
நேற்று இரவு ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனின் ட்ரஸ்டியாக இருந்த கே. கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.
மிகுந்த வருத்தத்தை அளித்தது.
கடந்த மூன்று வருடங்களாக நானும் அவரும் நண்பர்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் க்ரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் சென்றபோது அறிமுகமானார். மதியம் இரண்டு மணி இருக்கும். என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கேட்டார். சொன்னேன்.
‘‘நீங்கள் ரமணர்பற்றி பேசுவதை நான் ஒருமுறை மயிலாப்பூர் ரமண கேந்திராவில் கேட்டேன். இப்போதுதான் அது நினைவுக்கு வருகிறது. சொல்லுங்கள் நீங்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியை படித்திருக்கிறீர்களா’’ என்றார்.
‘‘படித்திருக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரன் அடிக்கடி சொல்வார். ஆனாலும், என்னவோ ஒன்று புரியாததுபோலவே உள்ளது. ஆனால், ரமணரை படித்து விட்டு இவரிடம் வரும்போது ஏதோ இரண்டும் ஒன்று போலவே தோன்றும்’’ என்றேன்.
‘‘மிகச் சரியானது . பிடித்து விட்டீர்கள். அவ்வளவுதான். தொடர்ந்து படியுங்கள். கேளுங்கள்’’ என்று அன்று இரவு எட்டு மணி வரை என்னோடு பேசினார். சரளமான ஆங்கிலம். ஆங்காங்கு தமிழ் என்று தொடர்ந்து விவாதித்தார்.
என் தோழியான ரம்யா வாசுதேவனை இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினேன். அவர்களும் தொடர்ந்து கே.கே.வுடனான உரையாடலில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் எப்போதும் அமைதியாக ஒரு தியானத் தன்மையோடு அமரும் இடமாக ஜே. கிருஷ்ண மூர்த்தி பவுண்டேஷன் இருக்கும். நாங்கள் அப்படி அமர்ந்திருக்கும்போதெல்லாம் கே.கே. எங்களோடு வந்து பேசிக் கொண்டிருப்பார்.
எனக்கு முதன் முதலாக ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற ஞான சாகரத்தை , கருணையான அந்த வஸ்துவை ஆழமாக புரிய வைத்தவர். ஜே.கே.வின் அத்தனை நுட்பங்களையும் என்னிடம் பேசியிருக்கிறார். ஜே.கே.வின் உபதேசங்களை அணுஅணுவாக விவரிப்பார். இது சத்தியம் என்று சுட்டிக் காட்டியவர். அபூர்வமான புத்தகங்களை இதைப் படியுங்கள் என்று என் முன்பு பரப்பியவர், கே. கிருஷ்ணமூர்த்தி. இவரை, எல்லோரும் K.K. என்றுதான் அழைப்பார்கள்.
‘‘இதோ பாருங்க சார், அவர் பேரும் ஜே. கிருஷ்ணமூர்த்தி. உங்க பேரும் கிருஷ்ணமூர்த்தி, என் பேரும் கே. கிருஷ்ணமூர்த்தி…’’ என்று சொல்லி விட்டுச் சிரிப்பார்.
எழுபதுகளில் ஜே. கிருஷ்ணமூர்த்தி இவரைப் பார்த்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். ‘‘நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். இன்னும் மேலே படிக்க இருக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.
சட்டென்று, ஜே.கிருஷ்ணமூர்த்தி இவரைப் பார்த்து, ‘‘sir, you wasted your whole life” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான். அந்த பதில் இவரை என்னவோ செய்திருக்கிறது. ஆங்காங்கு வேலை செய்துவிட்டு இறுதியாக ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனிலேயே வந்து பணியாற்றினார். இப்போது அதனுடைய ட்ரஸ்டியாகவும் இருக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக வசந்த் விஹார் என்றழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் இருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக காலை முதல் இரவு வரை எங்கேனும் ஓரிடத்தில், அவர் யாரிடமேனும் ஜே.கே,வை பற்றி பேசிக் கொண்டிருப்பார். அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். வசந்த்விஹாருக்கு உள்ளேயே நடை போய்க் கொண்டிருப்பார். அவர் வாழ்வு அங்கேயேதான் இருந்தது. திருமணம் கூட செய்து கொள்ள வில்லை. என்றும்… எப்போதும்… ஜே.கிருஷ்ணமூர்த்திதான்.
வெளிநாடுகளிலிருந்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் ஜே.கே.வின் போதனைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். இன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பல புத்தகங்கள் இவர் தொகுத்தவையே ஆகும்.
நான் கோவை எப்போ வருவாரோ சொற்பொழிவில், இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஜே. கிருஷ்ணமூர்த்தி குறித்து பேசினேன். மறுநாள் கோவையிலிருந்து வந்தவுடன் இவரைச் சென்று பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டினார். ‘‘பொது ஜனங்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் நிறைய பேசுங்கள்’’ என்றார்.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு இரவு எட்டு மணி இருக்கும். நான் ஜே.கே. பவுண்டேஷன் சென்றேன். அப்போது அங்கிருப்பவர், ‘‘ஆறு மணியோடு நேரம் முடிந்து விட்டது. யாரையாவது பார்க்க வேண்டுமா. நாளை வாருங்கள்’’ என்றார்.
சற்று தூரத்தில் நின்றிருந்த கே.கே. அருகே வந்தார்.
‘‘இவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவார். இவரை தடுக்காதீர்கள். அவருக்கு இங்கு வருவதும் ரமணாஸ்ரமத்திற்குள் வருவதும் ஒன்றேயான விஷயங்கள்’’ என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துப் போனார்.
இன்றும் நான் பல சமயங்களில் இரவு எட்டு, எட்டரை மணிக்கு கூட செல்வேன். அந்த பெரிய கூடத்தை ஒட்டிய மிகச் சிறிய அறை இருக்கும். ஒரேயொரு விளக்கு எரிந்தபடி இருக்கும். அதன் கீழ் அமர்ந்து லேப் டாப்பில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உன்னதமான போதனைகளை தொகுத்தபடி இருப்பார்.
ஒருவாரம் முன்புதான், ஜே. கிருஷ்ண மூர்த்தியின் ஒரு புத்தகத்தை தொகுத்துக் கொண்டு வந்தார்.
நான் அங்கு சென்றபோது ‘‘புது புஸ்தகம் வந்திருக்கு. வாங்கிட்டீங்களா… இந்தாங்கோ’’ என்றார்.
நான் அந்த புத்தகத்தைப் வாங்கிப் பார்த்தேன்.
அந்தப் புத்தகத்தின் தலைப்பு,
‘’ END OF THE JOURNEY “”
