
பத்தாவது தடவையாக கார்த்தி டீக்கடையில் கண்ணாடி தம்ளர் நிரம்ப வெந்நீர் வாங்கிக் குடித்தேன். தொண்டைக் கட்டு குறையவில்லை. பேசவே இயலாது இருந்தது. அத்தனை வருத்தி எடுத்திருந்தேன் குரல் நாண்களை !
பொதுக் கூட்டம் தொடங்க இருந்தது. திராவிடர் இயக்கத் தோழர் தண்டபாணி மேடையிலேறி அறிவித்துக் கொண்டிருந்தார். சிஐடியு நிர்வாகி சம்பந்தம் வந்திருந்தார். அவருக்கு முன் நான் பேச வேண்டும். எப்படி பேச?
மொத்த மக்கள் தொகை நான்காயிரம் இருக்கும் ஒரு சிற்றூரில் மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற துணிவு எப்படி வந்தது தெரியாது. உள்ளூர் வங்கியில் பணியாற்றும் அசலூர்க்காரன் பேச்சைக் கேட்டு அத்தனை பேர் திரண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எப்படி முளைத்தது என்பதும் தெரியாது. வங்கனூர் எனக்கு அந்த அரிய வாய்ப்பை வழங்கியது.
மேற்கு மாம்பலம் ஜூபிளி சாலையின் அந்தச் சிறிய அச்சகத்தை, கல்லூரி நாட்களில் பல நூறு தடவை கடந்து போயிருந்தாலும், அங்கே உட்கார்ந்து ஓர் அரசியல் நோட்டீஸ் அச்சிட்டுத் தாருங்கள் என்று அந்த சிறு உடைமையாளரைக் கேட்பேன் என்று ஒரு போதும் யோசித்தது கிடையாது. இரண்டு பக்கம் வரும் சார், பெரிய அறிக்கையா(க) இருக்கு, சிவப்பு எழுத்தில் தான் வரணுமா என்றெல்லாம் கேட்டவர், வாசித்து முடித்தபின் பெரு மதிப்போடு அணுகியது மறக்க முடியாதது.
அஞ்சல் துறை ஊழியர் இயக்கத்தின் மாபெரும் தலைவர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்கள் கொடுத்த புத்தகமும், அவர் எடுத்துக் கூறிய செய்திகளும் உள்ளூரப் பொங்கியதில் இருந்து எடுத்து எழுதிய என் முதல் அறிக்கை. ஆண்டு 1984, எனக்கு வயது 24!
500 பிரதிகளுக்குமேல் அச்சிட்டு எடுத்துக் கொண்டு போயிருப்பேன், எண்ணிக்கை நினைவில்லை. அந்தச் சிற்றூரின் ஒவ்வொரு தெரு முனையிலும் நின்றபடி பத்து நிமிடங்கள் மே தின வரலாற்றை உரக்க எடுத்துக் கூறுவேன். எல்லோரும் சூழ்ந்து நின்று கேட்பார்கள். சிறுவர்கள் நோட்டீஸ் நோட்டீஸ் என்று அரித்து எடுப்பார்கள். சில விடலைகள் அவர்களாக எல்லோருக்கும் கொண்டு கொடுக்கவும் செய்தார்கள். நிறைய பெண்கள், கண்களை அகல விரித்து இமை கொட்டாது எங்கோ அமெரிக்காவில் சிகாகோ எனும் நகரில் நூறு ஆண்டுகளுக்குமுன் இப்படியெல்லாம் கொடுமையா, அப்படியெல்லாம் போராட்டமா, தொழிலாளர் மீது தாக்குதலா, நான்கு பேருக்கு தூக்கு தண்டனையா…..என்று ஊர் முழுக்க அன்றிரவு எல்லாம் மே தினம் பேசுபொருள் ஆகிவிட்டது. கிஞ்சிற்றும் நான் எதிர்பாராதது.
கே வி சண்முகம் அவர்களது தேநீர்க் கடை. அவருடைய மகன் கே எஸ் கார்த்திகேயன் உயிரான நண்பன். கேஷியர் சார்…என்னது இது, டீ காபி எல்லாம் உட்டுட்டு சுடத் தண்ணி வாங்கி வாங்கி ஊத்திக்கினு இருக்கீங்க என்று சிரித்தான்.
அதற்கும் பதில் சொல்லப் பேச்சே வரவில்லை.
பெருமாள் கோயில் பட்டரிடம் ஊர்வலம் வருவோருக்கு பொங்கல் வேண்டும் என்று ‘தளிகை’ விண்ணப்பித்துக் கொண்டு இருந்தேன். எத்தனை பேருக்கு என்ற எண்ணிக்கையும் நினைவில்லை, ஆனால் அன்றிரவு வந்தவர் யாரும் ஏமாற்றம் இன்றி விரும்பிய அளவு சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அவரிடம் பொங்கல் தளிகை விட்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது, உள்ளூர் கோயிலுக்குத் தரவேண்டிய நிதி ஒதுக்கீடு தாமதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தபோது திருத்தணி கோயில் உற்சவத்திற்குத் தடை உத்தரவு பெற்று காரியத்தை சாதித்தவர் அவர் என்று உள்ளூர் பெரியார் தொண்டர் தணிகாசலம் வாத்தியார் சொல்லி இருந்தார். இரவு உணவு விடுதிகளே அற்ற ஊரில் அவரைக் கேட்பது ஒன்றே சாத்தியமான வழியாக இருந்தது. அசத்தி விட்டார் அவர்.
மாலை 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கினோம். நான்கே நான்கு முக்கிய வீதிகளை, பத்து நிமிடங்களில் மக்கள் சுற்றி வந்துவிட்டனர். எனவே, மேற்கொண்டு 3 சுற்று மெதுவாக, நிதானமாகப் போய்வர வேண்டும் என்று தீர்மானித்தோம், அதற்குள் இன்னும் பன்மடங்கு சனம் கூடிவிட்டது. சிறார் பட்டாளத்தைக் கட்டுப்படுத்த இயலாத அளவு பெருகிவிட்டிருந்தது. பெருங்கொண்டாட்டம். புகைப்படங்கள், செல்ஃபி எல்லாம் அறியப்படாத காலம்.
ஆறு மணி போல தேர் நிலைக்கு வந்தாற்போல் கட்டற்ற கூட்டம் மட்டற்ற உற்சாகத்தோடு சண்முகம் தேநீர்க் கடை அருகே பொதுக் கூட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. காவல் துறையினரும் பாதுகாப்புக்கு ஊர்வல நேரத்திலேயே வந்து நின்று பற்றிப் பின் தொடர்ந்திருந்தனர். காவல் துறை அனுமதி விஷயம் இன்னும் சுவாரசியமானது.
முதல் நாளே அருகே ஆர்.கே பேட்டை ஸ்டேஷனில் உள்ளூர் திராவிடர் இயக்கத் தோழர் தண்டபாணியும் நானும் மனு எழுதிக் கொடுத்து அனுமதி பெறப் போயிருந்தோம்.
“எதுக்கு அந்த ஊர்ல எல்லாம் மே தினம்…ஊர்வலம்?” என்பது போல் இளநிலை அதிகாரி ஒருவர் வாசலிலேயே கேட்டார். அவர் பெஞ்சில் படுத்திருந்தார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
உடனே தண்டபாணி, “சார்..நம்ம ஊர் பேங்க்ல கேஷியர்” என்றார்.
அவர் உடனே விருட்டென்று எழுந்து நின்று, “சார் எங்களுக்கு எல்லாம் பேங்க்ல லோன் கொடுக்க மாட்டீங்களா?” என்று கேட்டார்.
நான் உடனே, “ஆடு ………… மாடு” என்றேன்.
“யார சொல்றீங்க?” என்றார் அந்த அதிகாரி.
“உங்களை எல்லாம் சொல்வேனா சார்…. ஆடு மாடு எல்லாம் வாங்க விவசாயிக்குத் தான் கடன் தருவாங்கன்னு சொல்ல வந்தேன்” என்றேன்.
உள்ளே பெரிய அதிகாரி உட்கார்ந்திருந்தார். அவரிடம் தான் மனுவைச் சேர்த்தோம்.
“வெளியாள் யாரும் வர்றாங்களா, ஊர்வலத்துக்கு?” என்று கேட்டார், “பிரச்சனை கிரச்சனை எதுவும் இருக்காது இல்ல”
“அதெல்லாம் உள்ளூர் மட்டத்துல தான் சார்…எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் அழைப்பு கொடுத்திருக்கு…யாரும் வம்பு செய்ய மாட்டாங்க”
“சரி, சரி பார்த்து முடிச்சுக்குங்க” என்று மனுவை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டார். ‘அனுமதி கிடைச்சிருச்சு’ என்று தண்டபாணி என்னை வெளியே அழைத்து வந்துவிட்டார்.
பதினோராவது தம்ளர் வெந்நீர் உள்ளே போனபோது, தண்டபாணி எல்லோரையும் மேடைக்கு அழைக்க ஆரம்பித்தார். நான் ஓடிப்போய் அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன நிர்வாகி சம்பந்தம் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்றேன். மார்க்சிய பெரியாரிய கண்ணோட்டம் உள்ளவர், சுதந்திர பத்திரிகையாளர் என்று சொல்லி என்று தனது நண்பரை அழைத்திருந்தார் தண்டபாணி. என்னை அழைக்கவும் நானும் மேடையேறினேன் முதல் முறையாக!
பொதுக் கூட்டம் சிறப்பாக அமைந்தது, மே தின வரலாற்றை ஆவேசமாகச் சொல்லி முடித்துவிட்டு அமர்ந்தேன் நான். மீண்டும் பேச்சடைத்துப் போயிருந்தது.
எல்லோரையும் வழியனுப்பி விட்டு, உள்ளூர் மக்கள் பாராட்டு எல்லாம் தலை கனக்காது ஏற்றுக் கொண்டு தண்டபாணிக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு வீடு திரும்பினேன். நாள் முழுக்க அணிந்திருந்த வேட்டியோடு தரையில் படுத்தேன், எப்போது உறங்கினேன் என்று தெரியாது.
காலையில் எழுந்திருக்கையில் ஏதோ வலி அழுத்திக் கொண்டிருந்தது. மெல்ல எழுந்து நின்று வெளிச்சத்தில் போய்ப் பார்க்கையில் வேட்டி முழுக்க சிவந்து காட்சியளித்து அதிர வைத்தது. தொடர் அலைச்சல், ஓயாத பேச்சு, போதாதா குறைக்கு லிட்டர் கணக்கில் அருந்திய வெந்நீர் எல்லாமாகச் சேர்ந்து உடல் சூட்டை ஏற்றி இரத்தமாக வெளிப்பட்டு இருந்தது. விடுப்புக்கு எழுதிக் கொடுத்துவிட்டு சென்னை மாநகரம் வந்து மருத்துவரைப் பார்க்கவும், அது இரத்த மூலம், உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார். சிகிச்சை முடிந்து சில நாட்கள் கழித்து வேலைக்குத் திரும்பினேன்.
மறுநாள் மீண்டும் அசதி அதிகமாக இருக்கவே ஆர் கே பேட்டை மருத்துவரைப் பார்த்து மருந்துகள் பெற்றுக் கொண்டு ஒரு நாள் விடுப்பில் சிற்றூரில் நான் குடியிருந்த வீட்டு அறையிலேயே ஓய்வில் இருந்தேன்.
மாலை நான்கு மணி போல இருக்கும், காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் ஏதோ விசாரணைக்கு வந்திருக்கிறார், கடைகளில் எல்லாம் கேட்டுக் கொண்டே போகிறார், உங்கள் பெயர் அடிபட்டது என்று என்னிடம் இலவச டியூஷன் வரும் மாணவர்களில் ஒருவன் ஓடோடி வந்து சொன்னான். சிரமத்தோடு எழுந்து மூன்றாவது தெருவில் இருந்த வங்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
தெருக்கோடி செல்கையில் எதிரே அந்த அதிகாரி திரு முருகேசன், என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே…ஏன் சிரமப்பட்டு வெளியே வந்தீங்க…உங்களைப் பார்க்கத் தான் நான் வந்துகிட்டு இருக்கிறேன்” என்றார்.
“நன்றிங்க சார்…புதிய மேலாளர் என்னைப் பற்றி உங்க அலுவலகத்திற்கு புகார் எழுதி இருப்பார்…விசாரிக்கத் தான் வந்திருப்பீங்க” என்றேன்.
“யார் சொன்னா, எல்லாம் தெரிஞ்சுருச்சா?” என்று சிரித்தார்.
“டீக்கடை கதவில் ஒட்டியிருக்கும் மே தின நோட்டீசை இவராகத் தண்ணீர் தெளித்துக் கிழித்துச் சுரண்டி எடுக்கப் பார்த்திருக்கிறார்…டீக்கடை கார்த்திகேயன், எதுக்கு சார் இந்த கஷ்டம்….எங்கிட்ட நல்ல நோட்டிஸ் இருக்கு, கேஷியர் கொடுத்தது இந்தாங்கன்னு எடுத்து நீட்டி இருக்கிறார்…எதற்கு அத்தனை கன காரியமா அதை வாங்கிக்கிட்டுப் போயிருப்பார்…தெரியாதா என்ன…மே தினம் கொண்டாடறது உரிமை சார்…இவருக்கு என்ன பிரச்சனை?” என்றேன்.
“விடுங்க…விடுங்க…ஊர்ல எல்லாத்து கிட்டயும் பேசிட்டேன், உங்களுக்கு நல்ல பேரு கிராமத்துல…மேனேஜர் கிட்ட இப்படியான ஆளை எதுக்கு வம்பு கொடுத்து அமைதியைக் கெடுத்துக்கிறீங்கன்னு சொல்லிட்டேன்…நீங்க எப்போதும் போல அன்பாக இருங்க…கிளைக்கு சப்போர்ட் பண்ணுங்க…நீங்கள்ளாம் இந்த மாதிரி கிராமக் கிளைக்கு முக்கியம்…உடம்ப பார்த்துக்கோங்க…வர்றேன்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிப் புறப்பட்டுப் போனார்.
அப்படியே வங்கி கிளைக்குப் போய், மேலாளரைப் பார்த்தேன், முதலில் நெளிந்தவர், பிறகு ஒன்றும் அறியாதவர் மாதிரி புன்னகையோடு, உடம்பு பரவாயில்லையா என்றார்.
“உங்கள் மேல் இப்போதும் வருத்தம் இல்ல சார்…தொழிற்சங்கம் தான் உங்களையும் என்னையும் சேர்த்து பாதுகாக்குது…எப்பவாவது புரிஞ்சுக்குவீங்க… நாளைக்கு வேலைக்கு வந்துருவேன் சார்” என்றேன்.
வீதியில் இறங்கி நடக்கையில் வலியெல்லாம் குறைந்து போயிருந்தது. இதமான காற்று வீசியது. கடைத்தெருவில் நுழைந்தபோது எல்லோர் அன்பும் ததும்பியது. மே தினம் நேயத்தைப் பல மடங்கு பெருக்கித் தந்திருந்தது.
************

உங்களது மக்களுக்கு பணியாற்றும் குணம் 24 வயதிலேயே வெளிப்பட்டுள்ளது. வாழ்க வளர்க
நிதர்சனமான உண்மை. வலிமிகுந்த சுகம்.
அருமை. அருமை.
சுஜாதா சிஐடியூ வில் சேர்ந்து எழுதியது போல இருக்கிறது.
அவ்வளவு லகுவான நடை..
கிரின்ச் என்று சொல்வார்கள்.
நாம் லட்சிய வாழ்க்கை என்போம்.
மேதினம் – சீதனம்!
முதல் முறை 24 வயதிலேயே மேடையேறிய அனுபவம்.. உடல் நிலையைப் பற்றி கவலைப்படாமல் மேடையேறிப் பேசியது.. அட்டகாசம் தோழர்…