1
எஸ் எம் ஏ ராம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றிப் பேசும் விருட்சம் அமைப்பின்
நிகழ்வில் இணைந்திருக்கும் அனைத்து வாசக, எழுத்தாள, விமர்சக
நண்பர்களுக்கும் ஜி பி சதுர்புஜனின் அன்பு வணக்கம். வாய்ப்பளித்த, விருட்சம் அமைப்பைத் தொடர்ந்து இடைவிடாது உழைத்து, மனம் சலியாமல் நடத்திக்கொண்டு இலக்கிய சேவை ஆற்றி வரும் அழகியசிங்கர் அவர்களுக்கு என் நன்றி. இது 40வது கதைஞர்கள் கூட்டம் என்பதை அறிந்து மகிழ்ச்சி.
நான் இன்று உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த எடுத்துக் கொண்டிருக்கும் எஸ் எம் ஏ
ராமின் சிறுகதையின் தலைப்பு “ஹோமம்”. ஆமாம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்
என்றெல்லாம் சொல்வார்களே அந்த ஹோமம்தான்.
இந்த “ஹோமம்” சிறுகதையை என்னிடம் அழகியசிங்கர் கொடுத்துப் பேசச் சொல்லும் வரை
எனக்கு எஸ் எம் ஏ ராமைத் தெரியாது. ராம் என்ற பெயரில் உரத்த சிந்தனையின் உதயம் ராம்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்று சில தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களைக்
கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எஸ் எம் ஏ ராம் என்ற எழுத்தாளர் பெயர் இப்போது
அழகியசிங்கரால் நமக்கு அறிமுகமாகி இருக்கிறது.
எஸ் எம் ஏ ராமின் “ஹோமம்” கணையாழி செப்டம்பர் 1995 இதழில், இன்றிலிருந்து 26
வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள சிறுகதை. இந்தச் சிறுகதை இலக்கியச் சிந்தனை
அமைப்பின் பரிசு பெற்றிருக்கிறது என்பதைப் படித்தவுடன், இந்தக் கதையைப் படிக்க
வேண்டும் என்ற என்னுடைய ஆவல் பலமடங்கு பெருகியது.
கதையின் நீளம் பத்து பக்கங்கள் என்பதைப் பார்த்தவுடன், “என்னடா, இவ்வளவு பெரிய
சிறுகதையாக இருக்கிறதே !” என்று யோசித்தேன். ஆனால், படிக்கும்போது விறுவிறுவென்று
சுவாரசியமாக, இயல்பான நடையிலிருந்ததால், படிப்பது ஒரு சுகானுபவமாக இருந்தது.
சீரியசான சப்ஜெக்டாக இருந்தாலும் சிறிதும் அலுப்புத் தட்டவில்லை. இந்தக் கதையை
நீங்களே படித்து மகிழ்வதுதான் சரியாக இருக்கும். இந்தக் கதைக்குள் செல்லும்முன் எங்கள்
வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால்
இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. அந்த
சம்பவத்துக்குக் கதையோடு நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது – அதனால்தான் உங்களுக்குச்
சொல்லவேண்டும்.
1990இல் நான், என் மனைவி மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை மூவரும்
பெங்களூரிலிருந்து சென்னையில் குடியேறினோம். அப்போது முதல் சில வருடங்கள்
சூளைமேட்டிலும், மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகிலும் வாடகை வீடுகளில்
குடியிருந்தோம். இருவரும் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததால், அவதி அவதியான
வாழ்க்கை. அப்போது எங்கள் குழந்தைக்கு திடீர் திடீரென்று காய்ச்சல் வரும். அனல் போல்
உடல் கொதிக்கும். முதலில் பக்கத்திலிருந்த மருத்துவர்களைப் போய் பார்த்தோம். ஆனால்
2
மீண்டும் மீண்டும் ஹை டெம்பரேச்சர், ஃபீவர் வந்ததால், எங்களுடைய கவலை
அதிகமாயிற்று. புரசைவாக்கத்தில் அப்போதிருந்த எங்கள் பெற்றோரிடம் சொன்னபோது,
அவர்கள், “இங்கே தானா தெரு பக்கத்தில் டாக்டர் ஆச்சார்யா என்று ஒரு குழந்தை டாக்டர்
இருக்கார்… ஜுரம் வந்தால் குழந்தையைத் தூக்கிண்டு அவர்ட்டதான் எல்லாரும்
ஓடறா….அவர் மருந்து கொடுத்த சரியாயிடும்னு சொல்றா” என்றார்கள். உடனே டாக்டர்
ஆச்சார்யாவைத் தேடிக்கொண்டு ஓடினோம்.
உள்ளே ஹாலின் நாலு பக்கமும் சுவர் ஓரமாக பெஞ்சுகள் நீளமாகப்
போடப்பட்டு அது முழுவதும் அம்மாக்கள் கைக்குழந்தைகளை
வைத்துக்கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தனர். நாங்களும் அங்கே
உட்கார்ந்தோம். அங்கே நாங்கள் டாக்டரிடம் போகவில்லை. டாக்டர்
அச்சாரியா பஸ் கண்டக்டர் போலக் கையில் துண்டு பேப்பர்களை
வைத்துக்கொண்டு ஒவ்வொரு பேஷன்ட் கிட்டேயும் வந்தார். குழந்தையைத்
தொட்டுப் பார்த்துவிட்டு துண்டு சீட்டில் ஏதோ நம்பரை எழுதினார். ஒன்று,
இரண்டு என்று. கிட்டத்தட்ட எல்லோருக்குமே சிவப்பு நிற திரவம் ஒன்று
பாட்டிலில் வழங்கப்பட்டது. பாட்டில் கொண்டு வந்தால் விலையில்
தள்ளுபடி. மிகவும் குறைவாக ஐந்தோ பத்தோ தான் ஃபீஸ். எங்கள்
குழந்தைக்கு வெகு சீக்கிரமே குணமாகிவிட்டது.
டாக்டரைப் பார்த்தபோது “அடிக்கடி ஜுரம் வருகிறது” என்று நாங்கள் சொன்னபோது,
“இனிமேல் வராது” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தோம். மாறாக, டாக்டர் அச்சாரியா,
“அப்படித்தான் வரும்….. சுத்தம் சுகாதாரம் எதுவுமே இல்லையே !” என்றார்.
“நாங்கள் வீட்டைச் சுத்தமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னதற்கு
“நீங்கள் சுத்தமாக இருந்தால் போதுமா ? வீட்டுக்குள்ளே போய் சுத்தமாக வைத்துவிட்டு கதவை
தாழிட்டுக் கொள்வீர்கள்…. ஆனால், வீட்டுக்குள்ளேயே இருக்க முடியுமா ? வெளியில வந்து தானே
ஆகனும் ? வெளியில ரோட்டுல எங்க பார்த்தாலும் உட்கார்ந்து ஆய் போயி, மூச்சா போயி,எல்லாரும்
பண்ணும்போது இன்ஃபெக்ஷன் ஆகத்தான் ஆகும்…. ஜுரம் வரத்தான் வரும் !
ஆனா….. கவலைப்படாதீங்க…. நான் இருக்கேன் !” என்றார்.
டாக்டர் அச்சாரியா சொன்ன விஷயம்தான் இந்த எஸ் எம் ஏ ராமின் “ஹோமம்” கதையின்
சாராம்சம்.இந்தக் கதையின் ஹீரோ யார் தெரியுமா ? நம்பினால் நம்புங்கள். வீட்டின் கொல்லைக்
கதவைத் திறந்தால் ஓடும் சாக்கடைதான் இந்தக் கதையின் ஹீரோ.
இந்தக் கதையை நமக்குச் சொல்பவர் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அந்த வீட்டில் மொத்தம்
நாலு போர்ஷன் – நாலு குடும்பங்கள். மாடி போர்ஷனில் வீட்டின் சொந்தக்காரர். கீழே மூன்று
போர்ஷன்கள். ஒரு போர்ஷனில் கதை சொல்லி, அவர் மனைவி மற்றும் அவர்களது இரண்டு
குழந்தைகள். நடு போர்ஷனில் வீட்டுக்காரரின் வயதான அப்பா, அம்மா ( தாத்தா பாட்டி என்று
குறிப்பிடப்படுபவர்கள்), புதிதாய்க் கல்யாணம் ஆன அவரின் கடைசிப் பிள்ளை, மருமகள்,
அவர்களின் ஒன்றரை வயதுக் குழந்தை
கடைசிப் போர்ஷனில் வீட்டுக்காரரின் பரம வைதீகமான வயது முதிர்ந்த மாமாவும் மாமியும்.
இந்த வீட்டின் கொல்லைப்புறச் சாக்கடை விஸ்வரூபம் எடுக்கிறது. குடி தண்ணீர்
தொட்டிக்குப் பக்கத்திலேயே அது இருக்கிறது.
பின்னாடி மலம் நிரம்பி வழியும் செப்டிக் டேங்க் வேறு. அதை முனிசிபாலிட்டி ஆள் வைத்து
தோட்டத்திலேயே நாற்றம் நாற நாற வீட்டுக்காரர் இறைக்கிறார். எல்லோரையும் இந்த இடம்
மூக்கைப் பிடித்துக் கொள்ள வைக்கிறது.
வீட்டுக்காரர் சாக்கடையைப் பற்றியும் இந்தக் கஷ்டங்களைப் பற்றியும் எதையும் செய்ய
மறுக்கிறார். கேட்டால் செலவு என்கிறார்.
ஆனால் இந்த சுகாதார சீர்கேட்டினால், அவர்களது வீட்டு ஒன்றரை வயதுக் குழந்தைக்கே
உடல் நலக்கேடு வருகிறது.
இந்த நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சாக்கடையைச் சரி செய்யாமல், யாரோ
சாஸ்திரிகள் குழந்தைக்குத் தோஷம், ஹோமம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று
ஹோமம் செய்யப் புறப்படுகிறார்கள்.
ஹோம வாசனையும், சாக்கடை நாற்றமும் கலந்து விடுவதோடு கதை முடிகிறது.
என்னால் சொல்ல முடிந்தது இவ்வளவுதான். எஸ் எம் ஏ ராமின் பத்து பக்கச் சிறுகதையை
நீங்களே படித்தால் இந்தக் கதையும், கதை மாந்தர்களும், அந்த வாசனைகளும்
உங்களைவிட்டு நிச்சயம் அகலாது.
நன்றி நண்பர்களே ! மீண்டும் சந்திப்போம் !

சதுர்பஜனின் தெளிவான குரலில் “ஹோமம்” இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அமரர் ராம் அவர்களின் சிறந்த கதை இது. தேர்ந்தெடுத்து வாசிக்கவைத்த மாம்பலத்து இலக்கிய விருட்சமாம் அழகிய சிங்கருக்கு நன்றி!
மிக்க நன்றி!