மாலன்/வடு

அந்த வடு அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இடது கன்னத்தில், கண்ணிற்குக் கீழே, அரையங்குலம் தள்ளி, அரிசியைப் பதித்தது போல் ஒரு சிறு வடு. அப்படி ஒன்றும் விகாரமாயில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது. சிரிக்கும் போது அழகாய் இருப்பது போலக் கூடத் தோன்றியது
ஆனால் அதைச் சொல்லி அனு அந்த வரனை நிராகரித்து விடுவாளோ என்று அவர் கவலை கொண்டார். இது ஆறாவதோ, ஏழாவதோ. தங்கச்சி மகன் முத்துக்கிருஷ்ணன், தானாகவே பெண் கேட்டு வந்ததை விட்டுவிட்டால், இது ஆறாவது. தேடிப் பிடித்த வரன் ஒவ்வொன்றையும் அனு தட்டிக் கொண்டே இருந்தாள். முன் வழுக்கையைப் பார்த்தீங்களாப்பா; இப்பவே தொப்பை இப்படினா போகப் போக பிள்ளையார்தான்; கறுப்பு. குழந்தை பெத்தா திருஷ்டி பொட்டு வைக்க சாந்து வாங்கவே வேண்டாம்; விவசாயமா, நானும் கூடக் களை பறிக்கப் போறேன்; என்று எதையெதையோ சொல்லி ஒவ்வொன்றையும் அனு தட்டிக் கழித்து விட்டாள்
அதற்கப்புறம் ஒரு வருடம் முத்துரங்கன் வரன் தேடுவதையே நிறுத்தி விட்டார். ஆனால் கவலைப் படுவதை நிறுத்த முடியவில்லை. கவலைக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று அப்போது அவர் ஓய்வு பெறவிருந்தார். அதற்குப் பின் பென்ஷனில்தான்
வண்டி ஓடணும். கிராமத்து தபாலாபீஸ் குமாஸ்தாவிற்கு ஓய்வுக்குப் பின் என்ன வேலை கிடைத்து விடப் போகிறது என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது. இன்னொன்று தங்கை மீனாட்சி, ‘அண்ணா நீ ஆபீஸ் நாற்காலியை விட்டு இறங்கும் முன் அனுவைக் கரையேற்றி விடு’ அப்புறம் சிரமம்’ என்று பார்க்கும் போதெல்லாம் பிடுங்கிக் கொண்டிருந்தாள். அது சரி, பெண்டாட்டி இல்லாத மனுஷனுக்கு உடன் பிறந்தார் இல்லாமல் யார்தான் இதையெல்லாம் சொல்வார்கள்?
அப்போதுதான் ராவுத்தர் சொல்லி இந்த வரன் வந்தது. அப்படி ஒன்றும் அபாரமான வரன் இல்லை. அப்பா அம்மா இல்லை. உத்தியோகமும் ஒன்றும் பிரமாதம் இல்லை. சினிமாவில் இருக்கிறானாம். பணம் வந்தால் ஐப்பசி கார்த்திகை மழை போல் கொட்டும். இல்லை. என்றால் சித்திரை வைகாசி வறட்சிதான் என்று சொல்லித்தான் ராவுத்தார் ஆளைக் கொண்டு வந்தார்.ஆளும் கறுப்புதான் ம் ஆனால் களையான முகம். கன்னத்தில் அந்த அரிசிப்பள்ளம் அழகாத்தான் இருந்தது..
ஆச்சரியமாய் அனு சம்மதித்து விட்டாள். கல்யாணம் கிராமத்தில்தான் நடந்தது. அப்படியொன்றும் நட்சத்திரங்கள் குவிந்து விடவில்லை. அடிக்கடி அப்பா வேடத்தில் பார்க்கும் ஒருவரும், காமெடி நடிகரின் நண்பனாக வரும் ஒருவரும், வந்து விட்டுப் போனார்கள். மொய்ப் பணம் வாழை மரத்திற்கும் வாத்தியத்திற்கும் கூடப் போதவில்லை.
புதுப் புடவையும் பூச்சூடிய தலையுமாய் அனு கிளம்பிப் போனாள். புன்சிரிப்பும் சூடிப் போன தாகத்தான் தோன்றியது. ஆனால் மூன்று மாதத்தில் திரும்பி வந்தாள். மாப்பிள்ளைதான் கொண்டு வந்து விட்டார்.
“என்னம்மா, சண்டையா?
“இல்லையே?”
“பின்னே?
“அவர் பறக்க ஆசைப்படறார் அப்பா. நடக்கறவன் சுமையைத் தூக்குவான். பறக்கறவங்களுக்கு அது முடியுமா?”
‘அப்படீனா?’
“தனியா படம் பண்ணணும். இந்திக்குப் போகணும்.ஆஸ்கார், தில்லினு அவார்ட் வாங்கணும்”
கோபத்தில் குரல் பிசிறியது. அவர் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அது சூனியத்தை வெறித்தபடி இறுகிக் கிடந்தது. அழுது விடுவாளோ? அழுதால் அதுகூட நல்லதுதான். ஆனால் அவள் விருட்டென்று திரும்பி வீட்டிற்குள் நடந்தாள்.
ஓரிரவு தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்ட போது மாப்பிள்ளை அருகில் வந்து அமர்ந்து கொண்டு சொன் னார். அது அவருக்காகச் சொன்னது போலில்லை. எல்லோருக்குமான பொது அறிவிப்புப் போலிருந்தது:
“என் வேலை அப்படி. எப்போ போவோம், எங்கே போவோம்னு. எங்களுக்கே தெரியாது. எங்களுக்கு ராவும் இல்ல பகலும் இல்லை. இவ இங்க இருக்கிறதுதான் நல்லது, சேஃப்டி” என்று அவர் சொன்ன போது அதை மறுக்கத்தான் முடியவில்லை.
ராவுத்தர்தான் செய்தி கொண்டு வந்தார்.அவர் வந்தபோது முத்துரங்கம் கொல்லைப்புறத்தில் அசுவனி படர்ந்திருந்த அவரைப் பந்தலில் பழுத்திருந்த இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார். அனுதான் கதவைத் திறந்தாள். ‘இவளிடமே சொல்லலாமா? என்று ராவுத்தர் அரைக்கணம் தயங்கினார். அதே நேரம் ‘அப்பா இல்லையா பாப்பா?” என்றும் அவர் வாய் கேட்டது. பதிலை எதிர்பாராமல் பந்தலை நோக்கி நடந்தார்.
“என்ன கொடுமை பாருங்க. வானத்தை வரைஞ்சு வைச்சாப்ல எத்தனை அழகான நீலம்! பூ மாதிரியா இருக்கு? பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சியா உட்கார்ந் திருக்கு. உங்களுக்கும் எனக்கும் உட்கார்ந்து செஞ்சாக் கூட முடியுமா இதெல்லாம்? அசுவினிங்க எங்கிருந்து தான் வந்திச்சுங்களோ! அடை அடையாய் அப்பிக்கிட்டு இத்தனை அழகையும் உறிஞ்சிக்கிட்டிருக்கு. என்னனு சால்ல கொடுமையை?
“உலகத்தில ல இது ஒண்ணுதானா கொடுமை?” என்றார் ராவுத்தர்.
அவர் என்னமோ முக்கியமாகச் சொல்ல வருகிறார் என்று முத்துரங்கதிற்குப் புரிந்தது. என்ன என்பது போல பார்த்தார்
“வாங்க ஒரு சேதி பேசணும்” என்று ராவுத்தர் வந்தார். அவரை உள்ளே அழைத்துக் கொண்டு “பாப்பா! குடிக்க ஒரு சொம்புத் தண்ணி கொண்டா” என்று அனுவை அருகிலிருந்து துரத்திவிட்டு பேப்பரை விரித்துக் காண்பித்தார்.
பயங்கர விபத்து! பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல் அச்சிறுபாக்கம் வட்டத்தில் உள்ள தொழுப்பேடு அருகே வெள்ளி இரவு மணல் ஏற்றி வந்த ஒரு லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ்சின் மீது மோதியதில் ஓட்டுநர் நடத்துநர் உள்பட ஆறுபேர் அந்த இடத்திலேயே இறந்து போயினர். படுகாயமடைந்த ஒன்பது பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இறந்தவர்களுடைய உடல்கள் அந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
அவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன.
“சரி இப்போ இதற்கென்ன?”
“வெள்ளி ராத்திரிதானே மாப்பிள்ளை பொறப் பட்டது?’
“என்னய்யா சொல்றீங்க?’ திடுக்கிட்டார்முத்துரங்கம்.
வார்த்தைகளைத் தேடுவது போல ராவுத்தர் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு பேசினார். ‘எனக்கும் உறுதியா தெரியலை. சந்தேகமாத்தான் இருக்கு. ஆனா அது அவர் போன பஸ்தான். அங்கிருக்கிற நம்மாளுங்ககிட்ட யாரு என்னனு சொல்லி விசாரிக்கச் சொல்லியிருக்கேன் விவரம் முழுசா தெரியலை”
“ஐயோ!” என்ற அலறல் அவர் பேச்சை நிறுத்தியது. அனுதான்.அவர்கள் பேச்சை நின்று கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் சுவரில் சாய்ந்து சரிந்து தரையில் அமர்ந்தாள். பின் ஏதோ நினைப்பு வந்தவளாக உள்ளே கைபேசியை எடுத்து ஒத்தினாள். அழைப்பு ஓடி போகாமல் மௌனத்தில் போன் கனத்தது.
“நாம ஒரு நடை போய் பார்த்துட்டு வந்தா என்ன?”
ராவுத்தருக்குப் பதில் சொல்லத் தெம்பற்று ஈரத்துணி போல் துவண்டு போயிருந்தார் முத்துரங்கம்.
படுக்கை படுக்கையாப் பார்த்துக் கொண்டே கடந்தார்கள். அவிழ்த்துப் போட்ட பார வண்டியைப் போல ஆகாசத்தை நோக்கிச் சில கால்களை உயர்த்திக் கட்டியிருந்தார்கள். உணவோ, மருந்தோ ஏதோ ஒன்று ஊசி மூலம் சொட்டுச் சொட்டாய் சிலருக்கு இறங்கிக் கொண்டிருந்தது. ஊர்க்காரர் முகம் ஒன்று தென்பட்டது. ஆனால் அவர் மூக்கை மூடிப் பொருத்திய குழாய் மூலம் ஆக்சிஜன் போய்க் கொண்டிருந்தது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மகன் சொன்னான்: ” உங்க மாப்பிள்ளை இந்த பஸ்லதான் வந்தாரு. நான்தானே
அப்பாவை ஏத்திவிட வந்தேன். அப்பப் பார்த்தேன். சௌக்கியமா சார்னேன். வாய் வார்த்தையா ஏதும் பதில் சொல்லலை. சிரிச்சுக்கிட்டே ஏறி முன் சீட்டிலே உட்கார்ந்து புஸ்தகத்தைப் பிரிச்சுக்கிட்டாரு. பின்னால வந்து உட்கார்ந்திருந்தா பொழைச்சிருப்பாரு.”
‘அப்டீனா?” என்றார் ராவுத்தர்.
‘முத இரண்டு சீட்லேயிருந்த யாரும் தப்பிக்கிலையே! பஸ்ஸுக்குள்ள பாய்ஞ்சுல வந்தான்லாரிக்காரன்.”
“நீங்களும் அந்த பஸ்ஸிலதான் வந்தீங்களா?’ இல்லை இல்லை.அப்பாவை ஏத்திவிட்டு நான் திரும்பிட்டேன். போலீஸ்ல சொன்னாங்க.
ஹும் பஸ்ஸு காலியாத்தான் கிடந்துச்சாம். அவர் மட்டும் பின்னாடி வந்து உக்கார்ந்திருந்தா.. என்னத்தைச் சொல்ல, எல்லாம் விதி” எல்லாம் முடிந்தது என்பதைப் போல அவர் பேசிக் கொண்டு போனார். ஆனால் அதற்கு மேல் கேட்க விருப்பமில்லாதவர் போல முத்துரங்கம் நகர்ந்து விட்டார்.
முகத்தைப் பார்த்தா சொல்லிறிவீங்கதானே? என்று கேட்டுக் கொண்டுதான் பிணவறைக்குக் கூட்டிப் போனார்கள். ஆனால் முகங்கள் முகங்களாக இல்லை. பெயர்ந்த முகங்களை இழுத்துத் தைத்து வைத்திருந் தார்கள். தாடை நொறுங்கிய முகங்கள், கன்னத்துச் சதை கிழிந்த முகங்கள். கண்பிதுங்கிய முகங்கள், தோள் பட்டை பெயர்ந்தவர்கள். கோரத் தாண்டவத்தைக் கொண்டாட வைத்த கண்காட்சி போலிருந்தது.
கண்டக்டர் டிரைவரைத் தவிர யாரையும் அடையாளம் காண முடியவில்லை. அவர்களுக்கும் அவர்களது காக்கிச் சட்டைதான் அடையாளம்.
“சின்ன வயசா?” என்று கேட்டவர் அவர்களை அழைத்துக் கொண்டு போய் ஒரு சடலத்தின் முன் நிறுத்தினார். உடைந்தது, கிழிந்தது, சிதைந்தது,
நொறுங்கியது என அடுத்தடுத்துப் பார்த்துக் கொண்டு வந்ததால் முத்துரங்கத்தின் மனம் கனத்துக் கிடந்தது. தலை சுற்றியது. விழுந்து விடக் கூடாதென்று வைராக்கியத்தைப் பிடித்துக் கொண்டு நின்றார். இமைகளை இறுக மூடிக் கொண்டிருந்தவரை ராவுத்தர் உலுக்கினார்.” “பாரு முத்து. மனசை திடப்படுத்திக் கொண்டு பாரு!”
உயரத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருந்தது. நிறம் கூடத்தான். முத்துரங்கம் முகத்தில் அந்த வடுவைத் தேடினார். இடது கன்னத்தில் கண்ணிற்குக் கீழே அரையங்குலம் தள்ளி அரிசியைப் பதித்தது போல் ஒரு சிறு வடு. அவர் கண்ணுக்கு அப்படி ஏதும் தெரிய வில்லை. கன்னம் முழுதும் கிழிந்து தையல் போட்டிருந்தது.
“இதானா?” அழைத்து வந்தவர் அவசரப்படுத்தினார்.
“கன்னத்தில வடு ஒண்ணு இருக்கும்” என்றார் முத்துரங்கம்.
“ஏங்க.கன்னம் பூராவும் அறுந்து தொங்கிச்சு. ஜிப்பு வைச்சு தைச்சமாதிரி தையல் போட்டிருங்காங்க. இதிலே வடு, மச்சம்னா எப்படிங்க? கால்ல கைல் வேற இருந்தாச் சொல்லுங்க.!’
முத்துரங்கம் மௌனமாய் வெளியே நடந்தார்.
இன்ஸ்பெக்டர் மென்மையாய் பேசினார். அக்கறையோடு பேசுவது போலத்தான் தோன்றியது. “உங்க துக்கம் எனக்குப் புரியது. எனக்கும் இந்த வயசுல மகன் இருக்கான். அதனால நீங்க ஏதும் சொல்லாமலே எனக்குப் புரியுது. இந்த வயசுல செத்திருக்கக் கூடாது. செத்துட்டாரு. என்ன செய்யலாம்? இல்லை நாம என்னதான் செய்ய முடியும்? புலி கடிச்சுப் பொழைச்சவனும் இருக்கான் புல் தடுக்கிச் செத்தவனும் இருக்கான். நாம் எங்க, எப்போ, எப்படிச் சாவணும்னு
தீர்மானிக்க முடியுதா, சொல்லுங்க.. கையெழுத்துப் போட்டு உடலை வாங்கிட்டுப் போங்க. காரியத்திற்கு ஏற்பாடு செஞ்சு நடத்துங்க. அவர் ஞாபகமா இரண்டு பிள்ளைங்கள படிக்க வையுங்க. விதி முடிஞ்சிருச்சு வேறு என்ன செய்ய?’ என்று வேதாந்தமாகவும் பேசிக் கொண்டு போனவர், யதார்த்தமாகவும் எழுந்திருக்கும்போது சொன்னார்:
“டிரைவர் கண்டக்டர் இறந்திருக்காங்க. அரசு ஊழியர்கள்ங்கிறதால அரசாங்கம் 10 லட்சம் கொடுக்கப் போறதா சொல்லியிருக்காங்க. அவங்களோட சேர்த்து மற்றவங்களுக்கும். அஞ்சு லட்சம் கொடுக்கப் போறாங்க தகவல் வந்ததும் சொல்றேன். அட்ரஸ் சரியா கொடுத்துட்டுப் போங்க.’
தகவல் வந்தது. தபாலை எடுத்துக் கொண்டு ராவுத்தரைப் பார்க்கப் போனார் முத்துரங்கம். “வேணாம்னு சொல்லிரலாம்னு இருக்கேன்” என்றார்
“என்னத்தை வேணாங்கிற?”
“மனசு ஒப்ப மாட்டேங்குது பாய். இந்தப் பணம் எனக்கு வேணாம்’
“ஏன்?”
“நான் அவனைப் பாக்கலியே?”
“என்னது! நாந்தானே உன் கூட நின்னேன்?”
“அந்த வடுவை பாக்கலியே அது அவந்தானா?”
“இந்த மாதிரி உளறிட்டுத் திரியாத. அவன் போயிட்டான். அப்படீனு அரசாங்க க ரெகார்ட்ல ஏறிருச்சு. இந்த மாதிரிப் பேசிக்கிட்டு இருந்த, மாப்பிள்ளை போன அதிர்ச்சில உனக்கு மனசு பேதலிச்சிருச்சுனு பேர் ஆயிரும்”
“அதுவும்தான் ஆகணும்னு விதி இருந்தா ஆகட்டுமே. ஆனா இந்தப் பணம் எனக்கு வேணாம்.
இந்தா முத்து,கடாமுடானு பேசறேனு நினைக்காத. நீ இன்னும் எத்தனை நாள் இருக்கப் போறே? இல்லை நாந்தான் எத்தனை நாள் இருப்பேன்?. எல்லாரும் போய்த்தான் ஆகணும்.உனக்கப்புறம்
அந்தப் பொண்ணுக்கு என்ன வைச்சுருக்க? அந்த இத்துப் போன வீட்டைத் தவிர வேறு ஏதாவது சொத்து வைச்சிருக்கியா? உன் காலம் முடிஞ்சதும் நீ புறப்பட்டிருவ. அது? உனக்கு வேணாம் இந்தப் பணம். ஆனா அதுக்கு வேணும். ஒண்ணு புரிஞ்சுக்கோ.மனுஷன் சாஸ்வதமில்லை. ஆனால் உலகத்தில பணம் என்னிக்கும் அழியாது’”
முத்துரங்கத்தால் இப்போதெல்லாம் முன்போல் தூங்க முடிவதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரவில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை விட சானல் சானலாகத் தாவிக் கொண்டிருந்தார் என்பதுதான் சரி. இரவு பதினொன்றுக்கு மேல் இருக்கும். ஏதோ ஒரு சானல் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக் காட்சிகளை காட்டிக் கொண்டிருந்தது. கதாநாயகன் கன்னடமோ தெலுங்கோ, வினோதமான உச்சரிப்பில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். முத்துரங்கத்திற்கு வேடிக்கையாக இருந்தது.
கேமிரா இட வலமாக நகர்ந்து மேடையில் இருந்தவர்களின் முகங்களைக் காண்பித்துக் கொண்டு வந்தது. கேமிரா இறங்கப் போகும் முன் மேடை ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர்கள் மீது நிமிட நேரம் நின்றது.
யார்? அவனா? கட்டம் போட்ட சட்டை அணிந்து. கை கட்டிக் கொண்டு நிற்பவன் அவனா? அவன் போல்தான் இருக்கிறது. இருக்கிறானா!, உயிரோடு தான் இருக்கிறானா! அவன் முகத்தில் அரிசிப் பள்ளத்தைத் தேடினார் முத்துரங்கம். அதை அவர் உறுதி செய்து கொள்வதற்குள் கேமிரா கீழிறங்கி விட்டது.
மறுநாள் ராவுத்தரிடம் சொன்ன போது “பிரமையா பிரமை! அவன் செத்துட்டான்யா! நீ ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அவன் செத்துட்டான்.!” என்று பின் கொஞ்சம் கடுமையாகவே சொன்னார். ஆறுதலாகத் தோளில் கை வைத்தார். அப்படித்தான் அரசாங்கமும் இனி சொல்லும்” என்றார்.
காலங்கார்த்தால பேப்பரை வைச்சுக்கிட்டு உட்காந்திர்ற. ஓட்டைக் கண்ணாடியைப் போட்டுக் கிட்டு உலகத்தில என்ன நடக்குதுனு உத்து உத்து படிக்கற. ஊர்ல என்ன நடக்குது உனக்குத் தெரியுமா? இல்ல உன் வூட்டுல என்ன நடக்குதுனுதான் உனக்குத் தெரியுமா? தங்கை மீனாட்சி தடதடவென்று ஆரம்பித்தாள்.
“இந்தா நீ வந்து எத்தனை நாளாவுது? நாலா? அஞ்சா?அதுக்குள்ள என்னத்தை மோப்பம் பிடிச்சுட்டு வந்து நிக்கிற?’
“உன் நல்லதுக்குத்தான் சொல்ல வந்தேன். என்னை நாயாக்கிட்டியே!”
“சரி சொல்லு. குலைக்காதே!”
“ஒண்ணும் வேணாம் போ!”
“சரி, வேணாம்’”
ஐந்து நிமிடம் கழித்து அவளே ஆரம்பித்தாள்
“அனு போக்கு சரியில்ல. அடிக்கடி சிரிச்சுக்கிறா. அடிக்கடி போனை எடுத்து யார் கிட்டேயோ பேசறா. பொட்டு வச்சுக்கிறா. புடவையை மாத்திக்கிட்டு வாசலுக்கு வந்து வந்து பாக்கறா”
“புருசன் போயிட்டா ஒரு பொண்ணு சிரிக்கவே கூடாதா?” அதைச் சொல்லும் போதே, போனது அவன்தானா? என்று மனதுள் ஒரு கேள்வி ஓடியது.
“ஆறு மாசம் கூட ஆவலை. அதிகம் ஆடாம் பார்த்துக்கோ. அப்புறம் ஊர் சிரிச்சிரும்”
அவ முத்துக்கிருஷ்ணனை வேணாம்னு சொல் லிட்டாங்கிற காண்டு உனக்கு இன்னும் ஆறலைப் போல. அவ நின்னா குத்தம், உட்காந்தா குத்தம்’
“இவ வேணாம்னு சொல்லிட்டதால அவன் ஒண்ணும் கெட்டுப் போயிறலை. சிங்கப்பூருக்குப் போய் சம்பாரிச்சு வீடு வாங்கிட்டான். அவனுக்கு வாக்கப்பட்ட மகராசி, பொன்னும் பூவுமா, ஏசி, மெத் தைனு சொகமா இருக்கா. இவளுக்கு கொடுப்பினை இல்லை. இருந்தா இப்படி அத்துக்கினு போகுமா? ஆண்டவன் புண்ணியம் அவன் தப்பிச்சான்”
“எந்திரிச்சுப் போ சனியனே!’ முத்துரங்கத்தின் இரைச்சல் முன் வாசல் வரை கேட்டது.
அப்புறம் ராவுத்தர் ஒருதரம் சொன்னார். அவளைக் கடைவீதியில் அடுத்த ஊர்ப் பையனோடு இரண்டொருதரம் பார்த்ததாக. அதன் பின் முத்துரங்கம் அவளைக் கவனிக்க ஆரம்பித்தார். மாற்றம் தெரிந்தது. அவரே ஒருநாள் அவள் ஒரு பையனோடு மோட்டர் சைக்கிளில் உட்கார்ந்து போவதைப் பார்த்தார்.
அதைப் பார்த்த பின் அவரைக் கேள்விகள் மொய்க்கத் தொடங்கின. அனுவா அது? அவளா இப்படி மாறிவிட்டாள்? உடம்பு சுகம் தேடுகிறதோ? இருக்கட்டுமே, அதற்காக இப்படியா? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? பணம் வந்ததும் உடம்பு துளிர்க்கிறதோ? மாறியது உடம்பா? மனமா? அப்போது அத்தனை பேரை வேண்டாம் என்றாளே, அவளா இப்போது எவனோடோ சுற்றுகிறாள்? அதுவும் ஊர் பார்க்க? எல்லோருக்கும் தெரியட்டுமே என்றுதான் சுற்றுகிறாளோ?
கூடவே எதிர்க்கேள்விகளும் எழத்தான் செய்தன. என்ன தப்பு? மனுஷ மனசுதானே? மாறாமலேயே இருக்க அது என்ன மண்ணா, கல்லா? மண் கூட மழை விழுந்தால் மாறுகிறதே? உடம்பு சுகம் தேடுகிறது
என்று நீயே நினைப்பது உனக்கே வெட்கமாக இல்லையா? சரி உடம்புதான் காரணம் என்றே வைத்துக் கொள்வோம். அவள் மண வாழ்க்கையில் என்ன சுகம் கண்டாள்?. அந்த மூன்று மாதத்தில் அப்படி என்ன கண்டிருக்க முடியும்? அவள் பாதுகாப்புத் தேடுகிறாளோ? அப்படியென்றால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? உன் நிழலே கதி என்றிருக்க நீ என்ன நிரந்தரமானவனா?
ஒன்றை ஒன்று மறுத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடிய கேள்விகளில் குழம்பிப் போனார் முத்துரங்கம். இரவில் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தார். தீடீரென்று அந்தக் கேள்வி அவர் மனதில் எழுந்தது
கணவன் போய்விட்டான், இனி யார் என்னைக் கட்டுப்படுத்த என்று நினைக்கிறாளோ? ஆனால் அவன் போய்த்தான் விட்டானா?
எங்கே அந்த வடு? அந்த அரிசிப் பள்ளம்? அவன் இருந்தால் ஏன் போன் பேசவில்லை? திரும்பி வரவில்லை?அவன் தன் கனவுகளைத் கொண்டு போய்விட்டானா? பறக்கிறவனுக்கு சுமை துரத்திக் தூக்க முடியாது என்றாளே அனு? மூன்று மாதத்தில் அவள் ஒரு சுமை என்று முடிவு செய்து விட்டானா? சினிமாக்காரன் அப்படி ஒளிந்து கொள்ள முடியுமா? என்றாவது ஒருநாள ஏதாவது ஓரிடத்தில் வெளிப் பட்டுத்தானே ஆக வேண்டும்? அப்படி இருந்தால் அவன் திரும்பி வருவானா? வந்தால் அனு என்ன செய்வாள்? எப்படி அவனை எதிர் கொள்வாள்?
அவளிடம் சொல்லிவிடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றியது. தான் பார்த்த உடலில் வடுவைக் காணாதது, டிவியில் கண்டது எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. சொல்லாவிட்டால் தனக்கு நிம்மதி கிடைக்காது. சொன்னால் அவள் சந்தோஷம் போய்விடும்.

படுக்கையிலிருந்து எழுந்தார். நெகிழ்ந்திருந்த வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டார். மெல்ல எழுந்து அனு படுத்திருந்த அடுத்த அறைக்குப் போனார்.
கருப்பையில் நிச்சலனமாய் உறங்கும் குழந்தை போல முழங்காலை வயிற்றில் மடக்கிக் கொண்டு ஒரு கேள்விக் குறி போலச் சுருண்டு தூங்கிக் கொண்டிருந் தாள் அவள். அறையில் பூசினாற்போல் நிலவின் வெளிச்சம் படர்ந்திருந்தது.
‘அனு” என்றார்.
அவள் அசைவின்றிக் கிடந்தாள்.
“அனு!” என்றார் சற்று உரக்க.
கண்ணைத் திறந்த பார்த்த அனு கையை முறித்துக் கொண்டு நிமிர்ந்தாள் அவரைப் பார்த்ததும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்
“என்னப்பா தூங்கலையா? உடம்புக்கு முடியலையா?
அவருக்குப் பேச்சு வரவில்லை. சட்டென்று தொண்டை வறண்டு விட்டது போலத் தோன்றியது
“அங்க வடு..” என்று ஆரம்பித்தார். அவர் குரல் அவருக்கே கேட்டிருக்காது.
“என்னப்பா சொல்றீங்க? புரியலை”
கண நேரம் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். புதுசாகப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நின்றார். அவள் பிறந்த போது ஆஸ்பத் திரியில் பார்த்த முகமாக அது தோன்றியது மௌனமாக நின்று கொண்டிருந்தார். அது மௌனமா? யோசனையா? பின் தீர்மனமான குரலில் சொன்னார்:
“ஒன்றுமில்லைமா!”

குமுதம், 19.01.2022

மாலன்/அந்தரத்தில் கண்ணாடிதுடைப்பவர் – விருட்சம் நாளிதழ்