கீழாம்பூர் சங்கர சப்பிரமணியன் /அக்கரைக்கு அப்பாத் தூக்கி கொண்டு செல்வார்!


ஆசிரியர் கலைமகள்………‌………..

திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் 57 ஆம் நெம்பர் வீட்டில் நான் வசித்து வந்தேன். 1980 முதல் 1995 வரை அங்கு தான் ஜாகை. 60 எண் வீட்டில் தி மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ராஜன் அவர்கள் குடி இருந்தார்கள்.64 பிள்ளையார் கோயில் தெரு வீடுதான் உ வே சா வாழ்ந்த ‘தியாகராச விலாசம்’ என்னும் பெயர் கொண்ட வீடாகும்.

திருவல்லிக்கேணி ஹெச் ஹெச் மண்டல் பள்ளியின் எதிர்புறம் இருப்பது பிள்ளையார் கோயில் தெரு லேன். இங்கேதான் சி சு செல்லப்பா அவர்கள் குடியிருந்தார்கள். இவரை நான் அடிக்கடி சந்திப்பது உண்டு. சில நேரங்களில் என்னுடன் அதே பிள்ளையார் கோயில் தெரு லேனில் சாப்பாடு ஹோட்டல் நடத்திய ஜெமினி கேண்டீன் உரிமையாளர் ஏ என் எஸ் மணியன் அவர்களும் உடன் இருப்பார்.

செல்லப்பா மாமாவிற்கு கோபம் அதிகமாக வரும் என்பது உண்மைதான். ஆனால் என்னிடம் ஒரு நாள் கூட அவர் கோபத்தைக் காட்டியது கிடையாது! இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு!

“சென்னையில் உள்ள நூலகங்களுக்கு எல்லாம் மாமாவிற்காகச் சென்று சில குறிப்புகளை எடுத்து வருகிறாய். மாமாவிற்கு யார் பிடிக்கும் யார் பிடிக்காது என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறாய். எனவே தான் உன் மீது மாமா கோபப்படுவதில்லை. அது மட்டுமல்ல மாமா எரிச்சல் அடையும்படி நீ பேசுவதும் இல்லை!” இப்படி திருமதி சி சு செல்லப்பா (மாமி) சொன்ன பொழுது உடன் இருந்த மணியன் சார் “என் மீதும் மாமா ஒரு நாள் கூட கோபப்பட்டதில்லை” என்று சொன்னார். இதைக் கேட்டுக் கொண்டு வந்த சி சு செல்லப்பா மாமா இருமிய வாரே தன் இருப்பைக் காட்டினார்!

“என் அப்பாவின் ஊர் சின்னமனூர். நான்மதுரைஜில்லாக்காரன். ஆனாலும் திருநெல்வேலி ஜில்லா ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் என் தகப்பனார் பொதுப்பணித்துறையில் (PWD) வேலைபார்த்தது நெல்லையில்தான். தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் அமைத்து துத்துக்குடிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் பணியை என் தகப்பனார் தான் செய்துமுடித்தார். பல வருடங்கள் நாங்கள் திருநெல்வேலி ஜில்லாவின் பல ஊர்களில் வசித்தோம். என் ஆரம்பப்படிப்பு பாளையங்கோட்டையில் தான் நடந்தது. முறப்பநாடு, அகரம் கிராமங்களில், நாங்கள் வசித்தோம். காலையில் அப்பாவும் நானும் தாமிரபரணி ஆற்றில் குளித்தால் அப்பா ஆற்றைக்கடக்க என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு அக்கரைச் செல்வார்.என்னால் மறக்க முடியாத அனுபவங்கள் நெல்லையில் உண்டு” என்று வல்லிக்கண்ணன் அவர்களிடம் சொன்னது உண்டு!

மேலே உள்ள இரண்டு விஷயங்களையும் முடித்துப் போட்டுப் பாருங்கள். என் மேல் ஏன் அவருக்கு கோபம் வந்ததில்லை என்பது புரியும்! அக்மார்க் திருநெல்வேலிக்காரன் நான்!!

செல்லப்பா மாமாவின் உடைய பிடிவாத குணம் சிட்டி அவர்களின் மகன் வேணுகோபாலன் சார் அவர்களுக்கும் தெரியும்.

“சுதந்திர தாகம்’ நூலை வாழ்நாளில் அச்சிட்டு வெளியிட்டு விடவேண்டும் என்பதே அவருடைய இறுதி நாள்களில் ஏற்பட்ட ஆசை. தன் நெருங்கிய நண்பர்கள் நால்வரிடம் ஐயாயிரம் ரூபாய் வீதம் கைமாற்றாக வாங்கிக்கொண்டு அச்சிட்டு நூலை வெளியிட்டார். புத்தகம் வெளிவந்தவுடன் பரபரப்பாக அறுநூறு பிரதிகள் விற்பனையாகியது என்ற செய்தி தான் வெளி உலகத்திற்குத் தெரியும்!

லலிதா ஜுவல்லரியில் அந்தக் காலத்தில் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த சுகுமாரன் அவர்கள் சிறந்த இலக்கிய ரசனை உடையவர். நவீன இலக்கியத்தில் விருப்பம் கொண்ட சுகுமாரன் செல்லப்பா மாமாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவிட வேண்டும் என்று எண்ணினார்.

” சிசு செல்லப்பா அவர்களுக்கு அவருடைய நாவல் வெளியிடுவதற்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வாரா? கேட்டுச் சொல்லுங்கள் கீழாம்பூர் சார்!”என்றார் சுகுமாரன் சாரிடம் உதவியாளராக இருந்த முத்துக்குமார்.

மாமாவிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னேன்! வாங்கிக் கொள்ளலாம்! ஆனால் எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தின் பெயரையும் போட முடியாது. இலக்கிய தாகம் இருந்தால் கொடுக்கட்டும் என்று சிசு செல்லப்பா மாமா சொன்னதை அப்படியே வந்து சுகுமாரன் சாரிடம் சொன்னேன். அவர் விருப்பப்படியே செய்யலாம் என்று சொல்லி பண உதவி செய்தார்கள். எனக்கு இதில் பரம திருப்தி உண்டு! நானும் ஒரு அணில் சேவை செய்து விட்டேன்!!

சுதேசமித்திரன் தீபாவளி மலர் ஒன்றில் “தமிழ்ச் சிறுகதைகளின் சுணக்கம்” (அந்நாளைய)குறித்து ஒரு கட்டுரை எழுதப் போக, அது பற்றிய விவாதக் களம் பெரிதாக உருவாயிற்று. அந்த விவாதத்திற்குப் பதில் சொல்லும் விதமாக, எந்தப் பொருளாதார வசதியுமில்லாதவர் மனைவியின் நகையை அடகு வைத்து, ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகை தான் “எழுத்து”!

“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கியவருக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. சொந்த ஊர் சின்னமனூர் அப்பாவின் பெயர் சுப்பிரமணியம். எனவே சி.எஸ்.செல்லப்பா என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். இதைக் கண்டு கொண்ட வ.ரா. அவர்கள் தலைப்பு எழுத்துக்களைத் தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொள்ள அன்று முதல் சி.சு.செல்லப்பா என்றே எழுதலானார்.

‘எழுத்து’ முதல் இதழில் சி.சு.செல்லப்பா தன் இலக்கிய ஆசானான ந.பிச்சமூர்த்தியின் எழுத்து இடம்பெற வேண்டுமென விரும்பினார். பிச்சமூர்த்தி புதிதாக எதுவும் எழுதித் தராத நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அவரது ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற புதுக்கவிதையையும், க.நா.சு.வின் இரண்டு கவிதைகளையும் வெளியிட்டார். ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையில் வெளிப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்வியல் ஒரு புதிய பரிணாமமாக அன்று அமைந்தது. புதுக்கவிதை சிருஷ்டிகர்தாக்களுக்கும், புதுக்கவிதை விரும்பிகளுக்கும் ஒரு விடியல் பிறந்தது.

தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ந.பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்று வக்கீலாகப் பணியாற்றி இருக்கிறார். இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் இருந்திருக்கிறார்.

பாரதியின் கவிதைகள் மற்றும் வசன கவிதைகள், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்னும் கவிதை ஆகியவற்றால் தூண்டப்பெற்று ந.பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதையில் மையல் கொண்டு கவிதைகளை எழுத ஆரம்பித்தார்.1934 ஆம் ஆண்டு மணி கொடி “காதல்” என்கிற இவரது கவிதையைப் பிரசுரம் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டது.

கலைமகளுக்கும் பிச்சமூர்த்திக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு!
ந. பிச்சமூர்த்தி அவர்களுடைய முதல் சிறுகதை கலைமகள் மாத இதழில் பிரசுரமானது.1932-ஆம் ஆண்டு ‘ஸயன்ஸுக்குப் பலி’என்ற கதை ( அவர் எழுதிய முதல் தமிழ்ச் சிறுகதை)கலைமகளில் வெளியானது! சி சு செல்லப்பா மாமா அவர்களுடைய பேட்டியையும் கலைமகளில் நான் பிரசுரம் செய்து இருக்கிறேன். புகைப்படம் எடுப்பதற்காக பிரபு சங்கர் என்னுடன் வந்ததாக ஞாபகம்!

நவீன நாடகங்கள் புதுக்கவிதை நவீன ஓவியங்கள் இதைப் பற்றி எல்லாம் சிசு செல்லப்பா மாமா அவர்களிடம் மணி கணக்காகப் பேசியது உண்டு! 1998 ஆம் ஆண்டு அவர் அமரர் ஆகும் வரை அடிக்கடி நான் பார்த்து பேசி பல விஷயங்களைக் கற்று இருக்கிறேன்.1976 ஆம் ஆண்டு மறைந்த பிச்சமூர்த்தி அவர்களை ஒரு முறை கூட நான் பார்த்து பேசியதில்லை அது என் துரதிர்ஷ்டம்!