ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 129 வது இதழ் பிப்ரவரி ஏப்ரல் 2025

புத்தக அறிமுகம் – 19.

 அழகியசிங்கரின் நவீன விருட்சம் 37 வது ஆண்டு, பிப்ரவரி-ஏப்ரல் 2025, 129 வது இதழ் வாசித்தேன்.ஒரு சிறு பத்திரிகைக்குரிய இலக்கிய முகத்தோடு சிறப்பாக வெளிவந்துள்ளது. அட்டைப்படம் கவிஞர் வைத்தீஸ்வரன். இலக்கியத்தின் பல சுவைகளையும் – கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் உரையாடல் என – உள்ளடக்கி உள்ள இதழ் என்பதற்கு ஏற்றவாறு, அட்டைப்படம் அமைந்துள்ளது!

 ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற இரண்டு கவிதைகள் – கி சரஸ்வதியின் ‘ஜன்னலற்றவள்’,  கோவர்தனாவின் ‘தொலைந்து போய்க் கொண்டிருக்கிறேன்’ – மற்றும் அழகே சிங்கரின் ‘நான்’, எஸ் வைத்தியநாதனின் கவிதை ஒன்றும் வெளியாகியுள்ளன. 

தஞ்சை ஹரிணி, ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகளைப் பற்றி, ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். “கவிஞர் ஞானக்கூத்தன் தமிழ்ப் பரப்பில் தவிர்க்க முடியாத கவிதை ஆளுமை. சிந்தனை, தெளிவு, சிக்கனம், ஆனந்தம் என்கிற கூறுகளில் கவிதையைச் சொன்னவர்” என்று அழகே சிங்கர் சொல்வது முற்றிலும் உண்மை என்று தொடங்கும் கட்டுரை, அந்த தொகுப்பில் உள்ள 62 கவிதைகளையும் பற்றி பேசுகின்றது. கவிதைகளில் உச்சமானவை என்று கூறி சில கவிதைகளையும், சில கவிதைகளில் அவரை ஈர்த்த சொல்லாடல்களையும் குறிப்பிடுகிறார். ”62 கவிதைகளும் என்னை சுவைக்க வைத்தன. நிறைவைத் தந்தன. வாழ்த்துகள், வென்ற அத்தனை பேருக்கும்” என்று முடிக்கிறார். 

‘ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்’ என்ற பிரமீளின் கட்டுரை அழுத்தமானது. தமிழர்களிடையே ‘பொழுதுபோக்கு’ என்ற அடிப்படையில் தான் பேரிலக்கியங்கள் கூட சந்தித்து வந்துள்ளன. மிகவும் ‘ஹை கிளாஸ்’ பொழுதுபோக்கு, அவ்வளவுதான் என்று சாடுகிறார். ரசிகர்களைக் கவர்வதற்காகத் திரைப்படங்களில் கொலையும் கற்பழிப்பும் அவற்றின் குரூரமான மிருகத்தன்மைகளை நீக்கி காட்டுவது ஒரு ஆபாசம் என்கிறார். இப்படி காட்டுவது, அவற்றின் தீவிரத்தை மழுங்கடித்துவிடும். குரூரத்துடன் காண்பித்தால், மனதைக் கவராது; உலுக்கி விடும். இதைச் செய்யாமல் இத்தகைய விஷயங்கள் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை கண்டிக்கிறார். இலக்கியத்துக்கும் இந்த ஒப்பீடு உண்டு எனக் கூறி, விமர்சனங்கள் குறித்த தனது பார்வையைச் சொல்கிறார். கா.நா.சு. வின் விமர்சனப் பார்வையையும், சி.சு. செல்லப்பாவின் விமர்சன பார்வையையும் ஒப்பிட்டு, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைக் கூறுகிறார். தமிழில் விமர்சனத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் கா.நா.சு.தான்; ஆனாலும், மௌனி, இராமாமிர்தம் போன்றோரை செல்லப்பா விமர்சித்த முறை ஆய்வு ரீதியானது என்கிறார் பிரமீள். கருத்துலகில், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு, செஞ்சோற்றுக் கடனுக்கு இடமில்லை என்று கூறுகிறார் பிரமீள்.

அழகிய சிங்கரின் ‘ஞானக்கூத்தனின் கிடைக்காத கவிதைகள்’ கட்டுரை ஒரு சிறப்பான ஆய்வு கட்டுரையாக அமைந்துள்ளது. ஞானக்கூத்தனுடைய பல கவிதைகளை, வருடம் வாரியாகக குறிப்பிட்டுள்ளது சிறப்பு. ஞானக்கூத்தனுடைய கவிதைத் தொகுப்புகளில் ‘விட்டுப் போன கவிதைகள்’ எனக் குறிப்பிட்டு, ‘இந்த தொகுப்புகள் கொண்டு வருபவர்களுக்கு ஏன் இந்த அலட்சியம்?’ என்று வருத்தப்படுகிறார். அதனைக் குறிக்கும் வகையில் ஞானக்கூத்தனின் கிடைக்காத கவிதைகளை, தொகுப்பில் சேர்க்க முடியாத கவிதைகளை கடவுளுக்குச் சமர்ப்பித்து விடலாம் என்கிறார்.
 
மண்ணில் விழுந்தவை

  ஆதி பருவத்தில்
  ஞானாட்சரி சொன்னாள்
 மண்ணில் விழுந்ததெல்லாம்
 கடவுளுக்கென்று
  என் கவிதைகளும்
 அப்படியானால் கடவுளுக்கே.

 என்ற ஞானக்கூத்தனின் கவிதையை முத்தாய்ப்பாய் குறிப்பிடுகிறார். 

‘புதிய புத்தகம்’ பகுதியில் பாரதியின் ‘சந்திரிகையின் கதை’ – முற்றுப்பெறாத நாவல்- (விலை ரூ 120) என்ற புத்தகம் வாசிக்க வேண்டிய ஒன்று. அந்தக் கால சூழ்நிலையை வைத்து புனையப்பட்ட நாவல். (கதையின் மூலப் பிரதி காணாமல் போய்விட, பிறகு தன் நினைவிலிருந்து சில அத்தியாயங்கள் எழுதியதாக மகாகவி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்)

இந்திரநீலன் சுரேஷின் ‘சாண்ட்விச்’ என்ற கதை வித்தியாசமாக ஒரு கடிதத்தின் மூலம் ஒரு குடும்பத் தலைவியின் ஏக்கங்களை, ஏமாற்றங்களை மிக இயல்பாகச் சொல்வதாக அமைந்துள்ளது.  தெரிந்த கதை தான் என்றாலும், சொல்லப்படும் உத்தியில் வித்தியாசப்படுகிறது.

சிந்துஜா அவர்களின் ‘கபடம்’ கதை எளிமையாகத் தோன்றினாலும் இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் உறவு சிக்கல்களை அழுத்தமாகச் சொல்கிறது. வாசகருக்கு ஓர் அதிர்ச்சி கொடுக்கும் முடிவு என்றாலும், இன்றைய யதார்த்தம் அதுவாகத்தான் இருக்கிறது!

ஜெ.பாஸ்கரனின் ‘ரயில் பயணத்தில்..’ சிறுகதை, கண்ணால் காணும் காட்சிகள் பற்றிய கற்பனையில் தோன்றுகின்ற சில சிந்தனைகள், உண்மையில் எப்படி நேர் மாறாக இருக்கக் கூடும், நம் கண்களே நம்மை ஏமாற்றக் கூடும்  என்பதை ஒரு ரயில் பயணத்தில் சொல்கிறது.

‘ஒரிய’ மொழிச் சிறுகதை ‘மரபு’ ( மூலம்:. சுரேந்திர மிஸ்ரா தமிழில்: தி. இரா. மீனா).  ஒரு மெத்தை மூலம் இரண்டு தலைமுறை வாழ்க்கையை மிக அழகாகப் பேசுகிறது. “படுக்கை முழுவதும் மூட்டை பூச்சிகள் மொய்த்துக் கிடக்கின்றன. அப்பா எப்படி இதில் தூங்கினார்?” என்ற கேள்வியின் மூலம், தலைமுறை தலைமுறையாக இடையூறுகளுடன் எப்படி வாழ்க்கை நகர்கிறது என்று குறிப்பிடுகிறார்! அருமையான கதை.

உரையாடலில், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாஷா விருது, அசோகமித்திரன் சிறுகதை போட்டி, தமிழவன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் விருது போன்ற செய்திகள் வருகின்றன. ‘புதுமை ஏதுமில்லை, வழக்கம்போல்தான் விருட்சம் வந்துகொண்டிருக்கிறது’ என்கிறார் அழகியசிங்கர்.

வாசிக்கவேண்டிய இதழ். ஆசிரியர் அழகிய சிங்கர் பாராட்டுக்குரியவர். 


Thank you