அசோகமித்திரனும் நானும் – அழகிய சிங்கர்/முகமத் இப்ராஹிம்

ஒரு எழுத்தாளரின் வாழ்வியலை வைத்து அவரின் எழுத்தை தரப்படுத்தக் கூடாதது தான், ஆனால் அசோகமித்திரனின் எழுத்து பெரும்பாலும் அவரின் வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடாக இருப்பதாக நான் உணர்ந்ததால், அவரோடு நெருங்கிய இருந்த நபர்களில் அழகிய சிங்கரும் ஒருவர், அவர் அமியுடன் இருந்த அனுபவத்தையும் அவரின் எழுத்து சார்ந்து எழுதிய சில அனுபவங்களையும் இந்த சிறிய நூலின் வாயிலாக அறிந்து கொள்ளும்போது ஒன்று தெரியவகிறது. அமி அவரின் கதையில் கையாளும் பகடிகள் அவரின் இயல்பில் ஒன்றாக இருக்கிறது. அதுவும் அவர் தன்னை சுயபகடி செய்து கொள்வது தான் அதிகமாகவும் இருக்கிறது. அவரின் முழு சிறுகதைகள் தொகுப்பையும் வாசித்து இந்த நூலை வாசிக்கும் போது அவரின் கதைகளை நெருங்கி அணுகிய அனுபவமாகவும் இருந்தது.

தன்னுடைய வாழ்வில் அசோகமித்திரன் எப்போது நுழைந்தார் அதுவும் எந்தக் கதையின் மூலமாக அவரின் அறிமுகம் கிடைத்தது என “ரிக்ஷா” கதை தான் அழகிய சிங்கர் தான் வாசித்த முதல் கதை என்றும், அது வந்த தொகுப்பான ‘வாழ்வியலே ஒரு முறை’ நூலை தி. நகரில் உள்ள ஒரு நூலகத்தில் கிடைத்தது என்றும் அதற்குப் பின்பு அவரின் மற்ற எழுத்துகளை தேடித்தேடி வாசித்ததாகவும் கூறுகிறார். அப்படியே அவரின் முதல் அறிமுகம் ஒரு வங்கியில் கிடைத்தபோது அமி ஏதோ ஒரு வேலை அவசரத்தில் “நான் யாராக இருந்தால் என்ன?” என்று திருப்பிக்கேட்டதாக சொல்லி இருக்கிறார். அதற்குப் பின் அவருடனான ஒரு தொடர்பு அவரின் மரணம் வரை நீடித்தது.

அவரின் முதல் கதையாக “நாடகத்தின் முடிவு” என்ற சிறுகதை பிரசூரமானது 1956 என்றாலும் அந்தக் கதையை 1953 லேயே எழுதியதாகவும் அதை சில பத்திரிக்கைகள் நிராகரித்ததாகவும் என சில சுவாரசியமான செய்திகளை அறிய முடிகிறது. அமிக்கு மிளகாய் பஜ்ஜி அவருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவாக இருக்க ஒரு முறை இப்படி ஒரு வரியை கூறியிருக்கிறார், “இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவருனுக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும்”. அவருக்கு நோபல் பரிசுக்கு மேல் அவ்வளவாக மரியாதை இல்லை என்று உணரமுடிகிறது. அவர் தள்ளாத வயதில் கூட பல திருமணத்துக்கும் இலக்கிய நிகழ்வுக்கும் தவறாமல் செல்லும் போது இவரும் உடன் செல்லுவதாகவும் அங்கு நடந்த சில அரிதான விடயங்களையும் அறிய முடிகிறது, தன்னுடைய முதுமையை வைத்து தன்னை சுயபகடி செய்து கொள்வதும், மரணம் பற்றி அவருடைய பார்வையை வெளிபடுத்துவதும் ஒரு விதமான மனக்கிலேசத்தை தருகிறது எனக்கு, ஏனோ அவரின் மரணம் பற்றிய செய்திகள் வாசிக்கும்போதுக்கூட மனம் கலங்குகிறது.

ஒரு முறை அமி அவர்கள் அழகிய சிங்கரை பார்த்து “உங்களுக்கு கவிதை என்றால் ரொம்பப் பிடிக்கும்போல் இருக்கிறது” என்று கிண்டலடித்து இருக்கிறார். மற்றொரு முறை அழகிய சிங்கர் தான் எழுதிய கவிதைப் பற்றி அவர் என்ன அபிப்ராயம் வைத்துள்ளார் என்ற ஒரு ஆர்வத்தில் அவரிடத்தில் கேட்டபோது, அதற்கு அவர் நிதானமாக “நான் கவிதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது” என்று சிரிக்காமல் கூறியதாக கூறுகிறார், இப்படி பல அனுபவங்களை வாசிக்கும்போது அமியின் கதைகள் எனக்கு இன்னும் நெருக்கமாக உணர்வதாகத்தான் படுகிறது.

நோபல் பரிசு பெற்ற ஜி. பி. சிங்கர் என்ற எழுத்தாளரை தனக்கு அறிமுகம் செய்ததும், அங்கிருந்து தான் தன்னுடைய அழகிய சிங்கர் என்ற புனைப்பெயர் வந்ததற்கு ஒரு காரணமும் இருந்ததாகக் கூறுகிறார். வெங்கட் சாமிநாதன் தன்னை காணும்போதெல்லாம் “உங்கள் குரநாதர் எப்படி இருக்கிறார்” என்று விடந்தாவாதத்தோடு அசோகமித்திரணையும் ஞானக்கூத்தனையும் பற்றி இவரிடத்தில் விசாசிப்பாராம். தனக்கு ஆசிரியர்கள் யாரும் இல்லை என அழகிய சிங்கர் பதிலுரைத்தாலும் இப்படி அவர் சந்திக்கும்போதெல்லாம் கேட்பதுண்டு. அவர்களுக்கிடையில் இருந்த கருத்தியல் மோதலில் இவர் சிக்கி இருந்ததாகவும், வெ. சா இறுதிவரை தனிடத்தில் அப்படியே நடந்து கொண்டதாகவும் கூறியிருந்தார், எனக்கு அழகிய சிங்கரை நினைத்து தான் வருத்தமாக இருந்தது, ஆனால் அவர் தனக்கான ஆசிரியர் யார் என்று ஒரு வரியை இந்த அதித்தியாயத்தில் எழுதி இருப்பார், நன்று.

அமியின் சிறுகதைகளில் எனக்குப் பிடித்தக் கதைகளில் ஒன்றான “காந்தி” என்ற கதைப் பற்றி இவரின் பார்வையில் எழுதி இருந்த ஒரு சிறு கட்டுரை, இன்னும் அதை விரிவடைத்து எழுதி இருக்கலாம். அமியின் கட்டுரைத் தொகுப்பான “எழத்தாளர்கள்/நூல்கள்/நிகழ்ச்சிகள்” என்ற நூலின் அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட கட்டுரையில் எம். வி. வெங்கட்ராமன் பற்றிய ஒரு விடயத்தை எழுதி இருந்தார், மனதை உலுக்கியது, அது அப்படியே அமியுடன் அழகிய சிங்கர் இருந்த சில அனுபவங்களாக விரிவடைகிறது. அழகிய சிங்கரின் வீட்டுக்கு இரு முறை வந்ததாக ஒரு கட்டுரையில் முரகாமிப் பற்றி இப்படி வரி எழுதுகிறார், “அவர் எழுத்தில் சுயமான அனுபவம் சற்று குறைவாக இருக்கிறது” என்று.

பின்பு பலக் கட்டுரைகள் அவரின் சிறுகதைகளை முன்வைத்தும், நாவல்களை முன்வைத்தும் எழுதி இருந்தார். குறிப்பாக நாவல்கள் பற்றி எழுதியக் இரு கட்டுரைகள் ஒரு நேர்காணல் வடிவிலே தன் நண்பர்களோடு உரையாடியதைப் போல எழுதி இருக்கிறார். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது அமியுடனான இருந்த அனுபவத்தை நான் உள்வாங்கிக்கொள்ளும்போது அவரின் இழப்பை நினைத்து மனம் வருந்ததான் செய்தது. ஒரு மகத்தான எழுத்தாளரை இந்த மண் இழந்து விட்டதோடு, அவருக்கு எந்த பெரிய அங்கீகாரமும் கிடைக்காத வெறுமையையும் மனம் சுமக்கிறது.

Mohammed Ibrahim
முகநூலில்
thanks