லாவண்யா சத்யநாதன்/பிராணாவஸ்தை

மலையளவு
சொத்திருந்தும்
கைநிறைய
பணமிருந்தும்
மனதுக்குள் வறியவன்.
கடலை மிட்டாய் வாங்க
கணக்குப் பார்ப்பான்.
உடைகள் வாங்க பல
கடைகள் ஏறி இறங்குவான்.
அளவு சரியில்லை
நிறம் சம்மதமில்லையென்று
சாயம் போன சட்டை
அணிந்து திரிவான்.
சுயமறுப்பு சிகாமணி
நாலு தலைமுறை வீட்டை
நவீனப்படுத்துமாறு
பிள்ளைப்பூச்சியாய்
துளைத்தாள் மனைவி.
எனக்கும் ஆசைதான்
கல்லுக்கும் மண்ணுக்கும்
காசைக் கொட்ட
வேண்டாமென்று
காசை மிச்சம்
பிடித்தான்.
இப்போது பார்
நிராகரித்த ஆசைகளை
நினைத்து
அல்லாடுகிறது உயிர்.
சட்டி லேசில் உடையாமல்.