
இவ்வளவு பரபரப்புக்கு நடுவே தனது செயலில் நேர்த்தியாக இருக்கக் கூடிய அவளைப் பார்க்கும் பொழுது அவளின் நினைவடுக்குகளுள் நீண்டு கொண்டிருக்கும் காட்சியினை அறிய பெரும் ஆர்வம் எழுகிறது.பெரிதும் அதன் நுணுக்கங்களுக்குப் பழகப்பட்டவனாக இருந்ததில்லை என்றாலும் ஏனோ ஒரு வித ஈர்ப்பின் பால் என் இயல்பிலிருந்து சிறிது காலநிலையைக் கடந்து போக அனுமதிக்கிறது.தன்னை எப்படியாக அடையாளப்படுத்திக் கொள்ளப் போகிறது என்கிற எந்த வித முன் தீர்மானங்களோ அல்லது எச்சரிகைகளுக்கோ ஆட்படாது ஏற்றுக்கொண்டாக வேண்டிய கட்டாயம் யாராலும் எனக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் உடலும் மனமும் தனது விசையை சரியாகக் கையாள தொடங்கியிருந்தது.
எந்த ஒரு அறிவும் அதன் மேல் திணிக்கப்படாததால் முழுமையாக அனுபவிக்க முடியும் என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருந்தேன். ஓரளவு ஆரம்பக்கட்டத்திலேயே என்னால் உணரமுடிந்தது.அது கொண்டு செல்ல விரும்பும் பாதையில் எனது முதல் அடியை மிகத் தீவிரமாக எடுத்து வைத்திருக்கும் நேரம் உரையாடல் அல்லது அதன் காட்சியினை என்னால் மிகத் துல்லிய விவரிப்புகளுடன் காண முடிந்தது.
ஏதோ மிகப் பெரிய கோவிலின் மையப்பகுதியாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.எங்கும் வியாபித்து உருளும் இருளை தனதாக்கிக் கொண்ட சிற்பங்கள் எங்கும் நிரம்பி வழிவதைப் பார்க்க முடிந்தது.அனுமானத்தில் சிற்பங்களை வைத்தே கோவிலாக இருக்கலாம் என்கிற முடிவிற்கு வந்திருந்தேன்.ஆனால் அங்கு சிற்பங்கள் தவிர எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.அருகில் சென்று நோக்கிட விரும்பினேன். இதற்கு முன் பார்த்திருக்கிறோமா? என்கிற கேள்விக்கு இல்லை என்கிற பதிலே முடிவாக மட்டுமின்றி ஆரம்பமாகவும் இருக்கக் கூடும்.ஆகையால் அச்சிற்பத்தை பற்றியான குறிப்புகள் எதுவும் அங்கு இருக்கக் கூடுமா…? என்கிற எனது தேடலுக்கு எந்த விதத்திலும் சாட்சியங்கள் இல்லை.இருள் மெல்ல விலக விலக சுற்றியுள்ள சிற்பங்களினை பார்க்க, எதன் பொருட்டும் ஒரு ஈர்ப்பு வரவில்லை. ஏதோ அதன் வடிவத்தின் ஒழுங்கற்ற தன்மை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்போது அதன் முக பாவங்கள் வெளிப்படுத்தும் விதங்களைக் கவனிக்க வேண்டி தனது மூங்கில் தடியின் துவாரங்கள் வழியே ஏதோ ஒரு வாழ்வினை எனக்கு அறிமுகப்படுத்த முயன்று கொண்டிருக்கிறாள். அவைகள் மனித நிலையின் ஒவ்வொரு அறிகுறிகளாக இருக்கிறது.முடிந்த அளவு அதனை அறிந்து விளக்கிட முயன்று கொண்டிருக்கையில் அவளின் இசையும் அதற்கு உதவியது. நான் கடந்து போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணங்களையும், முகங்களையும் பார்க்க முடிந்தது.அத்தனையையும் புரிந்து கொள்ள முடியாது வேடிக்கை மட்டும் பார்க்க தொடங்கியிருந்தேன்.ஓரளவுக்கு என்னால் அச்சிற்பங்களில் நமக்கு அன்றாட பழக்கப்பட்ட உருவங்கள் எதுவும் இருக்கக் கூடுமோ என்கிற தேடுதலிலிருந்த எனக்கு அதன் சாயலில் கூட எதுவும் இருக்கவில்லை என்பதை என்னால் உணரத் தொடங்கியபோதே அதில் உருகொண்டு இருக்கும் வடிவங்கள் இதுவரை நான் பார்த்திடாத உருவங்களாக இல்லாது அவளுக்கு பரிச்சயப்பட்ட முகங்களாக இருக்கக்கூடும்.அப்படியாக நான் அவளின் இசையை ரசித்துக் கொண்டிருப்பதை அறிந்துவிட்டவள் போல என் கரம் பிடித்து அழைத்துச் செல்வதாக என்னால் உணர முடிந்தது.இருந்தும் அதில் ஒரு வித சுதந்திர போக்கை எனக்காக எற்படுத்திக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.எனை அனுமதித்த காரணத்தால் எந்த ஒரு பிடிவாதமும் என் மீது அவளது செயல்களின் மூலம் திணிக்காது வாசித்தபடி இருக்க.நான் ஆரம்பக்கட்டத்தில் தடுமாறிய போது எந்த ஒரு சலிப்பும் அவள் காட்டியதாகத் தெரியவில்லை.அதுவே எனக்கு பெரும் அமைதியையும்,திருப்தியையும் கொடுத்தது.
நான் அங்கு நகர்ந்து கொண்டே இருந்தேன் எனது பார்வைகள் முழுவதும் அச்சிற்பங்களின் மீதே கவனமாக இருந்தது.அவளது இசை அவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்தும் உருவங்களுக்குப் பின் இருக்கும் காரண காரியங்களின் கதைகளைக் காண முடிந்தது.அதன் தருணங்களில் வெளிப்படும் உக்கிரமும்,அன்பும்,சலிப்பும்,காதலும் ஒரு வித மயக்க நிலைக்கு ஆட்கொண்டது.அதிலிருந்து மீள எவ்வளவு முயன்றாலும் முடியாத ஒன்றாக மாறி என் கண்முன்னே நிற்கிறது.அறிந்தே கடந்து செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.இதற்கு முன்னால் சிற்பங்களில் எந்த பரிச்சயமும் இல்லாதவனாக இருந்திருக்கிறேன் இல்லையென்றால் கவனிக்கும் பொருட்டு எக்காரணங்களும் இதுவரை அமையவில்லை அல்லது ஏற்படுத்திக்கொள்ளவில்லை.பெரும்பாலும் அவைகள் கோவில்களாக இருந்திருப்பதால் வேண்டுதல்கள் தவிர எதன் மீதும் கவனம் சென்றிருக்கவில்லை.ஆனால் இப்போது எங்கும் அதாகி நிற்பதில் ஒவ்வொரு முறையும் ஒரு சிற்பத்தைக் கடந்து போகும் போது அதன் வடிவங்கள்,அதனின் அசைவுகள் போன்றவற்றைத் தானாகக் கவனிக்க முடிந்திருப்பது ஒரு வித புது உணர்வாக இருந்தது.பெரும்பாலான சிற்பங்களில் அதன் அசைவுகள் வெளிப்படுத்தும் விவரிப்புகள் தெளிவாகவும் எந்த ஒரு குறிப்புகளும் தேவைப்படாமல் அதன் சிந்தனையை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்க.நான் கடந்து போவதை ஒவ்வொரு சிற்பங்களும் ஞாபகப்படுத்திக்கொள்வதாகக் கூறும் விதத்திலேயே அவர்களின் கண்களின் நோக்கு அமைந்திருந்தது..அசைவுகளைத் தாண்டி அதன் கண்களில் வெளிப்படும் உணர்வுகள் மேலெழும்பி அவளின் இசைக்கு ஏற்றார் போன்ற ஒன்றைத் தருவிக்க முடிந்திருந்தது.கண்டிப்பாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்.அந்நியாபகங்களில் எனை போன்ற பலர் இருந்திருக்க வாய்ப்புண்டு அவர்கள் அதில் நிரம்பி வழிவதை என்னால் ஒவ்வொரு நகர்விலும் எடுத்துச் செல்ல முடிந்தது. இதுவரை என் இயல்பில் இத்தனை மனிதர்களின் உணர்வுகளை கடக்காதவனாக இருந்திருக்கிறேன்
“உன்னை இப்படியாக மறைத்துக் கொள்..”என்கிற எண்ணம் என்னுள் ஒரு சிற்பத்தை கடந்து போகும் போது தன்னிச்சையாகத் தோன்றியது.சில நொடிகளில் அவற்றில் இருக்க கூடிய யாவிலும் இருந்து தனியனாக உள்ளிழுத்துக் கொள்ளும் பெரும் உத்தியாகவே அறியமுடிந்தது.அப்படி நிகழ்ந்தேறி அதில் வெற்றி பெற முழு முயற்சியும் அச்சிற்பங்களை மீட்டியவளால் முடியும் என்கிற எண்ணம் எழ முதன் முதலில் அச்சம் எழுந்தது.அதுவரை பதட்டம் கொள்ளாத மனம் தனது இருப்பை பெரும் அதிர்வுகள் மூலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது.அதன் ஓசையை நன்கு உணர்ந்தவர்கள் போல அவர்களின் முக பாவனையில் பொருந்தி இருக்கும் கூரிய கண்களின் வழி வெளிப்படுத்தும் அதன் சிறப்பை அறிய ஏங்கியிருக்கிறேன்.எதன் பொருட்டு இப்படி ஓடி வந்து இவளின் இசைக்குள் இப்படியாக மறைந்து கொண்டு அல்லாடுகிறேன் என்கிற எண்ணம் அப்பயத்தின் வெளிப்பாடே.எப்படி இதனைக் கண்டுபிடித்தாள் இதில் யார் மீட்ட? யார் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.பெரும் குவியல்களுக்குள் சிக்குண்டு கிடப்பதையும் வடிவமாக்கித் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்று தோணும் போதே இதுவரை நான் பார்த்துக்கொண்டிருப்பவைகள் அனைத்தும் என்னை பார்ப்பது போலத் தோன்றியது.அதன் அர்த்தத்தை விளங்கிட முயற்சிக்கும் ஒவ்வொரு கணமும் என் எண்ணங்களை கைவசப்படுத்தி என்னுள் நிகழ்பவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டாள்.அதில் மகிழ்ச்சி கொள்வதா? இல்லை அதிலிருந்து மீண்டும் வருவதா? என்கிற குழப்பத்தில் எனை தொடர்ந்து வைத்திருப்பதில் கலையை மீட்டுருவாக்கம் செய்ததில் வெற்றி கொண்டதாக அவளின் கோர்வைகள் எந்த வித தயக்கங்களும் இன்றி எங்கும் பறைசாற்றிக் கொண்டிருந்தன.அதில் அம்மனிதர்கள் யாவற்றையும் மறந்து உலவிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும்,பெரும் கூத்தினை நிகழ்த்தினர்.அதனை ரசிக்க கூடிய அனுபவம் கசப்பையே கொடுத்தது.’முட்டாள்கள்..ஒன்னும் இல்லாத ஆண்டிகள்..’என்று தோன்றியது.
ஏனோ இப்போது அதிலிருந்து மீண்டு வந்து விட வேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.முயற்சி செய்து தோற்கும் கணங்களிலேயே அவளின் அனுமதியும் அதில் அடங்கும் என்பது விளங்கியது.ஒரு விதத்தில் கோபமும் எழுந்து அடங்கத் தானாக வந்து மாட்டிக்கொண்டதனால் அவள் மீது எப்பழியையும் சுமத்திட விரும்பவில்லை.தன் போக்கில் வாசிக்கும் இசையினில் நிறைந்திருக்கும் சித்திரங்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கியிருந்தது.முடிந்தவரை அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அதனோடு பயணித்திருக்கிறேன் என்று நினைக்கும் தறுவாயில் அவைகள் ஒவ்வொன்றாகத் தன்னை இழக்க நேர்ந்தது.விவரிப்புகளின் தகவல்களை என்னிடம் அவளே கேட்கக் கூடும் ஆதலால் முடிந்த அளவு அதனை மறக்காது வைத்திருக்க முயன்று கொண்டிருந்தேன். எனக்கு புது அனுபவமாக இருந்தது மனிதர்களை நினைவில் இருத்திக்கொள்வது என்பது.‘இப்படியாக மறைத்துக் கொள்’என்கிற வரிகள் என்னிலிருந்து தோன்றியது ஆச்சரியமாகவும் இருக்க அவை அவள் இசைத்து மீட்டிக்கொண்டு வந்த வரிகள்.அதில் என்னைப் பயன்படுத்திக்கொண்டாளா? இல்லை நான் பயன் பெறவா? என்று தெரியாது விழித்திருந்தேன்.ஒரு பக்கம் இப்படியிருக்க அவள் என்னிடம் கண்டிப்பாக உரையாடப் போவதில்லை அதற்கு தயாராகவும் இருக்கமாட்டாள் என்றே நினைக்கிறேன்.அவளை வற்புறுத்தி நிகழ்த்துவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை ஆகையால் மறைந்த சிற்பங்களுள் இடையனாகியிருந்த இருளில் தனித்து விடப்பட்டிருந்த எனக்கு அவளே எதையும் தொடங்கட்டும் என்று காத்திருந்தேன். நேரம் ஆக ஆக அவ்வெளியினை கண்கள் கூராக்கியது, அசைய முடியாத அளவுக்கு உடல் இறுக்கம் கொண்டது.ஏனோ இதுவரை வாசித்துக் கொண்டிருந்தவள் தனது இசையை நிறுத்தியிருந்த அமைதியால் கூட அந்த நிலைக்கு தள்ளியிருக்கலாம்.அந்நிலை எனக்குப் புதிது இல்லை.இறுக்கம் எப்போதும் நான் இக்காலகட்டங்களில் பயன்படுத்தும் ஆயுதம். இசையை மீண்டும் கேட்க வேண்டும் என்று துடித்த செவியை அமைதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டேன் என்றே சொல்ல வேண்டும்.பெரும் வாக்குவாதத்தில் போய் முடிந்தாலும்.ஒரு வித சமாதானத்தை எட்டிருந்தது.அது ஏற்படுத்திய கோபம் என்னுள் இருந்தே தொடங்கியது என்றாலும் அதனை தன் கையில் எடுத்துக் கொண்டதை ஏற்க முடியாது அல்லவா.மறுபடி அவளின் இசையைக் கேட்க வேண்டுமென்கிற ஒரே நோக்கில் அதனின் கோபத்தைச் சுலபமாக எடுத்துக் கொண்டு அதற்கு பெரும் தண்டனைகள் ஏதும் இன்றி விடுவித்தேன்.நேரம் கடந்து கொண்டிருக்க இசையை மறக்கத் தொடங்கிவிடக்கூடாது என்பதால் வாய்க்குள்; முனகிக் கொண்டிருந்த எனை மீண்டும் என் கேட்கும் குழல் அதனை ‘வாயைத் திறந்து இசைத்துக் காட்டேன்’ என்றதற்கு எந்த மறுப்பையும் வெளிப்படுத்தாது என்னால் முடிந்த அளவு இசையைக் கொண்டுவர எந்த வித கூச்சமும் இன்றி முடிவெடுத்தேன்.ஏனென்றால் எனக்குத் தெரியும் அதை அப்படியே கொண்டு வர முடியாது என்பது தெரிந்தும் முயன்றேன்.இப்போது அதுவரை கேட்கத் துடித்த மடல்கள் தனது இரு பக்கங்களின் துவாரங்களையும் மூடிக்கொள்ள அமைதியானேன்.நான் இங்கு வந்து மாட்டிக்கொண்டு விட்டேனோ அவளின் இசைக்குள் பயணித்திருக்க கூடாது.என்னைப் பார்ப்பதற்கு முன்பே அவளுடைய இசைக் கோர்வைகளின் வீரியத்திற்குள் சென்றதும் அதில் தனியாக விட்டுவிட்டு எனை மீட்டுவராமல் இப்படி இசையை நிறுத்திக்கொள்ளக் கூடாது என்று முறையிட அதற்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை.அங்கு இருப்பது நானும் என்னைத் துறந்த இருளும் என்பதை அறிந்தேன்.இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் எந்த வழியில் சாத்தியமாகக் கூடும் என்பதிலேயே இப்போது முழு எண்ணத்தையும் திரட்டியிருந்தேன்.அதற்கு அவளின் இசையினை தவிர்க்க வேண்டும் அல்லது கேட்கும் திறன் இருக்கக் கூடாது என்பது போல ‘தயவு கூர்ந்து மன்னித்துக் கொள்’ என்று அதுவரை எனது சமாதானத்திற்குப் பணிந்திருந்த செவியினை வேண்டப்படாத பொருள் என்று அறுத்தெறிய முற்பட்டபோது.அதனால் எதுவும் பயன் ஏற்பட்டதா என்று நினைக்கையில் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.மீண்டுமதே நிலை தொடர என் உடலையே அவைகள் ஒரு காட்சிப்பொருளாகச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பது ஒரு வித வெறுப்பை ஏற்படுத்தியது.அது இப்போது நுகரும் புது அம்சத்தையும் பெற்றிருந்தது.
ஏனோ இப்படியாக மறந்த சிற்பங்களின் அசைவுகளையும் அது வெளிப்படுத்தும் எண்ணங்களை தானாக உளறத் தொடங்கியிருந்த நாவினை கிண்டல் செய்யத் தனது வேகத்தைக் கூட்டியது அச்செவி. அதிலிருந்து வடியும் ரத்தம் என் மீது விழ அதன் அருவருப்பில் இன்னும் உடல் இறுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தது.அவள் இசைத்த மூங்கில் தடியின் உருவம் ஏனோ என்னுள் தோன்றி மறைய அவளை அந்த ரயில் நிலையத்தின் ஒரு மூலையில் இன்று காலை முதன்முதலில் கண்ட காட்சியும் தோன்றியது.தனது உருவத்திற்கும் தான் கையில் வைத்திருக்கும் அந்த இசைக்கருவியை இசைக்கத் தெரிந்தவள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அவ்வளவு விளையாட்டுதனமாகக் கையாண்டு கொண்டிருந்தாள்.அப்பொருளை கையாளும் போதும் அதனின் அசைவுகளுக்கு ஏற்றார் போன்று என் உடல் மொழி மாறிக் கொண்டே இருந்தது.எத்தனையோ முறை அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறேன் அலுவலக சுமைகள் மற்றும் வீட்டில் ஏற்படும் சங்கடங்களுக்கு மருந்தாக அந்த இருக்கையே அமைந்திருக்கிறது.அந்த இருக்கையையும் ஒரு கட்டத்தில் சொந்தம் கொண்டாடத் தொடங்கியிருந்தேன்.ஏனென்றால் அது கொடுக்கும் சிறிது நேரத் தனிமை மீண்டும் இவ்வுலகத்தின் பொருட்களுக்குள் இணைந்து கொள்ளக் கூடிய தெம்பைக் கொடுக்கும்.எவ்வளவோ முறை அங்கு இருந்திருந்தாலும் அன்றே அவளையும் அவள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் அவளது இசைக்கருவியையும் காண முடிந்தது.ஏனோ என்னுள் அக்கருவியின் மீது ஆர்வம் அதிகரிக்க.அவளிடமிருந்து எடுத்துக் கொள்ள மனம் முயன்றது.ஆனால் எப்படி எடுக்கப் போகிறோம் என்கிற நடைமுறை சிக்கலில் மாட்டினாலும் அவளிடமிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் தீர்க்கமாக இருந்தேன். ‘பைத்தியக்காரி’ அவளிடமிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவளைப் பின்தொடர ஆரம்பித்தேன்.எப்போதும் நான் சுற்றி திரியும் ரயில் நிலையம் ஆகையால் அவளை எங்கும் வழித் தவறாது பின் தொடர முடிந்தது.எதற்காக இந்த ஆர்வம் என்று என்னுள் கேட்டுக்கொள்ளக் கூட நேரமில்லாமல் அவளிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே முழு கவனமும் இருந்தது.அதை மீறிய எதுவும் என்னுள் எழவில்லை. அவளுக்கு அதில் அப்படி என்ன இருக்கப்போகிறது? என்கிற எனது முதல் கட்ட எண்ணத்தில் அவள் பாதுகாத்து வைத்திருப்பதிலிருந்தே தொடங்கியது.ஒரு இடத்தில் கூட கையிலிருந்து விலக்கவில்லை.என்னை அவள் கவனித்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.அவளது அங்க அடையாளங்களுக்கும் கையில் வைத்திருக்கும் இசைக்கருவிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
பின்தொடர்ந்த களைப்பில் அவளிடம் விலை பேச முயன்றேன்.ஆனால் அதற்கு எந்த விலையும் நிர்ணயிக்காது என்னிடம் நீட்டி எடுத்துக்கொள் என்று சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது.அங்கு என் பெருந்தன்மையையும் காட்ட வேண்டுமென்று இதை வைத்துக்கொள் என்று என் பாக்கெட்டிலிருந்து நூறுரூபாயை எடுத்து நீட்டினேன்.
அதைப் பார்த்துச் சிரித்தவளாய்,என்னிடம் நீட்டிய கருவியை நான் வாங்கிக்கொள்ள முயலும் போது என்னிடமிருந்து விலக்கி சத்தமாகச் சிரித்தாள்.எதற்காக இப்படி சிரிக்கிறாள் என்பது போல எங்களைக் கடந்து செல்கிற பயணிகள் எங்களைக் கவனிக்கும் வண்ணம் இருக்க நான் அவளிடம் என்ன என்பது போலக் கேட்க.அதற்கு ‘இதை வாசித்து காட்டிட்டு ..வாங்கிக்கோ..’ என்று மீண்டும் சிரித்தாள்.அவளது சிரிப்பு கிண்டல் செய்வதிலேயே இருந்தது என்று சொல்ல வேண்டும். பொறுத்துக் கொள்ள முடியாது தடுமாறிய என்னிடமிருந்து விலகிச் சென்று தரையில் அமர்ந்து சாவகாசமாக இரும்பு கம்பில் சாய்ந்து கொண்டாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னை அதற்குப் பிறகு ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை.நானும் அவள் அருகிலேயே போடப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்துகொண்டேன்.எதற்காக இப்படி ஒரு ஆசை என்னுள் வந்தது என்று யோசிக்க முயலும் போதே அவளின் செயல்களை உன்னிப்பாக கவனித்து வந்தேன்.அவளிடத்தில் பிரதான பொருட்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவில் எதுவும் இல்லை.ஒரே பை அதில் அவளது துணிகள் இருக்கலாம்,பல காலமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பிறகு எனை ஈர்த்த அவளது இசைக்கருவி.ஏனோ அதன் துவாரங்களுக்குள் விரும்பி மாட்டிக் கொண்ட எனக்கு அதிலிருந்து வெளியேற முடியாமல் இருப்பது புதிதில்லை, இது ஒவ்வொரு முறையும் நிகழக்கூடியதால் அதற்கு பழகியிருந்தேன்.
கடுங்கோபம் எழுந்திருந்தது,அவளது சிரிப்பை நினைத்து நினைத்து மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ‘இதனை வாசித்துக் காட்டிவிட்டு எடுத்துச் செல்’ என்று சொன்னது வம்பிழுக்கவே. இசைக்க வேண்டும் என்கிற ஆர்வம் முதன் முதலில் அவளின் கேள்வியிலேயே எழுந்தது.அதுவரை அதைப் பற்றி யோசிக்காது இருந்த எனை அவளது சீண்டல் எங்கோ தள்ளிவிட முயற்சித்து அதில் வெற்றி கொண்டது என்கிற உருவம் கொள்ளத் தொடங்கியது.முதலில்’போடி ..ஒலகத்துல வாங்க முடியாத ஒன்ன வச்சுருக்கா..திமிரு..’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டிருக்க,எதையும் பொருட்படுத்தாமல் வாசிக்க தொடங்கியிருப்பதை பார்த்தேன்.எனக்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதன் எந்த நயங்களும் பே ..பே ..ஆனால் அதனை ரசிக்கக் கூடிய செவியின் மடல்கள் அத்தனை சச்சரவுகளையும் மீறி அதனுள் உள்ளிழுக்கத் தொடங்கியிருந்தது.
இருளுக்குள் கிடத்தியிருந்த என்னை அவள் தன்னுடைய கேளிக்கைகளுள் ஒன்றாக மாற்றிவிட்டாள் என்று தோன்ற ‘வாசிச்சு காட்டிட்டு இதை எடுத்துக்கோ‘ என்று சொன்னது மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது.கண்களைத் திறந்து பார்க்கும் போது எனக்கு முன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.அதனை எதிர்பார்க்காத எனக்கு ஒரு நிமிடம் பயமாக இருக்க அவளின் இருப்பு அசைவுகள் இன்றி சிற்பங்களின் உருவாக எனை வடிக்கத் தொடங்கி விட்டது போன்ற பார்வை கூர் நோக்கி இருந்தது.எதுவும் பேசாமல் அதுவரை எதற்காகத் திரிந்திருந்தேனோ அதை என்னிடம் நீட்டினாள் ‘எடுத்துக் கொள்’ என்கிற பாவனையில்.வாங்கிக் கொள்ள முடியாதவாறு உடல் நடுக்கம் கொள்ளத் தொடங்கியது.சிரித்தவாறு என் முன் அந்த இசைக்கருவியை வைத்து விட்டு விலகிக்கொண்டாள்.இப்போது என் முன் இருக்கும் அந்த இசைக்கருவி என்னை கேலி செய்யத் தொடங்கியிருந்தது.
கல்குதிரை 2024
