
பரத்வாஜ ரிஷியினுடைய ஆச்ரமத்திலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ளது. அக்கினிகர்ப்பருடைய ஆசிரமம். ஒரு யாகம் செய்து முடிக்கவேண்டுமென்று அக்கினிகர்ப்பருக்கு வெகு காலமாக மனோரதம் உண்டாயிருந்தது. அவ்விஷயத்தைப்பற்றி அன்று காலையில்தான் பரத்வாஜ ரிஷியிடம் பிரஸ்தாபித்தார். மகரிஷியும் தாமே கூட இருந்து சகாயம் செய்து முடித்துவைப்பதாக ஒப்புக் கொண்டார். ஆகையால் அக்கினிகர்ப்பருக்கு வெகு ஸந்தோஷம். ஆனால் அவர் தம்முடைய கிருகத்திற்கு வந்து தம் தேவியாகிய தாக்ஷாயணிக்குத் தெரிவித்தபொழுது அந்த அம்மாளுக்கு அவ்வளவு திருப்தி இல்லை.
“என்னத்திற்காக நாம் யாகம் செய்ய வேண்டு மாம்? நாம்தான் இங்கே ஏற்கனவே ஸௌக்கியமா யிருக்கிறோமே?” என்று கேட்டாள்.
“மேலும் மேலும் க்ஷேமம் உண்டாகத்தான்” என்றார் ரிஷி.
“எப்படி க்ஷேமமாகும்? நீங்கள் குதிரையி ருந்து கீழே விழுந்து கைகால் ஒடிந்தால் என்ன செய்கிறது?”
“நான் என்னத்திற்காகக் குதிரைமேல் ஏறப்போகிறேன்?”
“அப்படியானால் அவ்வளவு தூரமும் நடந்தா போகப் போகிறீர்கள்? கால் வலிக்குமே?’
“நான் எங்கே போகவேணுமாம்?”
‘குதிரை போகிற இடமெல்லாம் போய், குதிரை யாரை முட்டுகிறதோ அவர்களையெல்லாம் நீங்களும் முட்டவேண்டாமா?” என்று தேவி கேட்டாள்.
“குதிரையாவது முட்டவாவது! அடாடா! அச்வ மேத யாகத்தைப் பற்றியா நினைத்துக் கொண்டிருக் கிறாய்? அது மகாராஜாக்கள், க்ஷத்திரியர்கள் செய்கிற யாகமல்லவா? நான் செய்யப் போவது நம்முடைய ஆசிரமத்திலேயே ஒரு பிரும்ம யக்ஞம் ஆயிற்றே!’
“அப்படியானால் என்னை எங்கேயும் கூட்டிக் கொண்டுபோய் ஊரெல்லாம் காண்பிக்கப் போகிற தில்லையா? ஆசிரமத்திலேயே இருப்பதற்கு அதெல் லாம் பண்ணுவானேன்?”
“பிராமணனாகப் பிறந்தவன் தபஸ் செய்வதோடு கூட யக்ஞம் செய்வதை நீ அறிந்ததில்லையா? நூறு யாகம் செய்தால் இந்திர பதவியை அடைகிற தென்று நீ கேட்டதில்லையா?’
“நீங்கள் என்னத்திற்கு என்னை விட்டு விட்டுப் போய் இந்திரனாகப் போகவேணுமாம்?”
“அடி! ஒரு யாகம் செய்தால் உடனே’இந்திரனாக மாறிவிடுவேனா?
என்னத்திற்காக இப்படியெல்லாம் எண்ணுகிறாய்? உன்னை விட்டுவிட்டு எங்கேயும் போகவில்லை.’
“எனக்குத் தெரியும் எல்லாம்.”
“என்ன தெரியும் உனக்கு?”
“உங்களுக்கு என்னத்திற்காக இந்திரனுடைய அப்ஸரஸ்திரீகள் பேரில் எண்ணம் போகிறது, இந்த வயசிலே?”
“அட பாவமே! நான் ஒன்றும் அந்த மாதிரி எண்ணவில்லை. நான் இந்த ஒரே ஒரு யாகந்தான் செய்யப் போகிறேன். வீணாக ஒன்றும் பயப்படாதே.”
“யாகம் என்றால் ஹோமம் வளர்க்க வேண்டுமோ இல்லையோ? அதற்கு நெய்க்கு எங்கே போவீர்களாம்?”
“அதற்காகத்தானே உன்னிடம் சொல்லுகிறேன்? அக்கம் பக்கங்களிலிருக்கிற ஆசிரமங்கள் எல்லா வற்றிலும் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடம் நெய்யாவது எவ்விதமாகிலும் சேர்த்துக் கொடு” என்று வேண்டிக்கொண்டார்.
‘இதற்கு மாத்திரம் நான் வேணுமோ? அந்த அப்ஸரஸ்திரீகளையே நெய் கொண்டு வரச் சொல்லு கிறதுதானே!” என்று அவருடைய தேவி முணு முணுத்தாள். முனிவர் வெகு சிரமப்பட்டுத் தேவியின் பயங்களை நிவர்த்தி செய்து அனுப்பி விட்டுத் தம்முடைய நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடங்கினார்.
நாளடைவில் அவருடைய சிஷ்யர்கள் கொஞ் சமாக ஒரு யானை அளவு குவியலான சுள்ளிகளை
(சமித்து)ச் சேகரித்து விட்டார்கள். தாக்ஷாயணி தேவியும் அதற்குமேல் தடை சொல்லாமல் குறிப் பிட்ட அளவு பசுவின் நெய்யைச் சேர்த்தாள். யாகத் திற்காக வைத்த முகூர்த்த தினமும் நெருங்கி விட்டது.
2.
அக்கினிகர்ப்பருடைய ஆசிரமத்திற்குச் சுமார் இரண்டு யோஜனை தூரத்தில் காட்டின் மத்தியிலே ஒரு பெரிய வீடு உண்டு. ஆனால் ஆசிரமத்திற்கும் இதற்கும் வெகு வித்யாஸம். இங்கே வீட்டினெதிரே காலையில் மயில்கள் தோகை விரித்து ஆடுகிற வழக்க மில்லை. இளமையின் முட்டாள்தனத்தினால் ஏதா வது ஒரு மயில் நெருங்கி வந்தாலும் அதற்குக் காட் டரிசியை இரைப்பவர்கள் இங்கே இல்லை. அரிசி கிடைப்பதற்குப் பதிலாக அதன் உடம்பில் அம்புகள் தான் தைக்கும். துள்ளித் திரிகின்ற மான் குட்டிகள் இரை தேடி இங்கே நெருங்கினால் அவைதாம் விரைவில் இரை ஆகும். ஏனென்றால் இந்த இடம் விரூபாக்ஷன் என்னும் ஓர் அரக்கனுடைய வாச ஸ்தலம்.
“இப்பொழுது யாரோ சின்னவனாக வந்து விட்டுப் போனானே அவன் யார்? நான் இதுவரையில் அவனைப் பார்த்ததில்லையே” என்று விரூபாக்ஷன் தன் மனைவி ஜாம்பலாவைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“போனானேயா? நன்றாக இருக்கிறது நாளுக்கு நாள் கண் தெரிகிற கூர்மை! அவள் ஒரு ஸ்திரீ; அக்கினிகர்ப்பருடைய பார்யை” என்றாள் ஜாம்பலா.
“அவள் எங்கே வந்தாள்?”
“அந்த அம்மாள் கொண்டு வந்தாள்; என்னவோ ‘கமண்டலு’ என்று பெயர் சொன்னாள். அவள் அகத்துக்காரருடையதாம்.
ஏதோ செப்பு என்ற ஒரு வஸ்துவினால் செய்யப்பட்டதாம்”
“அதெல்லாம் சரி. எதற்காக இங்கே வந்தாள்?”
“அதிலே ஜலமும் கொண்டு போகலாம்; வேறே. எதுவும் கொண்டு போகலாம். இந்த மண்பானை மாதிரி, எங்கே கீழே நழுவி விழுந்தால் உடைந்து போகுமோ என்கிற பயமே இல்லை.”
“அது சரி. அவள் எதற்காக வந்தாள்? அதைச் சொல்லேன்.’
“நான்தான் வரச் சொல்லியிருந்தேன். அன்றைக்கு நதிக்கரையில் கண்டபொழுது கொஞ்சம் பசுவின் நெய் கிடைக்குமா என்று என்னைக் கேட் டாள். நம்மிடத்தில் அநேகம் மாடுகள் இருக்கிற படியால் வேண்டியதை வந்து வாங்கிக்கொண்டு போ என்று சொல்லியிருந்தேன். அந்தக் கமண்டலுவைக் கொண்டு வந்திருந்தாள். அதற்காகத்தான் அந்தமாதிரி எனக்கு ஒன்று-‘”
“எதற்காகப் பசுவின் நெய் வேணுமென்று விசாரித்தாயா?”
“நாங்களெல்லாம் புருஷர்கள் மாதிரி அலௌகிக்மாய் ஒவ்வொன்றுக்கும் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கமாட்டோம். அந்தக் கமண்டலு
மாதிரி எனக்கு ஒன்று வேணும்.”
“அக்கினிகர்ப்பர் யாகம் செய்யப்போகிறார் போல் இருக்கிறது. அதற்காகத்தான் பசுவின் நெய்
கேட்டிருக்கிறாள். அதை நீ ஏன் அவளுக்குக் கொடுத்தாய்?”
“யாகம் செய்துவிட்டுப் போகட்டுமே; உங்களுக்கு என்னவாம்?”
“செய்யட்டுமா? நன்றாய்ச் சொன்னாய்! ராவணேசுவரர் காதில் பட்டால் என்ன சொல்லுவார்? என்னுடைய பார்வையிலிருக்கும் அரண்யத்தில் ஒரு யாகம் நடந்து, அதை நான் தடுக்காமற் போனால்-“
“பிரமாதந்தான்! நீங்கள் சும்மா இருங்கள். அந்த அம்மா ரொம்ப நல்லவள். அவள் தம்பி அடுத்த தடவை அயோத்திக்குச் சென்றால் எனக்கு ஒரு கமண்டலு கொண்டுவரச் செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். அவர் யாகம் செய்தால் அதிலே போய் உங்கள் வழக்கப்படி மாமிசத்தை விட்டெறியாதீர்கள். அந்த அம்மாள் ரொம்ப நல்லவள்.”
“அவள் நல்லவள்தான்; யார் இல்லையென்று சொன்னது? இருந்தாலும் ராஜாங்க காரியத்தை நிறுத்தக் கூடுமா? என் கடமையை நான் செய்ய வேண்டாமோ? என் குலாசாரம்-“
“நல்ல கடமை! நல்ல குலாசாரம்! சும்மா இருப்பவர்களை ஹிம்ஸிப்பது! அவர்கள் நெய்யை வீணாக்கினால் அதற்குத் துணைக்கு நம் வீட்டு நல்ல மாமிசத்தையுமா வீணாக்கவேணும்! இப்படியெல்லாம் மற்ற வர்களைத் துன்புறுத்துவதனால்தான் உங்களுக்குச் சாபமெல்லாம் வருகிறது; கண் தெரியாமல் போகிறது.”
“சாபமுமாச்சு! கீபமுமாச்சு! என்னை யார் சபிக்கக் கூடியவர்கள்? அவர்களைத் துவம்சம் செய்து விடுகிறேன்” என்று விரூபாக்ஷன் சற்று அங்குமிங்கும். பார்த்துக்கொண்டே சொன்னான்; “எனக்குக் கண் தெரியாமல் என்னவாம்? நீ வீடெல்லாம் இருட் டாகவே வைத்திருந்தால் சில சமயம் தடுமாறிப் போய் விடுகிறது,’
“எதற்கும் என் பேரில்தான் தப்புச் சொல்லத் தெரியும், அன்றைத்தினம் பட்டப் பகலில் ஆட்டுக் குட்டிக்குப் பதிலாக நடு முற்றத்திலிருந்த நம்முடைய பிள்ளையையே கட்டப் போனீர்களே? அது கண் கன்றாகத் தெரிகிறதற்குத்தான் அடையாளமோ?”
“சும்மா அதையே சொல்லிக்கொண்டிருக் கிறாயே! ஆட்டுக்குட்டி மாதிரி உன் பிள்ளை எதற்காக நாலு காலில் தவழ்ந்துகொண்டு வந்தானாம்? அது இருக்கட்டும். பரத்வாஜ ரிஷியிடம் போய், இந்த மாதிரிக் கண் உபத்திரவத்திற்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்று ஜாடையாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டுவரச் சொன்னேனே; என்ன செய்தாய்?”
‘அவரைக் கேட்டேன். அதற்குப் பெயர் ‘க்ஷண திருஷ்டி’ என்று சொன்னார்.”
“திருஷ்டியாவது சிருஷ்டியாவது! நான் ஒரு கறவைப் பசுவா, அல்லது புது நாட்டுப் பெண்ணா, எனக்குத் திருஷ்டி விழ!’
“அதற்குப் பெயர் அப்படியென்றால், என்னை எதற்கு அதட்டுகிறீர்கள்?”
“சரி, சரி! அதற்கு என்ன வைத்தியமாம்?”
“இப்போது ஒன்றும் வைத்தியம் இல்லையாம். இன்னும் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் போனால் சிலர் காசிக் குப்பியை உடைத்துச் சில்லுகளாகத் தேய்த்துக் கொடுப்பார்களாம். அவற்றை அணிந்து கொண்டால் கண்கள் நன்றாகத் தெரியுமாம்.’
நான் அதுவரையுமா இப்படியே காத்துக் கொண்டிருப்பேன்?”
“உன் பர்த்தாவிடம் சொல்லு என்று அவர் சொன்னார். நான் இன்னாருக்கு வியாதி என்று ஒன்றும் சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது அவராகவே சொன்னார்; ‘உன் பர்த்தாவிடம் சொல்லு: தினம் காலையில் எழுந்து ஒரு நாளைக்கு ஒரு முறை யாவது ஸ்நானம் செய்யச் சொல்லு. இனிமேலாகிலும் மாம்ஸம் சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லு. கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது உஷ்ணம் தணிந்து குணம் காணும்’ என்றார்.”
“நான் அவருடைய கழுத்தைத் திருகுகிறேன், பார். அதிகப்பிரஸங்கி! யாகத்திற்கு அவரும் வரு வார். அப்பொழுதே அவர் காரியத்தையும் முடித்து விடுகிறேன்’ என்று கோபாவேசத்துடன் பாக்ஷன் கர்ஜித்தான்.
“என்னத்திற்கு இவ்வளவு ஆத்திரம்? அவரைப் போய்க் கேட்டதனால் அவருக்குத் தெரிந்ததைச் சொன்னார். அவரைத் திட்டுவானேன்? கண் சுத்தப் பொட்டையாய்ப் போகிறதற்குத்தான் இது வழி!”
“நீ போ! உனக்கு ஒன்றும் தெரியாது!”
“என் பிள்ளைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் வித்தியாசமாவது எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்
கொண்டே அந்த அம்மாள் சமையலறைக்குச் சென்றாள்.
III
யாக தினத்தன்று உதயமாயிற்று. ஆசிரமத்தில் குழப்பம் ஒரு பாடிருக்க அம்மாதிரியே விரூபாக்ஷன் வீட்டிலும் சற்றுக் குழப்பம் உண்டாயிற்று. அவன் ஆசிரமத்தை நோக்கிப் போகப் புறப்படுவதை அறிந்த உடனே அவனுடைய பிள்ளை தானும் கூடவே வரு வேனென்றான். “நீ ஆகாயத்தில் பறந்து போவதை நான் பார்க்கவேணும்” என்று அவன் சொன்னான்.
“நான் பறக்கப் போவதாக யார் சொன்னார்?” என்று விரூபாக்ஷன் கேட்டான்.
“அந்தணர்களைத் துவம்சம் செய்யும் பொருட்டு ராக்ஷஸர்களுக்கெல்லாம் ஆகாயத்தில் பறக்க முடியுமென்று நம்முடைய மாட்டுக்காரப் பையன் சொல்லுகிறானே! நாம் எல்லாம் ராக்ஷஸர்கள் அல்லவா?” என்று குழந்தை பெருமையுடன் கேட்டான்.
விரூபாக்ஷனுக்குப் பதில் சொல்லச் சௌகரியப் படவில்லை. சக்கரவர்த்தியாகிய ராவணனுக்கு விமானம் இருப்பதால் அவன் ஒருவனால் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடியும். இதர ராக்ஷஸர்களால் அது எவ்விதம் கூடும்? இருந்தாலும் எல்லாருக்குமே அந்தச் சக்தி இருப்பதாக மற்ற ஜனங்கள் நம்பியிருந்தால் அந்த நம்பிக்கையையும் பயத்தையும் நீக்குவானேன் என்று அவன் எண்ணினான். ஆனால் எவ்விதமாகப் புத்திரனுக்குப் பறந்து காண்பிப்பது? இந்த ஸந்தர்ப்பத்தில் ஜாம்பலா, “குழந்தையைத் தோளில்
தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து போனால் போதுமே” என்றாள்.
அதற்கும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. வாஸ்தவம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன் இருந்த தேக பலம் இப்பொழுது அவனுக்கு இல்லை. பையனையும் தூக்கிக்கொண்டு இரண்டு யோஜனை தூரம் எவ்விதம் போகிறது? ஏற்கனவே நேரமாகிவிட்டது.
“எனக்குத் தோளில் சுளுக்கிக்கொண்டு இருக்கிறது. தூக்கிக்கொண்டு போகமுடியாது” என்று கண்டிப்பாய்ச் சொன்னான்.
பையன் அழத்தொடங்கினான். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் இன்னும் நேரமாகிவிட்டது. கடைசியில், “யாககுண்டத்தில் எறிவதற்கு மாமிசம் எங்கே?” என்று மனைவியை அதட்டினான் விரூபாக்ஷன்.
அந்த அம்மாளும் கடிந்துகொண்டாள்; “நல்ல மாமிசத்தைக் கொண்டுபோய் அதைச் சாப்பிடத் தெரியாதவர்களின் மத்தியில் வீணாக விட்டெறியாமற் போனால் என்ன? நேற்று ராத்திரி வெட்டின ஆட் டின் ரத்தத்தை அந்த மூலையில் ஒரு மண் வாணாயில் வைத்திருக்கிறேன். எல்லாம் அ.து போதும், யாகத்தை அனாசாரமாக்குவதற்கு!” என்றாள்.
விரூபாக்ஷனுக்குக் கோபம் அதிகரித்தது. ஆனால் இப்பொழுது மாமிசத்திற்காகப் புதிதாய் ஒரு மிருகத்தைக் கொன்று அறுப்பதானால் இன்னும் காலதாமதம் ஆய்விடும். ஒரு வேளை அங்கே போய்ச் சேருவதற்குள் யாகம் முடிந்துவிட்டால் ராவணனுடைய கோபத்திற்குப் பாத்திரனாக வேண்டும். இந்தப் பயத்தினால் வழக்கத்திற்கு விரோதமாய், ரத்தமே போதும் என்று எண்ணி அந்த வாணாயை ஒரு பாக்கு மடலினால் மூடி எடுத்துக்கொண்டு வேகமாய்க் கிளம்பினான் விரூபாக்ஷன்.
IV
அக்கினிகர்ப்பரின் ஆசிரமத்தில் வசனப் பிரகாரம் எள்ளுப் போடக்கூட இடமில்லாமல் வேதியர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே பயம்; ஒரே எண்ணம். யாகம் நடக்கும் சமாசாரத்தைக் கேட்டு யாராவது ராக்ஷஸன் வந்து அதைக் கெடுத்துவிடப் போகிறானே, அவன் வருவதற்கு முந்தி எப்படியாவது யாகத்தை முடித்துவிட வேணுமென்பதுதான் அது. ஒரு க்ஷணங்கூட வீண் போகாமல் காரியத்திலேயே ஊக்கமாக மேலும் மேலும் வேகமாக மந்திரங்களை ஜபித்தார்கள். ஹோமத்தை வளர்த்தார்கள். தங்களுக்குள்ளே பலசாலிகளாக இருந்த இருவரை வாசலில் நிறுத்தி வைத்தார்கள். ஆயிற்று; முக்கால் பாகம் முடிந்திருக்கும்.
அத் தருணத்தில் யானை ஓடி வருவது போல் அதிர்ச்சி உண்டாயிற்று!-விரூபாக்ஷன்! அவன் வருவதைக் கண்டவுடன் துவார பாலகர்கள் இரு வருக்கும் நடுக்கம் கண்டுவிட்டது. ஓடிப்போய்விட வேண்டுமென்ற ஒற்றுமையான எண்ணத்துடன் இரு வரும் ஒரே க்ஷணத்தில் பாய்ந்து புறப்பட்டார்கள். தேங்காய் உடைக்கும் சப்தத்துடன் இருவர் தலையும் ஒன்றோடொன்று முட்டின. இருவருக்கும் அப்போது இருந்த ஸம்பிரமத்தில் ராக்ஷஸன்தான் தங்கள் தலையில் கோடாலியால் வெட்டினான் என்ற எண்ணம் உண்டாய்விட்டது. “ஹா! ராவணன் வந்து விட்டான்!” என்ற கூக்குரலுடன் இருவரும் கீழே மூர்ச்சையாய் விழுந்தனர். அவர்களைக் காலால் ஒரு புறமாய் உதைத்துத் தள்ளிவிட்டு விரூபாக்ஷன் உள்ளே நுழைந்தான்.
“துஷ்கிருதானாம் வினாசாய ஸ்வா: (துஷ்டர்கள் நாசமாகட்டும்)” என்று சொல்லிக்கொண்டு யாகத்தின் யஜமானர் அந்தத் தருணத்தில்தான் நெய்த் தாரையை அக்கினியில் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்.
“அப்படியா?” என்று விரூபாக்ஷன் கோடை இடியைப் போல் நகைத்தான். “இதோ பாருங்கள்! நான் ஒரு மந்திரம் சொல்லுகிறேன்: லங்கேச்வராய ராவணாய ரக்தேன ஸ்வா:!” என்று தன் கையிலிருந்த வாணாயை அக்கினி குண்டத்தின்மேல் அப்படியே கவிழ்த்தான்.
எல்லோரும், “ஹர ஹர! நாராயணா!” என்று தங்கள் தங்கள் இஷ்ட தேவதையைப் பிரார்த்தித்து, இந்தப் பாபச் செயலைப் பார்க்க இஷ்டமில்லாமல் கண்களை மூடினார்கள். ஆனால் குபீர் என்று ஜ்வாலை யுடன் அனல் வீசி அதன் உஷ்ணம் அவர்கள் பேரில் உறைக்கவே, அவர்கள் கண்களைத் திறந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி அக்கினி குண்டம் கருகித் தீய்ந்து அணைந்திருப்பதற்குப் பதிலாக, நூறு ஆஹுதியாகச் செய்யக்கூடிய நெய்யை ஒரே தட வையில் சமர்ப்பித்தாற்போல் முன்னிலும் இரண்டு மடங்காகத் தீ விட்டு ஜ்வலித்துக்கொண்டிருந்தது. விரூபாக்ஷனோ, இந்த அதிசயத்தையும், ராவண
னுடைய பெயரைச் சொல்லி அழைத்துக் கூட அந்தணருடைய யாகமே கைகூடி வருவதையும் கண்டு சொல்லொணாப் பிரமையினால் வேறொரு தீங்கும் செய்யச் சக்தியற்றவனாகித் தலைகுனிந்து வெளியே போய்விட்டான். இருந்தவர்கள் யாகத்தை ஸம்பூரணம் செய்தார்கள். அக்கினிகர்ப்பர் கிருதார்த்த ரானதாய்த் தம்மைக் கருதினார்.
V
இந்த யாகத்திற்கு விக்கினம் ஏற்பட்டதா, இல் லையா? இதைப்பற்றிப் பல கக்ஷிகள் இருக்கின்றன. சென்னபட்டணத்தில் மியூஸியத்தில், அச் சிடாத ஏட்டுக் கிரந்த இலாகாவில் இருக்கும் “நைமி சாரண்ய காண்டம்” என்னும் கிரந்தத்தின் இருபத்தேழாவது அத்தியாயத்தில் இந்த விருத்தாந்தத்தி ஏற்பட்ட வாதங்களை இஷ்டப்பட்டவர்கள் வாசித்து அறியலாம்.
சிலருடைய கக்ஷி என்னவென்றால், “அக்கினிகர்ப்பருடைய பூர்வ ஜன்ம பலனாக அவருக்கு இந்த ஜன்மத்தில் ஒரு யாகசித்தி நிச்சயமாய் இருந்தபடியால் ஒரு ராக்ஷஸன் அந்த யாகத்தைத் துவம்சம் செய்ய எண்ணியும், ராவணனைப் பிரார்த்தித்தும் அது பலிக்காமல் ரத்தங்கூட ஹவிஸாகவே மாறும்படி நேரிட்டது” என்பது.
மற்றவருடைய க்ஷி என்னவென்றால், “அதை யெல்லாம் நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். இருந்தாலும் ஒரு யாகத்தின் மத்தியில், அதில் சம்பந்தப்படாதவனும், யக்ஞோபவீதம் தரிக்காதவனும்,
நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்யாதவனுமான ஒரு நிசாசரன், தன்னுடைய அசுத்தமான கையினால் ரத்தத்தை எப்போது சமர்ப்பித்தானோ, அப்போதே யாகத்திற்கு ஒரு பங்கம் வந்துவிட்டது. பகவத் அனுக்கிரகத்தினால் அந்த ரத்தம் நெய்யாக மாறி யாகம் முடிந்ததே ஒழிய இந்த யாகத்தினால் பூர்ண பலன் அடையக் கூடுமென்று சொல்வதற்குச் சாஸ்திரம் இடம் கொடுக்கவில்லை” என்பது.
இவ்விதக் கக்ஷியினர், தத்தம் வாதத்தை அநேக ஆதாரங்களுடன், இக்கிரந்தத்தில் விவரமாக எடுத்து உரைத்திருக்கிறார்கள்.
விரூபாக்ஷனுடைய அபிப்பிராயத்தைக் கேட்பாரும் அதைக் கிரந்தத்தில் எழுதுவாரும் இல்லை. வீட் டிற்குப் போனவுடன் தன்னுடைய சம்சாரத்துடன் மனமார அந்தணர்களைத் திட்டித் தன் குறையைத் தீர்த்துக்கொள்ள வேணுமென்பது அவன் எண்ணம். ஆனால் அவன் வீடு நுழைந்ததும், ஜாம்பலா அவனை நோக்கிக் கத்தினாள்: “ஒரே திருட்டுக் கூட்டமாய் விட்டது, வீடு முழுவதும்! கண் எதிரிலேயே ஸாமான்கள் கெட்டுப் போய்விடுகின்றன. இன்று காலையில் தான் இந்த மூலையில் ஒரு வாணாய் நிறையப் பசுவின் நெய் வைத்திருந்தேன். இப்போது அதை வாணயோடு காணோம். யாரைக் கேட்டாலும் தனக்குத் தெரியாது என்கிறார்கள். தானாக எப்படி ஓடிப்போய் விடும்? அதைத் திருடினவனைக் கண்டு பிடித்து அவ னுடைய இரண்டு மணிக்கட்டுகளையும் நீக்கின பிறகு தான் உங்களுக்கு இன்றைச் சாப்பாடு கிடைக்கும். இது நிச்சயம்!”
