க.நா.சு/ வெங்காய வெடி

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஒருதரம் தீபாவளி சமயத்தில் நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குக் கிளம்பினேன். தீபாவளி சமயமாதலால் ரெயிலில் கூட்டமாகத்தான் இருந்தது. நாலுபேர் உட்கார வேண்டிய இடத்தில் எட்டுப் பேர் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். சாதாரணமாக எப்பவுமே கும்பகோணத்தில் எந்த ரெயிலுக்குமே கூட்டம் ஏறத்தான் ஏறும்.
“ஸார் எங்கே? சிதம்பரம்தானே?”
கேட்டவரைத் திரும்பிப் பார்த்தேன். எனக்கு எப்பவுமே மறதி அதிகம். அவரைத் தெரியவில்லை.
“தெரியவில்லையா? உங்க சித்தப்பாவோடு ஒருதரம் சிதம்பரத்தில் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்” என்றார் அவர்.
“தெரிகிறது, தெரிகிறது” என்றேன். அவரைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றவில்லை.
“ஆமாம் சிதம்பரம்தான் போகிறேன்” என்றேன்.
“கொஞ்சம் ஜாக்கிரதையாக உட்காரணும். கீழே இருக்கிற மூட்டையிலே கால் பட்டுதானால் ஆபத்து. மூட்டையிலே வெங்காய வெடி இருக்கு” என்றார் அவர்.
“வெங்காய வெடியா?” என்றார் வண்டியிலிருந்த வேறு ஒருவர்.
“ஆமாம். ஊரிலே நமக்குப் பட்டாசுக் கடை இருக்கு. இன்னும் இரண்டு நாள் வியாபாரம் இருக்கே தீபாவளிக்கு முன் என்று கும்பகோணத்திலிருந்து வெங்காய வெடி வாங்கிண்டு போறேன்” என்றார் அவர்.
நான் “எந்த ஊர்?” என்றுகூட அவரை விசாரிக்கவில்லை.
எனக்கு அதுவும் அவசியமாக படவில்லை.
“வெங்காய வெடியா?” என்று என் பக்கத்திலிருந்த வேறு ஒருவர் பர பரவென்று தன் கால்களை நகர்த்திக் கொண்டார்
“வெங்காய வெடினெல்லாம் இப்படி எடுத்து போகக் கூடாது” என்றார் ஜரிகை அங்கவஸ்திரமும் ஸில்க் ஷர்ட்டும் உச்சிக் குடுமியுமாக உட்கார்ந்திருந்த ஒரு ஆசாமி.
“இப்படி அவற்றை எடுத்துச் சொல்வது சட்ட விரோதமானது” என்றார் வேறு ஒருவர். அவர் பள்ளிக்கூட உபாத்தியாயராக இருக்குமென்று எனக்குத் தோன்றியது<
பட்டாகக் கடைக்காரர் சொன்னார்: “மனிதன் தான் செய்கிற காரியங்கள் எல்லாவற்றையுமே சட்டப்படி செய்வது என்று தீர்மானித்துச் செய்தானானால், இவ்வுலகில் ஒரு காரியம்கூட நடக்காது.”
“உண்மைதான்” என்றேன் நான்,
“ரேஷன் காலத்திலே கறுப்பு மார்க்கெட் அரிசி வாங்காதவன் யாரு ஸார்?” என்றார் ஒருவர். ஆஜானுபாகுவாக இருந்தார் அவர், அவருக்கு நிச்சயமாகப் பழைய ரேஷன் அளவு அரிசி
போதுமானதாக இருந்திராது என்று நான் எண்ணினேன்.
“சட்டத்தைப் பற்றி எண்ணாமலே சட்டப்படி நடக்காதவர்கள் தான் அதிகம் நம்மிடையே” என்றார் ஸில்க்ஷர்ட், உச்சிக் குடுமி ஆசாமி. முழுக் கதர் அணிந்திருந்தவர் ஒருவர்-அவருக்கு வயது ஐம்பதிருக்கும்-சொன்னார்: “பணக்காரத் தொந்திகள் பலவற்றை எனக்குத் தெரியும். அவர்களுடைய பணத்தைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. கூடவும் கூடாது. அவர்களுடைய தொந்திகள் எல்லாம் சட்டப்பூர்வமாக வராதவை என்று மட்டும் ஆனால் எனக்குத் தெரியும்”, என்றார் அவர். அவர் ‘ஹி’ என்று சிரித்தார். வண்டியிலிருந்த மற்றவர்களும் அவருடன் சிரித்தார்கள்.
தொந்திகளைப் பற்றிப் பேசிய மனிதருக்கே லேசான தொந்தி இருந்தது என்பதை நான் கவனித்தேன்.
அது சட்டபூர்வமாக ஏற்பட்டதா என்று விசாரிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் விசாரிப்பானேன். சந்தேகம் எதற்கு?
“அத்தனை வெங்காய வெடிகளையும் எனக்கு அப்படியே
விலைக்குக் கொடுத்து விடுங்களேன்” என்றான் எதிர் ஸீட்டில் மூலையில உட்கார்ந்திருந்த வாலிபன்.
வண்டி திருநாகேசுவரத்தில் நிற்காமல் தடதடவென்று ஓடியது.
அந்த வாலிபன் மிகவும் நாகரிகமாக ஆடை அணிந்திருந்தான். கோட், மேனாட்டு தொப்பி, மூக்குக் கண்ணாடி, படிய வாரிய கிராப்பு, பளபளத்த பூட்ஸுகள், முகத்திலே பாவமேயற்ற ஒரு களை. அவனைப் பார்த்தால் வெங்காய வெடிவெடிப்பவன் மாதிரித் தோன்றவில்லை. தீபாவளிக்கு எண்ணெய்கூடத் தேய்த்துக் கொள்ள மாட்டான் அவன் என்று எண்ணத் தோன்றிற்று. புது வேஷ்டி கட்டிக் கொள்வது தீபாவளிக்கு எடுத்தது. ஆனால் புது ஸூட் போட்டுக் கொள்வது சாஸ்திர சம்மதம்தானே? புது ஹாட்?
எனக்குத் தோன்றிய மாதிரியேதான் என் வண்டியில் இருந்த மற்றவர்களுக்கும் அந்த வாலிபனுக்கு எதற்கு அத்தனை வெங்காய வெடிகளும் என்று தோன்றியிருக்க வேண்டும்.
“திடீரென்று அகஸ்மாத்தாக இந்த வண்டியில் அத்தனை வெங்காய வெடிகளும் வெடித்துவிட்டதானால்” என்று ஆரம்பித்தார் பள்ளிக்கூட உபாத்தியாயர் என்று நான் எண்ணிய மனிதர்.
“இன்னொரு கம்யூனிஸ்ட் சதி என்று பத்திரிகைகளில் பிரமாதத் தலைப்புகளுடன் வெளிவந்து விடாதா?” என்றார் ஸில்க் ஷர்ட் ஆசாமி.
“நான் கம்யூனிஸ்டில்லை-நான் கம்யூனிஸ்டில்லை என்று இந்த வண்டியில் உள்ளவர்கள் எல்லோரும் தங்களுடைய குற்ற மின்மையை ருஜுப்படுத்த வேண்டி வந்துவிடும்” என்று சொன்னார் கதர்க்காரர்.
“அது அப்படி ஒன்றும் சுலபமான காரியமில்லை” என்றார் ஸில்க் ஷர்ட் ஆசாமி.
“ஆமாம், இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் அல்லாதவர்கள் யாரு? என்று கேட்டார் இதுவரையில் பேச்சில் கலந்து கொள்ளாதவர் ஒருவர். அவருடைய முகத்திலே ஏழைமை கூத்தாடியது. எட்டு நாளாகப் பட்டினி கிடக்கிற மனிதன் மாதிரி யிருந்தது.
“எங்களூரில் ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இருக்கிறார். அவருக்கு இன உணர்ச்சி அதிகம். தன் இனத்தைச் சேராதவர்கள் எல்லோருமே கம்யூனிஸ்டுகள் என்கிற கொள்கையுடையவர் அவர்” என்றார் கதர் அணிந்தவர்.
“ஜனநாயகத்தின் தத்துவமே அதுதான். நம் கட்சியைச் சேராதவர்கள் எல்லோருமே கம்யூனிஸ்டுகள்தான்” என்றார் ஸில்க் ஷர்ட் ஆசாமி.
“அப்படிச் சொல்லிவிட முடியுமா? நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவனாக இருப்பது என்றால் அக்கட்சியால் எனக்கோ என் மூலம் பிறருக்கோ லாபம் கிடைக்குமா என்பதைத் தீர யோசித்துத் தான் முடிவு செய்வேன்” என்றார் நான் பள்ளிக்கூட உபாத்தியாயர் என்று எண்ணிய மனிதர்.
“நான் கம்யூனிஸ்டில்லை” என்றான் அந்த வாலிபன், சிரித்துக் கொண்டே.
“அது சரி. நீர் கேட்ட கேள்விக்குப் பட்டாசு கடைக்காரர் பதில் சொல்லவில்லையே!” என்றேன் நான்.
“முந்நூறு வெங்காய வெடிகள் இருக்கின்றன” என்றார் பட்டாசுக் கடைக்காரர்.
“அவ்வளவையும் எடுத்துக்கொண்டு விடுகிறேன்” என்றான் அந்த வீர வாலிபன்.
வண்டி திருவடமருதூரில் நின்றது.
“அதை அப்படியே இங்கு விற்றுவிட்டேனானால் நான் மீண்டும் கும்பகோணம் போய் எங்களூர் தேவைக்கு மறுபடி வெடி வாங்கிப் போகவேண்டும்” என்றார் பட்டாசுக் கடைக்காரர்.
“வியாபாரத் தந்திரம் அதுதானே? ஒன்றிருந்தால்தானே, இரண்டை விற்கலாம்” என்றார் கதரணிந்த ஆசாமி.
“ஆமாம், உமக்கு எதற்கு அவ்வளவு வெங்காய வெடிகள்?” என்றார் இன்னமும் சந்தேகம் தீராததொரு சகோதரப் பிரயாணி.
“அதுவா?” என்று தயங்கினான் வாலிபன். வண்டி இன்னமும் திருவடமருதூர் ஸ்டேஷனிலேயே நின்றது.எதிரே ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது போலும். ‘மீடிங்’ அங்கு.
ஒரு நிமிஷத் தயக்கத்துக்குப் பிறகு அந்த வாலிபன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் சொன்னான்: “நான் என் தலை தீபாவளிக்கு என் மாமனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அங்கே என் மாமனார் வீட்டிலே, இரண்டு மூன்று டஜன் குழந்தைகள் தீபாவளிக்கு முகாம் போடுவது வழக்கம்….”
“அது எப்படி ஒரு மாப்பிள்ளைக்குத் தெரிந்தது?” என்று கெட்டிக்காரத்தனமாக ஒரு கேள்வியைப் போட்டார் ஸில்க் ஷர்ட்
ஆசாமி.
அவன் பதில்
அதற்கு வாலிபன் பதில் சொல்லவில்லை. சொல்ல வேண்டும் என்றும் வண்டியிலிருந்தவர்கள் எதிர்பார்க்க வில்லை. வாலிபன் தொடர்ந்து சொன்னான்:- “இருநூறு முந்நூறு வெங்காய வெடிகளை வாங்கிவிட்டால் எல்லாக் குழந்தைகளுக்கும் பட்டாக கொடுக்கிற பிரச்னை தீர்ந்துவிடுமே என்று பார்த்தேன். அவ்வளவுதான்,”
“அது மட்டுமில்லை. வெங்காய வெடியை வெடிக்கச் சின்னப் பசங்கள் நம்மைப்போல யாருடைய உதவியையாவது நாடித்தான் ஆகவேண்டும்?” என்றார் பள்ளிக்கூட உபாத்தியாயர்.
கும்பகோணம் போய்க்கொண்டிருந்த ரெயில் வந்துவிட்டது. இரண்டு நிமிஷத்திற்கெல்லாம் எங்கள் வண்டி கிளம்பி விட்டது.
“ஏதோ படித்த படிப்பு, கூட இருந்தவர்கள் சகவாசம். இப்படியாக இந்த வேஷம் போட என்னை வைக்கிறதே தவிர உண்மையில் நான் சம்பிரதாயத்தில் நம்பிக்கையுள்ள மனிதன்தான்” என்றான் அந்த வாலிபன்.
“மனிதனால் என்ன செய்தாலும் சம்பிரதாயம் என்பதை மட்டும் தப்பிவிட முடியாது” என்றார் பள்ளிக்கூட உபாத்தியாயர்.
“சம்பிரதாயங்கள் அழகிலே ஊறிக் கிடக்கின்றன” என்றார் ஸில்க் ஷர்ட் ஆசாமி.
“பட்டாசு சுடுவதில் எனக்குக்கூட இந்த வயசில் பிரியம் உண்டு” என்றான் வாலிபன்.
“உமக்கு மட்டும் என்ன? உலகத்திலே உள்ள படே படே அரசியல்வாதிகள், மந்திரிமார்கள், ராஜாக்கள், ராஜதந்திரிகள்
இவங்களுக்கெல்லாம் கூட வாணம் விடுவதிலும், பட்டாசு சுடுவதிலும் ஒரு ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது” என்றார்
தரித்திர நாராயணன்.
“போடு ஒன்று போட்டாரய்யா!” என்றார் பட்டாசுக் கடைக்காரர்.
“அதுவும் வரவு வர சம்பிரதாயம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது” என்றார் ஸில்க் ஷர்ட்டுக்காரர்.
பள்ளிக்கூட உபாத்தியாயர் சொன்னார். “சம்பிரதாயம் என்று சொன்னதும் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது!”
”கதையா? சொல்லுங்களேன்!” என்றார் கதர் ஆடைக்காரர். “அது தலை தீபாவளிக் கதைதான். ஆனால் சோகமானது. அதுவும் ஒரு புது மாப்பிள்ளைக்கெதிரில்…’
“சொல்லுங்கள். நானும் கேட்கிறேன். சோகமாயிருந்தால் என்ன? பாதகமில்லை” என்றான் வாலிபன்.
பள்ளிக்கூட உபாத்தியாயர் சொன்னார், “சுருக்கமாகவே சொல்லுகிறேன், சோகக் கதையை வளர்த்துவானேன்?”
ஆடுதுறையில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது.
“நாலைந்து தலைமுறைகளுக்கு முன் ஒரு புது மாப்பிள்ளை தீபாவளிக்கு நாலைந்து நாட்களுக்கு முன் தன் மாமனார் வீட்டுக்குப் போயிருந்தார். அந்தக் கலியாணம் உறவிலே நடந்த கலியாணம் தான். பெண்ணும் பிள்ளையும் கலியாணமாகிற வரையிலும் ‘நாசமாகப் போறவனே; கட்டையிலே போகிறவனே’ என்று செல்லமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் கலியாணம் என்று ஆகிவிட்ட பிறகு இந்தச் சௌஜன்யம் குறைந்துவிட்டது. வீட்டிலே பெரியவர்களுடன் பேசக்கூடப் புது மாப்பிள்ளைக்கு வெட்கம். பெண் தன் வீடுதான் என்றாலும் சமையலறையில் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டிருப்பது என்றுதான் ஏற்பட்டு விட்டது”.
ஸில்க் ஷர்ட் ஆசாமி கேட்டார். “பெண்ணுக்கு என்ன வயசு?”
“பெண்ணுக்கு ஒன்பது பத்து இருக்கும்.
பையனுக்கு பன்னிரண்டு, பதிமூன்று இருக்கும்.
தீபாவளிக்கு முதல் நாள்
அதிகாலையில் பையன் பல் தேய்க்கக் குளத்தங்கரைக்குப் போயிருக்கிறான். இருட்டோடு இருட்டாகக் கணவன் கண்ணில் படாமல் குளித்துவிட்டு வீடு திரும்பிவிட வேண்டுமென்கிற உத்தேசத்துடன் அவன் மனைவி அந்தச் சிறுமி தனியாகக் குளத்தங்கரைக்கு வந்திருக்கிறாள். தன் கணவனைத் திடீரென்று அங்கே கண்டதும் குளித்துக் கொண்டிருந்தவள் பதறிப் போனாளோ என்னவோ குளத்தில் அமுங்கி விட்டாள்.”
“பிறகு?”
“பிறகு என்ன? நாள் பூராவும் பெண்ணைக் காணோமே என்று தேடினார்கள். பையன் அவளைக் குளத்தில் கண்டதாகக் கடைசி வரையில் வெளியே சொல்லக்கூட இல்லையாம். பெண்டாட்டி யைப் பற்றிப் பேசுவது அவ்வளவு அவமானபடத்தக்க விஷயம். ஊர் திரும்பி, அம்மாவிடம்தான் சொன்னானாம்-தன் கண்ணெதிரே தன் மனைவி குளத்தில் அமுங்கிச் செத்தாள் என்று” கதையை முடித்தார் பள்ளிக்கூட உபாத்தியாயர்.
“இது வேடிக்கையாக இருக்கிறதே தவிர, சோகமாக இல்லையே” என்றான் வாலிபன்.
“யாரோ கட்டிவிட்ட கதை” என்றார் கதர் அணிந்தவர்.
ரெயில் தியாகராஜபுரத்தில் நிற்காமல் ஓடியது.
”கதையா? நிஜமாகவே நடந்ததய்யா நடந்தது என் தாத்தாவுக்கு அப்பா தன் மூத்தமனைவியை இழந்தது இப்படித்தான். அவர் கல்யாணம் செய்து கொண்ட இரண்டாவது பெண்டாட்டி இருக்கிறாள். என் கொள்ளுப்பாட்டி காசிக்குப் போகணும்னு எங்களை எல்லாம் இழுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறாள். அவள், என் மனைவி, என் குழந்தைகள் எல்லோரும் பெண்கள் வண்டியில் ஏறியிருக்கிறார்கள்” என்றார் பள்ளிக்கூட உபாத்தியாயர்.
வாலிபன் சொன்னான்:- “என் மனைவியும் கர்நாடகம்தான். என்றாலும், அப்படி குளத்தில் அழுந்தி இறந்துவிட மாட்டாள். அவளுக்கு நீஞ்சத் தெரியும்” என்றான்.
“முன்னெல்லாம் தலை தீபாவளி என்றால் வாட்சு செயின் வைர மோதிரம் என்று சொல்வார்கள். இப்போது ரேடியோ, கார் புது பங்களா என்று சம்பிரதாயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார் பள்ளிக்கூட உபாத்தியாயர்.

நரசிங்கன் பேட்டை ஸ்டேஷன் அவுட்டர் கைகாட்டியைத் தாண்டிக் கொண்டிருந்தது ரெயில்.
தரித்திர நாராயணன் சொன்னார்:- “இருக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள்?” அதுவும் இருக்கிறவர்களுக்குத்தான் செய்கிறார்கள்.
இல்லாதவர்களுக்கு யார் செய்கிறார்கள்? ” என்று பதிலில்லாத கேள்வியைக் கேட்டார்.
வாலிபன் எழுந்தான்: “நான் நரசிங்கன்பேட்டையில் இறங்குகிறேன். எனக்குக் கர்நாடகமான மனைவி வேணும் என்று ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டேன்.
பழைய சம்பிரதாயங்கள் சிறிதும் வழுவாமல்-நலுங்கு, பட்டாசு உள்பட எல்லாம் நடைபெற வேண்டும் என்பதுதான் என் லட்சிய பூர்த்தி”,
நரசிங்கன்பேட்டை வந்துவிட்டது.
வாலிபனை ‘மைடியர்!’ என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தவள் அவன் மனைவியாகத்தான் இருக்கவேண்டும். வாலிபன் பதிலுக்கு “டார்லிங்” என்றபடி இறங்கினான்.
இன்றைய நாகரிகத்துக்கு முந்தியதைக் கர்நாடகம் என்கிறோம். இனி வரப்போவதையும் கர்நாடகம் என்று சொல்வது பொருந்தும் தானே! இன்றைய நாகரிகத்துக்கு நாலு தலைமுறை முந்தியதான நாகரிகத்தை (கர்நாடகத்தை)ச் சேர்ந்தவள் அவன் மனைவி.
வெளியே கார் காத்திருந்தது.
புதுக் கணவனும் புது மனைவியும் தலை தீபாவளிக்குப் போகிற காட்சியை நாங்கள் மட்டும் என்ன, நரசிங்கன்பேட்டை ஸ்டேஷனிலுள்ளவர்கள் எல்லோரும் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு ஸ்தம்பித்து நின்றார்கள். அந்தத் திகைப்பில் ரெயில் இரண்டு நிமிஷம் தாமதித்தே கிளம்பியது.
எனக்கு இளநீர் கொடுத்த பையன் இரண்டணாவை வாங்கிக் கொண்டு முக்காலணா திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டான்.
ரெயில் நரசிங்கன் பேட்டையிலிருந்து கிளம்பியது.
1966

க.நா.சு. / நாணயஸ்தன் – விருட்சம் நாளிதழ்