மதுவந்தி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும் ?

 
       (நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?)
நான் ஏன் எழுதுகிறேன்? எனும் கேள்வியின் உப கேள்வியாகவே இந்தக் கேள்வி : நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது நான் ஏன் கவிதை எழுதுகிறேன்? ) என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.
நான் ஏன் எழுதுகிறேன்? என்கிற கேள்விக்கு விடையாக நான் எழுதியது ஏற்கனவே பதிவாகியுள்ளது என்பதால்( பூபாளம் கீதம் 24 ஏப்ரல் 23), சுருக்கமாகச் சொல்வதெனில், எழுதத் தூண்டும் அல்லது எழுதத் தடை செய்யும் சூழல், மற்றும் எழுதியதைப் பதிவு செய்து, பகிர்ந்து கொள்ள குழு, மேடை, தளம்இருப்பது இவையே நான் எழுதுவதற்கான காரணம்.
சரி, எழுத வேண்டும் எனில், ஏன் கவிதை எழுத வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. இதற்கு நேரடியான, உடனடியான, பதில்- அதுதான் தெரிந்தது , அதனால்தான் எனச் சொல்லத் தோன்றுகிறது. அந்தப் பதிலின் தோள் மீதேறி அடுத்த கேள்வி உடனே எழுகிறது – எது கவிதை ?
ஞானக்கூத்தன் வரிகளில்,
சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை,
இவை இருந்தால் அது நிச்சயம் கவிதைதான். ஒரு கவிதையை அடையாளம் காணவும், ரசித்து மகிழவும் அறிந்த பின்பு, அந்தக் கவிதையின் வாசம் நம் கை பிடித்து அழைத்துச் சென்று ஒரு புதிய உலகை தரிசனம் காட்டும். அந்த உலகின் காட்சிகள் தரும் வியப்பு, மகிழ்வு, குதூகலம், தேடல் எல்லாவற்றையும் எழுத்தில் வடித்து, பகிர்ந்து கொள்ளும் ஆவல்தான் கவிதை எழுதத் தூண்டுகிறது.
கல்லூரியின் முதல் ஆண்டில் எழுதிய கவிதை கல்லூரி இதழில் பிரசுரமாகி, அதற்குப் பாராட்டாக கடிதம் வந்து, பிறகு, அதே கவிதை “ஜன்னல்’ இலக்கியப் பத்திரிகையின் முதல் இதழில் வெளியாகி , பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் வெளியீட்டு உரையில் குறிப்பிட்டுப் பேசியதும் தரை காலில் பாவவில்லை . தொடர்ந்து எழுத ஆரம்பித்து பூபாளம். கணையாழி, தீபம் என பிரசுரம் ஆனதும் நான் எழுதுவது கவிதை என நம்பிக்கை உண்டானது.  கல்யாண்ஜி, கலாப்பிரியா,, விக்ரமாதித்யன், மீரா, அப்துல் ரகுமான், நா. விச்வநாதன், ந. ஜய பாஸ்கரன்  முதலான கவிஞர்களின் கவிதைகள் எது கவிதை என அடையாளம் காட்டின.
ஏன் சிறுகதை , நாடகம், புதினம், என எழுதவில்லை? ஒரு வேளை, அதற்கு கவிதையின் வடிவம் காரணமாயிருக்கலாம். சொல்ல வருவதை சிக்கனமாய் சொல்லி வாசகனைப் போய்ச் சேருவது எளிதாகவும்,விரைவாகவும் இருக்கிறது.
1500 அல்லது 2000 சொற்களில் சிறுகதை சொல்வது கடினமாகத் தோன்றுகிறது.
கால ஓட்டத்தில், கதைகளையும் கவிதை வடிவில் சொல்ல ஆரம்பித்து அதற்கு வாசக அங்கீகாரமும் பெற்ற பின் ஏன் சிறுகதை எழுத வேண்டும் என்று கூட இப்போது தோன்றுகிறது.
தலைப்புக்குக் கவிதை, படத்துக்குக் கவிதை, முதலடி கொடுத்து கவிதை, ஈற்றடி கொடுத்து கவிதை, நாட்களின் கொண்டாடத்திற்கு ( புத்தாண்டு, மகளிர் தினம் , புத்தகக தினம் இப்படி) கவிதை என விடப்படும் சவால்களை ஏற்று எழுதுவது கவிதை வடிவில் சுலபமாக இருக்கிறது. இப்படியே பழகிப் போய் , இப்போது எழுத வேண்டும் என்றால், கவிதைதான் முதலில் எழுதத் தோன்றுகிறது இதோ , இந்தத் தலைப்பிலும் உடனே , போன வருடம் “நான் ஏன் கவிதை எழுதுகிறேன்? “ என ஒரு கவிதை எழுதி விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆனது.
வேற ஒண்ணும் தெரியாதுங்க என ஒத்துக் கொள்வது நேர்மை. நீ எழுதுவது கவிதைதான் என நிச்சயமாக எப்படித் தெரியும் உனக்கு எனக் கேட்டால், வாசக எதிர்வினை தவிர, மனசில் உள்ளூர ஒரு எண்ணம்  சொல்லும் அது கவிதை என.
அந்த மனசின் குரல்தான் நான் கவிதை எழுதியதற்கும், இன்னும் எழுதப் போவதற்கும் காரணம் என நினைக்கிறேன்.
.  15.04.25              
                
 

2 Comments on “மதுவந்தி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும் ?”

Comments are closed.