
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திருவனந்தபுரத் தில் தமிழாசிரியப் பணிபுரிந்து வந்த காலத்தில் அடுத்த வீட்டு நண்பர் ஒரு விருந்து நடத்த விரும்பினார் தம் வீட்டில் இடவசதி இல்லாததால் இவர் வீட்டிலே நடத்த அனுமதி பெற்றிருந்தார். இவரும் உடனிருந்தார்; உதவி செய்தார். விருந்தினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது கவிமணிக்கு ஒரு தந்தி வந்தது. இவர் அதைத் தாமும் படிக்காமலே வைத்துக்கொண்டார். விருந்து முடிவுற்ற பின்பே தந்தியைத் தனிமையில் பிரித்துப் பார்த்தார். தன் மனைவியிடம் கூடச் சொல்லிக்கொள்ளாமல் நாகர்கோயிலுக்குப் போய் விட்டார்! தந்திச் செய்திதான் என்ன? இவருடைய மருமகள் நாகர்கோவிலில் திடீரென அகால மரணம் அடைந்து விட்டாள்.
நான் இந்த வாழ்க்கை வரலாற்றுத் துணுக்கை நில வூட்டி “இதில் கவிமணியின் மனப்பூட்டுக்குத் திறவுகோலைக் காண்கிறேன்’ என்றேன். உடனே நண்பர் நகைத்தார். ‘“பூட்டும் இல்லை,, தாளும் இல்லை; அது திறந்த மனம்! தெரியாதா உங்களுக்கு?” என்றார். சடையப்ப வள்ளலின் வீட்டுக்கு அடையாளம் சொல்லும்போது “அடையா நெடுங் கதவு” என்றார் ஒரு புலவர். அந்த வீடு நம் கவிமணியின் இதய வீட்டுக்கும் ஓர் அறிகுறிதான். இதை நானும் நன்கு அறிவேன்.
குணசித்திரத்தின் உயிர்நிலை
விருந்தோம்பும் பண்பு தமிழ்ப் பண்பாட்டின் உயர்நிலை; உயிர்நிலை என்றும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அந்தப் பண்பிலே ஊறிய
நம் தமிழ்க்கவிமணி அதில் எவ்வளவு பொருளை நிரப்பி விட்டார் பாருங்கள்!
மோப்பக் குழையும் அனிச்சம்; முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
என்ற குறளின் பொருளை உ ள்ளபடியே உணர்ந்து ஒழுகி யவர் இவர் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். மோந்து பார்த்தாலே குழைந்து வாடிப்போகும் அனிச்சம்பூவைக் காட்டிலும் மென்மையானது. விருந்தினரின் முகமலர் என்பதை நினைத்துப் பார்க்கிறான் விருந்தோம்பும் பண்-பாளன் என்பது வள்ளுவர் குறிப்பு.
கவிமணியின் இத்தகைய இதயப்பண்பிற்கு ஓர் உதாரண மாக நான் காரைக்குடியில் ‘குமரன்” பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்திருந்த காலத்தின் நிகழ்ச்சி ஒன்றும் நினைவிற்கு வருகிறது. அப்போதுதான் முதல் முதலாகக் கவி மணியை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 1940 ஆம் ஆண்டில் கவிமணி என்ற பட்டம் பெறப்போகும் தேசிகவிநாயகம் பிள்ளையை தே.வி. என்பது இவர் பெயரின் சுருக்கமான புனைப்பெயர். ‘கவிமணி” இவருக்குச் சூட்டப் பெற்ற பட்டப்பெயர் என்றால் தே.வி.என்பது இவர் தம்மைத்தாமே ஒரு குறளாக்கி மறைத்துக் கொள்வதற்காக . அடக்கமாய் வைத்துக்கொண்டதாகும்.
கைத்திறன் பாடல்கள்
காரைக்குடியில் நான் கவிமணியை அறிமுகப்படுத்திக் கொண்டது நேரில் அன்று; கடிதமூலமாகத்தான். முகத்தைப் பார்ப்பதற்குமுன்; தம் கைத்திறன் பாடல்களைக் “குமரனில்’ வெளியிடுமாறு வேண்டிக்கொண்ட இவரது அன்புத் திருமுகம்
-கண்டேன்.
வெயில் வரினும் மழைவரினும்
விரிகுடையரம் கையே!
என்று தொடங்கும் பாடல்களை என் முகவரிக்கு அனுப்புயிருந்தார் கவிமணி. அவற்றை ஆசிரியர் முருகப்பச் செட்டியாரும் நானும் படித்து ரசித்துப்பத்திரிகையில் வெளியிடத்
தீர்மாளித்தோம். ‘ஆனால், ஆனால், என்று நீள இழுத்தார் முருகப்பா “ஆனாலுக்கு இடமில்லை” என்றேன் நான். கையின் ஒத்துழைப்பினால்தான்
மூளைபெருகிப் பெருகி வளர்த்திருக்கிறது; மனிதன் என்ற இருகால்-பிராணியைப் பரிணாம ஏணியில் படிப்படியாக ஏறச் செய்திருக்கிறது. நாகரிக வளர்ச்சி முழுமையும் கைத்திறனின்
திருவிளைளையாடற்புராணம் தானே! இப்படி நான் சொன்னதும் முருகப்பா, “இரு பாடல்களில் மகாத்மா காந்திக்கு இடம்
கிடைக்கவில்லையே! அவரது கைராட்டையும் கதர் இயக்கமும் கைத்திறன் அல்லவா? இக்கைத்திறனும் சேர்ந்தால்தானே நமது நாகரிகம் முழுமை பெறுவதாகும்?” என்று சொல்லிப் பெருமூச்சு
விட்டார்.
இது குறித்து நான் தேசிகவிநாயகம் பிள்ளைக்கு எழுதினேன். முருகப்பாவின் தேசிய உணர்ச்சியைப் பெரிதும் பாராட்டி இவர் பதில் கடிதம் அனுப்பியதுடன், பின்வரும் பாட்டையும் கைத்திறன் பாடல்களுடன் சேர்த்துக்கொள்ளு மாறு அனுப்பி வைத்தார்:
நாடிய சீர் நாடடைய
நாட்டுருட்டும் கையே!
நல்ல கதர் நெய்ய மிகு
வல்லமை கொள்கையே!
பாடிய வாய் தேனூறும்
பாரதியார் பாடல்
பண்ணமையப் பாடுதற்குப்
பரணி கொட்டும் கையே!
காந்தியடிகளுக்கு முருகப்பா விரும்பியபடி, கைத்திறன் பாடல்களில் இடம் கிடைத்ததுமட்டுமா? நாங்கள்
எதிர்பாராத நிலையில், பாரதியின் பாடல்-தொண்டுக்கு அதிசயமாக
ஓர் இடம் கிடைத்துவிட்டது. விசுவாமித்திரன் விரும்பியபடி ராமனை அனுப்பத் தவறியதற்காக, அபராதம் செலுத்துவது போல். வட்டிக்குத் தொடர்வட்டியும் கட்டுவது போல், லட்சுமணனையும் சேர்த்து அனுப்பினாராம் சக்கரவர்த்தி. அந்த மாதிரி, காந்தியோடு பாரதியின்கவிதைத் தொழிலையும் கைத்திறனுடன் இசைத்துக் காட்டிவிட்டது கவிமணியின் மேதை. எப்படி? ரசிகர்கள் கையால் தாளம் போட்டுப் போட்டு ரசிக்கிறார்களாம் பாரதி பாட்டை.
“பாடிய வாய் தேனூறும் பாரதியார் பாடலை” வாய்பாடும்போது, கையும் தன்னை அறியாமலே அந்தப் யண்ணுக்கு இசைந்தபடி தாளம் போடுகிறது என்ற இந்தக் கற்பனை எங்களைப் பரவசமாக்கியது.
”சபாஷ்”போட்டவர் சிலர், ”பேஷ் பேஷ்” என்று விரல் சுடக்குப்போட்டவர் சிலர். முருகப்பா குதித்துக் கூத்தாடாத குறைதான். எங்களுடைய இம்
மகிழ்ச்சிக்கு ஈடான ஒரு மகிழ்ச்சியைக் கவிமணியும் அனுபவித்துப் பாடி யிருக்கிறார். ஆறுமுகம் பிள்ளை என்ற பண்டிதரின் தசாவதானத் திறனை வியந்து பாராட்டுவது இப்பாட்டு.
ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டு எளியேன்
வேறு முகமன் கூற வேண்டுமோ?-தேறுமதி
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து “சபாஷ்
பேஷையா!’ என்ற பிறகு!
தேசிக விநாயகமா? தேசிய விநாயகமா?
பாரதியாரின் கவிதையைப் போல் அவரது தேசிய உணர்ச்சியும் கவிமணியை ஆட்கொண்டது,
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா!
என்று தொடங்கும் பாட்டைத் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலுள்ள கிராமவாசிகளும் கேட்டு ரசித்திருப்பார்கள்.
சென்னையை முதல் முதல் பார்த்துப் பிரமிக்கும் கிராமவாசியின் நிலையில் தம்மை வைத்துக் கொண்டு பாரதியாரின் செய்யுளுலகைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்கிறார் இக்கவிஞர் பெருமான்.
“என்னைப்பார், என்னைப்பார்!” என்று பாரதி பாடல் களெல்லாம் வந்து வந்து தம் பண்ணழகையும் வண்ணக் கற்பனைச்சிறகையும் தனித்தனியாகக் காட்டுகின்றன. “பாரதி பாடல்களும் பட்டிக் காட்டானும்” என்ற தலைப்பில் கவிமணி இயற்றியுள்ள அதிசயமான பாராட்டுப் பாட்டிலே. பாரதியாரின் இக்கவிதை – வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கில்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன்போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.
கைத்திறன் பாட்டிலே “நாடிய சீர் நாடடைய” என்று தொடங்கும் பாடலை அனுபவித்த “குமரன்” வாசகர்களில் சிலர், தேசிகவிநாயகம் பிள்ளையைத் தேசியவிநாயகம்
பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.
பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய ராஜாஜி பின் வருமாறு கூறியுள்ளார்: “பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; கரடுமுரடு. உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவி மணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை.” இது ஓரளவு உண்மைதான்.
கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்து,
நம் தமிழ்ப் புலவர்களில் சிலர் பாடியிருப்பதாகப் பாரதியார் குறிப்பிடுகிறாரே, அந்தத் திறனாய்வு பாரதிக்குப் பொருந்துவதுபோல் கவிமணிக்குப் பொருந்துவதன்று. பாரதி வாக்கிலும் “நகாசு ” த்திறன் மிகுந்திருக்கக் காணலாம். இத் திறனும் பாரதியின் இயற்கைக் கவித்திறனுக்கே உரியதாக அமைந்திருப்பதையும் காண்கிறோம். எனினும் பாரதியார் கவிமணியின் வாக்கில் காண்பதுபோல் நல்ல காற்றும் வானவெளியும் மட்டும் காணப்படவில்லை; புயல் காற்றையும் வான ஒளியையும்கூட நாம் காண்கிறோம்.
கவிமணியின் தமிழ்
ஆராய்ச்சிப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை கூறுவது போல், “கவிமணியின் தமிழ் நல்ல தமிழ். நம் மூதாதையரின் பண்பாட்டிலும் மரபிலும் ஊறித் தோய்ந்து இனிமை முற்றிய தமிழ்’ எனினும் இது பாரதியாரின் சண்ட மாருதத் தமிழ் அன்று; தமிழ்த் தென்றல்தான். நாகர் கோவிலுக்குச் சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள புத்தேரி என்ற சிற்றூரில் அமைதியாக ஆசிரமம் போன்ற சிறு வீட்டில் வாழ்க்கை நடத்திய ஒரு நல்ல தமிழரின் குழலி சையையும் குழந்தை மழலையையும் நினைவூட்டும். இதய
கானத்தைக் கேட்கிறோம். இவரது பண்பட்ட பழகு தமிழிலே.
பாரதியாரின் தர்மாவேசமாகிய கோபாவேசத்தை இங்கே நாம் காணமுடியாது.
தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை
தெளிந்து உரைப்பது கவிதை
என்று கவிமணி பாடியிருக்கிறார். இந்த வாக்கிற்கு இவர் தமிழும் கவிதையுமே சான்றாகும் பிறர் உணர்ச்சிகளைப் பெரிதும் மதித்துப் போற்றும் பண் பும் பண்பாடும் இந்த வாக்கிலும் வாழ்க்கையிலும் ஊடுருவிக் கிடப்பதைக் காண்கிறோம்.

உங்கள் கட்டுரை மிக மிக அருமை அய்யா
இதைப் படித்ததும் கவிமணி அவர்கள் கவிதை என்
நினைவில் வந்தது – பின்வருமாறு
மலையும் அணிலும்
——————————
அற்பத்திருடா என்றென்னை அழைத்த
வெற்பே யானும் விளம்பக் கேளாய்
அளக்கலாக அளவும் பொருளும்
துளக்கலாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம் தரும் தன்மை உனக்கென்று
உரை மொழி முற்றும் உண்மையே ஆயினும்
ஒருவகைப் பொருளின் ஓருலகாமோ
ஒரு வெயில் மழையின் ஓராண்டு தேறுமோ
பற்பல பொருளும் பற்பல பருவமும்
ஒன்றாய் கூடியே உலகாம் ஆண்டாம்
வனங்களை முதுகில் வகித்து நின்றிட
வல்லை நீ ஆயின் மற்றிங்கெனைப்போல்
நெல்லைக் கொரிக்க நின்னாலாகுமோ
ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம்
ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம்
ஆதலின் அற்பர் ஆகாத தவறென
ஓதுதல் மடைமையின் சாதனையாமே
R. Ganesan – West Mambalam – Member in -நவீன விருட்சம்