குதிரை
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது, சையத்..
ஃபஹல்கம் புல்வெளியின்
பசுமை விரிப்பு முழுக்க
எப்போதும் இருந்தது
உனது கால் தடம்
இப்போது குருதியின் தடமும்
குழந்தைகளை
காதலர்களை
குடும்பங்களை
உனது குதிரையிலேற்றி
ஊர் முழுக்க
சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தாய்
புகைப்படங்கள்
எடுத்துக் கொடுத்திருப்பாய்
அன்பை
மொழியாக்கி
உரையாடி இருந்திருப்பாய்
அயல் மொழிக்காரரிடத்தும்
எங்கெல்லாம் செல்ல
என்னென்ன பார்க்க
எந்த உணவகத்தைத் தேர்வு செய்ய
எல்லாம் சொல்லி இருப்பாய்
ஊர் சுற்றிக் காட்ட முன்னூறு
உயிர் காப்பாற்ற
எந்தக் கட்டணமும்
அறிவித்திருக்கவில்லை, நீ,
சையத் அடில் உசேன் ஷா !
யாரும் கொடுத்திருக்கவில்லை
பாதுகாவல் பொறுப்பு!
ஆயுதம் எதுவும் இல்லை உன்னிடம்
ஆனாலும்
பாய்ந்து தடுக்கவும் செய்திருக்கிறாய்
சுற்றமாகவே கருதிய
சுற்றுலாப் பயணிகளைக் காக்க
ஒலித்துக் கொண்டே இருந்தது
உனது அலைபேசி
அடுத்த வேளை
அரிசிக்கான அழைப்பு
அப்பாவிடம் இருந்து..
அடங்கிக் கொண்டிருந்தது உனது மூச்சு
வெறியில் பசியாறி
வெறியே ஊட்டி
வெறியே உடலும் உணர்வும் உணர்ச்சியுமாய்
வெறியோடு கொல்பவர்களுக்கு
அரிசியும் புரியாது
அன்பும் விளங்காது
மதத்திற்கு அப்பாற்பட்ட
உனது உன்னத தியாகத்தின் முன்
தோற்றுப் போன எரிச்சலில்
இரண்டு பக்கத்து
அடிப்படைவாதமும் துடிக்க
இணைந்து நின்று
முழங்குகிறது காஷ்மீர் சனம்
துயரத்தில் ஒன்றுபட்டு
ஊர் திரண்டு நின்று
கதறுகிறது
உனது வீட்டு வாசலில்
நீ தடவிக் கொடுத்து
நீவி விட்டு
முத்தம் கொடுத்துக்
கொஞ்சி வழிநடத்திய
குதிரை தேடிக் கொண்டிருக்கிறது
சையத்
உள்ளூரப் பெருகும் அதன் அழுகையை
நீ வந்து தான் துடைக்க!
****

மிக அருமை ❤️ கண்கள் பனித்தன❤️
அருமை அருமை