மீனாட்சி சுந்தரமூர்த்தி/போதுமோ புன்னகை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

மாலை மயங்கும் வேளையில்
கடைவீதி
புது மணப்பெண் போல்
வண்ண
விளக்குகளில் மிளிர்ந்தது.

அருகிருந்த பேருந்து நிலையம்
மணமேடை
அரங்கம் போல் ஆரவாரத்தில்
அதிர்ந்த்து.

ஓடி வந்து ஏறுவார் சிலர்,
பெயர்ப்பலகை
உற்றுப் பார்ப்பார் சிலர்.

அழும் குழந்தையின் கையில்
தின்பண்டம்
திணித்து, படியில் ஏற்றி
வேல்விழி
வீசி இடம் தேடுவார்
சிலர்.

ஈரமண் வாசம் வீசும்
பனங்கிழங்கு
பாரம் தோளிறக்கி சும்மாடு
உதறும்
தோகையர் சிலர்.

இவரால் நிறைந்த பட்டாசுப்
பட்டணப்
பேருந்தில் இறுதியாய்
வந்து.
நின்ற வேளை.

பூங்கொம்பு ஒன்று நகர்ந்து
தந்தது
இடம். போதுமா என்ற
வினா வேறு.