நகுலன்/நவீனன் டைரி

அதுநாள் உங்கிட்டெ சொல்லியாச்சேங்கன்’
அவர் மீண்டும் தொடங்கினார்.
“ஒரு கதைக்கு ரூ 100/-, 200/- கிடைக்கும்ன எழுத்தைப் பத்திக்கூட யோசிக்கத்தான் வேண்டியிருக்கு”
“ஆமாம் அதைப்பத்தி இப்பப் பலரும் பலமாத்தான் யோசிச்சிண்டிருக்கா”
“ஆனா ‘நவீனன்’ அப்படி ஒரு மோசமான எழுத்தாளன் இல்லென்னு ஒரு வட்டாரத்திலெ பேர் இருக்காமே”
“ஏன்?”
“இல்லெ உங்க சிநேகிதராச்சேன்னு கேட்டேன், அப்படித்தானா?”
-‘இருக்கலாம்”
‘’ஏன் இழுக்கறேள்?”
“உங்க கிட்ட சொல்றதுக்கென்ன? அவன் கிட்டக்கூட இதைப் பற்றிப் பேசிப் பார்த்தேன். உங்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்-அவனுக்கே அவன் எழுத்தைப் பற்றிஅப்படிச் சிலாக்யமான அபிப்ராயம் இல்லையோன்னு தோன்றுகிறது. நான் அவனையே ஒரு முறை கேட்டேன்”
“எதைப் பற்றி?”
““நீங்கள் இப்பொழுது சொன்னீர்களே அதைப்பற்றி”
”எதைப் பற்றி?”
‘அவன் எழுத்தைப் பற்றி தன் அபிப்பிராயம் என்ன என்று”
‘அதைப்பற்றி நீங்கள் எப்படி அவனைக் கேட்க முடியும்?”
ஒரு கணம் இவன் மனம் குழம்பியது. அடுத்த நிமிஷம் அவனுக்குச் சந்தான கோபாலராமன் எப்படியிருந்தாலும்
அவனும் நவீனன் அண்ணன்தானே என்பது ஞாபகம் வந்து போனது. அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு சொன்னான்.
“நான் அவனை அவன் எழுத்தைப்பற்றி அவன் நினைக்கிறான் என்று கேட்டேன்”
‘அதற்கு அவன் என்ன சொன்னான்?”
“ஏன் கேட்டோம் என்று ஆயிற்று’
“ஏன்?”
‘அன்று நாங்கள் இருவரும் அவன் அறையில் தனியாக இருந்தோம்”
“எப்படி?”
“எதிர் எதிர்”
“சொல்லுங்கள், சுவாரஸ்யமாக இருக்கு’
“நான் கேட்டவுடன் அவன் முதலில் ஒன்றும் சொல்லவில்லை”
”பிறகு”
”வெற்றிலை போட ஆரம்பித்தான்”
“பிறகு”
‘வெற்றிலையை வாயில் அடக்கிக் கொண்டு இருந்தான்”
‘பிறகு’
“வெற்றிலையை வாயில் அடக்கிக் கொண்டு அதை ரஸித்துக் கொண்டிருந்தான்’
“பிறகு”
“எழுந்து சென்று வெற்றிலைச் சக்கையைத் துப்பினான்.”
“பிறகு”
“தண்ணீரால் வாயைக் கழுவி விட்டுத் தண்ணீரைத் துப்பினான்”
“பிறகு”
”அவன் ஒரு பத்துநிமிஷம் பேசாமல் இருந்தான்`
“பிறகு”
“என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்”
“பிறகு”
“என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்”
“பிறகு”
“எனக்குப் பயமாக இருந்தது”
“பிறகு”
“மீண்டும் வெற்றிலை போட்டுக் கொண்டான்
“பிறகு’”
“பேச ஆரம்பித்தான்”
“முதன் முதலில் நான் அவளை எப்போது பார்த்தேன்? தெரியவில்லை. தினம் அவளைப் பார்த்து வருவது என்பது உண்மையான கோவிலில் போகாத எனக்கு கோவிலில் ஒரு பக்தன் தினம் சென்று ஆண்டவனைத் தரிசித்து வருவது போல் ஆயிற்று. அவளை நான் முதலில் கண்டதும் ஏதோ ஒன்று என்னை அவளிடம் ஈர்த்திருக்க வேண்டும் – அவளிடம் இல்லாத ஒன்று-நான் அவளிடம் இருக்கிறது என்று சர்வ நிச்சயமாக உணர்ந்தது ஏன் ? வேறொன்றுமில்லை; ஒல்லியாக தான் இருந்தாள். நேர் நடை; நன்றாக உடை உடுத்துக் கொள்வாள். சிவப்பு ரவிக்கை.சிவப்புப் புள்ளிகள் இறைத்த கறுப்புப் புடவை- தங்கத்தில் காதில் தோடு-ஒரு அல்லது இரு தங்க வளைகள்-வெள்ளைப் புடவை சிவப்பு ரவிக்கை-பெரிய கறுப்புப் பர்ஸ்-எவ்வளவு நாட்கள்-இங்கிருந்து அவள் மாறிப் போனது-எனக்கு அவள் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் அழைத்தது-இப்பொழுது அவளுக்கு இரண்டு குழந்தைகள். இன்னும் இருக்க வேண்டும் – நிச்சயமாகத் தெரியாது – அவன் அன்று பார்த்தமாதிரியே தான் இருந்தாள்-ஒவ்வொரு எழுத்து எழுதும்பொழுதும் அவள் ஞாபகம்தான் வருகிறது-
ஒரு விமர்சகர் எழுதின மாதிரி அவளைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதினால் மாத்திரம் எழுத்து எழுத்தாகிவிடுமா ? என்று. அவருக்கு அவர் கூறியது அவர் வரை சரி; இன்னொருவர் சற்றுக் குடித்த போதையில் கேட்டார்- அப்படி என்ன இதை இவ்வளவு பெரிது படுத்துகிறீர்கள்? முயற்சி செய்தால் கிடைக்காதா ? என்று கேட்டார். அவரும் அவர் வரையில் சரிதான். சமீபத்தில் ஒரு நண்பருடன் ஒரு இருநாள் தங்க வேண்டி இருந்தது – இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இருள் சூழ இரவு 12} மணிவரை- அடுத்த நாள் வீடு திரும்புமுன் அவளைப் பற்றிப் பேச்சு வந்தது. அவளில் நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? நானும் தான். பார்த்தேன். அப்படிப் பிரமாதமாக இல்லையே என்றார். அவர் சொன்னதும் அவர் வரையிலும் சரிதான். அவரேதான் சொன்னார் ‘மௌனி’யின் சாசுவதமான அடிநாத மெல்லாம் பெண்களிடம் ஆண்களுக்குள்ள கவர்ச்சி என்றார். மறுபடியும் கேட்டார். நீங்கள் ஏன் விமர்சனம் எழுதும் பொழுது கூட இவளைப்பற்றி இடையில் பேசுகிறீர்கள் என்றார். அவர் சொல்வதில் அவருக்கும் நியாயம் உண்டு. ஜாய்ஸ்தான் என்று நினைக்கிறேன்-அவன் ஜீவிய சரித் திரத்தை எழுதிய ஒருவர் இதைக் குறித்திருக்கின்றார். அவன் ஐரோப்பாவில் ஒரு ஊரில் ஒரு தெருவில் ஒரு முறை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண்ணைப் பார்க்க நேர்ந்த தாக— அவளும் அவனைப்பார்த்ததாகத்தெரிகிறது. அவனுக்கு அவளிடம் அப்பொழுது ஒரு ஈடுபாடு. வருஷங்களுக்குப் பின் அவன் ஐரோபபாவில்-அப்பொழுது உலக மகாயுத்த சமயம் – ஒரு ரயிலில் ஒரு கம்பார்மெண்டில் உட்கார்ந்திருந் தானாம்-அவன் இருந்த ரயில் முன் வேறொரு ரயில் மெல்ல நகாந்து கொண்டிருந்ததும் அவன் அகஸ்மாத்தாக ஒரு. கம்பார்ட்மெண்டைப் பார்த்ததும் அந்தப் பெண்ணை அவன் பார்த்ததாக-அவள்? – தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் கடைசிவரையில் அவன் மனைவியுடன் அன்பாக இருந்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். நீ என் எழுத்தைப் பற்றிக் கேட்கிறாய். எழுத்து என்றால் என்ன? நாம் ஏன்,எதற்காக எப்படி எழுதுகிறோம்? என் எழுத்தைப் பற்றிப் பிறர் இல்லை நான் என்ன நினைக்கிறேன்? எனக்குத் தெரியாது. நான் ஒரு முறை அவளைப்பற்றி ஒரு கவிதை எ ழுதியிருந்தேன். சுசீலாவிடம் இல்லை சுசீலாவின் சிறப்பு-இதைப் படித்த நான் மதிக்கும் ஒரு சிறந்த கவிஞர் தனக்கு இந்த வரி மிகவும் பிடித்ததாகச் சொன்னாராம். ஆனால் “சுசீலாவிடம் இல்லை சுசீலாவின் சிறப்பு இல்லை” என்று எழுதுவதே அந்தக் சுசீலை என்றால் இந்தச் சுசீலாவும் இல்லைதானே. சொல்லப் போனால் நான் இல்லாமல் இருப்பதால் தானே நான் ஓரளவாவது இருக்கிறேன்’. அதற்குப் பிறகு அவள் பேசவே இல்லை. அப்பொழுதுதான் எனக்கு முதல் முதலாகச் சந்தேகம் ஏற்பட்டது-அவனுக்கு எங்கேயோ எப்போதே தா ஒரு தகராறு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று’
“சார். ஒன்று சொல்கிறேன்-அவர் உங்கசிநேகிதர் தான். ஆனா, என் தம்பிக்கு எப்பொழுதுமே கொஞ்சம் பைத்யம்னு தான் என் கணக்கு. நம்ப சாக்ஷாத்துக்கு அதிலெ சந்தேகமே யில்லை”
அவர் போவதாகத் தெரியவில்லை. அவனும் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தான் – அர்த்தமில்லாமல் என்று கூடச் சொல்லலாம். அவரும் விடுவதாகத் தெரியவில்லை. அவர் மீண்டும் தொடர்ந்தார். “என்ன, ஸார், அப்போதெல்லாம் அவன் அவர்களுடன் இருந்த பொழுது—அதுதான் என் பெற்றோர்களுடன்- அவர் கூடச் சொல்லிப் பார்த்திருக் கிறார்-ஏதாவது ட்யூஷன் வைத்துக் கொள்ளக் கூடாதோ என்று-யாரெல்லாமோ வந்து பேசிக் கொண்டிருப்பாங்க- நீங்க சித்த முன்னாடி பேசினீங்களே அது மாதிரிதான்- அவன் ரூம்லெ போய்ப் பார்த்தா பார்த்தவாளுக்குப் பைத்தியம் பிடிச்சுடும்-மேலே கீழே அங்கெ இங்கெ நாற்காலி மேலே மேஜை மேலே எங்கெ பாத்தாலும் புஸ் தகங்கள் – புஸ் தகங்கள், இந்த அழகிலெ வாங்கற புஸ்தகம் போறாது என்று ஒவ்வொரு லைப்ரரியா ஏறி இறங்கி
வாங்கிண்டு வா புஸ்தகங்கள்-பிறகு எழுதப் போறேன் என்று எழுதாமல் சிதறிக்கிடக்கும் நோட்புஸ்தகங்கள். என்னவோ அப்பா சொல்லி ஒரு இரண்டு தடவை யூனிவர்ஸிடி பரீக்ஷை பேப்பர் திருத்தினான்-அவனும் உங்களைப்
போல ஒரு விரிவுரையாளன் தானே – -என்ன விரிவுரையாளனோ – ஒரு இடத்திலெயாவது இவன் மேடை ஏறிப் பேசி நான் கேட்டதில்லை – ஒரு துருப்பிடிச்ச ஸைகிள் – என்னவோ ஒரு வேஷ்டி என்னவோ ஒரு சட்டை-
ஒரு தடவை, என்னுடைய போதாத வேளை, கேட்டு வச்சேன் – உனக்கு எவ்வளவு சம்பளம்னு. அப்புறம்தான் எனக்கே ஏண்டா கேட்டோம்னு ஆயிடுத்து. அவனுக்குத் திட்டமா அவன் சம்பளம் என்னன்னுகூடத் தெரியாது! பதிமூணு வருஷமா ட்யூட்டரா இருந்திருக்கான்—இவனைப்பத்திப் பையங்க கிட்டக் கூட அப்படி-இப்படி விசாரிச் சுப் பாத்ததுலெ ‘ஸார் பாவம்’னு சொல்றாங்களே தவிர, இவனைப் பத்தி ஒரு அபிப்ராயம் கூட அவாளுக்கில்லெ-முன்னெல் லாமாவது இவனுக்கு எப்பாவது கோபமாவது வரும். கடைசிக் காலத்திலெ இவன் வெறும் மக்குமாதிரிதான் இருந்தான். ஒரு வித சலனமுமில்லாமல்தான் இருந்தான். இருந்தாலும்”
”இருந்தாலும்”
“சில பேர்லாம் இவனைப் பார்க்க வந்துண்டே இருந்தாங்க-இவன் வாழ்நாள்லே என்னெல்லாமோ நடந்து கொண்டிருந்த மாதிரி ஒரு பாவனையிலிருந்தும் என்னாலே என்னை விடுவிச்சுக்க முடியலெ -அப்புறம் ஸார், என்னதான் ஆனாலும் அண்ணன் தம்பிங்கிறெ உறவு ஒண்ணு இருக்கெ அது அவ்வளவு சுலபமா விட்டுப் போயிடுமா ஸார்- எங்கிருந்தோ வரோம், இங்கெ கொஞ்சநாள் ஒருவரை யொருவர் சந்திக்கிறோம்-பின்னெ பிரிஞ்சுபோறோம்- இப்படி நான் பேச ஆரம்பிச்சுட்டா போறும்– எப்பவுமா நான் இ படிப் பேசறேன் ? நம்ப ‘சாக்ஷாத்’ ஆரம்பிச்சுடுவா.

நகுலன்/நவீனன் டைரி – விருட்சம் நாளிதழ்

குறிப்பு :

நகுலனின் இந்த நாவலைத் தொடர்ந்து தினந்தோறும் daily.navinavirutcham.in பத்திரிகையில் தொடர்ந்து வரும். வாசிப்பவர்கள் கவனத்துடன் இந்த நாவலை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.