அசலும் நகலும்-மாலன் /ஜெ.பாஸ்கரன்

 ஒரு தங்கச் சங்கிலியைச் சுற்றிச் சுழலும் கதை.

அரசியின் அம்மா வேலை செய்த வீட்டில், தங்கச் சங்கிலி காணாமல் போக, அந்தப் பழி அம்மாவின் மேல் விழுந்து, ஊரின் பார்வை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொள்கிறாள். ”சங்கிலி ஒரு காலத்தில் குடும்பத்தின் அவமானச் சின்னம். அம்மாவின் உயிரைக் குடித்த சுருக்கு கயிறு” (பிறகு அந்த சங்கிலி கிடைத்து விடுகிறது, அதாவது அம்மா சாம்பலான பிறகு!)

அரசியின் ஆசை எல்லாம் நல்ல தங்கச் சங்கிலி ஒன்று வாங்கிக் கழுத்தில் போட்டுக் கொண்டு, தங்களை அவமானப்படுத்தியவர்களை, தரக் குறைவாகப் பேசியவர்களைத் தண்டிக்கும் வகையில் அவர்களுக்கு முன் நெஞ்சை நிமிர்த்தி செல்ல வேண்டும் என்பதுதான்! அதற்காகத்தான் கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறாள் அரசி. இரட்டை வடமாக அல்லது முறுக்குச் சரடாக அல்லது கோதுமை மணி கோர்த்த சரடு மாதிரி வாங்கவேண்டும் என ஆசைப்படுகிறாள்.

62 வயது செளந்தர வல்லி, வலது பக்கம் விளங்காமல் போய்ப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளி. வீட்டோடு இருந்து, இரவு பகல் எந்நேரமும் அவளைக் கவனித்துக் கொள்ளும் வேலை அரசிக்கு! “காலை பல் விளக்குவது முதல் இரவு கொசுவர்த்தி கொளுத்தி வைப்பது வரை அவள் பாடு தான்- பெரும்பாடு.”

வருகின்ற பணத்தில் மாதம் 5 ஆயிரம் ரூபாய், மற்றும் சௌந்தரவல்லியின் பெரிய பிள்ளை கிருஷ்ணன் அவ்வப்போது கொடுக்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் ‘டிப்ஸ்’ எல்லாம் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைக்கிறாள்!

“பேங்க்ல போட்டு வையேண்டி”  என்கிறாள் கிழவி. அவளுக்கு அரசி சங்கிலிக்காகப் பணம் சேர்ப்பது தெரியும்.
”இருக்கட்டும், இங்க கரையானா தின்னுடப்போகுது?”  என்கிறாள் அரசி.

ஒருமுறை கிருஷ்ணன் வந்து, தான் அமெரிக்கா போவதாகச் சொல்ல அரசிக்கு ‘திக்’கென்று இருக்கிறது.  அவளுக்கு இனிமேல் ‘எங்கே பணம் கிடைக்காதோ’ என்கின்ற கவலை.

“பெத்த பெண் கூட இப்படி பார்த்துக்க மாட்டாள். ஆய்  போனா  அலம்பி விடறதுல இருந்து, அத்தனையும், அசூயைப் படாமல் ஆர் செய்வா? மூச்சு விடுவதும், மூணு வேளை சாப்பிடுவதும் மட்டும் தான் நான் பண்றேன். மத்ததெல்லாம் அவதான்” என்னும் அம்மாவைப் பார்த்து நெகிழ்ந்து போகிறான் கிருஷ்ணன்.

அம்மாவைத் தான் வைத்துக் கவனிக்க முடியாவிட்டாலும், அரசி இவ்வளவு சிறப்பாக அம்மாவை கவனிப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி. அவனுடைய வேலையும் ஓட்டமும் அப்படி! பணம் நிறைய இருந்தாலும், அவனால் அம்மாவை அருகில் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கை நிறையப் பணம் அள்ளிக் கொடுக்கிறான் அரசிக்கு. எண்ணிப் பார்த்தால், ரூபாய் 10200 இருந்தது! இதுவரை சேர்த்ததை எல்லாம் பார்த்தால் இன்னும் 15,000 இருந்தால் போதும் கைக்கெட்டும் தூரம்தான், சங்கிலி வாங்கி விடலாம். அரசிக்கு மகிழ்ச்சியுடன் கண்ணீரும் வந்தது.

அவளுடைய கணவன் முருகேசன், நகர்ப்புற அடுக்குமாடிக் குடியிருப்பில் வாட்ச்மேன்! அவனுடன் சென்று விரும்பிய படி சங்கிலி வாங்கி வருகிறாள்.  அதுவும் அந்த கிழவி, ”முதல் முறை நகை வாங்கப் போகிறாய், கணவனடன் சென்று வாங்கு” என்று அவனுடன் அனுப்பி வைக்கிறாள்.

வாங்கி வந்த சங்கிலியைப் பார்த்துவிட்டு சௌந்தரம், ”ஜொலிக்கிறதே முத்துச்சரம். தக்கையாட்டம் இருக்கு. இதுக்கு லட்ச ரூபாய் வாங்கிட்டானே? அவனும்தான் என்ன செய்வான், பாவம். இப்போ தங்கம் விலை ரெக்கை கட்டிண்டு தானே பறக்கிறது?”என்கிறாள்.

கிழவி மறைந்து விடுகிறாள். அரசியும் வேலையை விட்டு விடுகிறாள். கிழவி வீட்டில் பெருமாளை வணங்கி போட்டுக் கொண்டதுதான் என்றாலும்,  நாகத்தம்மனைப் போய்க் கும்பிட்டு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். மேலும், ஊராருக்குத் தான் தங்கச் சங்கிலி வாங்கியுள்ளதைக் காண்பிக்க வேண்டுமே – அதுதானே அவளது சபதம்!

புடவைக்கு மேல் தெரிகிறார் போல் சங்கிலியை போட்டுக்கொண்டு, தன் கிராமத்திற்குப் போகிறாள். இது ‘அசல் நகை’ தானா என்பதில் செண்பகம், கிருஷ்ணவேணி, பூங்கோதை, தமயந்தி, சத்தியவதி, எல்லோருக்கும் சந்தேகம்! அரசி சங்கிலியைத் திருப்பி ஹால்மார்க்கைக் காண்பித்த பிறகும் விடவில்லை சந்தேகம். சாமி கும்பிட அந்த பக்கமாக வந்த சாமிநாத பத்தரிடம் ‘இது அசல் தங்கமா?’ என்று பார்க்க சொல்கின்றனர்.  பத்தரும் சங்கிலியைச் ”சிறிது நேரம் கூர்ந்து பார்த்தார். குழந்தையைப் போல தடவிப் பார்த்தார். கையை குவித்துக் கொண்டு எடை போடுவது போல குலுக்கிப் பார்த்தார். சிகிச்சைக்கு வந்தவனைப் பார்க்கிற டாக்டரின்  பார்வையாகப் பார்த்தார். அப்புறம் உறுதியான குரலில் சொன்னார், ”ஆமாம்! இது அசல் தான். அதற்கு அப்புறமும் சந்தேகமானால் கடைக்கு வாங்க உரசி பார்த்து விடுவோம்”

அதற்கான நேரமும் வந்தது. கணவன் முருகேசுக்கு ஒரு சாலை விபத்து. தண்ணீர் லாரி தட்டி விட்டுக் குப்புற விழுந்து தலையில் அடிபட்ட முருகேசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை. பில் எகிறியது.  வேறு வழி இல்லை. அரசி, சங்கிலியை விற்று, கணவனை  மீட்டாள்.  அப்போது முருகேசன், ”சங்கிலியே வித்திட்டியே புள்ள”  என்று வருந்திக் கேட்க, அதற்கு அரசி, ”அம்மாவுக்காக வாங்கினேன். உனக்காக வித்தேன். உன்னை விடவா அது பெரிசு?”  என்கிறாள். முருகேசன் நெகிழ்ந்து போய் அவளை அணைத்துக் கொள்கிறான்.

அந்த வருடமும் கொடைக்கு கிராமத்துக்குப் போவதா என்பதில் அரசிக்குக் குழப்பம். ஆத்தாவுக்கு பொங்கல் வைக்கவில்லை என்றாலும் கையை உயர்த்தி கும்பிடாவது போட்டுவிட்டு வர வேண்டாமா? அதைவிட, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மொட்டை கழுத்தும் ரப்பர் வளையுமாகப் போய் நின்றால் அத்தனை கண்களும் அவள் கழுத்தை தானே பார்க்கும்!

முருகேசன் அதற்கு மாற்றாக, தங்க நிறத்தில் ஒரு சங்கிலி – அசல் போல ஒரு நகல் சங்கிலி –  கவரிங் சங்கிலி வாங்கித் தருகிறான், கிராமத்துக் கொடைக்குப் போக.

இப்போதும் அந்த நகல் சங்கிலியைப் புடவை தலைப்புக்கு மேலே தவழ்கிறார்போல் அணிந்து செல்கிறாள்.

‘ புதுசா?’

‘.. ம்’

‘ அசலா?’

“ஆமாம் தங்கம் தான்! நான் தான் அன்னைக்கே சொன்னேனே!”  என்றார் அந்த பக்கமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த சாமிநாத பத்தர்.  அரசி சிரித்துக் கொண்டாள். 

அடிப்படையில் எல்லோரும் நல்லவர்களே. சமய சந்தர்ப்பங்களே மனிதர்களைத் தவறாகக் காட்டுகின்றன. அசலை நம்புவதற்குப் பல கேள்விகள், சந்தேகங்கள்! நகலை கேல்விகள் கேட்காமல் நம்பிவிடுகிறார்கள் மனிதர்கள்! ஆனால், அசலும் நகலும் வாழ்வின் இரண்டு பக்கங்களே!

மாலனின் சிறப்பான சிறுகதைகளில் இதுவும் ஒன்று!

(Ref: புலி வேட்டை – சிறுகதைத் தொகுப்பு. கவிதா பப்ளிகேஷன் சென்னை. 600 017. 044-42161657)