
செங்கமலத்தின் கழுத்தில் இருந்த தாலியில் யாரோ ஊர் பேர் தெரியாதவரின் ஆசி படிந்த சரடுமட்டும் அல்ல, ஊரார் உறவினரின் சாபமும்கூட கோக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது மாங்கல்யமல்ல. ஏனெனில் அதைக் கட்டியவன் ‘அடிமட்டம்’ என்றார்கள் கருடனூர்க்காரர்கள்.
‘அவன் பாட்டனைக் கண்டாலே குளிச்ச பரம்பரை நாங்க,’ என்றார் செங்கலமத்தின் அப்பா. நான் பதில் சொல்லவில்லை. மாப்பிள்ளை வரதப்பனைப் பார்த்தேன். அவனுக்கு மாடர்னாய் அசடாய் எப்போதும் சிரித்த முகமல்ல – ஆழ்ந்த சிந்தனை பொருந்திய முகம்.
ரொம்பச் சூட்டிகையான செங்கலமும அவனும் ஏட்டிக்குப் போட்டியாக ஒரே கிளாஸில் படித்த வினை இப்படி வந்து முடிந்திருக்கிறது ஊர்மாறிப்போன வரதப்பன் இப்போது போஸ்ட் மாஸ்டராகித் திரும்பி இருந்தான். அவனோடு போட்டி நின்றதும் செங்கமலம் படிப்பது நின்றுவிட்டதாம்.
தம்பதிகளை ஊராரின் அடி உதை ஏதும் எட்டிவிடாமல்தான் என்னால் பாதுகாக்க முடியும். அபிப்பிராயங்களைத் தடுக்கக் காக்கிச் சட்டை வேலி உதவாது. போலீஸ் டிபார்ட்மெண்டின் கடமைக்கும் எல்லை உண்டு. கருடனூருக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டராக நான் மாற்றலாகியதே ஒரு சின்ன பனிஷ்மெண்ட். பணியப்படக் கூடாதவர்களுக்குப் பணியாவிட்டால் வேறு என்ன கிடைக்கும்?
நாளாந்தம் காலையும் மாலையும் கருடனூரில் ஆளும் கட்சி ஆளாத கட்சி இரண்டும், எதிரும் புதிருமாகப் போட்டிருந்த மன்றங்களில் இருந்து ஒரே சமயத்தில் இரண்டு வேறுவேறு இசைத்தட்டு ஒலிகள். நான் போலீஸ்காரன். எனக்கு வர்ணணை வராது. ஆனால் என் வேலை அந்த இரண்டு மன்றங்களின் ஏரியாவுக்கு எப்போதாவது அழைத்து விட்டால், காதுகள் அழ ஆரம்பித்துவிடும்.
அன்று ஏதோ ரகளை என்று மலை 5.15-க்கு கான்ஸ்டபிள் கேசவனுடன் சைக்கிளில் போனபோது, இரண்டு கட்சி ஒலி பெருக்கிகளுமே ஒலிக்கவில்லை. ஆனால் தெருவில் சுமார் இருபது பேர். இருவராகவும் மூவராகவும் நால்வராகவும் கட்டிப் பிடித்துக் கொண்டு, கீழே விழாமல் நிற்கப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார்கள். கால்களால் புழுதியைக் கிளப்பியபடி நெம்பித்தள்ளுகிற நெஞ்சுத் தழுவல். கூடவே ‘டாய்! டோய்!’ மற்றும் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு அத்துபடியான சொற்கள். அதாவது அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது.
சண்டையைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் இரண்டே பேர் தான். அவர்கள் செங்கமலமும் வரதப்பனும். இருவர் கைகளிலும் மாலைகள். இருவருக்குமிடையே எத்தனை ஜாதிப்படிகள் தூரம் என்று எனக்குத் தெரியும். எனவே, ‘சார்! இதென்னடா கருடா?’ என்று கான்ஸ்டபிள் கேசவன் காதருகே உளறியபோது, என்னை ‘அடா கருடா’ என்றானா, சற்றுத் தள்ளி ஊர் நடுவே கோயில் கொண்டிருந்த கருடனை ‘சார்’ என்றானா என்ற ஆராய்ச்சியில் நான் இறங்கவில்லை. அவனை உளற வைத்தது சண்டைக்குக் காரணமான ஜோடிதான்.
போலீஸ் வந்ததுக்கு ஒரு மரியாதை. சண்டை நின்றது. மேஜை, நாற்காலி எனக்குப் போடப்பட்டன. ஆனால் மூன்று பேரால் அடக்கப்பட்டுக்கொண்டு திமிறின ஒரு ஆள் மட்டும். ‘போலீஸ் தலையிடக்கூடாது’ என்றான். அவன் கையில் அரிவாள். ‘அதைக் கீழே போட்டுப் பேசு,’ என்றேன்.
‘தியாகி திமிலோகம்.’ இயற்பெயர் திரிலோகம். நிரூபிக்கப்படாத கொலை ஒன்றில் பிடிபட்டு விடுபட்டவன். ஒருதடவை ஆளும்கட்சித் தலைவருக்காகவோ, ஆளாத கட்சித் தலைவருக்காகவோ தீக்குளித்து உயிரைவிட்டவன். இப்போது கருடனூரில் சாராயக்கடை வைத்திருந்தான். நான் வெறும் போலீஸ்காரன். மேலே சொன்னதில் ஜீவ-மரண குழப்பம் இருந்தால் எனக்கு அது புரியாது. முதலில் தீக்குளித்து உயிரைவிட்டதும் பிறகு சாயராயக்கடை போட்டிருப்பதும் ஒரே ஜன்மத்தில்தான் என்பதுமட்டும் எனக்குத் தெரியும்.
புதுமணத் தம்பதிகளின் கேஸ் இதுதான்: கருடன் கோவில் பட்டாச்சாரியாருடன் தங்கியிருக்கும் யோகி ஒருவரின் ஆசியுடன் கல்யாணமாகி ஒருமணிநேரம் கூட ஆகவில்லை. பட்டாச்சாரியார் யோக்யமானவர். ஆனால் அவருக்குக்கூட யோகியின் ஊர் பேர் தெரியாதாம். இரண்டு மூன்று நாட்களாக, பக்கத்திலிருந்த திருவண்ணா மலையிருந்து வந்து பட்டாச்சாரியாருடன் அவர் தங்கியது, ஊர்க்காரர்கள் ஏழைபாழைகள் அடங்கலாகப் போய்ப் பார்த்தது எல்லாம் எனக்குத் தெரியும். ‘சாமியார் வந்தால் சண்டை வராது’ என்று பழமொழி எதையோ கேசவன் உளறிக்கொண்டிருந்தான். இந்தச் சாமியாரோடு சண்டை வந்திருக்கிறது. பழமொழி நின்று பிடிக்கவில்லை.
செங்கமலத்தின் தகப்பனாருடைய முறையீட்டைக் கேட்டேன். அப்புறம் மன்றத் தலைவர்கள். ஆளும்கட்சி மன்றம் இரண்டுபட்டது. ஆளாதகட்சி மன்றமும் இரண்டுபட்டு, இந்தக் கலப்பு மணத்தை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பதில் உள்கட்சிப் பூசல். கட்சிக் கொள்கைக்கு எதிராக ஊர் வழக்கம்.
மொத்தத்தில் ரகளை. ஏறி ஒலித்த குரல் திமிலோகத்துடையது. ‘தியாகி சாபம் திக்கெட்டும் கேட்கட்டும்!’ என்றான் திமிலோகம். மேடைப் பேச்சாளி அவன். ‘இந்தத் தாலி கழுத்தில் நிற்காது!’.
செங்கமலத்தின் தகப்பனார், ‘நிக்காது நிக்காது!’ என்று உற்சாகமாகக் கூவினார். ‘வாங்கடா!’ என்று தன் ஆட்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் வீட்டுக்கு. போகட்டும் என்று விட்டு விட்டேன். மாலையும் கையுமாக நின்ற தம்பதிகளின் முகங்களில், நம்பிக்கையோ நம்பிக்கையின்மையோ இரண்டுமே இல்லாத வெற்றுப் பார்வை. நான் ஆள்விட்டுக் கூப்பிட்டதினால் பட்டாச்சாரியார் வந்தார். ‘யோகியார் எங்கே?’ என்றேன். எனது ரிப்போர்ட்டுக்கு எல்லா சாட்சிகளும் வேண்டும். பட்டாச்சாரியார் கிழக்கே மலையைக் காட்டி, ‘திருமாங்கல்யத்தை ஆசீர்வதித்துவிட்டுக் கிளம்பி, கால்நடையாய்ப் போய்விட்டார். எப்பவாவது கிரிப்பிரதட்சணம் செய்யறப்போ இந்தப் பக்கம் அவர் வரதுண்டு,’ என்றார்.
அவர் சாட்சியைப் பதிந்துவிட்டு திமிலோகத்திடம், ‘உங்க கட்சிக் கொள்கைப்படித்தானே கல்யாணம் நடந்திருக்கு?’ என்றேன்.
‘நான்தான் இந்த வட்டாரத்திலேயே தலைவன். வரப்பைத் தோண்டி எலியைப் புடிக்கிற கருடனின் ஆட்சி இங்கே நடக்கலே. இந்த திமிலோகத்தின் ஆட்சிதான் நடக்கிறது. எல்லாச் சீர்திருத்த கல்யாணத்துக்கும் நான் எடுத்துக் குடுத்தாத்தான் தாலி!’ என்றான் அவன். இந்த அரிய கருத்தையும் அரிய சாராயநெடியையும் குறித்துக் கொண்டேன். திமிலோகம் தன் ரேக்ளா வண்டியில் பாய்ந்தேறி, குதிரையை முடுக்கினான். ஆகாயத்தில் மிக உயரே ஒரு புள்ளி வட்டமிட ஆரம்பித்தது.
ரிப்போர்ட் பிரகாரம் இதற்குமேல் இந்தக் கேஸ் பற்றி கருடனூர் ஸ்டேஷனைப் பொறுத்து, சொல்வதற்கு ஏதுமில்லை. ஆனால் இது நடந்து தம்பதிகளை நான் பத்திரமாக அனுப்பிவைத்த மூன்றாவது நாள் நடந்த, இரண்டு நிகழ்ச்சிகளின் ரிப்போர்ட்டைக் கீழே தருகிறேன்.
மூன்றாம் நாள் காலை. புகுந்தவீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த செங்கமலத்தின் முன் திடீரெனத் தோன்றினான் தியாமி திமிலோகம் என்ற திரிலோகம். மின் வீச்சில் அவன் அரிவாள் அவன் கழுத்துத் தாலியை அறுத்தெடுத்து எற்றியது. எகிறிவந்த தாலியைப் பிடித்துச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு மறைந்தான் திமிலோகம். ரேக்ளா வண்டி கிளம்பி ஓடும் சத்தம் தொடர்ந்தது. செங்கமலத்தின் கண்ணீரும் கழுத்தில் அரிவாள் சிராய்த்த ரத்தத் துளியும் கலந்தன. தம்பதிகள் ஏனோ போலீஸிற்கு இதைத் தெரிவிக்க வில்லை. இது முதலாவது நிகழ்ச்சி.
இரண்டாவது நிகழ்ச்சியும் அன்றே நடந்ததுதான். வழக்கமாக சாராயம் கொண்டுவரும் வெளியூர் லாரி, அன்று மத்தியானம் மக்கராகி ஊருக்கு வெளியே நின்றுவிட்டது. மத்தியானத்துக்கு மேல் தனியே தனது ரேக்ளா வண்டியை எடுத்துக்கொண்டு போய்ப் பீப்பாயை ஏற்றிக்கொண்டு வயல்வெளியினூடே ஓடிய கப்பிப் பாதையில் திரும்பினான். திமிலோகம் எப்போதும் வண்டியில் நின்றபடியேதான் அவன் வண்டி விடுவான். அது ஒரு ஜபர்ஜஸ்த்!
அன்று படபடக்கும் வெயிலில் ஊருக்குள்ளே ஓடிவந்த அவனுடைய வண்டி மீது திமிலோகம் நின்றுகொண்டு வரவில்லை. விழுந்து கிடந்தான்! தலை, வண்டியின் பின்புறம் மல்லாந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய ஷர்ட்டுடன் சேர்த்துத் தோளின் ஒரு நீண்ட தசைநார் கிழித்தெடுக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாகக் கொட்டிய ரத்தத்தின் பெருமடங்கு அவனைப் பிரக்ஞை இழக்கச் செய்துவிட்டது. மின்வேகத்தில் அவ்வளவு நுட்பமாக ஒரு குறிப்பிட்ட தசைநாரை மட்டும் கைதேர்ந்த சத்ரசிகிச்சை நிபுணரால்கூட, தோலை ஊடுருவி உரித்தெடுக்க முடியாது.
வெட்டவெளியூடே உயரமாக வண்டியில் நின்றுகொண்டே வந்த திமிலோகத்தை, ஏதோ ஒரு பிரம்மாண்டமான பறவை ஆகாயத்தி லிருந்து பாய்ந்து தாக்கி இருக்கிறது. இந்தப் பறவையைத் தமக்கு யோகியார் காட்டியதாக சொல்கிறார் பட்டாச்சாரியார். சதாரண கருடனை விட மூன்று மடங்கு பெரியதான அது அபூர்வமாகவே கண்ணில்படும் என்கிறார் அவர்.
திமிலோகத்துக்கு சிகிச்சை நடந்தது. உயிர் தப்பினான். ஆனால் எதையுமே அவனால் தனது வலதுகையால் தூக்கமுடியாது. ஒரு சாதாரண அரிவாளைக்கூட.
அவன் சட்டைப்பையிலிருந்து நழுவி வண்டியில் கிடந்த தாலி, செங்கமலம்-வரதப்பன் தம்பதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை மறுத்து, ‘வண்டி ஊருக்குள் ஓடிவரும்போது, வழியில் இருந்த வரதப்பன் வீட்டுவாசலில் அன்று காலை செங்கமலம் போட்டிருந்த கோலத்தின் மீது வண்டியிலிருந்து விழுந்து கிடந்தது தாலி!’ என்று அடித்துச் சொல்கிறார் பட்டாச்சாரியார். நம்புவதால் யாருக்கு மோசம்?
தினமணி கதிர், 25.11.1987.
