
விபத்திலிருந்து தப்பித்தது விமானத்தின் பயணிகள் பகுதி மட்டும் தான். பம்பாயிலிருந்து ரோம் நோக்கிக் கிளம்பிய அந்த ஜெட்டின் நேவிகேஷன் கருவியில் கோளாறு. இதன் விளைவாக ஏற்பட்ட திசைப் பிசகிற்குப் பின்பு, பைலட் மற்றும் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டதன் காரணங்கள் புரியவில்லை. நேர்மேற்கு, தென்மேல் மேற்கு என்று பிசகிய திசையுடன் திடீரென விமானத்தின் உயரம் வேறு தணிந்த போது, அதன் பெட்ரோல் டாங்க் பகுதியுடன் ஒரு பெரிய பறவை மோதியிருக்கலாம் என்பது ஒரு முதல்தர ஊகம்.
இரண்டு நாட்களாகக் குட்டித் தூக்கங்களுக்கு மேல் ஆழ்ந்திராத சீலனுக்கு, அவனுடைய இப்போதைய துயிலினூடே கேட்டவை சிறுசிறு வெடிச்சப்தங்கள் தாம். எங்கோ ஒரு பனை விடலி ஒளிவில் அவன் சரிந்து காத்திருக்கும் மனோரூபம். அதிரடிக்கணம். அது ஸ்ரீலங்காவின் வடபகுதி. அதிரடித் தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை யுடன் அவனுடைய மறைவிடத்தை நோக்கி ராணுவ மெஷின் துப்பாக்கிகள் சுடும் சப்தங்கள் அவை. சீலன் மின் வேகத்தில் தோளிலிருந்த ஆயுதத்தைச் சுழற்றிச் சுடுவதற்குப் பிடித்தான். விரல்கள் ஆயுதத்தின் விசைப்பகுதியில் ஒன்றுமில்லை என உணர்ந்ததும் அவன் திடுக்கிட்டு விழிப்படைந்தான். தூக்கத்தை முறியடித்த அவன் தோளில் தொங்கிய தேனீர் பிளாஸ்க் இப்போது அவனை அசடாக்கிற்று. அதே விழிப்புடன் விமானத்திற்குள் பயணிகளின் களேபரக் குரல்கள். ஜன்னலுக்கு வெளியே தாண்டிப் பறக்கும் தீப்படலங்கள். வீடுகளைப் பிடித்து எரிகிறவை போலன்றி அவை படுவேகமாகப் பறக்கும் பிழம்புகள் என்று சீலன் உடனே ஊகித்துவிட்டான். பேராபத்து. ஏதோ நாசகாரத்தனம். பக்கவாட்டில் பார்த்தான். அவனருகே காலி சீட். சென்னையிலிருந்து அவனோடு வந்துகொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆங்கிலேயக் கிழவி, நடுவே உள்ள நடைப்பகுதிக்கு மறுபுறத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்திருந்தாள். சுத்தமாக நரைத்த கேசம். கொண்டை போடப்பட்டிருந்தது. அவனைக் கண்டும் காணாதவள் என்ற தோரணையில் மர்மமாகப் புன்னகைத்தபடி ஒலிபெருக்கிக் காது கொடுத்துக்கொண்டிருந்தாள். விமானத்தின் மற்றைய சுமார் இருநூறு பயணிகளையும் உயர்ந்த சீட்களின் பின் புறங்கள் மறைத்தன.
‘பயணிகள் அவரவர் சீட்களிலேயே இருக்கும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. செய்தி அனுப்பட்டுக்கொண்டிருக்கிறது… பயணிகள் அவரவர்…’ என்று திரும்பத்திரும்ப டேப்ரிக்கார்ட் செய்யப்பட்ட ஒரு இனிய பெண்குரல். அந்தக் குரலில்தான் என்ன உத்ஸாகம்!
சீலனைத் துணுக்குறவைத்த சிறிய வெடிச்சப்தங்கள் உண்மையில் உயிர்காத்த சப்தங்கள்தாம். தீப்பிடித்து எரிய ஆரம்பித்த விமானத்தின் முன்பகுதியை, பயணிகள் பகுதியிலிருந்து பிளப்பதற்கான வெடிகள் அவை.
ஜ்வாலைகள் பயணிப்பகுதியை விட்டு விலகிய ஒரு முனையி லிருந்து பறந்துகொண்டிருப்பதை ஜன்னல் வழியே பார்த்த சீலனுக்கு அருகே அடுத்த சீட்டில் ஆள் நிழல். திரும்பினான். ‘எக்ஸ்கியூஸ் மீ!’ என்றபடி அந்த வெள்ளைக் கிழவி அவனுடைய ஜன்னலூடே பார்க்கிறாள். ‘பார், அங்கே!’ என்றாள் அவள், ஏற்கனவே அகன்ற கண்கள் மேலும் அகல விரிந்தன. அவனது ஜன்னலை ஒரு விரல் மிக லேசான நடுக்கத்துடன் காட்டிவிட்டு மடங்கியது.
முற்பகல் சமுத்திரத்தின் ரம்யமான நீலத்தை நோக்கி, பிரம்மாண்டமான நெருப்புப் பாறைபோல் உருக்குலைந்து தகதகத்து எரிந்தபடி, சாவதானமாக வீழ்ந்துகொண்டிருந்தது விமானத்தின் முன்பகுதி.
‘அது நம்மையும் சேர்த்து வெடிக்காமல் காப்பாற்றினான் கடவுள்!’ என்றாள் கிழவி. விரலில் கண்ட நடுக்கம் குரலில் ஏறியிருந்தது. தோளில் இல்லாதிருந்த மெஷின் துப்பாக்கியைக் கழற்றிப் பிடித்த எதிர்வினை இப்போது சீலனின் பேச்சில் பாய்ந்தது. ‘கடவுள் இல்லை!’ என்றான் ஆங்கிலத்தில். Nணி எணிஞீ. நடுக்கத்தின் திடீர்த்தனத்துடன் திரும்பியது கிழவியின் பார்வை. சுருக்கங்கள் கனியப் புன்னகைத்தபடி அதே விரலை அவனது பிளாஸ்கில் வைத்து, ‘துப்பாக்கி இல்லை,’ என்றாள். Nணி எதண. சீலனுக்கு நாடித்துடிப்பு உறைந்து மீண்டது யாரிவள்? ஒற்றனுக்குத் தமிழில் என்னடா பெண்பால்? ஒற்றி, அட சீ! இவ்வளவும் கணங்கள்தான். மீண்டும் அவளது பார்வை ஜன்னலுக்கு வெளியே பாய்ந்தது. திரும்பிய சீலன் சமுத்திரத்தின் நிர்மலமான நீலப்படுதாவில் ஏற்பட்ட ஒரு சிறு பிரளய வட்டத்தைத் சந்தித்தான். என்ன ஏது என்று புரியாதவிதமாக ஒரு மையத்திலிருந்து சீறியபடி நீராவியும் நுரையுமாய் பக்கங்களிலும் மேல்நோக்கியும் விரிந்தெழுந்து கொண்டிருந்தன. விமானமுனை விழுந்த இடம் அது.
பயணிகளிடையே திடீர் களேபர திடீர் நிசப்தமாக ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒலிநாடகத்தை இந்தக் காட்சி இப்போது முழுதாக ஆக்ரமித்துவிட்டது. படு நிசப்தம்.
மையத்திலிருந்து நீர்மட்டத்தைத் தூக்கியபடி நீராவியும் எரிந்த விமானமுனையின் கரும்புகையுமாகச் சீறி எழுந்து கொண்டிருந்தன. அந்த நீர்ப்புகைத்தூண் எழும்பியபடி இருக்க, விமானத்தின் பயணிப் பகுதி தணிந்துகொண்டிருந்தது.
‘கம்ப்யூட்டர் ஒரு நிலப்பகுதியைத் தேர்ந்துகொண்டுவிட்டது,’ என்று கிரீச்சிட்டு அறிவித்தாள் ஒரு விமானப் பணிப்பெண்.
நிசப்தம் கலைந்து சலசலப்பு. ‘ஆனால் உதவி வரும்வரை எவரும் வெளியேறக்கூடாது,’ என்றது அதே பெண்குரல். அதுவரை ஓடிக் கொண்டிருந்த டேப்ரிக்கார்ட் குரலை அவள் நிறுத்தியிருக்கவேண்டும். பதிலாக அதி உற்சாகக்குரல்களின் ஜாஸ் ராக் பாடல் ஒன்று முரட்டுத் தனமான பின்னணி இசையுடன் ஒலிபெருக்கியிலிருந்து கிளம்பிற்று. கிழவி இதில் சட்டென மூஞ்சியைச் சுளித்துவிட்டு அழகாய் புன்னகைத் தாள். அவள் கண்கள் வெளியே பார்த்தபடியிருக்க வாய், ‘விபரீதமே பேரழகு,’ என்று உளறலாக இரண்டு மூன்று தடவைகள் கூறிற்று. இவ்வளவுக்கும் அவள் பக்கத்து சீட்டில் உட்காரவில்லை. அதன் கைப்பிடியில் ஒரு கையை வைத்துக் குனிந்து நின்றுதான் சீலனின் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே நீர்த்தூண் நின்று ஒரு மொக்கு மலர்வதுபோல் நாலாபுறமும் பிரிந்து வீழ ஆரம்பித்தது.
அதே சமயம் பயணிப்பகுதி விமானத்தில் ஒரு திடீர் அதிர்வு. பயணிகள், பெண்களிடையே கூச்சல். ஒரு கிரீச்சிட்ட சப்தம். ஜன்னலுக்கு வெளியே தென்பட்ட விமானமுனை விபத்துக் காட்சி மறைந்து தாறுமாறான கடலோரப் புதர்ச்செடிகள், கள்ளிகள், மணல்மேடுகள், கடலலைகளின் வெண்நுரைப் படை வரிசைகள். ‘தீவு, தீவு!’ தன்னை மறந்து கத்தினாள் கிழவி. ‘ஒட்டகம் இறங்கிவிட்டது. பாலைவனப் பசுந்தரை,’ என்றாள். சீலன், அவள் ‘ஒற்றி’ என்பதை ஒத்திப் போட்டுவிட்டு தனது உறுதியான மரத்த கையை மென்மையாக அவளது சீட் கைப்பிடிக் கைமேல் வைத்து, ‘ஓகே, ஓகே!’ என்றான். ‘சீட்டில் உட்காரலாமே.’
‘என்பாடு எப்போதும் ஓகே,’ என்ற கிழவி, ‘நன்றிகள். இன்னும் பைத்யம் பிடிக்கவில்லை… கையா இரும்பா?’ என்று பேச்சைத் தாவவிட்டபடி உட்கார்ந்தாள். பிறகு சட்டென, ‘மன்னிக்கவும், உறுதியான கை என்றுதான் பொருள்,’ என்றாள்.
அவள் உட்காரவும், பாதங்களின் கீழ் உடலைச் சில்லிட வைக்கும் உலோகத்தனமான நீண்ட உரசல். ‘ஒட்டகம்’ இறங்கி ஒரு முன்பின் ஆட்டம் போட்டுவிட்டு நின்றது.
‘நோ, நோ!’ என்று யாரோ மறுக்க அதை மிக உரத்த ரகசியக் குரலில் எதிர்த்த இன்னொரு குரல். ‘திட்டமிட்ட நாசவேலை,’ என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிற்று. முதல் குரல், ‘அசடு!’ என்று அதட்டியதும் அந்த ஏரியாவில் கப்சிப். அவை பெண்ணுக்கு அடங்கிய தம்பதியர் யாரோ. வேறு ஒருவரின் எருமைக்குரல் சிம்பிளாக, ‘சிறு தவறு, பெரு விபத்து,’ என்றது. ‘அடுத்து என்ன?’ என்றது ஒரு பெண் குரல். ‘வீடியோவை வைத்தால் தெரியும்,’ என்றது எருமைக்குரல்.
ஸ்டைலான பணிப்பெண்கள் இப்போது பைத்யகாரிகள் போல் அங்கும் இங்கும் ஓடினாலும் அவர்கள்தாம் பயணிகளிடையே பீதியைக் கட்டுப்படுத்தினார்கள். ‘முதல்தர அழகு, துணிச்சல், கட்டுப்பாடு, பயிற்சி,’ என்றாள் கிழவி, தங்கள் சீட் பக்கம் குனிந்த ஒருத்தியைப் பார்த்து. பணிப்பெண் புன்னகைக்குரிய ஸ்விட்சைப் போட்டவளாய், ‘சிற்றுண்டி, பானம், உங்கள் தேவையைச் சொல்லுங்க,’ என்றாள்.
சீலன் டீ பிளாஸ்கை வெற்றிகரமாக உயர்த்திக்காட்டி, ‘ஒன்றும் வேண்டாம்!’ என்றான். கிழவி, ‘சீஸ், பிஸ்கட் மற்றும் பழரசம்,’ என்றாள்.
‘மென்மையான ஒயின்?’ என்று வற்புறுத்தினாள் அவள். ‘ஏதாவது கனமாக சாப்பிடுங்களேன் இருவரும்.’
சீலன் தனது ஆர்டரைத் திருத்தி, ‘ஓகே, சீஸ், சாண்ட்விச்! அவ்வளவு தான்,’ என்றான்.
‘கனமாக என்றால்? ஆடா மாடா பன்றியா?’ என்ற கிழவி, ‘நான் ஒரு வெஜிடேரியன், மிஸ்! சீஸ் சான்ட்விச், பழரசம்,’ என்றாள். குறித்துக்கொண்ட மிஸ் பார்வையிலிருந்து மறைந்தாள்.
அவள் மறைய, ‘துணிச்சல், கட்டுப்பாடு, பயிற்சி,’ என்றாள் சீலனைப் பார்த்து. ‘நாம் பரஸ்பர அறிமுகம் இல்லாமலே பேசிக் கொண்டிருக்கிறோம்! பரமண்டலத்துக்குப் போகிற பாதி வழியில்,’ என்றாள்.
‘ஓ!’ என்ற சீலன். ‘என் பெயர் ராஜகோபாலன், சென்னையில் இருந்து ரோமுக்கு, பிஸினஸ்,’ என்றான். அவனது பொய்யுடன் அவனது பாஸ்போர்ட் கூட ஒத்துழைத்தது. ரோமிலிருந்து அவன் கிரேக்க துறைமுகங்களுள் ஒன்றான பிரேயஸுக்குப் போக வேண்டும். அங்கே ஒரு கப்பலில் மறைமுகமாக ஏற்றப்படப் போகிற ஆயுதங்களை நேரில் கண்டு கணித்துக்கொள்ள வேண்டும். உடனே ஆகாய மார்க்கமாக மீண்டும் ரோம்-சென்னை. பிறகு வடஇலங்கை, கடல் மார்க்கமாக.
கிழவி, ‘என் பெயர் சீலா. லண்டன். இந்தியாவில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் போகிறோம்,’ என்றாள் பன்மையில். ‘பின்சீட்டில் என் பிள்ளை, எக்ஸ்ட்ரா அதாவது மருமாள்.’ முதலில் அவளை ஒரு சிறுபிள்ளைத்தனமான ‘ஒற்றி’ என்று கருதியிருந்த சீலனின் கெரில்லாக்கார அபாயச்சமிக்ஞைகள் முழுவதும் விழித்தெழுந்தன. அவனது பெயரை அவள் தெரிந்து வைத்துக்கொண்டு அது தனக்குத் தெரியும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட, தனது பெயரை ‘சீலன்’-இன் பெண்பால் பெயராகக் குறிப்பிடுகிறாளா?
இந்தப் பிரக்ஞையுடன், ‘சீலாவா!’ என்றான்.
‘சீலியா, அதை தமிழ், சிங்களம் இரண்டிலும் ‘சீலா’ என்று நறுக்கிக் கொள்ளலாம்,’ என்ற கிழவி அவனைப் பார்க்காமலே தொடர்ந்தாள். ‘சுமார் இருபத்தொரு வயது வரை நான் அன்று சிலோனாக இருந்த ஸ்ரீலங்காவில் வாழ்ந்தவள். உங்கள் உச்சரிப்பில் சிலோனின் திருக்கோணமலைத் தமிழ்க்குரல் தொனிக்கிறது. என் கணிப்பில் தவறு இருக்கலாம்…’ சீலனின் முழுக்கவனமும் இப்போது கிழவியின் சொற்களுக்கு அடியில் தன்னைப் பற்றிய சமிக்ஞைகளைத் தேடின. எனவே பணிப்பெண்ணின் பரிசாரகப் பணிவிடைகளுக்கு அதிக சிரத்தை தரவில்லை. கிழவியின் முன்சீட் முதுகில் அமைந்திருந்த சின்னஞ் சிறு மடக்கு மேஜையை இயக்கி அதில் அவளது டிரேயைப் பணிப்பெண் வைப்பதை மண்டு போல பார்த்துக்கொண்டிருந்தான். கிழவி அவனது மடக்கு மேஜையை உத்ஸாகமாக இயக்கி அதில் பணிப்பெண் அவனுக்குக் கொண்டுவந்த டிரேயை வைத்து, ‘லஞ்ச்!’ என்றாள்.
பணிப்பெண், ‘உதவிக் கப்பல் தொடர்பு கிடைத்துவிட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் நாம் அந்தக் கப்பலில் சௌகர்யமாக இருப்போம். அது ஒரு பயணி,’ என்றாள்.
அவளுக்குச் சரிவர நன்றி கூறக்கூட முடியவில்லை சீலனால். அந்தக் கப்பலில் தான் கைவிலங்கு கால்விலங்குகளுடன் ஒரு சின்ன இருட்டுக் கூட்டுக்குள்… அசட்டு நினனவுகள். இவ்வளவு ரம்யமாகப் பழகும் ஒரு கிழடு சித்திரவதைகளுக்குக் கூசாத ஒற்றர் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவளாக இருக்க முடியாது. முதலில் நிலைமையை சந்தேகங்களுக்கு இடமற்ற நிச்சயத்தனமாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு தப்பிப்பதற்கான திட்டம் அல்லது கழுத்தில் மாட்டப்பட்டு டை, ஷர்ட், கோட்டிற்குள் மறைந்திருக்கும் தற்கொலைச் சாதனம்.
‘பிறந்துவளர்ந்தது திருக்கோணமலையின் பிரிட்டிஷ் அட்மிரால்டி இருந்த டொக்யார்டில். ஆனால் திருமணமானதும் கணவருடன் டவுனுக்கு வந்துவிட்டேன்…’ கிழவி தனக்குத்தானே பேசுகிறவளாகத் தோன்றினாள். சீலன் அவளைப் பின்பற்றி உண்பதில் ஈடுபட்டாலும் உணவு ஒரு சங்கடமாகவே அப்போது உறுத்தியது.
‘டிவிஷன் ஐந்து,’ என்றாள் கிழவி. ‘இப்போது விலாச முறைகள் மாறி இருக்கலாம். ஆனால் அருகருகே இருந்த காளி, கணேசர் கோயில்கள் மறைந்திராது. புத்த ஆலயங்களாக மாற்றப்பட்டிருக் கலாமே தவிர…’
சீலன் படுகுழப்பத்துடன் கிழவியின் முகத்தைக் கடைக்கண்ணால் உற்றுக் கவனித்தபடி இந்த இறுதி வாக்யத்தின் அடியில் சுழியோடிப் பார்த்தான். கிழவி முகத்தைச் சுளித்தபடியே இதைச் சொன்னதுடன் குரலில் ஏளனமான கசப்பு.
‘…. கோவில்கள் தெருவின் ஒருபுறம். ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்கூல் மறுபுறம்… அது இப்போது அனகாரிக தம்மபால மிஷன் ஸ்கூலாகி இருக்கக்கூடும்…’ கிழவி ஏதோ துடுக்கான ஜோக்கை அடித்த சிறுமிபோல் இதைச் சொல்லிவிட்டு அதற்குத் தானே சிரித்துக் கொண்டாள்.
ராமகிருஷ்ணாமிஷன் ஸ்கூல். சீலன் அதன் பழைய மாணவன்… சீலன் திடீரென ஒரு முடிவுக்கு வந்தான். எதிரி எந்தப் புதருக்குள் இருக்கிறான் என்று சந்தேகித்தபடி இருப்பதை விட தான் பதுங்கி இருக்கும். புதரை அவனுக்குக் காட்டினால் அவனது இயக்கம் அவனை அம்பலப்படுத்தும் என்று துணிகரப் போர்த்தந்திரத்தை இங்கே செயல்படுத்தினான்.
‘மைதானத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா?’ என்றான் அசுவாரஸ்யத்தை குரலில் ஏற்றியபடி.
கிழவி வாய்க்குக் கொண்டுபோன சாண்ட்விச் துண்டை டிரேயில் வைத்துவிட்டு, ‘ஹா!’ என்றாள். ‘சொன்னேனா இல்லையா? உன் குரலில் திருக்கோணமலைத் தமிழனின் உச்சரிப்பு. சொன்னேனா இல்லையா?’ என்றாள்.
‘தவறாக இருக்கலாம் என்றும் சேர்த்துக்கொண்டீர்கள்…’
‘உண்மை. சொன்னேன். ஏன்? நீ அஞ்சி ஓடிக்கொண்டிருக்கும் ஜனங்களில் ஒருவன். உன் அடையாளத்துக்கு நீயே அஞ்சலாம். வெட்கலாம். மறைவை விரும்பலாம். அதை நான் கௌரவிக்க வேண்டாமா? தவறு இருக்கலாம் என்றேன். விரும்பினால் நீயே உன்னைப் பற்றிச் சொல்லு என்பதற்காகத்தான். அதுதானே சுமுகம்?’ சீலாக்கிழவி சுறுசுறுப்பாகப் பேசிக்கொண்டே போனாள். சீலனுக்கு நிலைமை இன்னும் தெளிவுபடவில்லை.
பொத்தாம்பொதுவக, ‘விவேகம்,’ என்றான் சீலாவின் பேச்சுத் தோரணையை எதிரொலித்தவனாக. இருந்தும் அவனது மனப்பீடிப்பு விடுபடவில்லை. ஒற்றியாக இருந்தால் இவள் ரொம்பவும் உயர் மட்டத்தினளாக இருக்கவேண்டும். ‘இன்டர்போல்’ என்ற சர்வதேசிய போலீஸ் இயக்கத்தினளாக இருக்கலாம். அவர்களின் கணிப்பில் குற்றவாளிகளாகத் தென்படுகிறவர்களைப் பற்றிய தகவல்களையும் நிரூபணங்களையும் சேகரிக்கும் இயக்கம். ஆனால் கைது செய்யக்கூடிய அதிகாரம் அற்ற இயக்கம் அது.
‘விவேகமா? எனக்கா? அனுபவம் என்று சொல். அதாவது கிழவி என்று சொல்,’ என்றாள் சீலா, ‘நீ ஓடுகிறாய். நாம் எல்லோருமே ஓடுகிறோம். மனித வர்க்கமே அதிவேகமாக, எதிரே சாவதானமாக நடந்துகொண்டிருக்கிற ஒரு மகத்துவத்தை விரட்டிப்பிடித்து வழிப்பறி செய்வதற்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பிடிபடுவது மகத்துவம் அல்ல. அதன் சுண்டுவிரல்தான். நமது கழுத்தில் மாலையாகச் சுண்டுவிரல் களின் கோர்ப்பு.’
மிகமிகப் பரிச்சயமான கதை. ஆனால் அதன் தளம் சீலாவின் விபரிப்பில் மாறிவிட்டதால் அது என்ன கதை என்பதே சீலனுக்குப் பிடிபட மறுத்தது. ‘சுண்டுவிரல் மாலை‘ என்றவன் உடனே லேசான புன்னகையுடன், அங்குலீமாமா!’
சீலா சாண்ட்விச்சின் துண்டு ஒன்றைப் பிடித்திருந்த கையிலிருந்து சுண்டுவிரலை மட்டும் நீக்கிக் காட்டினாள். ‘புதனின் விரல். புதன் புத்தக விவேகி. அனுபவங்களை அறிவாக அறுத்தெடுத்துக் கோர்ப்பவன். அந்த அறிவு…’ ஒரு விஷமச் சிரிப்புடன் தமிழில், ‘ஏட்டுச் சொரக்கா!’ என்றாள் சீலா. சீலனுக்குள் ஏதோ புரண்டது.
‘தமிழ்!’ என்றான் தன்னையறியாமலே,
சீலா புருவச்சுளிப்புடன், ‘சொல்லலையா நான், இருபத்தொரு வயதுவரை திருக்கோணமலை.’ லஞ்ச் முடிந்துகொண்டிருந்தது. ‘கொச்சைத் தமிழ். அங்குலீயின் அம்மா என் தமிழை சமயம் வாய்ந்த போதெல்லாம் கிண்டல் பண்ணுவாள்.’
தெரிந்த கதையின் தளத்தை மாற்றியவள் தெரியாத கதை ஒன்றை இப்போது விடுகிறாள். யாரோ அங்குலி. அவனுடைய அம்மா. தமிழ்! அங்குலீமாலா புத்தரை வழிப்பறி செய்வதற்காக விரட்டியவன். பிராமணீயச் சதியினால் கல்வியை இழந்த அவன் கல்விமான்களையும் ஞானார்த்திகளையும் கொள்ளையடித்து அவர்களது சுண்டுவிரல்களை அறுத்து மாலையாகக் கோர்த்து அணிந்துகொண்டவன். புத்தர் சாவதானமாக எதிரே நடந்து கொண்டிருக்கிறார். அங்குலீமாமா அவரைப் பிடிப்பதற்காக அபாரவேகத்தில் ஓடுகிறான். ஆனால் புத்தருக்கும் அவனுக்கும் இடையே இருந்த தூரம் குறுகவில்லை. ‘சமண சமண, ஓடாதே நில்!’ என்று கத்துகிறான் அங்குலீமாலா. அவரை நோக்கி ஓடுகிறான். இப்போதுகூட அவருக்கும் அவனுக்கு மிடையில் தூரம் குறுகவில்லை.
‘அங்குலீமாலா என்பது சிங்களப் பெயராயிற்றே? நீங்கள் தமிழ் என்கிறீர்கள்,’ என்றான் சீலன் குழப்பத்துடன்.
‘அது சிங்களப் பெயருமல்ல தமிழ்ப் பெயருமல்ல. புத்த இதிகாசம் உலகப் பொதுவானது. கிருஷ்ண இதிகாசம், யேசு இதிகாசம், முகம்மது இதிகாசம்… என்ன வித்யாசத்தைக் கண்டு குரல் வளைவை அறுத்துக் கொள்கிறீர்கள்?’ இவ்வளவையும் ஆங்கிலேய மொழிப்பாணித் தமிழில் உச்சரித்த சீலா, தன் வலதுபுறக் காதின் கீழ் கழுத்தைச் சுண்டுவிரலினால் கீறினாள்… சீலனின் கழுத்தில் அதே இடத்தில் தழும்பு…
ஆனையிறவு. ஸ்ரீலங்கா ராணுவமுகாம். விடிகாலை நான்குமணி. சீலனின் அதிரடிப்பிரிவினர் தங்கள் பதுங்கு பிலங்களில் இருந்து முகாம் மீது ஒரே சமிக்ஞையில் எஃகு நெருப்பைக் கக்குகின்றனர். முகாம் அரைஇருளில் அலறிச் சிதறுகிறது. சீலன் தனது தோளில் பொருத்திய கிரனேட் ஏவு கருவியின் விரல்விசையை அழுத்துகிறான். அவனது கண்பார்வையும் கருவியின் குழாயில் நின்ற சிலுவைக்கோடும் ஒரு பெரிய பெட்ரோல் வாகனத்தின் டாங்கியும் தீக்கோடு ஒன்றின் வினாடியில் கோர்க்கப்படுகின்றன. பூமி அதிரும் பேரொலியுடன் டாங்கி நெருப்புத்தகடுகளாகச் சிதறும் எரிபொருளாய் வெடிக்கிறது. மறுகணம் அவன் முதுகின்மேல் ஒரு திடீர் பளு. ஏவுகருவியைப் பிடித்தபடி மண் பிலத்துக்குள் புரண்டு மல்லாந்தான். நெஞ்சை இரும்புத்தனமாக அழுத்தி ஏறி உட்கார்ந்த உயரமான அந்த உருவத்தின் பெயரையும் அந்தப் பெயரை உச்சரிக்க முயன்ற சீலனின் குரலையும் நெரித்தது ஒரு கை. சீலனுக்கு அடுத்த படித்தர அதிகாரியான ‘டிக்கா’. மல்லாந்து கிடந்த சீலனின் ஒரு கண்பார்வையில் மிகமிக உயரத்தே வானில் ஒரு நட்சத்திரம் துடிதுடித்துக்கொண்டிருந்தது. அதற்கு வெகுகீழே ஓங்கிய டிக்காவின் கையில் நீண்ட கரிய குத்துக்கத்தி. சீலனின் ஒரு கை மீது அவனுடைய முழங்கால். மறுகை மீது கிரனேட் லாஞ்சரின் பளு. கத்தி மின்வெட்டில் இறங்கிய இறுதிக்கணத்தில் தலையை ஒடித்துக் கழுத்தின் வலதுபுறத்தைக் கொடுத்தபடி, கிரனேட் லாஞ்சரை ஒரே கையால் தூக்கி அதன் முழு இரும்புத்தனத்துடனும் டிக்காவின் தலையைப் பக்கவாட்டாகத் தாக்கினான் சீலன். கத்தி பிசகிற்று. கழுத்து நரம்புகள் அலறின. சீலனின் பிரக்ஞையைக் கவ்விய கோபம் விலகியபோது டிக்கா குரல்வளை முறித்து பிணமாகக் கிடக்கிறான். அவனது மரணக்குரல் கத்திமுனையாகச் சீலனின் மூளைக்குள் சுழன்று கொண்டிருந்த உணர்வை ஒரே இடத்தில் திரும்பத் திரும்பக் கீறிக்கொண்டிருந்து. ‘திருக்கோணமலையான்! திருக்கோணமலையான்!’ டிக்கா திருக்கோணமலையான் அல்ல. எனவே சீலனைவிட அவனது படித்தரம் உயரமாக இருந்திருக்க வேண்டும். இப்படி எத்தனை ‘இயக்க ரகசியங்கள்’. இதில் போய் கிருஷ்ண-புத்த-யேசு-முகம்மது குரல்வளையறுப்பு வேறு எதற்கு?’
லஞ்ச் முடிந்துவிட்டது. சீட் முதுகுகளில் இருந்த குப்பைப் பைகளில் பிளாஸ்டிக் எச்சங்களை செருகி மூடும்போது பேச்சைத் திருப்பினான் சீலன். ‘உங்கள் அவதான சக்திக்கு என் வாழ்த்து. அங்குலீ எப்படி தமிழ்ப் பெயராயிற்று? தமிழர்கள் புத்தர்களானதில்லை. புத்த விஹாரங்களுக்கு போவது உண்டு. நிறைய தமிழர்கள் கிறிஸ்துவர்களாகி யிருக்கிறார்கள்.’
சீலா தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்திற்குள் நழுவினாள். ‘காரணம் கிறிஸ்துவ மிஷன் மதமாற்றத்தை முக்கியவத்துவப்படுத்தி அதை நிறைவேற்றுவதற்காகத் தூண்டில் போடுகிறது. பௌத்தம், அதுவும் இலங்கையில், வெறும் இனவெறிக்கு ஒரு மதரீதியான ஆதாரம்தான். இனவெறி எப்படி மதமாற்றத்தை செயல்படுத்த முடியும்? இலங்கை வரலாற்றில் இன, மொழிரீதியாக உள்ள பிரிவினையைப் பௌத்த பீடம் தனக்கு அரணாக்கி, ஹிந்துத்துவத்திடமிருந்து அது தன்னைக் காக்கும் என வகுத்த வடிவுதான் இன்றைய புத்த சிங்கள மேலாதிக்கத்தின் வேர் வடிவம். இலங்கையில் பௌத்தமிஷன் இலங்கைத் தமிழ் ஹிந்துக்களிட மிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளல். தற்காப்பு, நிச்சயம் தாக்குதலாக மாறும் – வன்முறை நியதி’. இதைச் சொல்லும்போதே சீலா தனது கைப்பைக்குள்ளிருந்து ஒரு பர்ஸ் போன்ற சிறிய சதுரப் பொருளை எடுத்தாள். அதைப் புத்தகம் போல விரித்துப் பார்த்தாள். முகத்தில் சுருக்கங்கள் தளர்ந்து இளகின. இதற்குள், சீலா இன்டர்போல் இயக்கத்தைவிட படுபயங்கரமான ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது சீலனுக்குப் புரிந்துவிட்டது. எந்தக் கட்சியையும் மதத்தையும் லட்சிய வெறித்தனத்தையும் அநுசரிக்காமல் அவதானிக்கும் சாட்சிகளுள் அவள் ஒருத்தி. கொச்சையாகச் சொன்னால் ஒரு இன்ட லெக்சுவல்.
சீலா பிரிக்கப்பட்ட அந்த பர்ஸ் வடிவத்திலிருந்து கண்களைத் திருப்பி சீலனைப் பார்த்தாள். ‘எவருக்கும் எளிதில் இதைப் பார்க்கத் தருகிறதில்லை,’ என்றபடி சீலனிடம் அதைக் கொடுத்தாள். ‘பௌத்தனுமல்ல ஹிந்துமல்ல சிங்களனுமல்ல. தமிழனுமல்ல…’
சீலன் அதை வாங்கினான். ஒரு பக்கத்தில் மட்டும் கண்ணாடித் தாளினுள் ஒரு சிறிய புகைப்படம் கருப்பு வெள்ளையாக. குஞ்சுகளுடன் ஒரு கோழி, ஒரு வாத்து, இந்த பரிவாரத்துக்கு நடுவே அம்மணமாகத் தவழ்ந்த நிலையில் ஒரு ஆண்குழந்தை. குளுகுளு உடல், சுருள் முடி, இதயத்திற்குள் ஆழ்ந்து நுழையும் அற்புதப் புன்னகை.
‘….குழந்தை!’ என்று முடித்தாள் சீலா.
சீலன் தந்திரமாகப் புன்னகைத்தபடி குழந்தையிலிருந்து கண்களை எடுக்காமலே, ‘இவன் தமிழனல்ல என்கிறீர்கள். தமிழ் பேசுகிறீர்கள்…’
‘அவனுடைய அம்மாவின் மொழி. ஆனால் அது சிங்களமாக இருந்திருந்தால் நான் இன்னும் மறக்காமல் சிங்களம் பேசிக் கொண்டிருப்பேன்,’ என்றாள் சீலா. ‘மொழி, மதம் என்பவை வேறு. மொழிவெறி, மதவெறி என்பவை வேறு. வெறிகளுக்கு நேர்வேறான பரிமாணம் குழந்தைமை. அதுதான் இதயத்தைக் கொள்ளையடிக்கும் வழிப்பறித்தன்மை.’
சீலா இப்போது வழிப்பறிக் கொள்ளைக்காரப் படிவத்தைத் திரும்பவும் கொண்டுவருகிறாள். ‘ஐ ஸீ’!’ என்றான் சீலன். ‘பெயர் அங்குலீ மாலா என்கிறீர்கள். தமிழ்வீட்டுக் குழந்தைக்கு நிச்சயமாக அப்படிப் பெயர் வராது. சிங்களவர்கள்கூட அதைத் துரதிருஷ்டக்காரனின் பெயர் என்று கருதிக் குழந்தைகளுக்கு வைப்பதில்லை…’ சீலன் நிமிர்ந்து சீலாவைப் பார்த்தான். ‘ஓ! இவனுக்கு நீங்கள் வைத்த பெயர் அது. ஏனோ?’
சீலா அவனைப் பார்த்தபடி தனக்குள் மூழ்கியவளாகப் பேசினாள்: ‘கணவரும் நானுமாகக் குடித்தனம் பண்ணிய வீடு காளிகோவிலின் தெற்குவீதியில்தான். அருகிலிருந்த தோட்டத்தில் ஓலைவீட்டுக்காரி குடும்பம் ஒன்று. அவளுக்கு எழுத்தறிவு இல்லை. ஆனால் ரொம்பவும் கருணை. ஒரு வீட்டுப் பசுவுக்கு ஏதோ தொண்டையில் சிக்கி, திணறித் திணறிச் செத்துக்கொண்டிருந்தது. ரப்பர் மரஇனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் இலைகளை அது சாப்பிட்டதின் விளைவு. அயலகத்துக்குப் பூசகர் விட்டுப் பசு. காளிகோவில் பூசகர்கள், கோவிலைச் சாக்காக்கி சுற்றி இருந்த தோட்டத்து நிலங்களை அங்குலம் அங்குலமாக விழுங்கும் கும்பல். இதனால் அந்த ஓலைவீட்டுக்காரிக்கும் அவர்களுக்கும் கடும்பகை. இருந்தும் தனது தோட்டத்தில் செல்லப்பிள்ளைகளைப் போல அவள் வளர்த்த வாழைமரக் குருத்துக்களை வெட்டி எடுத்தாள். மாட்டின் வாயைத் திறக்கவைக்கும் உபாயத்துக்காக மட்டுமல்ல. என் வீட்டு வேலையாளைக் கூப்பிட்டான். நான் அனுமதி கொடுத்தேன். பூசகரின் மாட்டுத்தொழுவம் என் ஜன்னல் வழியாகத் தெரிகிறது. ஓலைவீட்டுக்காரி குருத்துச்சுருளை மாட்டின் வாய்க்கு கொண்டு போனதும் அது வாயைத் திறந்தது. உடனே அவள் சொன்னபடி வேலையாள் மாட்டின் வாய் மூடிவிடாமல் பலமாகக் கைகளால் பிரித்துப் பிடிக்கிறான். அவள் பிளந்த வாய்க்குள் இலைச்சுருளைத் திருகாணியாகச் சுற்றிச் செலுத்தி வெளியே எடுத்தாள். ஐந்தாறு சுருள்கள் முடிய மாடு திணறுவதை நிறுத்திவிட்டது. இவ்வளவையும் சாதித்த அந்த ஓலைவீட்டுக்காரி ஒரு இளம் கர்ப்பிணி.
‘மாடுகள் அயலகங்களில் சிலவேளை இந்த ரப்பர் இலையைத் தெருவில் கொட்டுகிற மேதாவிகளின் செயலால் இறந்திருக்கின்றன. இவ்வளவு எளிதாக அவற்றைக் காப்பாற்றக் கூடிய ஒரு வழி இருப்பது எனக்குத் தெரியாது. அவளைக் கூப்பிடு வேலையாளின் மொழி பெயர்ப்புடனும் எனது கொச்சைத்தமிழின் உதவியுடனும், இந்த வழியை அவள் எங்கே தெரிந்துகொண்டாள் என்று கேட்டேன். அவள் சொன்ன பதில் எனக்கும் என் கணவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்திற்று. அவளுக்கு அந்தக் கணத்தில் திடீரெனத் தோன்றிய வழிமுறை அது என்றாள். எங்களுக்கு வேறு ஏதாவது முறை தெரியுமா என்று ஆர்வத் துடன் கேட்டாள். வேலைக்காரர்கள் மூலம் அயலகப் பிரச்னைகளை அறிந்து வைத்திருந்த நான், “உன்னை மிகக் கேவலமாக வசவு வைத்திருக்கிறார்கள். உன் கணவரை ஒரு தடவை ஆள்வைத்து உதைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக இப்படி உன் வீட்டு வாழைகளை நாசம் பண்ணியிருக்கிறாயே?” என்றேன். “அந்தப் பசு பட்ட பாட்டை நீங்கள் பார்க்கவில்லையா?” என்றாள். “புடலங்காய் வேணுமா?” என்றாள். இருவரும் ஒருவர் வயிற்றை ஒருவர் கவனித்து விட்டோம். சுமார் ஐந்து மாதக் கர்ப்பிணிகள் இருவருமே. “புடலங் காய் இருக்கட்டும். உனக்கு இதுதான் முதல் கர்ப்பமா?” என்றேன். “ஏற்கனவே இரண்டு கருச்சிதைவுகள். இவன் சிரஞ்சீவி,” என்றாள். “எனக்கும் பையன், உனக்கும் பையன்தான். அடுப்பில் வேலை இருக்கிறது,” என்று போய்விட்டாள்.
‘மறுநாள் காலை பெரிய புடலங்காய்களையும் முருங்கைக் காய்களையும் கொண்டுவந்து எனக்கு வியாபாரம் செய்தாள். கடை விலை கொடுத்தால் போதும் என்றாள். “அது எப்படி ஆண்குழந்தைகள் என்கிறாய்?” என்று என் கொச்சைத் தமிழில் கேட்டேன். என் தமிழுக்குச் சிரித்தாள். என் கணவர் உள்ளே தமது ரூமில் இருந்தவர், “அவளைக் கிறித்துவச்சி ஆகிறாளா என்று கேட்டுப்பார், ஆக மாட்டாள்,” என்றார். அவருடன் இதைப் பற்றி முதல்நாள் பேசி விவாதிக்கிறேன். ஆனால் இப்பேது அவளுடைய பயமறியாத துருதுரு வென்று முகத்தின்முன் இந்தக் கேள்வியைக் கேட்க முடியவில்லை. “அவள் ஏற்கனவே கிறிஸ்துவச்சிதான்,“ என்று கணவரிடம் கூறினேன். “புத்தச்சி புள்ளத்தாச்சி,” என் கணவர் விஷமத்தனமாகத் தமிழில் கூறினார். அவள் கூச்சப்பட்டுக்கொண்டு ஓடிப்போய்விட்டாள். என் கணவருக்கு ஹிந்து, புத்தன் எல்லாம் ஏக குழப்பம். அவள் ஒரு சைவஹிந்து என்று விளக்கி விளக்கி எனக்குக் கடைசிவரை அலுத்து விட்டது. அவள் சொன்னாப்போல் இருவருக்குமே ஆண் குழந்தைகள் பிறந்தன. “அபூர்வவாக்கு அவளுக்கு!” என்று நான் சொன்னால், என் கணவர் என்னை விஞ்ஞானபூர்வமாகக் கிண்டல் பண்ணுவார்.
‘குழந்தைகள் பிறந்த ஆண்டு 1939. ஏற்கனவே இரண்டாவது உலகயுத்தத்தின் முதல் அத்யாயங்கள் துவங்கிவிட்டன. பிரிட்டிஷ் அட்மிரால்டியின் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் இருந்த என் கணவர் இன்னொரு உலகயுத்தம் வரப்போகிறது என்று சொன்னதை நான் அர்த்தப்படுத்தவில்லை. ஓலைவீட்டுக்காரியின் பாப்பாவுடனும் என் பாப்பாவுடனும் தான் என் மனம் லயித்திருந்தது. கணவர் லண்டனுக்குத் திரும்பும்படி அடுத்த ஆண்டு உத்தரவு வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஓலைவீட்டுக்காரியின் இந்த பாப்பாவையும் என் பாப்பாவையும் ஒன்றாக பகல்பொழுதுகளில் நான் தான் வளர்ப்பேன். காலையில் குளித்துமுடிந்ததும் ஓடிப்போய் இவனைத் துக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவேன். இதற்கு ஒரு காரணம் ஓலைவீட்டுக்காரியின் வீட்டு நிலவரம்தான். அவளுடைய கணவன் சரியில்லை. அவளுடைய நகைகளைக் கூட கொண்டு போய் துன்மார்க்கமாகச் செலவு செய்திருக்கிறான். அவளுக்கும் அவனுக்குத் இதனால் நாளாந்தம் சண்டை, விடிந்ததுமே கூச்சல் ஆரம்பித்துவிடும். அவ்வப்போது அவளுக்கு அடி உதை.
‘நான் கணவருடன் லண்டனுக்குப் போகும்வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. அந்தச் சூழலில் குழந்தைக்கு எவ்வித மனோபாவங்கள் வளர்ந்திருக்கும் என்று இன்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் இந்தப் பாப்பா ஒரு விதத்தில் மாற்றப்பட முடியாத ஒரு அடிப்படை மனோபாத்தைக் கொண்டிருந்தது என்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். இவ்விஷயத்தில் என் பாப்பாவை விட அவன் ஒரு ஆழமான ஜீவன். இதோ இந்தக் கோழி தான், ஒரு பல்லியைத் துடிக்கத் துடிக்கக் கொத்துகிறது. என் பாப்பா முகத்தைச் சுளித்தபடி அதை வேடிக்கை பார்க்கிறான். இவனோ பல்லி துடித்தாற்போலவே துடிதுடித்து அலற ஆரம்பித்துவிட்டான். ரொம்ப நேரம் விட்டுவிட்டு அழுகை. சமாதானப்படுத்தவே முடியவில்லை. தாய்க்காரி வேறு வந்த முயற்சிசெய்து பார்த்தாள். தூங்கப் பண்ணின பிறகுதான் குழந்தை புன்னகை செய்தது தூக்கத்தில். அப்போதுதான் மானசீகமாக இவனுக்கு அங்குலீமாலா என்ற பெயரை நான் வைத்தேன்.
‘அவ்வளவு உணர்வுநுட்பம் உள்ள பாப்பா என்று தெரிந்தவுடன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரனின் பெயரை அதற்கு வைத்திருக்கிறீர்களே!’ என்றான் சீலன், உண்மையான குழப்பத்துடன்
‘அங்குலீமாலா உணர்வுநுட்பம் கொண்ட முதல்தர அறிஞன்தான். குருவை மிஞ்சியவன் என்பதால் தான் கல்வி பெற முடியாமல் தடுக்கப்பட்டு, சமுகத்துக்கு வெளியே வீசப்பட்டான். இருந்தும் உரிய காலத்தில் உள்ளே மறைந்திருந்த போதம் திடீரென அவிழ்ந்து விருட்சமாயிற்று. ஒரு குரூரமான சூழலில் பிறந்த என் அங்குலீ மாலாவின் எதிர்காலத்தையும் என்னால் இப்படித்தான் கணிக்க முடிந்திருக்கிறது.
‘புத்தர்பிரானை “ஓடாதே நில்!” என்று அச்சுறுத்துகிறான் அங்குலீ மாலா. “நான் ஓடவில்லை. நீதான் ஓடிக்கொண்டிருக்கிறாய்,” என்கிறார் அவர். உடனேயே அங்குலீமாலா நின்றுவிடுகிறான். அவன் நின்றதுமே அவன் அவனல்லன்.
‘குழந்தையைத் தாயிடமிருந்து எப்படியாவது தத்து எடுத்து விடலாமா என்றுகூட நான் நினைத்ததுண்டு. கணவரிடம் இதைப் பற்றிச் சொல்லி அவரின் வசவை வாங்கிக்கட்டினேன். இந்த எண்ணம் ஏற்பட்டபோது தாய்க்காரியின் கண்களைத் தைரியமாகச் சந்திக்கக் கூட முடியவில்லை. மூட்டையைக் கட்டிக் கிளம்பியபோது திரும்பத் திரும்ப, தாய்க்காரி வைத்திருந்த குழந்தையிடம் நான் பிரக்ஞை யில்லாமல் ஓடிப்போய் அதை எடுத்துவந்து அதனுடன் பேசினேன் என்கிறார் கணவர். ஒரு நிமிஷம் உண்மையில் எனக்கு பிரக்ஞை பறிபோய் விட்டிருக்கிறது.’ சீலா கையை நீட்டினாள். சீலன் தனது கையிலிருந்த புகைப்பட பர்ஸை திரும்பக்கொடுத்தான். கொடுக்கும் போதே, சீலா இன்ட்லெக்சுவல் கட்சிகூட அல்ல, அதை விட ஆபத்தான ஒரு பிரபஞ்ச நியதியின் ஏஜண்ட் என்பது ஒரு விவரிக்க முடியாத திகிலுடன் அவனுக்குப் புரிந்தது. அந்த நியதி, தாய்மை. அதன்முன் ஒரு கெரில்லா கமாண்டரின் மனத்தடுப்புகள் முழுவதும் ஒரு புழுதிச் சுவராகி உதிர்ந்தன…
‘நான் படித்த அதே ராமகிருஷ்ண மிஷன் ஸ்கூலின் பழைய மாணவர் அவர்.’ சீலனின் உள்தடைகள் சிதறியவுடன் அவனிடம் அவள் கேட்காமல் கேட்டுக்கொண்டிருந்த தகவல் பெருக்கெடுத்தது. ‘ஒரே பிள்ளை. இயற்கையான கலைத்திறன்கள் ஸ்கூலிலேயே வெளிப்பட்டிருக்கின்றன. இதனால் எங்கள் தலைகளில் டீச்சர்கள் கட்டி அடிக்கும் முன்னுதாரணங்களில் அவரும் ஒருவர். இதற்கும்மேல் அவர் ஒரு ஆன்மவியலாளர் என்றும் கொஞ்சம் லூஸ் என்றும்கூட ஏறுமாறுகள். 1970 வாக்கில் தாயும் தந்தையும் காலமான பிறகு, மீதியிருந்த வீட்டை விற்றுவிட்டு இந்தியாவுக்குப் போய் வாழ்கிறார். இலங்கைக்கு என்ன ஆகப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்திருந்தார் என்றும் ஒரு தகவல். ஆனால் வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு அவர் அன்று நாட்டைவிட்டே போனது, அப்போது ஊராருக்கு முதல்தர லூஸ் வேலையாகத்தான் தோன்றி இருக்கிறது. இப்போது அதே வேலையை ஒரு ஆத்மார்த்தியின் முன்னுணர்வு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.’
‘மீதி இருந்த வீட்டை என்றால் என்ன அர்த்தம்?’ என்றாள் சீலா கண்டிப்புடன்.
‘அந்த ரப்பர் இலைதின்னி மாட்டுக்காரப் பூசர்களின் வல்லடி வழக்குகளினால் பிடுங்கப்பட்டது போக மீதி இருந்தது என்று அர்த்தம். ஆனால் அவருடைய பெயர் அங்குலீமாலா அல்ல. அது… ’ சீலன் அந்தப் பெயரைச் சொல்லும்போதே, சமுத்ர வெளியிலிருந்து ஒரு பெரும் கப்பலின் பிரகடனச் சங்கின் ஓசை திடீரென எழுந்து கடல் பரப்பில் அலைஅலையாக எதிரொலித்து விரிந்தது. சீலன் பார்வையைத் திருப்பு முன்பே சீலாவின் கண்களில் தத்தளித்தபடி ஈரம் ஏறிக்கொண்டிருந்தது.
தொடுவானில் இரும்புத்தொகுப்பினால் ஆன ஒரு மலை போன்ற கப்பலின் உதயம். அதன் முகப்பில் ஒளித்திவலைகளின் சமிக்ஞை.
மீறல் (பிரமிள் சிறப்பிதழ்), அக்டோபர் 1993.

One Comment on “அங்குலீமாலா/பிரமிள்”
Comments are closed.