ரமணரைப் பற்றி முகநூலில்

ஒரு முறை நான்கு பெண்மணிகள் ஆஸ்ரமத்திற்கு வந்து ஹாலில் பகவான் முன்னால் அமர்ந்தார்கள். அதில் ஒருவர் அமெரிக்கப் பெண்மணி. அவர் கேட்டார் “எங்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உங்கள் அருள் கிடைக்குமா?”. “அருள் இல்லையென்றால் இங்கே வருவதற்கே உங்களுக்குத் தோன்றியிருக்காது” என்றார் பகவான்.

பின்னர் அந்தப் பெண்மணி…
“பகவான், நான் திரும்பவும் அமெரிக்கா செல்கிறேன். நீங்களும் என்னுடன் அங்கே வருவீர்களா?” என்று கேட்டார்.

பகவான் சிரித்த முகத்துடன் உறுதியான தொணியில்…
“நான் ஏற்கனவே அங்கே இருக்கிறேன். நான் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன்” என்றார்.

தகுதிவாய்ந்த தேடுதல் உள்ளவர்களுக்கு பகவான் எப்போதுமே “நீ ஏற்கனவே அதுவாக இருக்கிறாய். அறியாமை என்ற திரையை மட்டுமே நீக்க வேண்டும்” என்பார். தன்னுடைய போதனைகளைப் பொறுத்தவரையில் பகவான் எதையும் ரகசியமாக வைத்திருக்கவில்லை.

எப்போதும் வெளிப்படையாகவும் மற்றவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுமே இருப்பார். “நீங்கள் ஏற்கனவே மெய்யுணர்ந்தவர்கள் தாம். புதிதாக எதையுமே உணரப்போவதில்லை. விசாரத்தின் மூலமாக அறியாமை என்னும் திரையை விலக்கும் நோக்கில்தான் உங்கள் முயற்சிகள் எல்லாம் நடக்கிறது” என்பார் பகவான்.

அருணாசலேஸ்வரர் ரமணரை ஒரு தகுதியான களமாக அல்லது தேர்ந்த வாகனமாக எடுத்துக்கொண்டு அவதரித்திருக்கிறார்.

கீதையில் (IV. 7) ஸ்ரீகிருஷ்ணர்
“ஓ பாரத! உலகத்தில் தர்மம் நசித்துப் போய் அதர்மத்தின் கை ஓங்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்” என்பது போல அருணாசலேஸ்வரர் ரமணராக அவதரித்திருக்கிறார். அதனாலேயேதான் எந்தவிதமான சுய முயற்சியும் இல்லாமல் சுயமானது இந்த தேகத்தை விட்டு வேறாக இருப்பதின் தத்துவத்தைப் புரிந்துகொண்டார்”

அதன் பிறகான செயல்களில் எல்லாம் ஸ்ரீ ரமணர் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் கருவியாகவே செயல்பட்டார். தனது எங்கிருந்தோ இயக்கப்படுவதைப் போல வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் அவரது சகோதரருக்கு தனது தந்தையிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகத் துண்டுச் சீட்டில் எழுதிவைத்துவிட்டுச் சென்றார். திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரரிடம் சரணாகதி அடைந்தார். தன்னுடைய சுய அடையாளங்களை அழிந்து போய் சுயம்தான் தான் என்றுணர்ந்தார். ஒருமுறை பக்தர் ஒருவர் அருணாசலேஸ்வரரை ஏன் தனது தந்தையாக பகவான் கருதுகிறார் என்று கேட்டபோது பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.

ஸ்ரீ ரமணர் நிறைய ஆசார அனுஷ்டானங்களைக் கடைபிடித்தார் என்று எண்ணுவது தவறு. அவர் கடைபிடித்ததெல்லாம் தீவிரமான தவம். அருணாசலேஸ்வரர் அவருக்கான இடத்தை அளித்துவிட்டதால் அவர் எவ்விதமான முயற்சியுமில்லாமல் ஏற்கனவே அந்த இலக்கை அடைந்துவிட்டார். அவர் தவம் கூட புரியவேண்டிய அவசியமில்லை. எவ்விதமான பிரயத்னங்களுமின்றி மௌனமாக அருணை மலையில் அமர்ந்து தெய்வத்தின் குரலை உலக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.