பிரம்ம ரிஷியார் முகநூலில்..

தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும் அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என பலர் விரும்பும் நாட்டில் சன்னியாச வாழ்வுக்கு , இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை என உறவறுத்து அனுப்புவதெல்லாம் எல்லாராலும் முடியாத செயல்

தன் பிள்ளைதான் தனக்கான அடையாளம், குல அடையாளம், தன் வம்சத்தை பெருக்கி தன்னை கடைசி காலத்தில் விழுதுபோல் காக்கும் அடைக்கலம் என்பதையெல்லாம் தாண்டி வாழவேண்டிய வயதில் அவனை கடும் சன்னியாசம் அனுப்புவதெல்லாம் எல்லா பெற்றோராலும் முடியாத செயல்

அது ஒரு வலி, ஒருவகை தானம், அழவேண்டிய இடமும் அதுதான் ஆனால் சொட்டு கண்ணீர் வரகூடாத இடமும் அதுதான்

அந்த வலி ஆதிசங்கர் பெற்றோர்க்கு உண்டு,பட்டினத்தாரின் தாய்க்கு உண்டு, ரமணர் மகாபெரியவரின் பெற்றோரின் வலியும் இன்னும் பல மகான்களை பெற்றவர்களின் வலியும் அதுதான்
விவேகானந்தர் குடும்பத்தார் நிலையும் அதுதான்

கோசலைக்காவது தன் மகனை மணகோலத்தில் கண்டுவிட்ட நிறைவு இருந்தது 14 வருடத்தில் அவன் மீண்டு இல்லம் திரும்புவான் எனும் நம்பிக்கை இருந்தது

ஆனால் இங்கே?

அந்த பெற்றோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து, காலமெல்லாம் இச்சமூகம் உங்களை காக்கும் எனும் நம்பிக்கையினை கொடுக்க வேண்டிய தருணமிது

ஆதிசங்கர் தன் தாயிடம் அழுத ஸ்லோகம் ஒன்று உண்டு

“குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம”

என் தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்தாய், வந்து உன் கனவில் நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படியான‌ உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்

சங்கரமடத்தில் அந்த புதிய சன்னியாசி தீட்சை பெறும் நேரம் காதில் ஒலிக்கும் ஸ்லோகம் அதுதான் அந்த தாயின் மனநிலையும் அதுதான்

அந்த தாய்க்கும் தகப்பனுக்கும் எல்லா பலமும் அருளும் பகவான் அருளட்டும், தேசமும் தேச மக்களும் அவரை சூழ இன்று காக்கட்டும்