ஜெ.பாஸ்கரன்/கோணலாய் ஒரு கோலம்!

ஒற்றையிழையில் வாசலில் போடப்பட்டுள்ள கோலம் என் கவனத்தைக் கலைத்தது!
குழந்தை கிறுக்கினாற் போன்ற கோலம். ஆனாலும் அதில் ஓர் ஒழுங்கு இருந்தது. இது என்ன கோலம்?
கீழே ஒரு சக்கரம், தேர்க் கோலமோ? நடுவில் ஒரு சூரியன்; அருகில் சந்திரனைக் காணோமே – பொங்கல் அன்று போடும் கோலமோ?
5-3-1 என்று இரண்டு பக்கமும் சேர்த்து 18 புள்ளிக் கோலமோ? ஓர் ஆமையைப் போல உள்ளதே… ம்ஹூம், ஆமைகளெல்லாம் கோலத்தில் வராது.
நட்சத்திரக் கோலம்? நான்கு முனைகள்தானே உள்ளன… பறவை? விமானம் … இல்லை இறகுகள் சமமாக இல்லை!
அறுபது வருடத்திற்கு முன்பு போட்ட சிமெண்ட் தரை. எத்தனை விசேஷங்களுக்குக் கோலம் கண்ட தரை அது! காது குத்தல், திருமணம், வளைகாப்பு, சீமந்தம், பண்டிகைகள், மருமகள், மாப்பிள்ளை எனப் புதுவரவுகள் என அத்தனை விசேஷங்களுக்கும், குங்குமக் கரைசலை மேலே கொட்டிக்கொண்ட கோலங்களைத் தாங்கிய தரை. இப்போது போல ஸ்டிக்கர் கோலம் காணாத தரை!
அரிசி மாவுக் கோலங்கள் – எறும்புகளும், காக்கைகளும் விரும்பிய காலங்கள்…
ஓர் உருண்டை சாணியின் மீது அன்று பூத்துச் சிரிக்கும் மஞ்சள் நிறப் பறங்கிப் பூவைத் தாங்கிய மார்கழி மாதக் கோலங்கள்..
எல்லாமே மங்கலாக, சன்னமாக மனதில் ஆடுகின்ற கோலங்கள் – குழந்தை போட்ட கோலத்தினடியில் மறைவாகத் தெரியும் காவியிட்ட மாவிழைக் கோலம் போல இருந்தும் இல்லாமல்…
எண்பது வயதில் தன்னையே மறந்து, சுற்றம் மறந்து, பழைய நினைவுகளில் மகிழும் அம்மாவின் இன்றைய கோலம் எதுவாக இருந்தால் என்ன?
அவள் இட்ட கோலங்களுக்கு அழிவே இல்லை!
.