
ராயப்பேட்டை முனிவர் என்ற திரு. வி. கலியாண சுந்தர முதலியாரை நான் முதல் முதல் சந்தித்தது காரைக் குடியிலே. அந்த நாளில் “குமரன்” பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்து வந்தேன். பத்திராதிபர் சொ. முருகப்பா ராயப்பேட்டை முனிவரின் சீடராகவும் நண்ப ராகவுமிருந்தார். முனிவரது அரசியற் கொள்கைகளோடு தமிழ்நடையும் பேச்சுத்திறனும் காந்தி பக்தியும் முருகப் பாவைப் பெரிதும் கவர்ந்திருந்தன.
அக்காலத்தில், தமிழ்க் கடல் ராய சொ. “ஊழியன்” பத்திரிகை நடத்தி வந்தார். அரசியற் கருத்துக்களிலோ சீர்திருத்தக் கொள்கைகளிலோ, தமிழ் வளர்ப்பு முயற்சிகளிலோ, கருத்து வேற்றுமை கிடையாது, குமரனுக்கும் ஊழியனுக்குமிடையே. எனினும், போட்டிக்கும் பூசல்களுக்கும் குறைவில்லை.
அப்பொழுது ஊழியன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தொண்டாற்றியவர் சிந்தனை வீரரான எழுத்தாளர் வ. ரா அவருக்கும் எனக்கும் இலக்கிய துறையில் கருத்து வேற்றுமைகள் பல. நாங்கள் போராடிச் சீராடிய தோழர்கள். ஒரு சமயம் காரைக்குடியில் ராயப் பேட்டை முனிவரின் சொற்பொழிவைக் கேட்பதற்குப் போனோம். ஒதுக்குப்புறமாக வசதியாக இடம் பிடித்துக் கொண்டு இருவரும் அமர்ந்தோம். இடையிடையே தம் அபிப்பிராயங்களை மெள்ள என் செவிகளில் ஓதி வந்தார்
வ. ரா.
பேச்சின் சிறப்பியல்புகள்
தமிழில் மேடைப் பேச்சை ஒரு தனிக் கலையாக ஆங்கிலப் பேச்சைப் போல் வளர்த்து விட்டவர்களில் திரு.வி.க. என்ற கலியாணசுந்தரரைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். அதை ஓர் அழகுக் கலையாக வளர்க்க வேண்டும் என்ற அவா வுடன் நல்ல வெற்றியும் கண்டவர் இவர். கேட்பவர்களுக்கு ஏற்படும் இன்பக் கிளர்ச்சியைத் தாமும் சரிநிகர் சமானமாக பகிர்ந்து அனுபவித்துப் பேசுவார். இவர் பேச்சில் திறமையைக் காட்டிலும் இனிமை அதிகம். ஆழத்தைக் காட்டிலும் அகலம் அதிகம். இதை நான் முதல் முதல் கேட்ட அன்றே, அப்பொழுதே, ‘உணர்ந்து கொண்டேன்.
கலியாணசுந்தரரின் பேச்சில் தேன் சொட்டும்; தென்றல் தவழும்; யாழ் இசைக்கும் மின்னாது. இடிக்காது; மழைத் துளிகளென வார்த்தைகள் வந்து விழும். சில சமயங்களில் அவை குற்றாலமலை அருவியிலிருந்து தெறிக்கும் நுண்துளி களை நினைவூட்டும். அரசியல் நிகழ்ச்சி குறித்துக் காரசார மாகப் பேசும் போதும். காரம் குறைந்தும் சாரம் மிகுந்தும் காணப்படும். செட்டிநாட்டு இளைஞர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் ஒரே கவனமாய்க் கூர்ந்து கேட்பார்கள். அப்படித் தாங்களும் பேசவேண்டுமென்று ஆசைப் படுவார்கள்.
பேச்சின் முடிவில் என்னை அறிமுகப்படுத்தினார் வ.ரா. ”இவர் திருநெல்வேலிச் சீமையிலிருந்து வந்திருப்பவர்; தங்கள் தமிழைப் போற்றுகிறவர்; தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்’ என்றார். உடனே திரு.வி.க. ‘திருநெல்வேலிச் சீமை தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது; ‘திக்கெல்லாம்புகழும் திருநெல்வேலி’ என்பது அருள்வாக்கு’ என்றெல்லாம் பதில் கூறி என்னை உற்சாகப்படுத்தியது நினைவில் இருக்கிறது.
அந்தப் படபடத்த கண்கள் என்னை அன்புடன் அருளுடன், உற்றுப் பார்த்தன. வலது பக்கமும் இடது பக்கமுமாக விரலை அசைத்து ஆட்டிக்கொண்டு அன்று ஆசி கூறினார். பேசிப்பேசி இளைத்திருந்த உடம்பில் குடிகொண்டிருந்த உள்ளம், தூய எண்ணங்களாலும் காந்தியக் கொள்கைகளாலும் உரம் பெற்றுத் திண்மையாக, உண்மையாகப் புலனாயிற்று. அந்த முதற் சந்திப்பிலேயே எங்கள் நட்பிற்கு அடிப்படை அமைந்து விட்டதை நாளடைவில் உணர்ந்தேன்.
ஆடம்பரமற்ற வெண்ணிறக் கதராடை உள்ளத்தூய்மைக்கு அறிகுறியாகவும், வைதிகக் குடுமி பழமையின் நினைவுச் சின்னமாகவும், மூக்குக் கண்ணாடி புதுமையுடன் இவர் கொண்டிருந்த தொடர்புக்கு ஓர் அறிகுறியாகவும் தோற்றம் அளித்தன. “இளைஞர்கள் மீதும் மாணவர் மீதும் தொழிலாளர் மீதும் இவருக்கு அபிமானம் அதிகம் என்று வ. ரா, குறுக்கிட்டுப் பேசியபோது, தன வைசிய இளைஞர்கள் பலர் தங்கள் குறிப்புப் புத்தகங்களில் இவர் கையெழுத்தைப் பெறச் சுற்றி நெருங்கிக் குழுமி யிருந்தார்கள், ”
*“இம் மூவகையினரில் என்னை எந்த வகையில் சேர்த்துக் கொள்வீர்களோ அறியேன்” என்று நான் சொன்னதும், “நீங்கள் என்றும் இளைஞராய்த் தமிழ் மாணாக்கராய்த் தமிழ்த் தொண்டே தொழிலாகக் கொண்டு வாழவேண்டும்’” என்றார் ராயப்பேட்டை முனிவர். “செந்தமிழ்ச் செல்வத்தை வாரி வழங்கினீர்கள்; விடை கொள்கிறேன். மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்” என்றேன்.
வ. ரா. அடுத்தபடியாக விடை கொள்ளும்போது, பேர் பெற்ற இப்பேச்சாளரிடம் சற்றுக் குறும்பாய்ப் பேசியதாக- எனக்கு நினைவு.
‘”தங்கள் தமிழ்ச் செல்வத்தில்-ஆம், அந்தச் சொற்செல்வத்தில் பி. ஸ்ரீயைக் காட்டிலும் என் தேவை அதிகம். நூற்றுக்கு நாற்பது பங்கு எனக்கு கிடைத் தால் போதும்; எனக்கே வழங்கி விடுங்கள். அதனால் நானும் பிழைத்துப் போவேன்; உங்களுக்கும் அது நல்லது. நீங்கள் மேலும் புகழ் தேடிக்கொள்ளலாம்” என்று பொருள்படப் பேசினார் வ.ரா. என்று நினைக்கிறேன். கலியாணசுத்திரரின் முகக் குறியிலிருந்து அந்தக் குறிப்பையும் பளிச்சென்று புரிந்து கொண்டார் என்று ஊகித்துக் கொண்டேன்.
நாங்கள் உரையாடிக் கொண்டே திரும்பினோம், “நான் போட்ட புதிர் புரிந்திருக்குமே!” என்றார் வ.ரா.
“நன்றாகப் புரிந்தது; எனக்கும்தான், அவருக்கும்தான்!”
“அவருக்கும் புரிந்து விட்டது என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்களோ? சோதிடக்கலை தெரியுமோ? அல்லது குறிபார்த்துச் சொல்லுகிறீர்களோ?”
“சோதிடம் வராது; அதில் உங்களைப்போல் நானும் நம்பிக்கையில்லாதவன். ஆனால் குறிபார்த்துக் கூறினேன்.’
”குறியா? ஓஹோ, முகக்குறி பார்த்துத் தெரிந்து கொண்டீர்களா?”
*’ஆம்; பொன்னான உள்ளத்தைப் புண்ணாக்கிவிட்டீர்கள்”
“அப்படியானால் உண்மையைச் சொல்லக்கூடாது. இந்த மாதிரி விஷயங்களிலும் அப்படித்தானே?”
நேரடியாகப் பேசுவதில் திரு.வி.க. சமர்த்தராயினும், சிறந்த, முதல் தரமான பேச்சுக்கு இன்றியமையாத சொற் செட்டைக் காணமுடியாது இவர் சொற்பொழிவுகளிலே. “இது இவரது குறைபாடு” என்பதை வற்புறுத்தத்தான் வ.ரா. நூற்றுக்கு நாற்பதுவீதம் இவர்தம் சொற்செல்வத்தை இழந்துவிடவேண்டும் என்றார். சிந்தனைச் செல்வராகிய தாம் சொற்களுக்காகத் திணறுவதையும் சுட்டிக் காட்டினார். அந்த நாற்பது விகிதம் தமக்கே கிடைக்கவேண்டும் என்று கேட்ட போது.
1921-ஆம் ஆண்டு முதல் தேசியப் பிரசாரத்திலும் காந்தியப் பிரசாரத்திலும் திரு.வி.க. ஈடுபட்டு வந்தார். ஈரத்தமிழிலும் வீரத்தமிழிலும் பேசியபோதிலும், தமிழ்த் தென்றல் ஜிலுஜிலுவென்று வாடைக் காற்றாக சிலசமயம் வீசியபோதிலும், அது புயலாகவோ கடுங்காற்றாகவோ மாறி வீசியதே இல்லை. தேசியப் பேச்சுகளால் கனல்கக்கும் –
சிந்தனைகளைக் கனல்கக்கும் வாக்கியங்களில் வெளியிட்ட வர்கள் உண்டு; ஆனால் அந்தப் பேச்சுக்கலை வேறு; சாந்தமான, உருக்கமான கல்லையும் கனிவிக்கும், கல்யாண சுந்தரரின் பேச்சுத்திறன் வேறு. சுருங்கச்சொன்னால், சக்தியைக் காட்டிலும் கனிவும் பக்தியும் தூய தமிழின் அழகும் தான் இவர் பேச்சின் அடிப்படைச் சிறப்பியல்பு.
சென்னையில் என் தொடர்பு
செட்டிநாட்டில் அறிமுகம் ஆனவரைச் சென்னைத் தொடர்பு நண்பராக்கிவிட்டது. தேசிய உறவுடன் இலக்கிய உறவும் உறுதிப்பட்டது. கலியாணசுந்தரரின் எழுத்துத் திறனும் என்னைக் கவர்ந்தது. “மனித வாழ்க்கையும் காந்தி யடிகளும்’ என்ற நூலும், “முருகன் அல்லது அழகு’ என்ற நூலும் என்னைச் சிறப்பாகக் கவர்ந்தன. எழுத்துத் திறனுக் கும் மேலாக இவரது குணநலன்களும் தூய வாழ்க்கையும் என்னை ஆட்கொண்டன. இவரது பத்திரிகைகளான தேச பக்தனும் நவசக்தியும் (இப்பொழுதுள்ள நவசக்தி அந்த நவசக்தி மறைவுக்குப் பின் அதே பெயரில் வெளிவருகிறது.) அவற்றிலே பிரதிபலித்த சமரச சமதர்ம மனப்பான்மையும் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டன. நண்பர் கல்கி உதவி ஆசிரியராகக் கலியாணசுந்தரனாரிடம் பணிபுரிந்து வந்த காலம் அது.
காந்தியடிகளின் வாழ்க்கைக் குறிப்பாகிய சத்திய சோதனையை ஓரளவு நினைவூட்டுவது இவரது வாழ்க்கைக் குறிப்பு நூல். இது இவரது வாழ்க்கைக் குறிப்பு மட்டும் அன்று; அக்காலத் தமிழகத்தின் வாழ்க்கைத் துணுக்குகளாகவும் மதிக்கத்தக்கது. இக்குறிப்பு நூலின் பகுதிகளை ஆசிரியரே பெருமிதத்துடன் எனக்கு வாசித்துக் காட்டிய துண்டு. இவரது நவசக்தி பத்திரிகையில் நானும் கட்டுரைகள் எழுதி வந்தேன். அவற்றை இவர் வாயார பாராட்டியதும், நெஞ்சாரப் எழுத்துத்துறையில் நான் முன்னேற்றம் அடைய ஒரு சிறந்த தூண்டுகோலாக உதவியது.
அன்றைய தமிழகச் சான்றோர்களுக்கு ஒரு திலகமாக, ஏன், திலகராகவே-திகழ்ந்தார்கலியாணசுந்தரனார். ஆனால் திலகரைப்போல் வீராவேச உரைகளிலோ, செயல்களிலோ இவர் தம் நெஞ்சைப் பறிகொடுத்ததில்லை. எதிரிகளுக்கு “நினைக்கவும் தீயென நின்ற எங்கள் திலக முனிவர்’” என்று பாரதி பாடியிருக்கிறார். அத்தகைய முனிவரல்லர் இந்தச் சென்னைத் தமிழ் முனிவர். இவரைச் சாது முதலியார் என்று சென்னை வாசிகள் பலரும் அந்த நாளில் குறிப்பிடுவதுண்டு. வைதாரையும் முத்தமிழில் வாழ்த்தித் திருத்த முடியும் என் பதில்தான் இந்த முருக பக்தருக்கு எவ்வளவு நம்பிக்கை!
தமிழின் மறுமலர்ச்சிக்கு மூவரை முக்கியமானவர்கள் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. மறுமலர்ச்சிக் கவிஞர் பாரதிதாம்; மறுமலர்ச்சிக் காலம் பாரதியுகம்தான்; சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் தமிழிலக்கியத்திற்கு ஆழ்ந் தகன்றதோர் அடிப்படை அமைத்து உதவிய சங்ககாலத்துச் சான்றோரின் குரல்களை மறுபடியும் நம் செவிகளில் விழச் செய்த தமிழ்த்தாத்தாவும், தமிழின் மறுமலர்ச்சிக்கு உரியவர் என்பதை எல்லாரும் ஒப்புக்கொள்வர். இவர்களுடன், கம்பனை மறுபடியும் கண்டுபிடித்து உலக
மகாகவியாகக் காட்டிய வ. வே. சு. ஐயரையும் சேர்த்து “மறுமலர்ச்சிக் குரிய மும்மூர்த்திகள்” என்பதையும் ரசிகர்கள் பலரும் ஒப்புக் கொள்வார்கள். இம்மூவரோடு நான்காம் மூர்த்தியாக நம் சாது முனிவரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
கண்ணீரும் இதயச் செந்நீரும் ஊற்றி இவர் வளர்த்த தமிழ்த் தேசியம் வேறு, தமிழ் வேறு என்று எப்படிப் பிரித்துப் பேச முடியும்? அந்தத் தேசியத்துடன் வளர்ந்த இவரது புதுமைத் தமிழையும் மறுமலர்ச்சித் தமிழ் என்றுதானே கூற வேண்டும்? இவர் தேசியமும், அன்று சிதம்பரனார் முத லானவர்கள் வளர்த்துவிட்ட தேசியத்தின் மறுமலர்ச்சிதானே?
சென்னைத் தொடர்பிலே திரு. வி. கலியாண சுந்தரனாரை நான் முழுக்க முழுக்கத் தெரிந்து கொண்டேன். ”ஓட்டைஉடைசல் இல்லாத ஒரு முழுமனிதர் இவர்!” என்று குறைபாடுகளை ஆராய்வதிலே கண்ணுங் கருத்துமாயிருந்த வ. ரா.வும் என்னிடம் ஒரு சமயம் ஒப்புக் கொண்டார். இன்றும் என் நெஞ்சில் இவர் அப்படியே நிலைபெற்றிருக் கிறார். இவரது அரசியலுள்ளமும் சமய சமரச உள்ளமும் சமுதாயச் சீர்திருத்த உள்ளமும் எல்லாம் கலையுள்ளமாகவும் தமிழுள்ளமாகவுமே காணப்பட்டன. இவர் செய்யுள்- ஆனால் வசன
நூல்களும் இயற்றியுள்ளார். சிறந்தவை என்பது என் கருத்து.
நூல்களே
திரு.வி.க. செய்தியறிவிலும் சாதாரண உலகியல் அறிவிலும் மெய்யுணர்வாகிய ஞானிகளின் சுத்த அறிவையும் கலந்து சமரசப்படுத்த முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார். செய்தியறிவிலே மெய்யுணர்வை இழந்ததில்லை. இவரது சைவத்தில் உலகமெல்லாம் ஒரே குடும்பம். சிவபெருமானே திருமாலும் புத்தரும். நாஸ்திகர் கூறும் இயற்கை அன்னைக்கும் இடமுண்டு, சிவபெருமான் திருவுருவிலே!
திரு. வி. க. வின் தொண்டுகளைத் தமிழ்த் தொண்டு, அரசியல் தொண்டு, சமுதாயத் தொண்டு, சமயத் தொண்டு என்றெல்லாம் பிரித்துப் பேசமுடியாது. இவர் வாழ்வு முழு வதும் சாது முனிவர் வாழ்வுக்கு ஓர் இலக்கியமாகும்.
