ஒருவன். பார்த்த மாத்திரத்திலேயே பயங்கர ஆகிருதி கொண்ட விபரீதக்கவிஞரின் தலையற்ற பேருடலை நான் இன்னாருடையது என்று அறிந்துவிட்டேன். அவரோடு பதின்மூவரின் பிணங்கள் அந்த ஒடுங்கிய நிலவறைப்பகுதியில் கிடந்தன. அது நிலவறையின் சமையல்கட்டுப் பகுதி. போராளிகள் சமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இறந்துகிடந்த பதின்மூவரைத் தவிர மற்றைய பகுதிகளில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தோன்றுகிறது.

மருத்துவப் பரிசோதனைகளின் விளைவாக, மனித மாம்சத் துணுக்குகளோடு ஒரு பெரிய மீனின் முள், தசை முதலிய துணுக்குகளும் சிதறிக் கலந்திருந்தமை தெரியவந்திருக்கிறது. வெடியை ஏற்படுத்தியது ஒரு கிரேனைட்,

நீங்கள் எனக்குத் தந்த பழைய தகவலின்படி, துறைமுகத்தருகே வலைவீசும் சிங்களவர் எவராயினும் அவர் விபரீதனாருக்குக் கப்பம் கட்ட வேண்டும். மிக ரகசியமான ஒரு போராளிக் குழுவின் தலைவனாகிய பிறகு கூட இதை விபரீதனார் தொடர்ந்து கடை பிடித்திருக்கிறார். ஒருவித்தில் பார்த்தால் இது அவர் இன்னார் என்று காட்டாத ஒரு மாறுவேஷமாகப் பயன்பட்டிருக்கிறது. பகிரங்கமாக மீனை கப்பம் வாங்கிக்கொண்டு போகிற ஒரு அடாவடிக்காரன், ரகளியமான போராளிக்குழுவின் தலைவன் என்று எவரும் நினைக்க அன்றாட நிகழ்வாக்கிய சூழல், விபரீதனாரை போராளியாக முடியாது. ஆனால் காட்டுமிராண்டித்தனமான விதத்தில் ரத்தகளரியை அல்லாமல் அடாவடிக்காரனாகவே சந்தித்திருக்கிறது, அதாவது, போராளியான விபரீதனாரை அல்ல, அடாவடிக்காரனான விபரீதனாரைத் தான் ஒருவன் குறிவைத்தான். இவன் யார் என்பதை

எனது சிங்கள நோயாளிகள் மூலம் தெரிந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தில் வலைவீசி வந்தவன். நீங்கள் கண்ட பண்டா என்ற சிங்களவன். அவன் வயோதிபமான பிறகு அதே இடம் அவனுடைய மருமகனான அபய சிங்ஹ என்பவனுக்கு உரியதாகி இருக்கிறது. தொடர்ந்து அபய சிங்ஹ விடம்தான் விபரீதனார் கப்பம் வாங்கி வந்திருக்கிறார். ஏற்கனவே மாமனார் மூலம் கப்பத்தைப் பற்றி அறிந்திருந்த அபய சிங்ஹ, விபரீதனாரை சிநேகம் பிடித்து ஓரளவு பழகி இருக்கிறான். வாங்கிய மீனைத் தாமே சுத்தம் பண்ணிச் சமைப்பதில் விபரீதனாருக்கு உள்ள சுவாரஸ்யத்தை அபயசிங்ஹ இதன் மூலம் அறிந்துவைத்திருக்கிறான். வெடி விபத்துக்குப் பிறகு இவன் தலைமறைவாகிவிட்டான்.

வெடியை ஏற்படுத்திய கிரேனைட் ஒரு பெரிய மீனுக்குள்ளேயே இயங்கியிருக்கிறது. மீனைச் சுத்திகரிக்கும் போதோ அதை அறுக்கும் போதோ, கிரேனைட்டின் பாதுகாப்பு ஊசி பிடுங்கப்பட்டிருக்கலாம். இது எவ்விதம் நடந்தது என்பதற்குத் தடயம் இல்லை. ஊசி பிடுங்கப் பட்டதும் மீன் அதிபயங்கரமாக வெடித்திருக்கிறது. இதற்கான வெடி விளைவுத் தடயங்களுடன் ஆகாயத்தில் மிதக்கும் ஆலாவாக உள்ளே கூரைப் படலத்தில் ஒட்டியிருந்தது மீனின் வால்…

அன்புடன்,

அப்துஸ் ஸலாம்.

மீறல் (பிரேமிள் சிறப்பிதழ்), அக்டோபர் 1993.

One Comment on “பிரமிள்/ஆலா”

Comments are closed.