
மிகவும் அழகிய ஒரு புகைப்படம். சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ராகுல் டிராவிட் தான் ஆடிய காலகட்டத்தில் ஒரு சிறந்த வீரர் ஆனால் டி20 கிரிக்கெட்டின் எழுச்சியும் அதன் பின்னிருந்த வியாபாரமும் அவரைப் போல நின்று நிதானமாக அதே நேரம் அலட்டிக் கொள்ளாமல் விளையாடுபவர்களை கிரிக்கெட் அடிப்படை புரியாதவர்களின் கேலிப் பொருளாக ஆக்கியது. அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டார். தன்னுடைய இடம் என்ன என்பதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு பயிற்சியாளராக அவர் செய்த சாதனைகள் தனி. அன்டர் 19 பயிற்சியாளராகவும் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பல வெற்றிகளைக் குவித்ததோடு இந்தியாவுக்கு இன்னொரு டி20 கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் தலைமைப் பண்புகள் கொண்ட தான் கற்றுக் கொண்டதைக் கடத்தி இன்னொரு புதிய தலைமுறையை உருவாக்கும் ஜாம்பவான்கள் மிகக் குறைவாகவே வருவார்கள். அவர்களில் டிராவிட் ஒருவர்.
அவருக்கு அருகே மண்டியிட்டு நிற்கும் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதில் ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியன் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். பல ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னாலும் வாய்க்காத பல திறமைகள் அவனுக்குப் பிறவியிலேயே வாய்த்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். துல்லியமாக பந்துகளை அடிக்கும் திறமை சிலருக்கு இயல்பாகவே இருக்கும். ஆனால் சர்வதேசப் பந்து வீச்சாளர்கள், மக்கள் நிறைந்த மைதானத்தில், பேய் போல ஓடி வந்து 140 கிமீ வேகத்தில் பந்து வீசும்போது அதை திரும்பத் திரும்ப அடிக்க திறமையைத் தாண்டிய மன உறுதி தேவை. அந்த வயதில் பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு அகச் சமநிலை தேவை. அந்த சமநிலையைத்தான் இந்தப் படம் காட்டுகிறது.
சூர்யவன்ஷி ஒரு பயமறியாக் காட்டாறு என்றால் ராகுல் டிராவிட் ஒரு பேரணை. அவருக்கு சுவர் என்ற பெயர் சும்மா வரவில்லை. அந்தச் சிறுவனின் ஆக்ரோஷத்தை அணை கட்டி நிறுத்தி அதைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தும் வேலையைத்தான் அவர் செய்திருக்கிறார். இளமையும் அனுபவமும், வேகமும் விவேகமும், ஆக்ரோஷமும் அமைதியும் என்று இரு வேறு எல்லைகளின் சங்கமத்தை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. அப்படி இரண்டு வெவ்வேறு சக்திகள் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்றால் அந்த ஆற்றல் நேற்றைய சூர்யவன்ஷியின் ஆட்டம் போல இருக்கும்.
இருவருக்குமே எனது வாழ்த்துகள்.
- ஷான் கருப்பசாமி
29-Apr-2025
