
3
சென்ஸ் ஆஃப் வேல்யூ-அதாவது பொருள், நேரம் உழைப்பு இவற்றின் அருமையை உணரவேண்டிய அவசியத்தை அப்பா மிக முக்கியமாகக் கருதியதால் அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க ஏராளமாய் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.அவை அத்தனையும்
நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துவந்து தூசிதட்டிச் சொல்வது சாத்தியமில்லை என்றாலும் ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
ஒரு விஷயத்தைக் குறித்து எழவேண்டிய பொறுப்புணர்ச்சியைப்பற்றிக் கூறும்போது, முதலில் என் கண்முன் தோன்றுவது அந்தப் பிச்சைக்காரக் கிழவி நிகழ்ச்சிதான்.
அப்போது எனக்கு என்ன வயதிருக்கும்? தெரிய வில்லை… நான்கு ஐந்து இருக்கலாம். அப்பாவின் முழங்கால் உயரத்துக்கு நின்றுகொண்டு அவர் சுண்டு விரலைப் பிடித்த வாறு அவரோடு நடந்த நாட்கள் அவை. காரில் அவரோடு பயணிக்கையில் ஜன்னலுக்கு வெளியே எதையாவது காண வேண்டுமென்றால் எழுந்து நிற்க வேண்டியது அவசியமான நாட்கள் அவை… அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் அப்பாவோடு செல்லும்போது அந்தக் கிழவியைப் பார்த்தேன். பார்த்தேன் என்று சொல்வதுகூட சரியில்லை, அப்பாவால் பார்க்கவைக்கப்பட்டேன்.
தள்ளாத வயது, மெலிந்து சுருங்கிய தேகம், கிழிந்த சேலை. பக்கத்தில் ஓர் அழுக்குத் துணி மூட்டை, நசுங்கின அலுமினியத் தட்டு.
ரயில்வே பாலத்துக்கடியில், சிமெண்ட் தூணரு ஒண்டிக்கொண்டிருந்த கிழவியை முதல் தரம் அப்பாதான் வண்டியை நிறுத்திவிட்டுக் காட்டினார்.
“கோபால், அந்தக் கிழவியைப் பார்.”
பார்த்தேன்.
“பாவமாக இருக்கிறது, இல்லை?”
\ம்\
“ரொம்ப வயதானவர் மாதிரி தோன்றவில்லை?”
\ம்
“பசியுடன் இருப்பாரோ?
…..
“மழை, காற்று வந்தால் என்ன பண்ணுவார்?” அன்றைக்குப் பேச்சு அதோடு முடிந்துவிட்டது. ஆனால் பகல் உணவுக்கு அப்பாவோடு உட்கார்ந்தபோது, ‘எனக்கு இது வேண்டாம்’ என்று நான் அடம்பிடித்த நிமிடத்தில், அப்பா மறுபடியும் மெல்ல கிழவி பேச்சை எடுத்தார்.
“அந்தக் கிழவியைப் பார்த்தாயே, கோபால், அவருக்கு பசித்ததென்றால் என்ன பண்ணுவார்? யார் சோறு போடுவார்கள்?”
“….”
“ஒரு வேளை வயிறு நிரம்ப என்றாவது அந்தக் கிழவி சாப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறாயா?”
“..|
“பட்டினியுடன், மழை காற்றில் தவித்து… பாவம், நீ வேண்டாம் என்று ஒதுக்கும் பதார்த்தங்களை அந்தக் கிழவியிடம் தந்தால், எத்தனை ஆர்வமாகச் சாப்பிடுவார்? பாவம்..”
அன்றைக்கு நான் வாயைத் திறக்காமல் போட்டதை சாப்பிட்டதும், தொடர்ந்து வந்த நாட்களில் வேண்டுமென்றே அப்பா வண்டியை அந்த வழியில் செலுத்தி என்னை அந்தக் கிழவியைப் பார்க்க வைத்ததும், கிழவிக்கு நாங்கள் ‘பெரியம்மா’ என்று பெயர் வைத்ததும், தினமும் மறக்காமல் சாப்பிடும் சமயத்தில் அவரின் ஏழ்மை, பட்டினிப்பற்றி பேசுவதும், எந்த உணவையும் வேண்டாம் என்று தள்ளாமல், மிச்சம் வைக்காமல் நான் உண்ணத் துவங்கியதும் அதற்குப் பிறகுதான்…
‘புது சட்டை வேண்டும்’ என்று ஒரு தரம் கேட்ட போதுகூட பெரியம்மாவை நினைவுபடுத்தி, “அந்தக் கிழவி கிழிந்து போன புடவையை உடுத்திக்கொண்டு வாழும்போது பெட்டி நிறைய புதுசு வைத்துக்கொண்டுள்ள நாம் மேலே புதுசுக்கு ஆசைப்படுவது நியாயமா, கோபால்?” என்று என்னிடம் சொன்னதும், அப்படிக் கேட்டதற்காக நான் வெட்கப் பட்டதும் இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஒரு மாதத்துக்குப் பிறகு பாலத்தடியில் அந்தப் பெரியம்மாவைக் காணவில்லை. பிச்சை எடுக்க வேறு எங்காவது போயிருப்பார் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். அப்பா வெளிநாடுகளுக்குப் போய்விட்டதால் இது குறித்து அவரிடமும் எதுவும் கேட்க வழி இல்லை. ஆனால், எனக்கு அந்தக் கிழவியை அறிமுகப்படுத்தியபிறகு தினமும் அவருக்கு அப்பா உணவு கொடுத்து வந்தார் என்பதும், ஏதோ ஒரு இல்லத்துக்குத் தன் சிபாரிசுடன் அனுப்பிவிட்டார் என்பதும் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு கண்ணன் மூலம் எனக்குத் தெரியவந்தது.
டிக்னிடி ஆஃப் லேபர் – உழைப்பின் கௌரவம்பற்றி அப்பா எனக்குள் அஸ்திவாரம் போடத் துவங்கியபோது எனக்கு வயது எட்டு இருந்தால் அதிகம்.
வீட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பத்திரிகைகளைப் பார்த்துவிட்டு, அதில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ‘ரோமர்’ கைக்கடிகாரத்தின்மேல் மோகம் கொண்டு ஒரு
நாள் அப்பாவிடம் சென்று, ‘எனக்கு அது வேண்டும்’ என்றேன்.
“வாட்ச் வேணுமா? வாங்கிவிட்டால் போகிறது. ஆனால் அதற்குப் பணம் வேணுமே!”
“உங்களிடம்தான் பணம் இருக்கிறதே, கொடுத்திடலாமே!”
“கொடுக்கலாம்தான். ஆனால், சும்மா நான் யாருக்குமே பணம் கொடுப்பதில்லையே… நாயர், கண்ணன் எல்லாரும் வேலை பண்ணுகிறார்கள்; சம்பளம் கொடுக்கிறேன். அதைப்போல நீயும் ஏதாவது வேலை செய், பணம் தருகிறேன்!”
“நானா? வேலையா? எனக்கு ஒரு வேலையும் தெரியாதே?”
“அப்படியா? சரி, தினமும் நான் சாப்பிடும்போது எனக்கும் என்கூடச் சாப்பிடுபவர்களுக்கும் சாப்பாடு பரிமாறுவதில் நீ நாயருக்கு உதவி செய்தால், வேளைக்கு உனக்கு எட்டணா தருகிறேன். என்ன செய்கிறாயா?”
எப்படியாவது ‘ரோமர்’ வாட்சை அடைந்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் பளபளக்க சரி என்று தலையாட்டினேன். அன்று மதியம் அப்பா உணவருந்தியபோது தெரிந்தவரையில் பதார்த்தங்களைப் பரிமாறினேன். உள்ளே போனால் அம்மாவுக்கும் மற்ற உறவினர்களுக்கும் எக்கச்சக்க கோபம். அத்தனை வேலைக்காரர்கள் மூலைக்கு மூலை நிற்கும்போது, அருமைப் பிள்ளையை அப்பா வேலை வாங்கியதில் யாருக்கும் துளி விருப்பம் இல்லை. இரண்டு நாட்கள் எப்படியோ தாக்குபிடித்துப் பரிமாறினவனுக்கு, அதன் பிறகு உறவினரின் உபதேசம் மண்டையில் ஏற, மூன்றாம்நாள் உணவு அறைக்குள் நான் செல்லவேயில்லை.
“சொன்ன வார்த்தையை கோபால் காப்பாற்றவில்லை. அதனால் அவன் கணக்கிலிருந்து ஒரு ரூபாயை ஃபைனாகக் கழித்துவிடு” என்று கண்ணனுக்கு அப்பா உத்தரவு போட, சேர்ந்த இரண்டு ரூபாயில் ஒன்று கழிந்துவிட்டது!
ரோமர் வாட்ச் வேண்டுமே!
அப்பாவின் பிடிவாதம் மாறாது என்பது புரிய, அன்று மாலையிலிருந்து மீண்டும் பரிமாறத் தொடங்கினேன்.
பத்து நாள் போவதற்குள் அந்த வேலைமீது எனக்கிருந்த எரிச்சல் குறைந்துபோக, காலைச் சிற்றுண்டி சாப்பிடும் போது, வலியச் சென்று உதவத் துவங்கினேன். ஒரு ரூபாய்க்குப் பதில் ஒன்றரை கிடைத்ததில், ரொம்ப சீக்கிரமே ரோமர் வாட்சை வாங்கி அணிந்தபோது நான் அடைந்த பரவசம் – எழுத்தில் கொண்டுவர இயலாததுதான்.
இதைப் போலவே வாசலைப் பெருக்குவதற்கும், இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் ‘லைகா’ காமரா தேவைப்பட்டபோது எச்சில் இலைகளை எடுக்கவும் நான் தயாரானேன்.
அந்த நான்கைந்து வருடங்களில் சாப்பாட்டுக் கூடத்தில் நான் வேலை செய்வதையும் வாசலை விளக்குமாறால் பெருக்குவதையும் கண்ணுற்ற அப்பாவின் சில நண்பரகளும் வயதான பாட்டிமார்களும், “ஒரே பையனை எதற்காக வேலைக்காரன்போல வேலை வாங்குகிறாய்?” என்று அவரிடம் சண்டைபோட்டு நான் பார்த்திருக்கிறேன், சின்னப் பையனை இப்படி நாயுடு ஈவு
இரக்கம் இல்லாமல் நடத்துகிறாரே! – என்று அவருக்குப் பின்னால் மனம் நொந்து சிலர் பேசியதாகக்கூட பிறகு அறிந்தேன். எல்லாவற்றுக்கும் அப்பாவிடமிருந்து பதிலாகக் கிடைத்தது சிரிப்புதான்.
அப்போதெல்லாம் அப்பாமேல் எனக்கு எரிச்சல் மண்டியிருக்கிறது! ‘ஊரே இவரைப் பணக்காரர், பெரிய தொழிலதிபர் என்று கூறுகிறது; ஆனால் எனக்கு நானூறு ரூபாயில் லைகா காமரா வாங்கித்தர இந்தப் பெரிய மனித ருக்கு மனசு இல்லையே!’ என்று எனக்குள் நான் புழுங்கி இருக்கிறேன்தான். வருடங்கள் பல சென்று இன்று நானும் ஒரு மகனுக்குத் தகப்பனாக இருக்கும்போதுதான், அவர் ஏன், எதற்காக அப்படிச் செய்தார் என்கிற கண்ணோட்டம் தெளிவாகப் புரிகிறது.
இன்றைக்கு என் மகனை நான் அப்படி வளர்க் கிறேனா என்றால், கட்டாயம் இல்லைதான். காலம் மாறி விட்டது… நான் வளர்ந்த காலம் வேறு, இன்று என் மகன் வளரும் சூழ்நிலை வேறு. அன்றைக்கு அப்பாவுக்கு இருந்த பணம், புகழ், ஆள்பலம், சக்தி எல்லாமே வேறு. வருடத்தில் பாதி நாட்கள், வேலை, வேலை என்று ஆரம் பித்த தொழில்கள் ஸ்திரமாகவேண்டி அப்பா வீட்டிலேயே தங்காமல் இருந்த அந்த நாட்களில், ஒரே பிள்ளை என்கிற செல்லத்தில், கேட்டதை ஏன் என்று கேட்காமல் வாங்கித்தர அம்மா தயாராக இருந்த நிலையில், பொருள், நேரம், உழைப்பு இவற்றின் சரியான அர்த்தம் எனக்கு விளங்காமல் போயிருக்கக்கூடிய சூழ்நிலை இருந்ததை யாரும் மறுக்க இயலாது. இன்று எந்தத் தகப்பனுமே தன் மகனுடன் அதிக நேரத்தை செலவழித்து நண்பனாகப் பழகு வது அவசியமாகிவிட்டது. பல குடும்பங்களில் காணப்படும் தகப்பன், மகன் நட்பு இன்று என் மகன், என்னிடையே யும் நிலவுவதால், ஓரிரு ஆரோக்கியமான வாக்குவாதத்தைச் செய்வதுகூட எங்களுக்குச் சாத்தியமாகிறது. அன்று அப்படியில்லை.
தகப்பன் பிள்ளை உறவு, நெருக்கம், மரியாதை எல்லாமே வேறு அளவுகோலால் அளக்கப் பட்ட காலம் அது. தனக்கு இருந்த கொஞ்ச நேரத்தில்தனக்குத் தெரிந்த வழியில் மனதில் பதியும்படி சென்ஸ் ஆஃப் வேல்யூவை அப்பா எனக்குக் கற்றுத்தர வெகுவாக முயற் சித்தது பாராட்டுக்குரியதாகவே நான் எண்ணுகிறேன்.
இன்றைக்கும் இது வேண்டும் அது வேண்டாம் என்று உணவிலோ அல்லது வேறு எதிலாவதிலோ நான் விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதில்லைதான். பாவக்காயிலிருந்து வேப்பம்பழ வத்தல் வரை அனைத்தையும் விரும்பி துளி மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதும், எதிலும் கூடுமான வரையில் எளிமையைக் கடைப்பிடிக்க விரும்புவதும், அன்று அப்பா எனக்குள் உண்டாக்கின விழிப்புணர்வினால்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒரு விஷயத்தைக் குறித்து புரிகிற மாதிரி எச்சரிக்கை செய்வதில்கூட அப்பா எப்படி அலாதி கவனம் செலுத்தினார் என்பதற்கு எனது எட்டாவது வயதில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கப்போகிறேன்.
அப்பா வீட்டில் இல்லாத நாட்களில் யார் பேச்சையும் கேட்காமல் எனக்குத் தோன்றின விதத்தில் காரியங் களைச் செய்துகொண்டிருப்பேன். கண்ணன், மற்றவர்கள் தடுத்ததையும் மீறி மின்சார இயந்திரங்களுடன் விளையாடு வது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஒரு தரம் பெரிய மிஷின் ஒன்றைத் துளி பயம் இல்லாமல் கிட்ட நின்று நான் ஓட வைக்க, அந்தமுறை அப்பா ஊரிலிருந்து திரும்பியதும் அவரிடம் இதுபற்றிப் புகார் செய்யப்
பட்டது.
மறுநாள் முன்பக்கமிருந்த அறையில் ஒரு மேஜையில் இன்று நாம் வண்டிகளில் உபயோகிக்கும் டைனமோவுக்குப் பதிலாக, அன்று ட்ராக்டர்களில் பயன்படுத்திய மேக்னடோவைப் பொருத்த வைத்து, அதைச் சுழற்றி மின் சாரத்தை உண்டாக்க வசதியாய் ஒரு கைப்பிடியையும் மாட்டச் சொன்னபின், அப்பா என்னை அருகில் அழைத்தார். மேக்னடோவிலிருந்து வெளியான இரண்டு ஓயர்களை என் கைகளில் பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவரே கைப்பிடியைச் சுற்ற…! இரண்டு கைகளிலும் தாளமாட்டாமல் எலக்ட்ரிக் ஷாக்! ‘ஹோ’ என்று கத்தியவன் கைகளை உதறிக்கொண்டு ஓடிவிட்டேன். மறுநாள் மீண்டும் அப்பா கூப்பிட்டனுப்ப அந்த அறைக்குள்ளே செல்லவே மறுத்துவிட்டேன்.
மூன்றாம் நாள் அப்பா தானே அந்த ஒயர்களைப் பிடித்துக்கொண்டு கைப்பிடியை என்னைச் சுற்றவைத்தார். பிறகு நிதானமாக விளக்கினார்.
“அன்றைக்கு உனக்கு ஷாக் அடித்த மாதிரி எனக்கு ஏன் அடிக்கவில்லை என்றால், ஓயர்களை நான் கெட்டியாக, அழுந்தப் பிடித்திருப்பது ஒரு காரணம். அதற்காக ‘ஷாக்’ வரவில்லையா என்றால், வருகிறது; ஆனால், கெட்டியாகப் பிடித்திருப்பதால் தாங்கும்படி இருக்கிறது. மின்சாரம் என்பது பயங்கரமான விஷயம். அதனோடு விளையாடுவது கூடாது. நான் ஊரில் இல்லாதபோது நீ மெஷின்களோடு விளையாடுகிறாயாம். அதன் மூலம் ஷாக் அடித்தால் எப்படியிருக்கும் என்பதை உனக்குப் புரியவைக்கத்தான் இந்த ஏற்பாடு. மேக்னட்டோ தருவது சின்ன ஷாக். அந்த மிஷின்களோடு விளையாடினால் சாவது நிச்சயம். எதையும் புரிந்துகொண்டு அணுகுவது புத்திசாலித்தனம். ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதா என்று அறிய புறங்கை யால் லேசாகத் தொட்டுப்பார்க்க வேண்டும். ஷாக் அடித்தால் கூட., இயல்பாக புறங்கை முன்பக்கமாக வளையும் என்ப தால், அபாயம் இல்லை. உள்ளங்கையால் தொட்டால் ஷாக் அடிக்கும்போது விரல்கள் உட்பக்கம் வளைந்து
ஒயரில் விழ, இன்னும் பலமாக ஷாக் அடித்து, உயிர் போகும் ஆபத்து உண்டாகலாம். மின்சாரத்தை அடக்கி ஆளுவதில்தான் மனிதனுக்குப் பெருமை. அசட்டுத்தனம் எதற்கும் உதவாது.”
அன்று அப்பா புரிகிற விதத்தில் கூறிய அறிவுரை இன்றைக்கும் என்னுள் பசுமையாய் இருப்பது நிஜம்.
யோசிக்காமல், ஒரு பொருளை உருவாக்கியவர்கள் உழைத்த உழைப்பை மதிக்காமல் பேசுவதென்பது, அப்பா அறவே தவிர்த்த ஒரு பழக்கம்.
இளமைப் பிராயத்தில் ஒருநாள் ‘படம் வரைவதில் கஷ்டம் என்ன இருக்கிறது’ என்று அலட்சியமாய் நான் கூறப்போக, உடனடியாய் நான்கு வெள்ளைத் தாள்களையும் பென்சிலையும் எடுத்து வைத்துக்கொண்டு அப்பா என்னை அருகில் அழைத்தார்.
பென்சிலை என்னிடம் கொடுத்து, ஒரு கோணல் இல்லாத வட்டத்தை வரையச் சொன்னார். ஒரு தரம் இல்லை, இரண்டு தரம் இல்லை… பத்து முறைகள் முயன்றும் முடியாதுபோனபிறகு, எந்தக் காரியத்தையும் பற்றி அதன்பின் இருக்கும் உழைப்பை லட்சியம் பண்ணாமல் பேசுவது தவறு என்பதை உணர வைத்தார்.
இதேபோல கதைப் புத்தகங்கள் எழுதுவதைப்பற்றி சாதாரணமாய் நான் பேசின ஒரு நாளிலும், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதிய ஒரு பெர்ரிமேஸன் நாவலை எடுத்துத் தந்தார்.
முக்கியமான கோர்ட் சீன்வரை படிக்கவைத்து, பின், புத்தகத்தை மூடிவைக்கச் சொல்லி அதன் தொடர்ச்சியை அப்பா என்னை எழுதும்படி பணித்தார். முழுசாக ஒருநாள் முழுவதும் முயன்றும், ஒருசில வார்த்தைகளைக்கூட ஒழுங்காக எழுத முடியாதுபோனபோதுதான், கதை எழுதுவதில் உள்ள சிரமங்களை உணர என்னால் முடிந்தது. இப்படி பல உதாரணங்கள்…
அப்பாவை நன்கு அறிந்தவர்களுக்கு அவரின் ‘நுண்கலைகளால் எந்தப் பயனும் இல்லை’ என்கிற கருத்துக்களைக் கேட்டவர்களுக்கு, இப்படி அவர் ஓவியம், கதை பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளார் என்கிற விவரம் நம்பமுடியாமல் இருக்கலாம்.
இங்கே, நுண்கலைகள்பற்றி அப்பா கொண்டிருந்த கருத்துக்களை அவர் கண்ணோட்டத்திலிருந்தே கொஞ்சம் யோசிக்கலாமா?
இந்தியா வளரும் நாடு, மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் பெருகிவிட்ட நிலையில் ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட்டு தன்னையும், சமுதாயத்தையும், நாட்டை யும் உயர்த்துவதை விட்டுவிட்டு, பொழுதுபோக்கு சம்பவங்களில், இன்பம் தரும் சமாசாரங்களில் புத்தியை மக்கள் செலவிடுவது தேலையில்லாத காரியம் என்று அப்பா அழுத்தமாக நம்பினார். அதனால்தான் அவ்வப்போது சங்கீதம், ஓவியம், சினிமா போன்றவை மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்றன அல்ல என்று வாதிட்டிருக்கிறார்.
இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், முதல்முறை வெளிநாடுகளுக்கு என்னை அழைத்துப் போன போது, பாரிஸில் புகழ்மிக்க லூவர் கலைக்கூடத்துக்கு இட்டுச் சென்று அங்கிருந்த சிற்ப ஓவியங்களைக் காட்டி, ‘கல்லில் வலைபோல எப்படிச் செதுக்கியிருக்கிறான் பார், அந்த ஓவியத்தில் தென்படும் மாலை வெளிச்சத்தைப் பார்’ என்று நுணுக்கங்களைக் காட்டிக் கொடுத்து, “நாடு வளர்ந்தபிறகு, பொருளாதாரத்திலும் மக்களின் தரம் செம்மையான பிறகு இந்தக் கலைகளையும் வளர்த்துக்கொண்டு சிறந்து விளங்குவதுதான் வளர்ச்சிக்கு அடையாளம்… அதைத் தவிர்த்து தொழில், விவசாயம், விஞ்ஞான ரீதியாக வளர
வேண்டிய பருவத்தில் காலத்தைச் சிதற அடிப்பது மாபெரும் பாதகமாகவே எனக்குப் படுகிறது. “பருவமடை யாத சின்னப் பெண், பிள்ளை பெறலாமா? மரமாகு முன் செடி காய்களைச் சுமக்கலாமா? தவறு அல்லவா?” என்று ஆதங்கப்பட்டது, எனக்கு நினைவுக்கு வருகிறது.
வெளிநாட்டு விஜயத்தைப்பற்றிப் பேசும்போது நியூயார்க்கில் அப்பா எனக்குக் கொடுத்த ஒரு பாடத்தை விவரிக்காவிட்டால் இந்த அத்தியாயம் முழுமை பெறாது.
அப்பா, டாக்டர் ராமசாமி அய்யர், சுப்பையா கவுண்டர், நான்- நால்வருமாக முதல் தடவையாக அமெரிக்கா சென்றபோது நடந்தது அந்தச் சம்பவம். இரண்டும் கெட்டான் வயது என்று சொல்வார்களே, அப்படி ஒரு பருவம் எனக்கு. பெரியவர்களோடு சேர முடியாத, சின்னவர்களோடும் பழக முடியாத டீன்ஏஜ் வயது. கஷ்டம் இல்லாமல், எது பற்றியும் சிந்தனை இல்லாமல் நான் இருந்தது அப்பாவுக்குள் கவலையை உண்டாக்கியிருக்க வேண்டும். யோசனை பண்ணியவர், தன் சுபாவப்படி காரியத்தில் இறங்கிவிட்டார்.
நியூயார்க்கில் நாங்கள் காம்டோர் என்னும் ஹோட்ட லில் தங்கியிருந்தோம். போய்ச்சேர்ந்த இரண்டாம் நாள் மாலை எல்லோருமாக வெளியில் போனோம். புறப்படும் முன் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்த அப்பா, சென்ற இடங்களிலெல்லாம் என்னையே செலவு செய்யச் சொல்ல, அதுகுறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நானும் செய்தேன். சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பியவர்கள் படுத்து உறங்கிவிட்டோம்.
மறுநாள் காலை ஏழு மணி அளவில் தூங்கிக்கொண் டிருந்த என்னை அப்பா எழுப்பி, “நாங்கள் செமினாருக்குப் போகிறோம், நீ உன் இஷ்டம் போல இருந்துவிட்டு மாலை
5 மணிக்கு வால்டாஃப் ஹோட்டலுக்கு வந்துவிடு” என்று கூறி, மற்றவர்களுடன் சென்றுவிட்டார்.
ஒன்பது மணிக்கு மெள்ள எழுந்தவன், குளித்துத் தயாராகி, கிடைத்த சுதந்திரத்தை முழுமையாய்ப் பயன்படுத்தும் ஆர்வத்துடன் வெளியே கிளம்பினேன்.
முதலில் பஸ் பிடித்து சற்றுத் தள்ளி இருந்த ராக்ஃபெல்லர் பிளாஸாவிற்குச் சென்றேன். அங்கு பெரிய பனிக்கட்டி சறுக்கு மைதானம் உண்டு. மேலே நின்றவாறு நன்றாகக் காண முடிந்தாலும், டிக்கெட் வாங்கி கீழே சென்று பனியில் சறுக்கி விளையாடியவர்களை வேடிக்கை பார்த்தேன். லேசாகப் பசியெடுத்ததால் மசாலா கடலை வாங்கித் தின்று கோக்கோ கோலா குடித்தேன். அடுத்து மீண்டும் பஸ் பிடித்து ‘நம்பினால் நம்புங்கள் இல்லாவிட்டால் போங்கள்’ Believe it or not – என்கிற அதிசயக் கண்காட்சி நடந்த இடத்திற்குச் சென்று அதைப் பார்த்தேன். அங்கும் ஏதோ எண்ணெயில் செய்த நொறுக்குத் தீனி வாங்கித் தின்றேன். அங்கிருந்து ஸப்வே-பாதாள ரயில் வழியாக எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை அடைந்து, உலகிலேயே மிக உயரமான அதன் மேல்மாடிக்குச் சென்று டெலஸ்கோப்புக்குப் பணம் கொடுத்து ஊரைப் பார்த்தேன்.
கீழே வருவதற்குள் மணி ஒன்றாகிவிட்டதில் நமநமவென்று பசி பிறாண்ட ஆரம்பித்துவிட்டது.
கையில் காசு கொஞ்சமே இருந்ததால் உணவு விடுதி எதற்கும் சென்று சாப்பிட முடியாத நிலை. முதல் நாள் என்னை செலவழிக்க வைத்த பிறகு, இன்று பணம் கொடுக்கா மல் சென்றுவிட்ட அப்பா மேல் கோபம் எழுந்தது. அடக்கிக்கொண்டு சுதந்திரதேவி சிலை பார்க்கப் போக முடிவு செய்தேன்.
பசி
கையிலிருந்த கடைசி சில செண்டுகளுக்கு சோளப் பொறி வாங்கி கொறித்துக்கொண்டே நடந்தேன். பாதி தூரம் போவதற்குள் கால்கள் துணி மாதிரி தொய்ந்தன. காலையிலிருந்து கடலை, பொரி என்று மட்டுமே தின்றிருந்ததில் வயிற்றைப் பிரட்டியது. கூடவே பயங்கரப் பசி. தலைவலி…
மணி இரண்டைத் தாண்டுவதற்குள் சுதந்திரதேவி சிலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்கிற எரிச்சல் எழ, திரும்பி மெல்ல வால்டாஃப் ஹோட்டலை நோக்கி நடந்தேன்.
மான்ஹாட்டனின் இந்தக் கோடியில் நான் இருந்தேன் என்றால், அந்தக் கோடியில் ஹோட்டல். பஸ், பாதாள ரயிலில் போக காசு இல்லை. டாக்ஸி ஒன்றை அமர்த்திக் கொண்டு போகலாம் என்றால், ஐந்து மணிக்குத்தான் செமினார் முடிந்து அப்பா வெளியில் வருவார். அதுவரை கட்டணம் கொடுக்காமல் டாக்ஸியைக் காக்க வைப்பது எப்படி?
சொகுசாக வாழ்ந்து பழகிவிட்ட என்னை, ஆத்திரம், அழுகை, கோபம், பசி என்று எல்லாமாக ஆளை ஆட்டி வைக்க, மெதுவாய் நடந்து எப்படியோ நான்கு மணி அளவில் ஹோட்டலை அடைந்தேன், நியூயார்க்கில் மிகப்பெரிய ஹோட்டலான அதனுள் நுழைந்து வரவேற்பு சோபாவில் உட்கார்ந்துகொண்டேன்.
சிறுகுடலைப் பெருங்குடல் தின்றது என்பார்களே, அப்படியொரு பசி..
முதலில் கண்களில் பூச்சி பறந்தது; நாக்கு உலர்ந்து போனது, பிறகு காதுக்குள் இரைச்சல், கண் முன் இருள்.. பசி காதை அடைப்பதை உணர்ந்தேன். பசி என்பது இதுதானா? அது இத்தனை கொடுமையானதா? மயங்கி விழப்போகிறேன் என்று நான் நினைத்தபோது, எங்கிருந்தோ தெய்வமாக டாக்டர் ராமசாமி அய்யர் வந்தார். என்னைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று உணவு விடுதிக்குள் உட்கார வைத்து, முதலில் ஒரு வாய் தண்ணீரைக் குடிக்க வைத்தார்.
கேக் துண்டம் ஒன்றைத் தின்று ஜில்லென்று மில்க் ஷேக்கையும் குடித்த பிறகு, அது நாழிகை என்னை வாட்டி எடுத்த உபாதைகள் குறைய, கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக் கொண்டவனாய், ஆயுளில் நான் சாப்பிட்டிராத தினுசில் ஆர்டர் செய்து வயிறு முட்டச் சாப்பிட்டேன்.
அப்பா வந்து எங்களோடு சேர்ந்துகொண்டபோது, அப்படி என்னை அனாதை மாதிரி தவிக்கவிட்டாரே என்கிற கோபத்தில் அவரோடு நான் ஒரு வார்த்தை பேச வில்லை.
மறுநாள் உறங்கி எழுந்த பின் அப்பாவாக வலிய கேட்டார்.
“நேற்று என்ன செய்தாய், கோபால்? நன்றாக ஊர் சுற்றிப் பார்த்தாயா?”
“மூன்று டாலர்களை மட்டும் கையில் கொடுத்து விட்டு இது என்ன கேள்வி?” – நான் கோபம் குறையாமல் முணுமுணுத்தேன்.
அப்பா சிரித்தார். பின், “சரி, இன்று எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை. நேற்று நீ செய்தவற்றை இன்று மீண்டும் நாம் செய்து பார்க்கலாம். ஆளுக்கு மூன்று டாலர் வீதம் இந்தா, பன்னிரெண்டு டாலர்களை நீயே வைத்துக் கொண்டு செலவழி” என, கிளம்பினோம்.
முதல் வேலையாய் அப்பா ஏற்கனவே முன் யோசனையுடன் வாங்கி வைத்திருந்த மான்ஹாட்டன் வரைபடத்தை ஒரு நிமிஷம் ஊன்றிப் பார்த்தார்.
“பிலீவ் இட் ஆர் நாட் அடுத்த கட்டடத்தில் இருக்கிறது. நீ பஸ்ஸில் ராக்ஃபெல்லர் பிளாஸா போய் விட்டு, மீண்டும் பஸ்ஸில் இங்கு வந்தது அனாவசியம். முதலில் அங்கு போகலாம். புறப்படும் முன் சிற்றுண்டி சாப்பிட்டுவிடலாம்.”
திட்டப்படி எதிர்க் கட்டடத்தில் இருந்த ஸர்வ் யுவர் செல்ஃப் விடுதிக்குச்சென்று ஆளுக்கு முப்பது செண்டுகள் மட்டுமே கொடுத்து வெஜிடபிள் சாண்ட்விச், பால் என்று வயிறு நிரம்பச் சாப்பிட்டோம். அடுத்த பக்கத்திலேயே இருந்தது ‘பிலிவ் இட் ஆர் நாட்’ கண்காட்சி. இங்கும் காலை ஒன்பதிலிருந்து பதினோரு மணி வரை சலுகைக் கட்டணம் என்பதால் முதல்நாள் நான் கொடுத்ததற்குப் பாதி பணத்தில் கண்காட்சியைப் பார்க்க முடிந்தது.
அங்கிருந்து பஸ் எடுத்து ராக்ஃபெல்லர் பிளாஸா. மேலே நின்றாலே சறுக்கு விளையாட்டை நன்றாகக் காண முடிய, காசு கொடுத்துக் கீழே போகாமல் வேடிக்கை பார்த்தோம். அங்கு விற்ற கோக்கோ கோலா, கடலையின் விலை, கீழே விற்பதில் பாதிதான் என்பதை, விசாரித்தபோது புரிந்துகொள்ள முடிந்தது.
அடுத்து, நடக்கும் தொலைவில் இருந்த எம்பயர் ஸ்டேட் கட்டடம், தொடர்ந்து பாதாள ரயில் எடுத்து சுதந்திரச் சிலைக்குச் செல்லும் படகுகள் உள்ள வார்ஃப் என்னும் இடம். அங்கு மீண்டும் தானே பரிமாறிக் கொள்ளும் விடுதியில் நல்ல சுத்தமான சாப்பாடு. படகு பிடித்து சிலை இருந்த தீவுக்குச் சென்று, திரும்பி பாதாள் ரயில் மூலம் நாங்கள் ஹோட்டலுக்கு வந்தபோது மணி மாலை நான்குகூட ஆகியிருக்கவில்லை. கையில் கிட்டத்தட்ட ஆளுக்கு எண்பது செண்ட் போல மிச்சம்.
சரியாகத் திட்டமிடாததால் நேரம், சக்தி இரண்டையும் விரயம் பண்ணியதோடு, இன்று பார்த்தது போல
போனது என்பதை நான் உணர்ந்த அந்த நிமிஷத்தில் தனியாக என்னை அழைத்து டாக்டர் ராமசாமி அய்யர்,
“விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் உனக்கு பசி, திட்டமிடுதல் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவே அப்பா திட்டமிட்டு நேற்றைய நாடகத்தை நடத்தினார். கோவையிலோ, இந்தியாவில் வேறு எந்த நகரிலோ இதைச் செய்வது இயலாது. புது இடத்தில், உன் உதவிக்கு யாரும் வரமுடியாத இங்குதான் இப்படிச் செய்ய முடியும். முதல் நாள் வேண்டுமென்றே அத்தனை பணத்தையும் செலவழிக்க வைத்தார். அவர் நினைத்த ரீதியிலேயே நீயும் யோசிக்காமல் நடந்து கையிருப்பைச் செலவழித்துவிட்டு, கோபம், பசி என்கிற உணர்ச்சிக்கு ஆளாகி அவஸ்தைப் பட்டாய். பசியின் கொடுமை என்றால் என்ன என்று உனக்கு ஓரளவாவது விளங்கியிருக்கும். எதிர்காலத்தில் உன்னால் ஒருவன் பசியின் கொடுமைக்கு ஆளாகாமல் நீ பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம். நேற்று முழுவதும் நீ மட்டும் பட்டினி என்று நினைத்துவிடாதே, உன் அப்பாவும் பல்லில் பச்சைத் தண்ணீர் விடவில்லை-தெரியுமா?” என்றபோது, எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
