லட்சுமிஹர்/கூடாரக் கரிசனம் 

 

இதுவரை இல்லாத ஒன்று அங்கு நிகழ்ந்தேறிக் கொண்டிருப்பதை அக்கிராம மக்கள் முதலில் மனக்குமுறலுடனே அணுகினர்.அது என்ன மாதிரியான விளைவை இங்கு ஏற்படுத்தப்போகிறது என்கிற கூச்சலே ஊர் முழுவதும் சொலவடையாக மாறிப்போயிருக்க அதை பற்றிய எந்த சிந்தனையையும் இன்றி இதனை ஆறு மாத காலங்களுக்குள் முடித்து விட வேண்டும் என்கிற முடிவில் குறியாக இருந்தானவன். இங்கு அவன் சிறுவயது முதல் சுற்றி வந்த நிறைய கதைகளில் அக்கதையும் ஒன்று.ஆனால் அக்கதை இன்று வரை இங்கு வீரியமாக வேரூன்றி இருக்கிறது என்பதைத் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் படியே இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு இங்குள்ளவர்கள் அதை நம்பியது காரணமா இல்லை உண்மையாகத் தனது இருப்பை காட்டிக்கொள்கிறதா என்று தெரியாது விழித்தான். கேட்ட கதையிலிருந்து இப்போது முழு உருவமாக மாறியிருப்பதை அவனால் அங்கிருப்பவர்களின் எச்சரிகைகளின் மூலம் தெரிந்து கொண்டாலும் அவனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்தான்.

அவர்கள் சொன்னது போல அதைக் கடந்து வந்த மனிதர்களிடமிருந்தும், நேரடியாக ‘இதெல்லாம் வேணாம் தம்பி,இது இப்படியே இருக்கட்டும்’என்று தனது கணவனை இதன் மூலம் இழந்த அவளது பேச்சில் ஒரு வித ஒழுங்கு இருந்தது. தனக்குள் ‘வயித்து புள்ளையையும் சேத்து புடுங்கிகிட்டா’என்று அழுகத் தொடங்கினாள்.தனது கணவனை இழந்ததன் அதிர்ச்சி அவளின் கருவையும் கலைத்துவிட்டிருக்கிறது.அவளை இக்கதையுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தது இயல்பே.அக்கிராமத்தில் கட்டி முடிக்கப்படாத மச்சு வீடுகள் பாதி கட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதை அங்கிருக்கும் காலத்தில் கண்டிருக்கிறான்.இவள் போல அனைத்து இல்லத்திற்கும் இப்படியாக ஒரு கதை இருக்கிறது.அதனால் நலிவுற்று மனவேதனையில் அதனைப் பாதியில் கைவிடப்பட்டு உயிர் இருந்தால்போதும் என்கிற நிலைக்கு ஆளாகி இங்கிருந்து தப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.இத்தனையும் மனதிற்குள் சுழன்று கொண்டிருந்தாலும் தனது பூர்வீக வீட்டை இடித்து அங்கு ஒரு புதிய மாடிவீட்டினை கட்டிவிட இறங்கிய ஆரம்பக்கட்ட முயற்சி இக்கிராமத்தின் சாபத்தை அறிந்திருந்த ஊர்மக்களும்,அருகிலிருக்கும் கிராமத்தினர் எவரும் கூலி வேலைக்கு வரமறுத்துவிட்டதால் தடைபட்டது.அதுவரை இப்படியான பயம் அங்கு இருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்கவில்லை.அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீட்டு பணிக்கான சாமன்கள் வீணாவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது இதற்கு ஒரு முடிவு செய்து விட்டு வீட்டு வேலைக்கான பொருட்களை இறக்க முடிவெடுத்தான்.

தனது குழந்தைப் பருவ ஆரம்பநிலையிலேயே இங்கு இருந்திருக்கிறான். நிகழ்ந்தவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வளரும் முன், தந்தைக்கு ஆசிரியர் பணி கிடைத்ததால் இங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழல் இருந்தது.தந்தை தனது இறுதிக்காலம் வரை இங்கு வர மறுத்துவிட்டார். இங்கிருக்கும் எதுவும் அவருக்கு நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இனிமையான ஒன்றாக அமையவில்லை.தாய்,தந்தையரை ஒரு ஜாதியக் கலவரத்தில் இழந்த பின்னர் அவர்களின் மிச்சமென இருந்த தந்தை வழி வீட்டில் தனது இளமைப் பருவத்தை கழித்தவருக்குத் தனது தாய்மாமனே படிப்பிற்கும், உயிர் வாழ போதுமானவற்றை முடிந்தவரை பார்த்துவந்தார்.அவரின் மகளையே அவனின் தந்தை மணமும் முடித்துக்கொண்டார்.ஆனால் ஆரம்பம் முதலே இருவருக்கும் சரியான புரிதல் இன்றி ஏற்பட்ட மனக்கசப்புக்கள் தாய்மாமனுக்கும்,அவனின் தந்தைக்கும் நடுவே பல முரண்களைக் கொண்டு வந்து சேர்த்தது.கடைசியில் தீர்த்து விடும் அளவிற்கும் சென்று நிகழ்ந்தேறியது.அப்போது அவனுக்கு ஐந்து வயதிற்கும்,இதன் விளைவாக எப்போதும் வீட்டில் சண்டை நிகழ்ந்து கொண்டிருக்க அதிலிருந்து விலகி இருக்க வேண்டி அத்தெருக்களிலும்,மந்தையிலும் திரிந்து ஏதேட்சியாக ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற ஒற்றையடிப் பாதையின் வரப்புகளில் திரிந்து கொண்டிருந்தான்.அப்போதே ஆலமரத்தினால் சூழ்ந்திருந்த அந்த இடத்திற்குச் செல்ல நேர்ந்தது.அங்கு வான் உயர வளர்ந்திருந்த ஆலமரத்தின் நிழலிற்கு அங்கிருக்கும் பள்ளம் அவனுக்குத் தெரியாமல் போக அதனுள் மாட்டிக்கொண்டான். அப்பள்ளத்தினை அறியாது அதனுள்  விழுந்துவிட்டோம்   என்கிற நினைவைத் தவிர அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.எங்கும் இவனைத் தேடி அலைந்து வந்தவர்கள் இறுதியாகவே அந்த தொட்டிய குலம் ஆலமரத்திற்கு வந்து சேர்ந்தனர்.அங்கு அப்பள்ளத்தினுள் தலையைப்  புதைத்தவாறு கால்கள் மண்ணின் மேல் கிடக்க மயங்கி இருந்ததாகப் பின்னர் தெரிந்து கொண்டான்.வீட்டிற்கு வந்த பிறகு அடியையும் வாங்கினான்,அவன் உயிர் பிழைத்த கதை அன்றிலிருந்து ஊருக்குள் உலவத் தொடங்கியிருந்தது.அப்போதே அவனுக்கு அதன் பின்புலம் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.அந்த ஆலமரத்தினை நெருங்கும் போது அதன் வேர்கள் மண்ணிற்குள் புதையுண்டு இருந்தது.வட்டவடிவில் எதையோ ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளும் பொருட்டு  அணைத்தவாறு அதன் விழுதுகள் இருந்தன.எதையும் உள்ளே அனுமதிக்க விரும்பாத தோரணையில் இருந்தது.சூரியனின் ஒரு துளி கூட அங்குச் சிந்தக் கூடாது என்கிற நிலையே அதன் உச்சம் என்பது போல இருக்க அந்த இருளில் அவனுக்கு அங்கிருந்த அவ்வளவு பெரிய பள்ளம் தெரியவில்லை. ஆனால் ஊரார் சொல்லும் படியாக தன் தலை மட்டுமே அப்பள்ளத்தினுள் இருந்தது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.அந்த பள்ளத்தின் அடியாழம் வரை சறுக்கியதாக நினைவில் இருக்கிறது.தன்னை உள்ளிழுத்து கொண்டே இருந்தது என்றே கடைசிவரை சொல்லிக்கொண்டிருந்தவனிடம் அக்கிராமவாசிகள் ‘அவ என்ன சொன்னா,கொஞ்சம் ஞாபகப்படுத்திப்பாரு’ என்று அவனை நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். அதை எப்படியாக எதிர் கொள்ள வேண்டும் என்கிற பக்குவமின்றி அனைவரிடமும் பயந்து யார் கண்ணிலும் படாமல் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.அவனிடம் அக்கேள்வி அங்கிருந்து கிளம்பும் வரை குடிகொண்டது.அது மட்டுமில்லாமல் அங்குச் சென்றதற்காக வீட்டின் கண்காணிப்பு வளையத்திற்குள் மாட்டிக்கொண்டான்.வீட்டில் அடைபட்டு கிடக்க நேர்ந்தது, பெற்றோருக்குள் இருக்கும் முரண் நாளுக்குள் நாள் வளர்ந்து கொண்டே போனது.அவர்களின் பேச்சுக்களைக் கேட்க முடியாத சமயங்களில் அவர்களுக்குத் தெரியாமல் அங்கிருந்து கிளம்பிவிடுவான்.மீண்டும் அந்த ஆலமரத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அதைச் சுற்றிய கதை அவனுக்குப் பயத்தை கொடுத்தது.உண்மையாக இருக்கக்கூடும் என்று அவனை அவர்கள் நம்ப வைக்கும் அளவிற்கு பயமுறுத்தியது ‘நீ உயிருடன் வந்ததே பெரிது’ என்கிற தொனியிலேயே அவர்களின் பேச்சுக்கள் இருந்தது.

இங்கிருக்கும் அனைவரின் பாட்டனார்களின் கதையாகவே சொல்லப்படுகிறது.காணி நிலமின்றி ஊர் ஊராகத் திரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை வரித்துக் கொண்ட இவர்கள்.தங்களின் பாதங்கள் செல்லும் வழியில் வழித்தடங்களை உருவாக்கும் பூர்வீக குடிகளாக இருந்தனர்.இப்படிப்பட்ட நிலையிலிருந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சமயங்களில் வழிப்பறியில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. முதன் முதலில்  ஒரு காரண காரியத்தோடு நிகழ்ந்தாலும் பின்னர் அக்குழுவிலிருந்தவர்களில் சிலர் அதை தங்களின் சொகுசிற்காகச் செய்யத் தொடங்கினர்.ஒவ்வொரு முறை நிகழ்ந்தேறுவது தெரியும் போதும்  அக்குழுவில் இருப்பவர்கள்  அதைக் கண்டிக்க தொடங்கியிருந்தனர். அவர்களுக்கான தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அவர்கள் அதை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் தங்களுக்கான வலுவான காரணத்தின்  பொருட்டே இதைச் செய்வதாக வலுசேர்க்க தொடங்கிவிட்டனர். ஒருகட்டத்தில் அங்கு நிலை கொள்ளத் தொடங்கியது. அவர்கள் செல்லும் வழி எங்கும் தங்களின் அடையாளமாக அதை மாற்றினர்.அப்படி அதுநாள் வரை சுற்றித் திரிந்து வந்தவர்கள் தங்களுக்கு நிரந்தரமான ஒரு வாழ்விடத்தைத் தேடிய போதே தாமரைக் குளத்தை மையமாகக் கொண்ட மலையின் அடியில் இருக்கும் இக்கிராமத்திற்கு வந்தடைந்தனர்.அவர்கள் இதுவரை கடந்து வந்ததிலேயே செல்வச் செழிப்புடன் இருந்த நிலமாக இருந்தது. அவர்கள் இதுவரை மச்சு வீடு கட்டி வாழ்வோர்களைப் பார்த்தது கூட கிடையாது.அவர்களின் முகங்களை மறந்து விடாத படி அவர்களை உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர்.அங்கிருந்த தொட்டிய குலம் இவர்களைப் பற்றி அறிந்திருந்தாலும் தங்களின் செல்வ பலன்களைக் கொண்டு அவர்களை தங்களின் காவலுக்காக அங்குக் குடியமர்த்துவதாக வாக்கு கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் ஈர்க்கத் தொடங்கினர்.முதல் கட்டத்திலிருந்து தொடர்ந்து வந்த ஆச்சரியம் அவர்களின் வசியச் சொற்களுக்குக் கட்டுப்படவைத்தது.இனி அலைந்து திரிய வேண்டாம் என்கிற எண்ணத்தில் இவர்களும், தங்களின் செல்வங்களுக்கு ஒரு பாதுகாவலன் ஆகிற்று என்று அவர்களும் இருந்தனர்.அவர்களின் இக்கிராம குடியமர்த்துதல் அதன் அருகில் இருக்கும் கிராமங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் அதனை நேர்த்தியாகக் கையாண்ட தொட்டிய குலத்தினர் அவர்களின் பக்கம் இருந்ததை அறிந்து, இதுவரை மனதின் ஒரு ஓரமாக இருந்த ‘அனைத்தையும் கைக்கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணமும் இல்லாமல் போனது.இதுவரை அவர்கள் அனுபவிக்காத பல வசதிகள் அவர்களுக்கு அங்குத் தங்குதலின் பொருட்டு கிடைக்கப் பெற அதனை மகிழ்வோடு அனுபவிக்க தொடங்கியிருந்தனர்.எப்போதும் குடியும்,புணர்தலில் இருக்கும் ஒரு ஒளிவு மறைவு இன்றி இப்போது ஒரு கூடாரத்தின் கீழ் நிம்மதியாக அவர்கள் கூடி மகிழ்வுற்றனர்.அவர்கள் மறுபடி மறுபடி தங்களின் கூடாரத்திற்காகத் தொட்டிய குலத்தினருக்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாக சொல்லிவந்திருக்கின்றனர்.தங்களுக்கு வழங்கப்பட்ட காவல் பணியையும் நேர்த்தியாக செய்து வந்தவர்களுக்கு வெகுமதியாக தங்களுக்குப் பிடிக்கப்பெற்ற அனைத்தையும் கேட்டு பெற்றனர்.தொட்டிய குல வழிப்பாட்டு முறைகளுக்கு, தங்களுக்குள் எந்த வித தயக்கமுமின்றி அவர்களுக்கான கடவுள் போலப் நினைத்து  பணிவிடைகளைச் செய்து வந்தனர்.அந்த ஆலமரத்தினுள் இருக்கும் ஒருத்திக்காக அந்த மரத்தையே அவர்கள் அழகுப்படுத்தினர்.அவர்கள் வழிபடும் அவளைப் பற்றியான கதையினை ஆர்வமாகக் கேட்டனர்.அப்படிப்பட்ட அவர்களின் மேதைமை சொற்கள் தங்களுக்கான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முதல் வித்து அங்கே விழுந்தது.அதன் காரணங்களாக அவர்களின் உறவு வெகுகாலம் வரை நீடிக்கப்படவில்லை.அதற்கான காரணங்கள் இங்குப் பல விதமாகச் சொல்லப்படுகிறது.மீண்டும் அவர்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து களவை நிகழ்த்தி வந்த காரணத்தால் இருவருக்குள் பகை மூண்டது என்றும் அவர்கள் தெய்வ வழிபாட்டினை அங்கு நிறுவியதிலிருந்தே தொடங்கியது என்று கதைகள் இருக்கிறது.இரண்டும் நடந்தேறியது களவினை கட்டுப்படுத்தாதது  மூலம் தங்களின் அதிகாரத்தை இழக்க தொடங்கியவர்கள் அவர்களுக்கான சலுகைகளைக் குறைத்தனர் ஆரம்பத்தில். பின் அவர்களுக்கான மரியாதையும் குறையத் தொடங்கியது.அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கான தெய்வங்களை நிகழ்த்தி அதற்கான வழிபாடுகள் செய்யும் பொழுது மேலும் எதிரிலிருப்பவர்களைக் களங்கப்படுத்தியது.முதன் முறை பிள்ளையின் அழுகுரலுக்காகக் களவு செய்த பொருளையே ஒரு கல்லில் தெளிவுறாது செதுக்கி வழிபடத் தொடங்கினர்.அவர்கள் முதலில் எதிர்த்தது அவர்களின் கோவிலையே என்று சொல்கின்றனர்.அதனைச் சுற்றி அவர்களின் வாழ்க்கை முறை அமைவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவு அந்த இடத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுத்த போது அவர்களின் பால் அதை வெளிப்படையாக சொல்லும் அளவிற்கு அப்போது இருந்தே இருவருக்குள்ளும் சுமுகமான உறவு இன்றியிருந்தது.ஆதலால் அவர்களின் தெய்வங்கள் மீது அவர்களின் பார்வை விழுந்தது. அதற்கான கடும் எதிர்ப்பை தாங்கிக்கொள்ள முடியாத தொட்டிய குலத்தினர் அவர்களின் இல்லங்களை இரவோடு அகற்றத் தீர்மானித்தனர்.ஆனால் பலத்தில் ஆறடிக்கு மேல் இருக்கும் ஒவ்வொருவரை நினைக்கும் போதும் அவர்களிடமிருந்து விலகி இருத்தலே சரி என்ற முடிவுக்கு வந்தனர்.அவர்களுக்கான சுதந்திரத்தை அளிப்பது போல இருக்கவேண்டும் என்கிற முடிவுக்கு வர முன்பிருந்த பகை சற்று தணிந்திருந்தது.மீண்டும் புகையத் தொடங்கியது பக்கத்து கிராமத்தில் ஏற்பட்ட களவின் பொருட்டு தங்களை சந்தேகத்திற்குள்ளாக்கி அதில் சாட்சியங்கள் ஏதும் இல்லாமல் ஒருவரின் உயிர் பிரிந்தபின்னரே, தொட்டிய குலத்தினர் மீதான பகை வலுக்கத் தொடங்கியது.அன்றிரவு தொட்டிய குலமக்களின் இல்லங்களைத் தீக்கரையாக்கினர்.அவர்களை இங்கிருந்து கிளப்பவேண்டும் என்கிற ரீதியிலேயே நிகழ்ந்தேறியது.எந்த ஒரு உயிரையும் பலி கொள்ளாது அவர்களை இங்கிருந்து விரட்டினர்.அவர்களுக்கு இருந்த கோபத்தை அந்த ஆலமரத்தினுள் இருக்கும் ஒருத்தி இதில் பயந்து அழும் சத்தம் அன்றிரவு முழுவதும் கேட்டதாகச் சொல்கிறார்கள்.யாருடைய சமாதானத்திற்கும் செவி சாய்க்காது தனது அழுகையையும்,கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறாள்.அதைக் கேட்க முடியாது காதை மூடிக்கொண்டவர்கள் இருந்தாலும் அதை ரசித்தவர்களும் உண்டு.அக்கம் பக்கம் கிராமத்தினர் அக்கூட்டம் அந்த கிராமத்தையே களவாடி விட்டது என்று அவர்களை தனிமை படுத்தியிருந்தனர்.அன்றைய இரவிற்கு பிறகான அதிகாலை வரை நீடித்த அந்த அழுகுரல் அதன் பிறகு ஓய்ந்தது.அதை என்னவென்று அறிந்து கொள்ள அந்த ஆலமரத்தின் கருக்குள் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.கருஞ்சிலையாக இருந்த ஒருத்தியைக் காணவில்லை.அவள் இருந்த இடத்தில் ஆழம் தெரியாதவாறு மிகப் பெரிய பள்ளம் இருந்தது.இரவோடு இரவு வந்து அதை எடுத்துச் சென்று விட்டனர் என்றும் சிலரும்,அடியாழத்தினுள் தன்னை மறைத்துக்கொண்டாள் என்றும் சிலரும்,அங்கிருந்த காலடித்தடங்களைப் பார்த்தவர்கள் அவர்கள் இல்லாத இடத்தில் நான் இருப்பது எதற்கு என்று அவர்களைத் தேடி புறப்பட்டுவிட்டாள் என்றும், இல்லை அது அந்த தொட்டிய குலத்தினரின் பாதங்கள் என்று ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டாலும்.அக்குலத்தினர் அங்கிருந்து கிளம்பும் போது ஒவ்வொருவர் வாயிலும் முனகிய வார்த்தைகளாக இன்றும் இக்கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருப்பது ‘உங்களோட மேல் கூரை அழியும்’ என்கிற சாபமே.இத்தனைக் காலங்கள் ஆகியும் அவர்களின் மேற்கூரை அதற்கு மேல் ஒன்றைத் தாங்க முடியாமல் அழிவுறுகிறதாக  நம்பப்பட்டு அவளின் உருவத்தை இப்போது அப்பள்ளத்தினை மூடிய மண்ணின் மேல் இவர்களே வழிபட்டு வருவதாக உள்ளது.ஆனால் அச்சாபம் இன்னும் வாய்மொழியாக மட்டும் இல்லாமல் செயலிலும் நடப்பது அவனுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

இங்கு வந்து இந்த இல்லத்தைக் கட்ட வேண்டுமென்பது அவனது தந்தையின் ஆசையாக இருந்தது.அவரின் கடைசிக் காலம் வரை தன் மனைவியின் மரணத்திற்கு தானே காரணம் என்று முழுமையாக நம்பினார்.அங்கு அவர்களின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க விரும்பாத அவர் இங்கு வரவில்லை. ஆனால் ‘சொந்த நிலத்தில் ஒரு இல்லத்தைக் கட்ட வேண்டுமென்று’ சொல்லிக்கொண்டே இருப்பாள்.அதை அவனின் தந்தை ஒருநாளும் கூற மறந்ததில்லை.இந்நாட்களில் அவரின் பையனுக்கு அதற்கான வாய்ப்பு அமைந்திருந்தது.  

பல நாட்கள் பிறகு அந்த பாதையில் நடந்து அவளின் இருப்பிடத்திற்குச் செல்ல முடிவெடுத்தான்.இங்கிருந்து அம்மாவின் தற்கொலையே அவர்கள் நகர பெரும் காரணமாக இருந்தது.சில நேரங்களில் அம்மாவின் முகத்தை ஞாபகப்படுத்த முயலும் போதெல்லாம் இருவருக்குள்ளும் நடந்த வாக்குவாதம் நினைவில் வரும்.அதன் பிறகு எதுவும் பேசாமல் சில நாட்கள் அமைதியாகி விடுவாள்.அதை உடைத்தெறிந்து வரும் அழுகை எனக்கு அந்த கதையில் வரக் கூடியவளின் அழுகையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியதால் மேலும் அவளிடம் நெருங்கப் பயமாக இருந்தது.அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் நினைவில் இருக்கிறது.

என்னை உள்ளிழுத்துக் கொண்டவளின் முன் நிற்கிறேன் சமீபத்தில் அவளுக்கு நடந்து முடிந்த பூஜையில் அணிவிக்கப்பட்ட மாலைகள் இன்னும் அவளின் இருப்பை காட்டுவது போல வாடாமல் இருக்கிறது.’அன்றைய நாளில் எதற்காக என்னை உயிருடன் விட்டாள்’ என்று பல முறை அதற்கு பிறகான நாட்களில் இவளை நினைத்தது உண்டு.ஆனால் என்னவோ இப்போது அதை நினைக்கையில் இங்கு வந்து நிற்பதற்காகத்தானா.. என்னை மீண்டும் உனது ஆழத்திற்கு அழைத்துச் செல் என்று மீண்டும் மீண்டும் அதனிடம் உளறிக்கொண்டிருந்தான்.

வீட்டு வேலை செய்வதற்கான ஆட்களை வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டனர்.வீட்டின் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதை ஊரார் அனைவரும் ஆச்சரியமாகக் கவனிக்கத் தொடங்கினர்.அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது ‘இது எப்போது வேண்டுமென்றாலும் நிற்கக் கூடிய காலம் வரும்’ என்று பேசிக்கொண்டிருந்தனர்.அதை எதையும் காதில் வாங்காதவாறு அதைக் கட்டி முடிப்பதில் உறுதியாக இருந்தான்.ஒவ்வொரு அடியாக அக்கட்டிடம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் போதும் இதுவரை நிகழ்ந்தேறி வந்த கதைகள் காணாமல் போகத் தொடங்கியது.அதை ஒரு கட்டத்தில் ரசிக்கத் தொடங்கிவிட்டான்.அவனின் வீட்டைப் பார்த்தவர்கள் அவனது பிறப்பின் மேல் சந்தேகம் கொள்ளத் தொடங்கியது இன்னொரு கதையாக அங்கு உருவெடுத்தது.அந்த தாமரைக் குளத்தின் அருகில் அவர்களின் முதல் கல்சித்திரத்தில் செய்து வழிபட்டு வந்த கடவுளின் உருவப்படத்தை வீட்டின் முன் பொரித்து அடுத்தடுத்த திருப்பங்களை அக்கிராம மக்களுக்கு அளித்து நினைத்தது போலவே அந்த இல்லத்தைச் சிறப்புற கட்டினான்.இதுநாள் வரை சுற்றித் திரிந்த கதைகளைத்  தனது செயலின் மூலம் தகர்த்தெறிந்தவனுக்கு கட்டி முடிக்கும் வரை இருந்த மனம் அதனுள் நுழையப் பயம் கொள்ளத் தொடங்கியது.அவனுக்குத் தனது பெற்றோர்கள் இட்ட சண்டையே எங்கும் கேட்பதாக இருந்தது.மேலும் அது அவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.அவர்களின் பேச்சுக்களைக்  கேட்க முடியாது தனது செவிகளை வீசியெறிந்தவன்.’சின்ன ..வயசுலையே இந்த பொடி பையன் கிட்ட  ஆலமரத்துக் காரி எதையோ இவனுக்குச் சொல்லியிருக்கா..அந்த சேதிய வச்சு கட்டிபுட்டான் ..’ என்கிற பேச்சுக்கள் வலம் வரத் தொடங்கியிருந்தது.அந்த வாக்குவாதங்களில் சிக்குண்டு அங்கிருந்து கிளம்பியவன்’கொஞ்சம் வேல..போயிட்டு வரேன்..’ என்று கூறிவிட்டு அந்த இல்லத்தைப் பூட்டிவிட்டுக் கிளம்பினான்.ஊரே அவன் வென்று விட்டது போலப் பார்க்க அவனோ மீண்டும் இவ்வில்லத்தைத் திறக்கக் கூடாது என்கிற தீர்க்கமான முடிவெடுத்திருந்தான். 

உயிர் எழுத்து 2024

****          லட்சுமிஹர்/கித்தானுடைய வண்ணப்பேழை – விருட்சம் நாளிதழ்