முகநூலில் ரம்யா வாசுதேவன் பதிவு..

முதலில் அனைவருக்கும் நன்றி!

நேற்று மாலை (26-4-2025) 5: 30 மணிக்கு under the tree foundation ஏழாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம் தொடங்கி 8:30 மணியளவில் இனிதே நிறைந்தது.

இதை எழுதும்போதே மனம் முழுதும் ஒரு விம்மிதம் பரவியபடி இருக்கிறது. இந்தக் கதை சொல்லலாம் எத்தனை எத்தனை அன்பான ஜீவன்கள் கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ந்து போனேன்.

இறை வணக்கத்தை தன் இனிய குரலில் கலைமகள் துதியோடு திருமதி. வாத்சல்யா பாட அரங்கம் அமைதியானது.

தொடக்கத்திலிருந்தே விழாவை திரு. இசைக்கவி ரமணன் கவிதையும் பேச்சும் சிரிப்பலையுமாக கொண்டு சென்றார். நான் நிகழ்ச்சித் தொகுப்பை இதுவரை செய்ததில்லை. வழக்கறிஞர் சுமதி மேடத்தின் அன்புக் கட்டளைக்காகவும், ரம்யாவின் அன்பிற்காகவும் இங்கு வந்தேன் என்று பேசினார். ஒரு நிகழ்ச்சியை இவர்போல் யாராலும் இவ்வளவு சுவாரசியாக தொகுக்க முடியுமா? என்கிற அளவிற்கு செய்தார். தொடக்கம் முதலே விழாவின் முக்கிய பங்கேற்போரை குறித்து கவிதைத் தோரணங்கள் கட்டி சொக்க வைத்தார்.

வெயிலின் தாக்கம் கவிதையின் குளுமையில் அணைந்தது.

அடுத்ததாக கிருஷ்ணா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எல்லோரையும் வரவேற்று பேசும்போது under the tree அமைப்பு என்ன மாற்றத்தை நிகழ்த்துகிறது என்று சொன்னார். இலக்கியமும் ஆன்மிகமும் மையச் சரடாகும் என்று பேசினார். குழந்தை இலக்கியம், சனிக் கிழமை புத்தகத்தை எப்படி நான் சொல்லியிருக்கிறேன் என்று சொன்னார். under the tree என்பது இயக்கமாக வளர வேண்டுமென்று சொன்னார்.

இதற்குப் பிறகு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்களையும், திரு. ஆட்சிலிங்கம் அவர்களையும் சிறப்பு கௌரவம் செய்தோம். அவர்கள் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டு மடலாக வரைந்து அளித்து மகிழ்ந்தோம்.

முக்கிய நிகழ்வாக, ஆதிசக்திக்கு ஆயிரம் நாமங்கள் – பாகம்-2, யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம், கண்ட்ரோல்+ஆல்ட்+க்ரியேட் போன்ற மூன்று புத்தகங்களையும் வந்திருந்த விருந்தினர்களான சுதா சேஷய்யன் அவர்கள் வெளியிட்டார். முறையே, வழக்கறிஞர் சுமதி மேடம், திரு. பத்ரி சேஷாத்ரி, திரு. ஜீவ கரிகாலன், திரு. கிருஷ்ணா என்று எல்லோரும் பெற்றுக் கொண்டனர். யோகிராம்சுரத்குமார் சரிதத்தை மாம்பலம் விஸ்வநாதன் அண்ணனும், ஜோதிடர் வித்யாதரனின் மனைவி விஜயலட்சுமி வித்யாதரன் வந்து பெற்றுக் கொண்டனர். கண்ட்ரோல்+ஆல்ட்+க்ரியேட் புத்தகத்தை என் கணவர் வாசுதேவன் அவர்களும் பெற்றுக் கொண்டார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் என் பெரும் மரியாதைக்குரிய தெய்வீக ஓவியர் கேஷவ் அவர்கள் வருகை புரிந்திருந்தார். கிருஷ்ணனின் பூரண கிருபை எனக்கு உண்டு என்பதை அவர் மூலம் ஊர்ஜிதமானது.

அதுபோல என் மீது அன்பை பொழியும் பி.என். பரசுராமன் வந்து ஆசியை அளித்தார்.

யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன் அவர்கள் இந்த மேடை எனக்கு இன்று முக்கியமாகவும் ஆன்மிகரீதியாக திருப்புமுனை அளிப்பதாகவும் அமைந்திருப்பதாக பேசினார். தான் ஆசைப்பட்ட மாதிரியே ஆங்கில புத்தகங்கள் இப்போது தமிழில் இப்படி சுருக்கமாகவும் வலிமை குறையாது வந்திருப்பதாக சந்தோஷித்தார். யோகியை அதிகம் நினைத்துக் கொள்வதாகவும், அதற்குக் காரணம் தன் தந்தையாரே என்றும் சொன்னார்.

பிறகு, ஆதிசக்தி ஆயிரம் நாமங்கள் புத்தகத்தை குறித்து சுதா சேஷய்யன் அவர்கள் மிக அற்புதமான உரையை நிகழ்த்தினார். இது தங்கமா, வைரமா என்பதை ரத்ன பரீட்சை தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படித்தான், லலிதா சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான சுதா சேஷய்யன் அவர்கள் இந்தப் புத்தகம் என்னை அசர வைத்தது என்றார்கள். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாமல் செல்கிறது என்று நூலின் கனத்தை துலாக் கோலில் நிறுத்திச் சொன்னார்.

மெல்ல, ராமாயணத்தில் தசரதருக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று கேள்வி எழுப்பி, அதற்கான விடையை தேவி மகாத்மியத்தில் தூம்ரலோசனன் கதையில் காணலாமென்று நீண்ட விளக்கத்தை அளித்து முடித்தபோது கூட்டம், பாம்புப் பிடாரனின் மகுடிக்கு கட்டுப்பட்ட சர்ப்பம் போன்று மயங்கி அமர்ந்திருந்தது.

நான் சொல்வதைக் காட்டிலும் நீங்கள் யூ டியூப்பில் சென்று பார்க்க வேண்டும்.

இதற்கு அடுத்து வழக்கறிஞர் சுமதி அவர்கள் மெல்லிய தூரலாக ரம்யாவின் கதைகளை எப்படி கேட்பேன்? எப்போதெல்லாம் கேட்பேன் என்று விவரித்தபடி இருந்தவர், சட்டென்று நெட்டுக் குத்தலாக ஏறும் ராக்கெட்போல தன் பேச்சை முற்றிலும் மாற்றினார். முத்துசாமி தீட்சிதரின் நவாவரண கீர்த்தனை, லலிதாவின் நாமமான மனோ ரூபேஷூ கோதண்டா, பாரதியின் பாட்டு என்று அதகளம் செய்தார்.

யோகிராம்சுரத்குமார் சரிதத்தில் யோகி தன் மகனான அமிதாப்பிற்கு அறுபத்து நான்கு ரூபாய் மீதியை அளித்து விட்டு போய் வருகிறேன் என்று சொல்லுமிடத்தில் சுமதி அம்மா தழுதழுத்தார்கள். தொண்டை அடைக்க கண்களில் நீர் திரள சொல்லும்போது அவையிலுள்ளோர் சிலர் கண்களில் நீர் துளிர்த்தது. இதை ரம்யா சொல்லும்போது நான் கண்ணீர் விட்டேன். நீங்களும் போய் அந்த அத்தியாயத்தை கேளுங்கள் என்றார்கள். கூட்டமும் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தது.

சச்சின் டெண்டுல்கரும், வீரேந்திர சேவாக்கும் இறங்கி நாலா பக்கமும் பந்துகளை பறக்கவிடுவதுபோல் இவ்விருவரும் அரங்கை ஆட்சி செய்து விட்டு கம்பீரமாக வந்தமர்ந்தனர். ஆன்மிகப் பேச்சைக்கூட இப்படி அதகளமாகவும் அமைதியாகவும் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்திக் காட்டினர்.

டாக்டர் சுதா சேஷய்யனும், வழக்கறிஞர் சுமதி அவர்களும் பேசி முடித்தபோது எல்லோரும் மூச்சு விட்டுக் கொண்டனர்.

என்னை கௌரவிக்க லலிதையே இங்கு சேனா நாயகிகளாகவும், வாக்கு பூரணியாக அனுப்பியிருக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டேன்.

இசைக்கவி ரமணன் அவர்கள் அப்போதும் தன் அடங்கா நகைச்சுவையால் அரங்கை விலா வெடிக்கச் சிரிக்க வைத்தார்.

இதற்குப் பிறகு கிழக்கு பதிப்பகம் திரு. பத்ரி சேஷாத்ரி அவர்கள் இனி கதைகள் குரல் வழியே ஒலி வடிவில் வரவேண்டியதன் தேவை என்ன என்றும், இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றார். லலிதா என்றவுடன் தனக்கு துர்க்கையின் நினைவுதான் வரும். அதிலும் மகிஷாசுர மர்த்தினியின் சிலையில் மகிஷனின் தலையை மாவு அரைப்பதுபோல் மர்த்தனம் செய்யும் சிற்பம் எப்போதும் எனக்கு பிடித்தது என்றும் பகிர்ந்தார். இங்கு பேசப்படுகின்ற விஷயங்கள் அனைத்தும் முக்கியமானது என்றும் அது குறித்து பேசும் தகுதி வந்திருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வதாகவும் பேசினார். லலிதை என்றாலே கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட அழகிக்கு ஆயிரம் நாமங்கள் என்கிற புத்தகம்தான் நினைவுக்கு வருவதை குறிப்பிட்டார்.

நிறைவாக நன்றியுரை நான் நிகழ்த்தினேன். இதுவரையில் under the tree மூலம் எத்தனை கதைகளை சொன்னேன். ஆதிசக்தி ஆயிரம் நாமங்களை எங்களுக்கு உபதேசித்த மதுரை சாந்தி குமார சுவாமிகளின் சீடரான ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமிகளுக்கு என் நன்றியை தெரிவித்தேன். அவரிடம் நானும் கிருஷ்ணாவும் கற்றுக் கொள்கிறோம். கற்றுக் கொடுப்பவர் குருவே ஆனாலும், என்னை அவர் எப்போதுமே அம்மா என்று அழைக்கும் பேரன்பை நான் வார்த்தையால் விளக்க முடியாது தவித்தேன். மூல காரணம் அவரே.

இனி அடுத்தடுத்து சிறுகதை, ஆன்மிகத்தில் குருமார்களான ஞானியரின் கதைகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உபதேசங்களும் தத்துவங்களும் என்று இன்னும் இன்னும் என்னென்ன சொல்ல வேண்டுமென்கிற ஆசைகளை மேடையில் வெளிப்படுத்தினேன்.

under the tree என்பது archives ஆக மாற வேண்டும். இலக்கியம், ஆன்மிகம், குழந்தை இலக்கியம், ஆங்கிலப் புத்தகங்கள்… என்று யாருக்கு என்ன வேண்டுமே அதை இங்கு வந்து தேடினாலே கிடைத்து விடும் அளவிற்கு இன்னும் வளர்க்க வேண்டுமென்கிற ஆசையை சொன்னேன்.

குழந்தைகளுக்கும் பெற்றோர்களும் என் இதயம் கனிந்த அன்பையும் நன்றியையும் சொன்னேன்.

எப்போதும் என் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும் நண்பர்களான உஷா, லதா, ஜீஜாபாய், கோவை கற்பகம் மேடம், நாகேந்திர பாரதி, ஸ்ரீதர் போன்றோர் அனைவருக்கும் இப்போதும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

இதோ இந்த விழாவிற்கு வந்திருந்தோர், வர வேண்டுமென்று நினைத்த உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராபர்ட் ப்ராஸ்ட்டின் கவிதையில் சிறு வரி எனக்கு நினைவுக்கு வருகிறது…

அடர்ந்து இருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு
நான் போகவேண்டும் இன்னும் பலகாதம் நான் போகவேண்டும்…

  • என்று எனக்குள் சொல்லியபடியே அடுத்த நாளுக்கான கதையை ஒலிப்பதிவு செய்யச் சென்றேன்.