சசிகலா விஸ்வநாத்/ஏக்கம்

அம்மா, பாட்டியைக் கடிந்து ஒரு வார்த்தை
சொல்வதைக் கண்டு ஓடி வந்த சிறுமி;
அம்மாவைப் பார்த்து முறைத்தது!
புரிந்ததா, அதற்கு? தெரியவில்லை,
எனக்கு! அம்மா கையிலிருந்த தன்
பொம்மையை பிடுங்கிக் கொண்டு
”நான் இனி பாட்டி செல்லம் தான்’ என்று
சொல்லி பாட்டி மடியில் உட்கார்ந்து
கொண்டு, வலது கை விரல்களை மடக்கி
‘டூ’ விட்ட நிமிடம், ஏங்கினேன்;
எனக்கு ஒரு பெயர்த்தி இல்லையே..
எனக்காக பேச;
எனக்காகப் பரிய;
என் பொருட்டு
அவள் அம்மாவிடம்
“டூ விட.”

(தபால் கார்டு கவிதை 28.03.2025 அன்று அனுப்பியது)