ஷைலஜா எழுதுகிறார்

— `நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்… ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’' என்பதுதான்.நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, பாசுரங்களைப் படிக்கச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்க, “பாசுரங்களைப் படிக்காமல், உங்களால் எப்படி தமிழ்க் கவிதைகள் எழுதிவிட முடியும்?’’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இதுதான் பாரதிதாசன். . அவரின் நினைவு நாள் இன்று.

பாரதியாரைப் பரப்பியவர்களில் முக்கியமானவரான திருலோகச் சீதாராமோடு அதிகம் நெருக்கம் காட்டியவர் பாரதிதாசன். இத்தனைக்கும் திருலோகம் ஆத்திகவாதி. அவர் சாப்பிடுவதற்கு முன்பு திருநீறு பூசாமல் சாப்பிட மாட்டார். இது பாரதிதாசனுக்கும் தெரியும். ஒருமுறை பாரதிதாசன் வீட்டுக்கு திருலோகம் வந்திருந்தபோது, பக்கத்து வீட்டில் போய் திருநீறு வாங்கிவந்து கொடுத்திருக்கிறார் பாரதிதாசன்.

யார் இந்த திருலோக சீதாராம்?

அகத்தியமுனிபோன்ற உருவம்! விவேகானந்தரைப்போன்ற தீட்சண்ய விழிகள்!பளிச்சென்று குங்குமப் பொட்டு! . சிறந்த மேடைப் பேச்சாளர், “சிவாஜி’ இதழின் ஆசிரியர்.இந்த சிவாஜி இதழில் தான் சுஜாதா அவர்களின் முதல் கதை வந்தது(எனது சிறுவர் கதையும் 12 வயதில் இதில் வந்தது)
. பாரதி புகழ் பாடியும் பரப்பியும் பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தராக பக்தராக விளங்கியவர். கவிஞரின் கணீர் குரலில் நேரிடையாகப் பாஞ்சாலி சபத காவியத்தைக் கேட்க கொடுத்து வைத்தவர்கள் பெரும் புண்ணியம் செய்தவர்கள்.

இவர்தாம் மகாகவிபாரதியாரின் மனைவியின் கடைசிகாலத்தை கவனித்துக்கொண்டவர் அந்ததாயின் சிரம் இந்தக்கவிஞரின் மடியில்தான் தன் கடைசிமூச்சினை விட்டது, மாபெரும் கவிஞனின் மனையாளின் இறுதிக்காலம் பாரதியின் ஆன்மீகப்புத்திரனின் ஆதரவிலும் அருகிலும் முடிந்ததில் வியப்பென்ன!

செல்லம்மாவுக்கு உடல்நலம் சரி இல்லை என்றதும் தன்குடும்பத்தைப்போட்டதுபோட்டபடிவிட்டுவிட்டு மூன்றுமாதகாலமும் அந்தப்பெண்மணியை மகாகவிஞனின் மனம் அறிந்தவளை பேணியப்பெருமை கொண்டவர். வாழ்க்கையின் பொருளாதார வசதிகள் இல்லாதபோனாலும் இவர் உள்ளத்தால் வள்ளல்தான்!

பாரதியின் பாடல்களை வாசிப்பவர் பலர் உண்டு சுவாசித்த சிலரில் இவர் தலையானவர். கவிதைகளை இவர் வாசிப்பதே ஓர் அழகு. தமிழ் என்னும் சர்க்கரைசாகரத்திலிருந்து இவர் அள்ளித்தந்த அமுதக்கவிதைகளைகேட்டு அந்நாளில் மயங்காதார் யார் இருப்பார்கள்!

அவரைப் பார்க்கும் பொழுது மிகப்பெரிய செல்வந்தர்போல கம்பிரமாக இருப்பார்! அமைதியும் வசீகரமான புன்முறுவலும், உள்ளத்தில் உண்மை இருப்பதால் முகத்தில்கொண்ட இயல்பான ஒளியுடனும் அவர் காட்சி அளிப்பார்
பாரதிதாசனிடமும் அபார அன்பு கொண்டவர் இவருக்கு. அவருடைய கவிதைகள் அத்தனையும் மனப்பாடம். பாரதிதாசனின் “குடும்ப விளக்கு’ கவிதை நூலை மனப்பாடம் செய்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜ் இவருக்கு நண்பர். சிவாஜி பத்திரிகையின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

14  வயதில்   அவருக்கு  இருந்த   ஒரே   சொத்து   தன்னம்பிக்கை.   அவர்   தனக்கு   இருந்த   மிகப்பெரிய  சொத்தாக   நினைத்தது        தமிழைமட்டும்..  ' என்  தமிழுக்கு  மசியாதது எதுவும்  இல்லை'     என்று   தலையை நிமிர்த்திக்கூறிக்கொள்வார்.   

பாரதிதாசன் அவரைப்பற்றி மிகச்சரியாக பாடி இருக்கிறார். :-

‘இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான்
என்னும் இன வேற்றுமை ஓர் அணுவும் இல்லான்
எவன் பொதுவுக்கு இடர் சூழ்ந்தான்
அவன் தாழ்ந்தான் அஃதில்லான்
உயர்ந்தான் என்று
நுவல்வதிலே திருலோகன் அஞ்சாநெஞ்சன்
தக்க நூற்கள் ஆய்ந்தோன்’

ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர் திருலோகசீதாராம்

எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, ‘எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்’ என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம்!

நாம் எதிர்பார்க்கக்கூடியதைக் காட்டிலும் மிக்கப் பெரியவராக இருந்தார் என்பது ஆணித்தரமான உண்மை ஆனால்அவரைத் தமிழகத்திற்கு ஞாபகப் படுத்தத் தவறிவிட்டார்கள். இது தமிழகத்தின் சாபக்கேடு.

மணிக்கொடி நின்று கு ப ரா வெறுமனேதான் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை கிராம ஊழியனுக்கு கௌரவ ஆசிரியராகக் கொண்டு வந்ததும் கவிஞரே, மாதச் சம்பளத்தோடு. வல்லிகண்ணன் சென்னையில் சினிமா இதழில் இருந்தவரை வலுக்கட்டாயப் படுத்தி கிராம ஊழியனுக்குக் கொண்டு வந்ததும் கவிஞரே. கிராமத்துப் பையனாக வந்த தன்னை அழைத்துச் சென்று ரேடியோவில் சந்தர்ப்பம் வாங்கித் தந்து உற்சாகப் படுத்தியதை சுரதாவே எழுதியும் உள்ளார்

.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய ‘சித்தார்த்தா’எனும் நூலை இவர் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.heSSee மறைந்ததகவல்வந்ததும் மனைவியிடம்,’குளிக்க தண்ணீர்தயார் செய்துவை”என்றாராம் “என்ன இந்த நேரத்தில்குளியல்?” என மனைவி வியப்புடன் கேட்டாராம்.”என் நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் நான் முழுக்குப்போடணும்” என்றாராம் வேதனையுடன்..

ஆங்கிலமேதைக்கவிஞர்களின் கவிதைவரிகளை சொல்லச்சொல்ல உடனுக்குடன் அழகாய் பிரமிக்கும்விதத்தில் மொழிபெயர்த்துக்கொடுப்பாராம்!

கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார்.
“.
கவிஞர்வாழ்ந்தகாலத்தில் தமிழ்நாடுமதிக்கத்தவறிய மாபெரும் கவிஞனை நாம் வாழ்கின்றகாலத்திலாவது உணர்ந்துகொண்ட பெருமை நமக்குக்கிடைக்கும்!சிறுமியாய் இருந்தகாலத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதம் வரிகளை அந்தந்த கதாப்பாத்திரமாகவே மாறி இவர் முழங்கக் கேட்டு வியந்திருக்கிறேன். அந்த தமிழ்ச்சூழல்தான் என்னை வளர்த்தது என்றால் மிகைஇல்லை.

(என் தந்தையும் எழுத்தாளருமான திரு ஏஎஸ்ராகவன் திருலோகசீதாராமுக்கு மிகவும் அணுக்கமானவர் அப்பாவின் குரு, காட்ஃபாதர், கைடு எல்லாமே அவர்தான் .பாரதிதாசனை நினைக்கும்போது பாரதிபக்தனையும் நினைக்கவேண்டும் அல்லவா!)