நாகேந்திர பாரதி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும்

ஒரே வரியில் சொல்லனும்னா , நீங்க கொடுக்கிற இது போன்ற தலைப்புக்கள் தான் ஒரு வேகத்தைக் கொடுக்குது கவிதை எழுத. ஒரு சவால்.
சவால்கள் சந்திக்கத் தூண்டுகின்றன. சாதிக்கத் தூண்டுகின்றன.
ஆழமாய் யோசிச்சா , ஏன் கவிதை என் கவிதை, என்று யோசித்தபோது தோன்றிய என் எண்ணங்களை ஏற்கனவே கவிதை வடிவில் வடித்து சொல் புதிதுவில் போட்டுவிட்டேன் .இங்கு உரை நடை விளக்கம்.’
பார்க்கிற இயற்கைக் காட்சிகளும் படுத்துகின்ற வாழ்க்கை உணர்ச்சிகளும் கவிதை எழுதத் தூண்டுகின்றன. அடிப்படைக் காரணம், ஆரம்ப காலப் பள்ளி வாழ்க்கை
பத்தாவது படித்தபோது எழுதியது முதல் கவிதை.
காரணம் இலக்கியத்தை எனது தமிழ் ஆசிரியர் படித்துச் சொன்ன விதம். எனது உத்தரகோசமங்கை ஊரின் கிளை நூலகத்தில் நான் படித்த ரா பி சேதுப் பிள்ளை அவர்களின் புத்தகங்களின் எதுகை மோனை நடை .
அழகாகவும் இருக்கிறது , உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது என்று தோன்றிய எண்ணம். அவரது வரிகள் இப்போது ஞாபகம் இல்லை. அது எழுப்பிய ஆர்வம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அந்தத் தாக்கத்தில் நான் எழுதிய கவிதைகள் நோட்டுப் புத்தகம் இன்னமும் என்னிடம் இருக்கிறது .
சுருக்கமாகவும், சுவையாகவும் எழுத வேண்டும் என்ற எண்ணமே முதலில் தோன்றிய எண்ணம். அவ்வாறு சூரிய உதயம் பற்றி நான் எழுதிய கவிதையை முன்பே சொல் புதிது நிகழ்வில் சொல்லி விட்டதால் மறுபடி சொல்ல விரும்பவில்லை. பனை மரத்திடையே பகலவன் தோன்ற பார்த்த நிலவுப் பெண் பயம் கொள்ள ‘ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை
அது தவிர , அப்போது பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் போட்டிகள் ஆர்வத்தைத் தூண்டின. 1969 ஆம் ஆண்டு அது. ஆனந்த விகடன் பத்திரிகையில் ‘ அம்புலிப் பயணம் ‘ என்ற தலைப்பில் கவிதை ப் போட்டி ஓன்று நடத்தினார்கள். நான் அனுப்பிய எண்சீர் விருத்தக் கவிதை ஆறுதல் பரிசு பெற்றது . . இலக்கணம் மிகவும் பிடித்த பாடமாக இருந்த காலம் அது. தேமாவும் புளிமாவுமாகத் திரிந்த காலம் அது. வெண்பாவும், ஆசிரியப்பாவும், விருத்தப்பாவுமாக விழுந்து கிடந்த காலம் அது. இப்போது இலக்கணம் எல்லாம் மறந்து போய் விட்டது ,புதுக் கவிதை உலகத்திற்குள் புகுந்து விட்டதால் .
A thing of beauty is joy for ever. A thing of ugly is sorrow for ever .
வாழ்க்கையும் இயற்கையும் காட்டும் இன்ப துன்பக் காட்சிகள் என்னைக் கவிதை எழுதத் தூண்டுகின்றன. மூவாயிரத்துக்கும் மேல் பத்துவரிக் கவிதைகள் எழுதி 100 மின்புத்தகங்களுக்கும் மேல் போட்டாகி விட்டது.
சுருங்கச் சொல்ல வேண்டும்., சுவையாகச் சொல்லவேண்டும் என்ற ஆர்வமே நான் கவிதை எழுதும் காரணம். அது வாசகர்களுக்குப் புரியும்படியும் சொல்லவேண்டும். அத்துடன் என் கவிதைகளுக்கும் எப்படியோ ஒரு கதையும் வந்து விடுகிறது . அதற்கு நான் ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்..
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை கல்கி இதழில் வெளிவந்தது. மற்றும் குமுதம், குங்குமம், பாக்யா, ராணி, தேவி , கணையாழி பத்திரிகைகளில் வெளிவந்தது இப்போது சொல் புதிது , கதை புதிது மூலம் அழகியசிங்கரின் நவீன விருட்சம் தினசரி மின்னிதழிலும் எனது கதை, கவிதைகள் வெளிவருகின்றன.
அடிப்படை க் காரணம் எழுதுறப்போ கிடைக்கிற மகிழ்ச்சி . அவ்வளவுதான்.
இப்போது கதை கவிதைகளில் நாட்டம் குறைந்து , பாடுவதில் மகிழ்ச்சி வந்து இசை புதிது குழுவில் திரைப்படப் பாடல்கள், தமிழ் , ஹிந்தி என்று ஸ்ம்யூல் என்ற மென்பொருள் உதவியோடு இசையோடு கலந்து பாடும் ஆர்வம் அதிகம் ஆனதால் , கவிதை, கதை அதிகம் எழுதவில்லை.இருந்தாலும் , எப்போதாவது அழகியசிங்கர் இது போன்ற தலைப்புகளைக் கொடுக்கும் போது அந்த உள்ளுணர்வு தட்டி எழுப்பப்பட்டு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஏன் கவிதை, என் கவிதை கவிதையில் அந்தக் காரணங்களைக் கவிதையாகவே சொல்லி விட்டேன்.
அந்தக் காரணங்களையும் சொல்லி விடுகிறேன்

தாலாட்டும் குயில்களும், தலையாட்டும் மரங்களும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்

நீரோடும் நதிகளும் , நிழலாடும் மீன்களும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்

சுழல்கின்ற பூமியும், சுற்றுகின்ற சந்திரனும்
கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்

வீசுகின்ற தென்றலும், வீழ்த்துகின்ற பெண்மையும்
கேட்கிறதே என் கவிதை, என் செய்வேன்

பரம்பொருளைத் தினந்தேடிப் பரிதவிக்கும் ஆத்மாவும்
கேட்கிறதே என் கவிதை , என் செய்வேன்

இயற்கையும் , வாழ்க்கையும் காட்டும் காட்சிகள், எனக்குள் இதைக் கவிதை ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கிளப்புவதைக் குறிப்பிட்டுள்ளேன். முக்கியமான விஷயம் , நான் எழுதுவது வாசகர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். புரியாத கவிதைகள் படிக்கவும் பிடிப்பதில்லை. எழுதவும் பிடிப்பதில்லை. என் கவிதை , வாசகர்களுக்குச் செல்ல வேண்டும், என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
யாரோ ஒரு கவிஞர் ,ஒவ்வொரு கவிதையும் ஒரு பிரசவம். என்று குறிப்பிட்ட ஞாபகம் வருகிறது . அது மாதிரிதான். சொல்ல நினைப்பதை சுவையாகப் பதியும் வரை பிரசவ வலி தான். படைத்து விட்டால் ஒரு நிம்மதி . அவ்வளவுதான்.
கவிதை விற்கணும் என்று நான் கவிதை எழுதுவதில்லை. என் உணர்ச்சிகளை சுவையாக வெளிப்படுத்தணும். அது பிடிச்சா சரி. பிடிக்கலைன்னாலும் சரி. எனக்கு ஒரு திருப்தி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுதான் அடிப்படைக் காரணம்.