
வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதல் பி டி சாமி, தமிழ்வாணன் எனத் தொடர்ந்து சுஜாதா வரை ஏராளமான துப்பறியும் கதைகள், மர்ம நாவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு விமானக் கடத்தலைப் பற்றியோ அல்லது மனிதர்களைக் கடத்துவது பற்றியோ பயங்கர தீவிரவாதிகளால் செய்யப்படும் இவ்வித குற்றங்களை மையமாக வைத்து புனையப்படுகின்ற நாவல்கள் மிகக்குறைவாகவே தமிழில் நமக்குக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் இது போன்ற நாவல்கள், படங்கள் நிறைவே காணக் கிடைக்கின்றன.
திரு ரமணன் அவர்களின் ‘நீல வானம்’ வித்தியாசமான விமானக் கடத்தலை மையப்படுத்தி, விறுவிறுப்பாக சொல்லப்படுகின்ற ஒரு நாவல். இதில் துப்பறிவதற்கோ அல்லது மர்மமாக சிலவற்றை ஒளித்து வைப்பதற்கோ ஒன்றுமில்லை. தீவிரவாதிகள், விமான ஓட்டிகளைக் கட்டி போட்டு அவரகளது உடைகளில் விமானத்தில் ஏறி ஒரே ஒரு பயணியுடன், மற்றவர்களை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து, விமான நிலையத்திலேயே பெட்ரோல் டாங்குகள் இருக்கும் இடத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டு, சென்னையில் இருந்து இந்திய மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுகின்ற, கோரிக்கை வைக்கின்ற நாவல். திரு ரமணன் அவர்களின் முதல் நாவல், நீலவானம், பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது துப்பறியும் நாவலா? மர்ம நாவலா? என்றால் இரண்டும் இல்லை. சில உண்மைகளை அஸ்திவாரமாகக் கொண்டு புனையப்பட்ட சுவாரசியமான ‘திரில்லர்’ என்பதே சரி.
விமானக் கடத்தல், வானில் இல்லாமல், தரையிலேயே, விமான தளத்திலேயே நடக்கிறது என்பது வித்தியாசமானது. அதைச் செய்யும் கடத்தல்காரர்களுக்கும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அல்லது கடத்தலை எந்த சேதாரமும் இன்றித் தவிர்க்க, அரசு தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் விறுவிறுப்பு. இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த நடவடிக்கைகள் அவ்வளவு எளிதாக எடுத்துவிடக் கூடியவைகள் அல்ல! எத்தனை பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி, அரசின் விதிகள், ப்ரோட்டகால் மற்றும் அரசியல், ஊடகம் போன்றவைகளை அனுசரித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரமணன்.
கதை நாயகன் (நாயகி ?), ஏர் இந்தியா விமானம் 672 தான்! வீரதீர பராக்ரமம் கொண்ட கதாநாயகன், உயிர்போகும் குரூஷியல் சமயத்தில் வந்து கொஞ்சும் அல்லது கண்ணீர் விடும் கதாநாயகி, போன்ற வழக்கமான பாத்திரங்கள் இல்லாதது ஒரு வித்தியாசமான ஆறுதல்.
சென்னை விமான நிலையம், விமான நிலைய ‘கன்ட்ரோல் டவர்’, ஏர் இந்தியா அலுவலகம், ATC டவர், 4 டெர்மினல்கள், விமான நிலையத்தின் அமைப்பு, நாட்டின் மூன்றாவது பிஸியான ஏர்போர்ட். உலக அளவில் 40 வது நிலையில் இருந்து மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் விமான நிலையம், போன்ற தகவல்கள் நாவலின் நம்பகத் தன்மைக்கு வலு சேர்க்கின்றன.
மேலும் சென்னை தனியார் மருத்துவமனை, 70 வயது விமானத்துறை அமைச்சர், ராஷ்டிரபதி பவன், நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்கள் (புதுடெல்லி நகரை நிர்மாணித்த ஆங்கிலேயப் பொறியாளர்களில் முக்கியமானவர் லூயூட்டன்ஸ் (Lutyens) உதவியாளர் ஹெர்பர்ட் பேக்கர் (Herbert Baker). 1911 இல் உருவாக்கிய கட்டடங்கள் இவை – இதுபோன்ற தகவல்கள் ஆங்காங்கே நிறையவே உள்ளன), சென்னை பல்லாவரம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி கல்லூரியில் இயங்கும் என் ஐ ஏ அலுவலகம், பேங்க் ஆப் இங்கிலண்ட், லண்டன், மும்பை இந்திய ஆயில் நிறுவனத் தலைமையகம், விமான நிலைய இந்தியன் ஆயில் பெட்ரோல் சேமிப்பு நிலையம், போர்பந்தர் ஐ என் எஸ் சர்தார் பட்டேல் தள அலுவலகம், குஜராத் கட்ச் பகுதியில் கடல் பகுதி MARCOS அதிகாரிகள், சென்னை ரிசர்வ் வங்கி, புதுடெல்லி மத்திய அரசின் செய்தியாளர் அறை, பிரதமர் அலுவலகம் – மேற்கூறிய அத்தனை இடங்களிலும் விமானக் கடத்தலின் தாக்கம் வெளிப்படுகிறது. குழப்பமில்லாமல், படிப்படியாக இந்த இடங்களில் எடுக்கப்படும் முடிவுகளும் நடவடிக்கைகளும் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுவது ரமணனின் வெற்றியென்றே சொல்லவேண்டும்.
புதுடெல்லி நார்த் ப்ளாக்கில் பாதுகாப்பு ஆலோசகர், அவருடைய புல்லட் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் இந்த கதை சுருக்கம் சொல்லப்பட்டுள்ளது. விமானம் கடத்தப்பட்ட நிமிடம் முதல், ரிசர்வ் வங்கி கன்ஸைன்மெண்ட்டின் கஸ்டோடியன் விமானத்தில் ஏறாதது வரை ‘இதுவரை நடந்தது’ என்ற வகையில் சொல்லப்படுகிறது. கதை ஓட்டத்தின் சுவாரஸ்யம் சிறிது தடை படுகிறதுபோலத் தோன்றினாலும், அடுத்தடுத்து நடக்கின்ற சம்பவங்களைத் தெளிவாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
“உடனடியாகச் செய்ய வேண்டியது, விமானத்தையும், கன்சைன்மெண்ட்டையும் காப்பாற்ற வேண்டும். அந்தப் பைலட்டுகளை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்கள் டிமாண்ட் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாமல் சமாளிக்க வேண்டும்” – இதுதான் நாவலின் ஒன் லைனர்! இதை எப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பல தரவுகளுடன் சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார் ரமணன். உதாரணமாக இரண்டு விபரங்கள்:
“ரா என்பது அமெரிக்காவின் சி ஐ ஏ போல, இங்கிலாந்தின் எம் 16 போல ஒரு சர்வ சக்தி நிறைந்த புலனாய்வு அமைப்பு ஆடு மேய்ப்பவர்கள் பார்த்துவிட்டுச் செல்லும் வரை, நம் பகுதிக்குள் சீனர்கள் ஊடுருவி இருப்பது தெரியாத நிலையில், நாம் அந்தப் போரை சந்தித்தோம். இதன் விளைவாக, வெளிப்புற புலனாய்வுக்கு என்றே ஒரு தனி அமைப்பு பிறந்தது. இதற்கு ஏன் RAW (ரிசர்ச் அனலைசிஸ் விங்) என்று பெயரிட்டார்கள் என்பதே ஒரு ரகசியம். முதலில் சீனாவையும் பின்னர் பாகிஸ்தானையும் கண்காணிப்பதே முக்கியப் பணியாக இருந்தது. பின்னர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது உள்நாட்டு அரசியல் ஒற்று வேலைகளுக்கும் பயன்படுத்துவதற்காக மிகவும் வலுப்படுத்தப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இந்த அமைப்பு பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு, இன்று வல்லரசுகளின் உளவு அமைப்புக்கு இணையாக வளர்ந்திருக்கிறது. 1971 இல் ‘ரா’வின் முதல் தலைவர் ராமேஸ்வர் நாத்கவ் என்கிற IB அதிகாரி. இந்தத் திறமையான மனிதர் தான் இன்று இருக்கும் அமைப்பின் சிற்பி. அவர் வகுத்த அடிப்படையில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அமைப்பின் தலைவரின் பதவி ஒரு மூத்த செயலாளருக்கு இணையானது. ‘ரா’வின் தலைவர் பிரதமரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்பவர்”.
“சென்னை பூந்தமல்லியில் இருந்து குண்டம்பாக்கம் வழியாக செல்லும் சாலையில் தொலைவில் இருங்காட்டுக் கோட்டையில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட சர்வதேச கார் ரேஸ் ட்ராக்கின் வளைந்த ட்ராக்களும் அதன் நடுவே பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்ட வாட்ச் டவரும் தெரிகிறது ( 1980ல் சென்னை மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பால் தொடங்கப்பட்ட அது, இன்று சர்வதேச கார் பந்தயங்கள் நடக்கும் அளவுக்கு வசதிகளுடன் வளர்ந்திருக்கிறது) அந்த டவரில் இருக்கும் மூன்று தளங்களின் நான்கு புறமும் கண்ணாடிச் சுவர். அதன் வழியாக ரேஸ் நடக்கும் போது போட்டியில் ஓடும் கார்கள் அனைத்தையும் பார்க்க முடியும். விஐபிகள் மீடியாக்காரர்களுக்கு ஒரு தளம். அதற்கு மேல் தளத்தில் சர்வதேச நீதிபதிகள், பார்வையாளர்கள்”.
தரவுகள் புதியனவாகவும், தெரிந்துகொள்ள வேண்டியனவாகவும் இருந்தாலும், கதை ஓட்டத்தில் அவை ஒட்டாமல் தனித்து இருப்பதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பண்டோ பாத்தியா, விக்ரம் சிங், சுமிதா, ஷர்மா, நம்பியார், தங்கமணி, சங்கர், நடராஜன், கேப்டன் மேனன், குல்தீப் சிங், மிஸ்டர் ராகவன், சோமசேகர் ராவ், மிஸ்ராகுல்தீப் சிங், கேப்டன் குப்தா, மனோஜ் பாண்டே, சமஸ்கிருத ஸ்லோகத் தொனியிலேயே செய்திகளை அனுப்பும் சோமசேகர ராவ் என ஏராளமான பாத்திரங்கள். இடத்திற்கும், வேலைக்கும் ஏற்றாற்போலப் பெயர்களைத் தேர்வு செய்ததில், ஆசிரியரின் பரந்துபட்ட பார்வையும், பயண அனுபவமும் தெரிகிறது.
விமானக் கடத்தல் குறித்த தகவல்களை, ஊடகங்களுக்குக் கசியவிடக் கூடாது என்பதிலும், க்ளைமேக்ஸ் நிகழ்வுக்கு AI என்கிற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலும், தகவல், தொடர்பு குறித்த விவரணைகளிலும் ரமணனின் ஆழ்ந்த வாசிப்பு மற்றும் உழைப்பு தெரிகிறது. சில இடங்களில் இந்த மாதிரியான இரகசியங்களை எழுதலாமா என்ற சந்தேகம் வருமளவிற்கு நம்பகமான விவரணைகள்.
விறுவிறுப்பான “த்ரில்லர்”!
