
என் வீடு மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் இருப்பதால், வனிதா தன்னுடைய சிநேகிதி லலிதாங்கி யுடன் அங்கே வந்து வீற்றிருந்து அறுபத்து மூவர் பவனி வரும்போது தரிசனம் செய்யப்போவதாகச் சொல்லியனுப்பினாள். வனிதா என்னுடைய சினேகிதரின் சகோதரி. பெண்களின் காலேஜில் சேர்ந்து படிப்பதற்காகச் சிறிது காலம் முன்புதான் சென்னபட்டணம் வந்தவள்.
அவர்களை வரவேற்பதற்கு நான் பலத்த ஏற்பாடுகள் செய்தேன். வனிதாவுக்கு மாம்பழத்தில் மிகவும் ஆசை; மோகம் என்றே சொல்லலாம். ஆகையால் பங்குனி மாசமாயினும் எங்கெங்கோ தேடிச் சென்று ஒரு தட்டு நிறைய அக்கனிகளை வாங்கி வைத்தேன். ஸ்திரீ புருஷக் கணக்கு ஸமமாயிருக்கும் பொருட்டு என்னுடைய சிநேகிதன் அபிராமனுக்குச் சொல்லி அனுப்பினேன். அவன் வந்ததும் அவனுக்கு ஓர் எச்சரிக்கை செய்தேன். “லலிதாங்கியும் வனிதாவும் வரப்போகிறார்கள். இந்த வீடு என்னுடையதென்று லலிதாங்கிக்குத் தெரியாது. உன்னுடையதென்று எண்ணியே இங்கு வருகிறாள். நீ அதைத் திருத்தாதே. அவளோடு பேசவே வேண்டாம். வனிதாவுடன் பேசிக் கொண்டிரு. அப்படியில்லாமல் எங்கள் இருவரின்
பேச்சின் மத்தியில் புகுந்தாயானால் கொலைவிழும்! பிறகு உன்னுடைய அடுத்த ஜன்மத்தில்தான் நீ என்னி டம் மன்னிப்புக் கேட்கமுடியும்” என்றேன். அவன் தலையை ஆட்டினான்.
சுமார் நாலு மணிக்கு அவ்விருவரும் வந்தார்கள். லலிதாங்கி இவ்விடத்தில் என்னை எதிர்பார்க்கவில்லை. என்னைக் கண்டவுடன் அவளுடைய முகம் மாறிற்று. சற்று உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
லலிதாங்கியின் மனத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அறியலாம். நான் ஏதோ தப்புச் செய்து விட்டேனென்பதும், அதற்காக இனி என்னுடன் பேசக்கூடாதென்பதும் அவள் தீர்மானம். ஆனால் நான்கு பேராகச் சேர்ந்திருக்கும் இடத்தில் தன்னுடைய கோபத்தை வெளியில் காட்டி என்னுடன் மாத்திரம் பேசாமலிருந்து என்னை அவமதிப்பதில் இஷ்டமில்லை. தவிர, கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் என்னை மறுபடியும் சந்திப்பதில் அவளுக்குச் சிறிது சந்தோஷந்தான் என்பதையும் அவளால் ஒளிக்கமுடியவில்லை.
“ஸ்வாமி வரும்போது வாசலில் வந்து பார்க்க லாம்; இப்பொழுது உள்ளே போகலாம்” என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.
“இந்த ஹால் நன்றாய்ச் சிங்காரித்திருக்கிறதே! இது உங்களுடைய சொந்த வீடா, வாடகை வீடா?” என்று லலிதாங்கி அபிராமனை நோக்கிக் கேட்டாள்.
திடும் என்று அவள் இப்படி ஒரு கேள்வியைப் போட்டதும் எனக்குச் சங்கடமாய்விட்டது. அபி ராமன், வீடு தன்னுடையதல்ல, என்னுடையதென்று
உளறிவிட்டால், லலிதாங்கி ஏதாவது காரணம் சொல்லிவிட்டு உடனே திரும்பிப் போய்விடுவாளோ என்று நான் பயப்பட்டேன். ஆகையால் மஹா சபைகளின் சம்பிரதாயப்படி நிஜத்தைச் சொல்லுகிற பாவனையாய் இரட்டை அர்த்தத்துடன் சரேலென்று நானே பதில் சொன்னேன்.
“ஒரு வஸ்துவைப் புகழ்ந்த பிறகு சொந்தக் காரன் யாரென்று கேட்டால் அவன் என்னதான் சொல்ல முடியும்? ஓர் ஆங்கிலக்கவி எழுதினமாதிரி, ‘மூக்கு என்னவோ சாதாரண மூக்குத்தான். ஆனால் அது என்னதே என்னது’ என்றுதான் சொல்ல லாம்” என்றேன்.
“எந்த மூக்கு?” என்று வனிதா கேட்டாள்.
வனிதா தங்கமான பெண். லலிதாங்கி அருகில் இல்லாமற்போனால் அழகி என்றும் சொல்லலாம். ஆனால் மூளைக்காக ஒருநாளும் அவள் பரிசு பெறப் போவதில்லை.
“எந்த மூக்கா? கிளி மூக்கு” என்று சொன் னேன். அதோடு நிறுத்தவில்லை. “என்ன கிளி? பச்சைக்கிளி. என்ன பச்சை? இலைப்பச்சை. என்ன இலை? அதோ மாம்பழங்களை நறுக்கி ஓர் இலையில் வைத்திருக்கிறதே, அந்த இலை” என்று முடித்துத் தூரத்தில் ஒரு மூலையிலுள்ள மேஜையைச் சுட்டிக் காட்டினேன்.
“மாம்பழமா?” என்று சிரித்துக்கொண்டு வனிதா அம்மூலைக்கு அம்புபோல் சென்றாள். அபிராமன் அவனுக்குள்ள ‘பார்ட்டு’ப்படி எங்களை விட்டுவிட்டு அவளைப் பின்தொடர்ந்து சென்றான். நாங்கள் இருவருமே சோபாவில் உட்காரும்படி நேரிட்டது. இது வரைக்கும் என்னுடைய எண்ணம் நிறைவேறிற்று.
லலிதா சிறிது நேரம் பேசாமலிருந்தாள். ‘என்ன ஆகிறது பார்க்கலாம்’ என்று நானும் வாய்திறக்க வில்லை. ஸ்திரீயாகையால் இந்த மௌனத்தைச் சகிக்க முடியாத காரணமோ அல்லது, ‘உன்னுடன் டூ விட்டுவிட்டேன்’ என்கிற பாவனையாய்க் குழந் தைத்தனமாய் இருக்கக்கூடாது என்கிற எண்ணமோ, அவளே பேசத் தொடங்கினாள்.
“வனிதா, பாவம், ஒரு சின்னக் கேள்வி கேட் டால், எதற்காக அவள்பேரில் இத்தனை வார்த்தை களை வீசினீர்கள்?” என்றாள்.
“அவள் ஏன் பேசினாள்?” என்று பதிலுக்குக் கேட்டேன்.
“பேசுவதுகூட ஒரு குற்றமா?”
“ஆம். அதனால் நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டு அவள் பக்கம் என் முகத்தைத் திருப்பவேண்டியிருந்ததல்லவா?”
“ஆமாம்! என்னையே பார்க்கவேணுமென்று அவ்வளவு தூரம் எண்ணுகிறவராயிருந்தால்……..”. என்று சொல்லிச் சட்டென்று நிறுத்தினாள்.
“இருந்தால்? அப்புறம் மேலே சொல்லேன்; என்றேன்.
“ஒன்றுமில்லை” என்று பேச்சை மாற்றினாள்; “வனிதாவுக்குமாத்திரம் மாம்பழம்; என் மேஜையில் புஷ்பந்தானோ?”
இந்த மேஜையின்மேல் மாம்பழங்களை வைத்திருந்தால், வனிதாவை இவ்விடத்தைவிட்டு எவ்விதம் கிளப்ப முடிந்திருக்கும்? நாங்கள் இருவரும் எவ்விதம் தனித்துப் பேசமுடியும்? ஆனால் இந்தக் காரணத்தை லலிதாவிடம் எவ்விதம் வெளியிடுவது?
“பழத்தை ஒரு சிறு குழந்தைக்கும் கொடுக்கலாம், ஒரு சிநேகிதருக்கும் கொடுக்கலாம். ஆனால் ஒரு தேவதையைப் பூஜிப்பதானால் அதற்குப் புஷ்பம் தானே எடுத்தது?” என்றேன்.
“எனக்கு ஸ்தோத்திரமே பிடிக்காது” என்றாள்.
“எனக்கும் அவ்விதமே” என்றேன்; “எவரேனும் என்னை அழகனென்றாவது புத்திசாலி என்றாவது சொன்னால், ஸ்தோத்திரம் கேட்பதில்
எனக்கு வெறுப்பு என்று அவரிடம் உடனே தெரிவிப்பதாக வெகுநாளாய் நிச்சயித்திருக்கிறேன். ஆனால்_” என்று பெருமூச்சுவிட்டேன்.
‘ஆனால் என்ன?”
‘ஆனால் ஒருவராவது என்னிடம் அவ்விதம் சொல்லமாட்டேனென்கிறார்களே! நான் என்ன செய் வது!” என்று மற்றொரு பெருமூச்சு விட்டேன்.
“கஷ்டந்தான்!”
என்று அவள் முறுவலித் தாள்; “அவசியமானால் நான் அவ்விதம் சொல்லு கிறேன்.”
“இரக்கத்தினால் சொல்லுவதில் என்ன பிரயோஜ னம்? மந்திரங்களை உச்சரிக்கிறமாதிரியில் சொன்னா லல்லவா உபயோகமுண்டு?”
அது என்ன விதம்? எனக்குத் தெரியாதே!”
“மனப்பூர்வமாய் நம்பிக்கையுடன் பேசவேண்டும். உதாரணம்: இன்னும் சிறிது நேரத்திற்குப் பிறகு தான் வீதியில் தெய்வம் வரப்போகிறது. ஆனால் இப்பொழுதே இவ்வீட்டிற்குள் ஒரு தேவதை வந்தாய்விட்டது என்று நான் சொல்லுவது மனப்பூர்வமாய் எண்ணிப் பேசுவதாகும்-‘
“இதெல்லாம் ஸ்தோத்திரமல்லாமல் வேறு என் னவோ? ஏமாற்றுவதற்காகப் பேசும் பொய்வார்த்தைகள்தானே? அந்தப் பொய்யை எல்லாம் அதோ வனிதாவிடம் போய்ச் சொல்லுங்களேன்!”
“முதலில் அவள் மாம்பழம் விழுங்குவதை நிறுத்தி, என்னுடைய ஸ்தோத்திரங்களைச் செவி கொடுத்துக் கேட்கவேண்டாமா?”
“ஆகையால் பொய்தான் என்று ஒப்புக்கொள்ளு கிறீர்களல்லவா?”
“அவளை நோக்கி அந்த வார்த்தையைச் சொல்லி யிருந்தால், அது பொய்தான். இரண்டாவது, பேசுகிறவனுக்கு உற்சாகம் வேண்டாமா? அவள் என்னு டைய லட்சியப் பெண்மணி அல்ல.”
“அவளுக்கு என்ன குறையாம்?”
நான் பதில் சொல்லாமல் லலிதாங்கியையும் வனிதாவையும் மாறி மாறிப் பார்த்தேன்.
“ஒரு வேளை ஆகாசக் கோட்டையாய், உலகத்திலேயே காணக்கூடாத மனுஷிதான் உங்களுடைய லட்சியப் பெண்மணியோ, என்னவோ?”
“அவ்விதம் ஒன்றுமில்லை. அவளை நீ சுலபமாய் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாம்.”
“நூற்றுக் கணக்கிலா? சினிமா ‘ஸ்டார்’ ஆக்கும்?” என்று சற்று அருவருப்புடன் லலிதா கேட்டாள்.
“என்னுடைய லட்சியப் பெண்ணைக் காண வேணுமானால் ‘ஸ்டார்’களையும் நக்ஷத்திரங்களையும் தேடுவதற்காக நீ தலை நிமிர்ந்து ஆகாயத்தை நோக்க வேண்டாம்.”
“எனக்குத் தெரியும், உங்களுடைய ஸ்தோத்திரப் பாடம். ஒரு கண்ணாடியைப் போய்ப் பார் என்றுதானே சொல்லப்போகிறீர்கள்?”
‘தலையைக் குனிந்து ஒரு கிணற்றின் ஜலத்தில் பார் என்றல்லவா முடிக்கப் போனேன்?”
“நான் என்ன, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளைப் போன்றவளா, கிணற்றில் அழகு பார்த்துக்கொள்ள?”
“ஆனால் அதிகமாய் எட்டிப் பார்க்காதே. தவறி விழுந்து விடுவாய்.”
“பிரமாதம்!”
“அப்படித்தான் நன்றாக எட்டிப் பார்க்க வேணு மென்றால், எனக்குச் சொல்லி அனுப்பினால் என்னால் கூடிய ஒத்தாசை செய்கிறேன்.”
“என்ன ஒத்தாசை?”
“விழுந்துவிடாமல் உன்னைப் பிடித்துக்கொள்ளுகிறேன்.”
“ரொம்ப வந்தனம். நான் எப்படியாவது பார்த்துக்கொள்ளுகிறேன்.’
‘இன்றைத் தினமே பார்த்துக்கொள்ளுகிறதானால் இந்த வீட்டிலேயே ஒரு கிணறு இருக்கிறது.
“போய்ப் பார்க்கலாமா? நான் சிரமத்தைப் பார்க்காமல் வரத் தயார்.”
“இந்தக் கொனஷ்டைப் பேச்சுக்களை எல்லாம் எந்தப் பள்ளிக்கூடத்தில் பழகிக்கொண்டீர்கள்?”
“எல்லாம் வீட்டிலேதான். ஒழிந்திருக்கிற நேரங்களில், யார் என்ன சொன்னால் அதற்கு என்ன பதில் சொல்லுகிறது என்று ஓர் ஆயிரம் பேச்சுக்கள் வரையில் முன்னதாகவே ஆலோசித்து எழுதி மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஆகையால் இம்மாதிரி சரசரவென்று பேசிக் கேட்போரைப் பிரமிக்கச் செய்வது எனக்கு வெகு சுலபம். வேளைகளில் தவறிப்போய் ஒரு பாடத்திற்குப் பதி ஆனால் சில மற்றொரு பாடத்தை ஒப்பித்துவிடுகிறேன். அப்பொழுது கேட்பவர்கள் மும்மடங்காகப் பிரமித்து ஓடியே போய்விடுகிறார்கள்!”
“என்ன என்னவோ கதையெல்லாம் சொல்லுகிறீர்களே!’
“இதெல்லாம் கதையா? அப்படியானால் ஒரு கதையைச் சொன்னால்தான் வாஸ்தவம் என்று ஒப் புக்கொள்வாய்போல் இருக்கிறது. நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?”
“என்ன கதை?”
“வெகு ஸ்வாரஸ்யமான கதை. எல்லாவற்றிலும் புராதனக் கதையாக முதல் முதல் உலகத்தில் உண்டானது. வெகு நீளம். அதில் முதல் அத்தியாயத்தில் ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயிடம், ‘எனக்கு உன்பேரில் காதல்’ என்று தெரிவிக்க முயலுகிறான். இரண்டாம் அத்தியாயத்தில்……..”
‘எனக்கு ஒன்றும் வேண்டாம், அந்தக் கதை” என்று அவசரத்துடன் சொன்னாள்; “இந்த மாதிரி ஒன்றுமில்லாமல் ரு நவீனக் கதையே போதும்” என்றாள்.
இந்தச் சமயத்தில் அபிராமன் தன்னுடைய மூலையிலிருந்தபடியே எதோ முணுமுணுத்தான். நான் அவனை நோக்கிப் புருவத்தை நெறித்தேன். அவன் பேசாமல் ஹாலை விட்டு வெளியே போய்விட் டான். வனிதாவும் பின் தொடர்ந்தாள்.
நான் என் கதையைத் தொடங்கினேன்: “ஒரே ஊரில் வாசுதேவன் என்று ஒரு வாலிபன் இருந்தன். ஒருநாள் அவன் புஸ்தகக் கடைக்குப்
போனான். அங்கே புது வருஷத்துக்கு வாழ்த்துக் கூறும் அச்சுக்கடிதம் ஒன்று வாங்கினான். அதன் பின்பக்கத்தில் தன் மனம் முழுவதையும் கொட்டி எழுதித் தன்னுடைய காதலிக்கு அக்கடிதத்தைத் தபாலில் அனுப்பினான்.”
‘இதுதான் கதையோ! வெறும் பச்சைப் புளுகு. நீங்கள்தான் என் சிநேகிதி விசாலாக்ஷிக்கு அவ்விதம் எழுதி அனுப்பினீர்கள்.’
இச் சொல் எனக்கு இடிவிழுந்தாற்போலிருந்தது.\
“அட பாவமே! அவளுக்கு எதற்காக அனுப்புகிறேன்? நீ அவ்விதமாகவா எண்ணிக்கொண்டிருக் கிறாய்?” என்று கேட்டேன்.
“எல்லாம் எனக்குத் தெரியும். அவளுக்கு உங் களிடமிருந்து வந்த கடிதத்தை அவளே வாசித்துக் காட்டினாள்.”
“ஹர ஹரா! அவளுக்கு வந்த கடிதமாவது! விளங்கவில்லையே! அந்த வாசுதேவன் எக்கேடு வேணுமானாலும் கெடட்டும்
என் . சொந்தச் சங்கடத்தை அல்லவா முதலில் தீர்க்க வேண்டியிருக்கிறது?”
“ஒரு சங்கடமும் இல்லை. நீங்கள் செய்ததெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்.”
“நான் சத்தியமாகச் சொல்லுகிறேன், லலிதா! உனக்குத்தான் அவ்விதம் எழுதியனுப்பினேன். கவரின் மேல்விலாசத்தை நீ பார்க்கவில்லையா?”
“அதைக் கிழித்தெறிந்துவிட்டாள்.”
“உனக்கு வந்த கவரை அவள் எப்படிக் கிழிக்கக் கூடும்? துப்பறிய எவரையாவது அழைக்கவேண்டும் போலிருக்கிறதே! தபால்காரன் வரும்போது நீயும் கூட இல்லையோ?”
“நாங்களிருவரும் ஒரே அறையில் இருப்பதால் கடிதங்களையெல்லாம் வேலைக்காரி வாங்கி
மேஜையின்மேல் வைத்திருப்பாள். நாங்கள் அறைக்கு வந்தபோது எடுத்துக்கொள்வோம்.’
“நீங்கள் ‘கிளாஸை’ விட்டுச் சேர்ந்தாற்போல் தானே அறைக்கு வருவீர்கள்?”
“இல்லை.விசாலாக்ஷிக்கு மூன்றுமணிக்குப் பிறகு ‘கிளாஸே’ இல்லை. எனக்குத் தினம் நாலுமணி வரையில் பாடம் உண்டு.”
“ஆகையால் தினம் அவள்தான் உங்கள் அறைக்கு
முதலில் வந்து சேருவாளோ?”
‘ஆமாம்.”
“போகட்டும். கவர்தான் அப்படித் தொலைந்த கடிதத்திலிருந்த அந்தச் சித்திர கவியை வாசித்தாளோ?” என்று கீழ்க்கண்ட விதம் எழுதிப் படித்தேன்:-
“லதையைப்போல் லாவண்யமாய் என்
லிபியுன்றன் பொற்றளடிக் கீழ்
தேவியே நீ தெம்பெனக் கீவாய்.”
“எல்லாந்தான் வாசித்துக் காண்பித்தாள். எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை.
அவளுக்கு எழுதினதை அப்பொழுது எனக்கே எழுதினதக மாற்றப் பார்க்கிறீர்களோ?”
லலிதாங்கி வெளிக்கு இவ்விதம் பேசினாலும் அவளுடைய மனத்தில் சந்தேகம் உண்டாய்விட்டது என்பதை அவளால் மறைக்க முடியவில்லை.
“ஏன் என் வார்த்தையில் இவ்விதம் அவநம்பிக்கை கொள்ளுகிறாய்? எப்பொழுதாவது விசாலாக்ஷியுடன் நான் நின்று பேசினதைப் பார்த்திருப் பாயா? நான்தான் பிரமாணமாகச் சொல்லுகிறேனே! அதிருக்கட்டும். இந்த மூன்று வரிகளைத் தயைசெய்து கவனித்துப் பார். இதை நீயே படித்திருந்தாயானால், வரிகளின் முதலெழுத்துக்களைக் கூட்டி வாசித்தால், என்ன வரும் என்று தெரிந்திருக்கும்.’
அப்பொழுதுதான் நான் எழுதிக் காண்பித்ததை அவள் கவனித்துப் பார்த்தாள். “லலிதே” என்று முணுமுணுத்தாள். அவளுடைய முகத்திற்குச் சுபாவமான புன்னகை உதயமாயிற்று. அப்புன்னகைக்குச் சுபாவமான கன்னக் குழிவுகளும் உண்டாயின. நான் அவற்றையே நோக்கிக்கொண்டிருந்தேன்.
பெருமூச்சு விட்டாள், துக்கப் பெருமுச்சல்ல. எதோ அசாத்தியமான பளு ஒன்றைத் தலையின் மீதிருந்து இறக்கிவிட்டதுபோல் தோன்றியது.
கபடம் அறியாத என்னுடைய லலிதா, “இந்த இரண்டு மூன்று மாதமாக நான் எவ்வளவு சங்கடப் பட்டிருப்பேனென்று உங்களுக்குத் தெரியுமா? சரி, இந்தக் கடிதத்திற்கு என்னிடமிருந்து பதில் கிடைக் காதபோது நீங்கள் ஏன் மறுபடியும் எழுதாமல் பேசாதிருந்தீர்கள்?” என்று கேட்டாள்.
‘ஒன்றா, இரண்டா, தெரியுமா? எத்தனை கடிதங்கள் எழுதினேன்? எல்லாம் அவள் கையில்தான் அகப்பட்டிருக்கவேணும். நீயும் கடற்கரைக்கு வரு வதை நிறுத்திவிட்டாய். ஸ்திரீகளின் ஹாஸ்டலுக்குள் நான் வரமுடியாது. உன் பாட்டியின் வீட்டில் போய் விசாரித்தாலோ, பரீக்ஷை சமயம் நெருங்கி விட்டபடியால், விடுமுறைத் தினங்களில் அந்த வீட் டிற்கு வரும் வழக்கத்தை விட்டுவிட்டாய் என்ற ஒரே பதில்தான் கிடைத்தது. நீ என்பேரில் கோபித் துக்கொண்டிருக்கிறாய் என்பது ஸ்பஷ்டமாயிற்றே ஒழியக் காரணத்தைக் கண்டுபிடிக்கவாவது, உன்னைச் சந்தித்துச் சமாதானப்படுத்தவாவது வழி இல்லாமலிருந்தது.”
“எல்லாம் அவள்தான் இந்தமாதிரி செய்யும்படி எனக்குச் சொல்லித்தந்தாள். உன்னிடம் பிரியம் பாராட்டிவிட்டு எனக்கு இந்தமாதிரிக் காதல் கடிதம் எழுதியிருக்கிறார், பார். இனி அந்த வஞ்சகர் முகத் தில் விழிக்காதே’ என்று பேசி, இந்த யுக்திகளெல்லாம் சொல்லிக்கொடுத்தாள். அந்தப் பொறாமைக்கார ராக்ஷஸி இவ்விதம் துரோகம் செய்வாளென்று நான் எண்ணவே இல்லை.”
“போனது போகட்டும்; இன்றைத்தினம் உன் னுடைய உதார குணம் வெளிப்பட்டது. என்னை இந்த வீட்டில் கண்டவுடனே நீ ஓடிப்போகாமல் என்னுடைய தவறுதலை மன்னித்து முன்போல் சகஜமாகப் பேசினாயே!”
“பிரமாதந்தான். உங்களுடன் பேசிக்கொண் டிருப்பதென்றால் அவ்வளவு கசப்பான காரியமோ? இருந்தாலும் அந்த ராக்ஷஸி என்னை இவ்விதம் கஷ் டப்படுத்தியிருக்கவேண்டியதில்லை.”
‘துளசி இலையும், திருநீற்றுப் பச்சையும் கசக்கினால்தான் அவற்றின் நற்குணமாகிய வாசனையை வெளிப்படுத்துமாம்; ஸ்திரீகளும் அவ்விதமேதானோ?” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய இரு கரங் களையும் பிடித்துக்கொண்டேன்.
“என் கை என்ன, துளசி இலையா, திருநீற்றுப் பச்சையா?” என்று கேட்டாள்.
“என்னுடைய அந்தரங்க அபிப்பிராயம் தெரிய வேண்டுமென்றால், இரண்டு மல்ல. ரோஜா இதழ் என்று எண்ணுகிறேன்.”
வனிதா துள்ளிக் குதித்துக்கொண்டு ஹாலுக்குள் பிரவேசித்தாள். அபிராமன் அவள் பின்னே வந்தான்.
“வர், போகலாம், ஹாஸ்டலுக்கு, நேரமாயிற்று” என்று வனிதா அழைத்தாள்.
“ஸ்வாமி வருவதைப் பார்க்கவேண்டாமா?” என்று லலிதா கேட்டாள்.
‘ஓ ஹோ ஹோ!” என்று வனிதா சிரித்தாள்; “உங்களிருவருக்கும் நடந்த பேச்சின் ஸ்வாரஸ்யத்தில் ஸ்வாமிவந்த சந்தடிகூடக் கேட்காமல் போய் விட்டதா? ஸ்வாமியைப் பார்க்காமல் உள்ளே இருந்து விட்டீர்களா?”
“ஓ ஹோ ஹோ!” என்று நான் பதிலுக்குச் சிரித்தேன்; “உங்களிருவருக்கும் நடந்த பேச்சின் ஸ்வாரஸ்யத்தில் நாங்கள் பக்கத்தில் வந்து நிற்க வில்லையே என்றுகூடக் கவனிக்காமலிருந்துவிட்டு, இப்போது நீங்கள் மாத்திரம் ஸ்வாமியைப் பார்த்த தாகப் பாசாங்கு செய்கிறீர்களா? எல்லாம் உன் அண்ணாவிடம் சொல்லுகிறேன், பார்.’
“சரி, வா லலிதா, அவர் எப்பொழுதும் இந்த மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். இந்தக் கூட்டத்தில் எப்படி ஹாஸ்டலுக்குப் போய்ச் சேருகிறது? நாழியானால் ராத்திரி சாப்பாடு கிடைக்காதே?”
“வேண்டாம்” என்றேன் நான்; “உங்கள் எல் லாருக்கும் இன்றிரவு இந்த வீட்டிலேதான் சாப்பாடு. லலிதாவின் பாட்டியும் வரப் போகிறாள்.”
“என்ன விசேஷம்?” என்றாள் வனிதா.
“சின்னதாக ஒரு நிச்சயதார்த்தம்” என்றேன். அவ்விருவரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். “விருந்தை அபிராமன் வீட்டில் வைத்துக் கொள்ளுவானேன்?” என்று லலிதா கேட்டாள்:
“அபிராமன் வீடா? இது என்னுடைய வீடாயிற்றே!”
“அபிராமனுடைய வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி அல்லவா வனிதா இங்கே என்னை அழைத்து வந்தாள்?”
“அடாடா! உன் சிநேகிதி விசாலாக்ஷி ஒருவித வஞ்சகம் செய்தாள். உன் மற்றொரு சிநேகிதி வனிதா நம்முடைய வீட்டையே பிடுங்கிக்கொடுக்கப் பார்க்கிறாள். ஒரு வேளை அபிராமனை விவாகம் செய்து கொள்வதாக எண்ணியிருக்கிறாளோ, என்னவோ? அவனுக்கு ஆஸ்தி சேர்க்கப் பார்க்கிறாள்.’
“என்ன பொல்லாத்தனம்! என்ன பொல்லாத் தனம்!” என்று வனிதா ஆரம்பித்தாள்; “நீங்கள் தானே அந்தமாதிரி லலிதாவிடம் சொல்லி அவளை எப்படியாவது இங்கே அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தீர்கள்?”
“நான் என்னுடைய தாவந்தத்தினால் ஏதாவது சொன்னாலும் உன்னை நம்பியிருக்கும் சிநேகிதியை நீ ஏமாற்றலாமா? இந்தப் பால்யத்திலேயே இவ்வளவு வஞ்சகமா? கலியின் கொடுமை!” என்று தலையை அசைத்தேன்.
வனிதா பதில் ஒன்றும் சொல்லாமல் சின்னஞ் சிறு பிள்ளையைப்போல் எனக்கு “வவ்வவ்வவ்’ என்று அழகு காட்டினாள்.
“பரவாயில்லை, வனிதா, அந்த வஞ்சகத்தை நான் மன்னித்துவிட்டேன்” என்று லலிதா சொன்னாள்.
“அவள் வார்த்தையை நம்பாதே, வனிதா” நம்பாதே, வனிதா’ என்று சொன்னேன்;
“நாங்கள் இருவரும் காலையில் நகைக் கடைக்குப் போகும்போது உன்னைக் கட்டி இழுத்துக்கொண்டு போய் உன் இரு கைகளுக்கும் பொன்விலங்கு வாங்கியிடுகிறாளா இல்லையா, நீயே பார்க்கப் போகிறாய்” என்றேன்.

One Comment on “கொனஷ்டை/அறுபத்து மூவர்”
Comments are closed.