ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 16

“விருட்சம் பரிசு பெற்ற கதைகள் 2024”

மாதா மாதம் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளிலிருந்து, ஒரு கதையைத் தேர்வு செய்து, (ஒரு வருடத்தில் 12 கதைகள்) அதனை ஒரு தொகுப்பாகக் கொண்டு வருவதை விருட்சம் ஆசிரியர் அழகியசிங்கர் செய்து வந்தார். கடந்த சில வருடங்களாக நின்றுபோயிருந்த அந்தப் பணி, 2024 ஆம் வருடம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

இந்தத் தொகுப்பில் உள்ள 12 கதைகளை எழுதியவர்கள், வாஸந்தி(பாம்பு), ஷான் கருப்பசாமி(கண்ணாட்டி), த.அரவிந்தன்(திமிங்கல இதயம்), சமயவேல்(மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேல் ஒரு அறை), சாரோன்(புத்தர் கேட்ட தாலாட்டு), வளவ துரையன்(நீரின்றி அமையாது), பூபதி பெரியசாமி(நாலு இட்லி நாற்பதாயிரம் ரூபாய்), ஸிந்துஜா(பிரிக்க இயலாத துருவங்கள்), கலாப்ரியா(மோட்ச தீபம்), வண்ணதாசன்(குத்துக்கல்), ஜெ.பாஸ்கரன்(வானில் ஒரு வைரம்), அழகியசிங்கர்(இனிமேல் வேண்டாம்).

“பெரும்பாலான கதைகள் சிறுபத்திரிகைகளிலிருந்தும், அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதியவையும் சேர்ந்த கலவைதான் இந்தத் தொகுப்பு” என்கிறார் சிங்கர் தன் முன்னுரையில்!

காலச்சுவடு இதழில் வெளியான ‘பாம்பு’, காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவன், மனநோயினால் பீடிக்கப்பட்டு, மனைவியைக் கொடுமைப் படுத்தும் கதை. வீட்டிற்குள் வந்துவிடும் பெரிய பாம்பினைப் பாட்டி ஒரு குச்சியினால் வெளியேற்றிவிடுவதைக் கூறி, கதையைத் தொடங்குகிறார் வாஸந்தி. மனம், உடல் ரீதியாக அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் (‘நிறைய விட்டுக்கொடுத்தாச்சு… நிறைய பொறுமை காத்தாச்சு…முடியல்லே, என்னாலே…’) மனமறிந்து ஒரு திருவிழாக் கூட்டத்தில் அவரைத் தொலைத்துவிடுகிறார். தன் பிள்ளையும் அப்பாவைப்போலவே, அம்மாவின் – பெண்களின் – துயர்களை உணராதவனாக இருப்பது வாஸந்தியின் ‘டச்’!

உயிர்மையில் வெளியான ‘கண்ணாட்டி’ ஒரு சாலை விபத்தில் முன்பின் தெரியாத ஒரு பாட்டிக்கும், பள்ளிக்கூட டீச்சர் ஒருவருக்கும் உண்டாகும் அன்புப் பிணைப்பைப் பற்றியும், அதற்குக் காரணமான உடைந்த மூக்குக்கண்ணாடியைப் பற்றியும் பேசுகிறது. “ராதிகாவிற்குக் கோபம் வருகிறதென்றால், அதற்கொரு காரணம் இருக்கும். ஆனால் அன்பு செலுத்த காரணம் ஒன்றும் தேவை இல்லை” – டீச்சரைப் பற்றிய இந்த வரியினைக் கதையின் ஆதார சுருதியாகக் கொள்ளலாம். பணம், வசதி எல்லாம் இருந்தாலும், வெளிநாட்டில் இருக்கும் இரண்டு பிள்ளைகளின் அன்பு இல்லாமல் இருக்கிறது பாட்டி; ஆனாலும்
பாட்டிக்குக் குழந்தைகள் மீது வருத்தமோ, கோபமோ கிடையாது! கொங்கு வட்டார மொழியில் ஷான் கருப்பசாமி கதை சொல்கிறார்.

பறைவகள், திமிங்கல இதயம், திமிங்கலம் வயிற்றில் குட்டி, அனைத்தையும் இணைக்கும் மனிதநேயம் என வித்தியாசமான களத்தில் சொல்லப்படுகிற கதை “திமிங்கல் இதயம்” – மனிதர்களைப் பற்றிப் பறவைகள் பேசிக்கொள்கின்றன!

நகரில் கலவரம் – மாணவர்கள் விடுதியில் தங்கி விடும் ஒரு மாணவரின் மனோநிலையைப் படம் பிடிக்கிறது சமயவேலின் ‘மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேல் ஒரு அறை’ – இயற்கை குறித்த விவரணைகள் நிறைந்த கதை.

மொரீஷியஸ், ஆஸ்திரேலியா என வெளி நாடுகளின் சூழலில் ஒரு வழக்கமான காதல், விவாகரத்துக் கதை – வித்தியாசமாக, கணவன், குழந்தையை சட்டரீதியாகக் கவர்ந்து செல்கிறான். கொடுமை செய்யும் கணவன், வருந்தி வாடும் மனைவி! கிட்டார் செய்ய மரத்தை ஒயினில் பதப்படுத்துவது, கிட்டார் மனைவியுடன் இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது போன்ற சேர்க்கைகளும் உண்டு!

நீரின் இன்றியமையாமையை, வரண்ட கிராமத்துப் பின்னணியில் சொல்வது ‘நீரின்றி அமையாது’.

‘பசி’ என்னும் வியாதியைக் கண்டுபிடிக்க இன்றைய மருத்துவர்களால் ஆகும் செலவு நாற்பதாயிரம் ரூபாய் – இன்றைய மருத்துவ சேவையைப் பகடி செய்கிறார் பூபதி பெரியசாமி!

இன்றைய அவசர உலகில், வித்தியாசமான 12 கதைகளைத் தொகுத்திருக்கும் அழகியசிங்கர் பாராட்டுக்குரியவர் – இது அவருடைய தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது!

வாசிக்கலாம்.